Thursday, May 31, 2012

மத்திய அரசின் மடத்தனமான பெட்ரோல் விலை உயர்வு

ந்த பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாதது என்கிறார்கள். ஆமாம். 7.98 விலை உயர்வு வரலாறு காணாததுதான். பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசு 18 முறை பெட்ரோல் விலையை ஏற்றி இருப்பது இதுவரை வரலாறு காணாதது. 




ஒரு பிரதமராக மன்மோகன் சிங்கின் எட்டு ஆண்டு ஆட்சிக் காலகட்டத்துக்குள் பெட்ரோலின் விலை 90 சதவிகிதம்  உயர்ந்து இருப்பது தனி வரலாறு. ஆனால், மக்கள் நொந்து வெந்து மாற்று வழியோ, மாற்றுத் தேர்வோ இல்லாமல் வதைபடுவது மட்டும் வரலாறு மீண்டும் மீண்டும் பார்ப்பது. இது இந்தியர்களுக்கான சாபக்கேடு!


பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகள், ஏழை நாடுகள் என எந்தக் கணக்கில் பார்த்தாலும் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதில் இந்தியாதான் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை?
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, ''ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது சர்வதேசரீதியிலானது. நமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது'' என்கிறார்.


ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படுவது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை அம்பலப்படுத்துகிறார் பங்குச் சந்தை நிபுணரான நாகப்பன்.


''இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என யார் சொன்னது? நஷ்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமாவது பங்குகளை வாங்கியவர்களுக்கு 140 சதவிகிதம் பங்குத் தொகையைக் கொடுக்க முடியுமா? ஆனால், அதுதான் நடக்கிறது. 2011-ல் 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ ஒரு பங்குக்கு வழங்கிய பங்குத் தொகை 9. பாரத் பெட்ரோலியம் வழங்கிய தொகை 14. ஹிந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் வழங்கிய தொகை 15. இந்த நிறுவனங்கள் லாபத்தில்தான் இயங்குகின்றன என்பதற்கு இதற்கு மேல் சாட்சி வேண்டுமா?'' என்கிறார் நாகப்பன்.



உண்மை என்னவென்றால், அரசு இந்த பெட்ரோல் விலை உயர்வை அறிவித்த காலகட்டத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பா யின் விலை 92 டாலர்கள்தான். அதாவது, நம்முடைய அரசு அபாய விலைக் குறியீடாக நிர்ணயித்து இருக்கும் 115 டாலர்களைவிட இது குறைவு.



உள்ளபடி அரசுக்கு இதில் மூன்று பிரச்னைகள்.



முதலாவது, பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதீதமான வரி. பெட்ரோல் விலையில் 39 சதவிகிதமும் டீசல் விலையில் 18 சதவிகிதமும் வரியாக அரசின் கஜானாவுக்குப் போகிறது.


பெட்ரோலியப் பொருட்களுக்கு மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன. மாநிலத்துக்கு மாநிலம் இது வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மண்ணெண்ணெய்க்கும் கேஸ் சிலிண்டருக்கும் மட்டும் இடத்துக்குத் தகுந்த மாதிரி 8 வகை வரிவிதிப்புகள் இருக்கின்றன. ஆக, மாநில அரசு நினைத்தாலும், இந்த வரிகளைக் குறைத்து மக்களை ஓரளவு காப்பாற்றலாம்.



இரண்டாவது, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருப்பது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 20 சதவிகிதம் ரூபாயின் மதிப்பு குறைந்து இருக்கிறது. இதற்குக் காரணம், அரசின் தவறான செயல்பாடுகள்.




மூன்றாவது, மானியங்களைக் குறைக்க அரசு திட்டமிட்டு இருப்பது. அரசின் மானியங்களில் ஏறத்தாழ 40 சதவிகிதம் 83 ஆயிரம் கோடி பெட்ரோலியப் பொருட்களுக்காக வழங்கப்படுகிறது. இதைக் குறைக்கும் திட்டத்திலேயே பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்திவருகிறது அரசு. பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைப்பதுபற்றி யோசிப்பது நல்லதுதான். ஆனால், அத்தியாவசிய பஸ், லாரிகளுக்கும் ஆடம்பர எஸ்யூவி கார்களுக்கும் ஒரே விலையில் டீசல் வழங்குவது தேவையா என்று அரசு யோசித்தால், அது ஆரோக்கியப் பாதை. பொத்தாம்பொதுவாக விலையை உயர்த்தி னால் என்னவாகும்?



