Thursday, May 10, 2012

ஜெ , கலைஞர்- இருவரையும் திணற வைக்கும் வை கோவின் கலக்கல் பேட்டி இன் விகடன்

18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...

http://rachelchitra.files.wordpress.com/2008/10/vaiko_tn_chiefminister.jpg


 1.''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''


''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.


பால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில் இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது.


 ஏழை, நடுத்தர மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை. 'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம்.


 திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான்    அவரை பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''


'' 2. 2.'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''


''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?


தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''




3.''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''


''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது, அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம்.

 தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது கவனிக்