''பெட்ரோல் டீசல் விலை ஏறும்போது அதோட விலை மட்டுமா ஏறுகிறது? போக்குவரத்துச் செலவுகள் கூடுவதைக் காரணம் காட்டி... அரிசி, பால், பருப்பு, காய்கறி என அனைத்தும் விலை ஏறும். என்ன பண்ணப்போறோம்னே தெரியலை. பைத்தியக்காரங்க மாதிரி ஆயிடுச்சு நிலைமை'' என்கிறார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலாளி குப்புசாமி.



கோவை விவசாயியான வழுப்பாறை பாலு, ''ரசாயனப் பூச்சிக்கொல்லி வாங்குவதில் ஆரம்பிச்சு பலவித வேலைகளுக்காக டவுனுக்கு வந்தே ஆகோணுமுங்க. அதுவும் பொசுக்குனு போய் வர்றதுக்கு பஸ்ஸை நம்பாம மொபெட்டதான் எடுத்துட்டுத் திரியுறோமுங்க. விளைஞ்ச பொருளைச் சந்தைப்படுத்துறதுக்கு பெட்ரோலுக்கு மட்டும் நூத்துக்கணக்குல செலவு பண்ணி டவுனுக்கு வர்றோம். ஆனா, லாபத்தைப் பார்த் தீங்கன்னா, அடுத்த கொள்முதலுக்குக்கூட இழு பறியாதான் இருக்குது'' என்கிறார்.


''மத்தவங்க மாதிரி இல்லை. இது எங்களுக்கு உசுருப் பிரச்னை. ஏற்கெனவே, நாங்க அதிக வாடகை வாங்குறோம், அது இதுனு சொல்லி சவாரி குறைஞ்சுகிடக்கு. இனிமே என்ன நடக்கும்னு தெரியலை. இந்தப் பொழைப்புக்குப் பேசாம மாடு மாதிரி வண்டி இழுக்கலாம்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஷாகுல் ஹமீது.


''காலையில பத்தரை மணிக்கு வந்தேன். மூணு மணி நேரம் நின்னு பெட்ரோல் வாங்கி இருக்கேன். ஒரு ஆளுக்கு நூறு ரூபாய்க்கு மேல குடுக்க மாட்டேங்குறாங்க. இதாச்சும் கெடச்சுதேனு வாங்கிக்கிட்டேன். பெட்ரோல் விலை ஏறிடுச்சுனு திட்டுறோம்ல. பெட்ரோல் கிடைச்சாதானே திட்டுவீங்கனு எல்லா பங்க்கையும் மூடிட்டாங்க. இப்போ என்ன விலைன்னாலும் வாங்கித்தானே ஆகணும்? ஓட்டு போட்டதுக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி.


''பெட்ரோல் விலையை நிர்ணயிக் கிற உரிமையை எண்ணெய்நிறுவனங் களுக்குக் கொடுத்ததே தப்பு. தில்லு இருந்தா, விளைபொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிச் சிக்கிடலாம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். முதலாளிகள் கொடுக்கிற நன்கொடைக்காக நாக்கைத் தொங் கப்போட்டுக்கிட்டுத் திரியுறவங்க, எப்படி மக்களுக்கு விசுவாசமா ஆட்சி நடத்துவாய்ங்க?'' என்று ஆவேசப்படுகிறார் மதுரையைச் சேர்ந்த முத்துகுமார்.



மக்கள் எதிர்ப்பும் போராட்டங்களும் அரசைச் சூழ்கின்றன. ஆனால், அரசு அலட்டிக்கொள்ளவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன; மக்கள் அதற்குள் எல்லாவற்றையும் மறந்துபோவார்கள் என்ற மமதையில் இருக்கலாம். ஆனால், மக்களின் நினைவாற்றல் குறித்து அவர்கள் வியக்கும் காலம் வரும்!

 நன்றி - விகடன்

1 comments:

rajamelaiyur said...

வன்மையா கண்டிக்கிறேன் ....இதுல மட்டுமா மத்திய அரசு மடத்தனமா இருக்கு ?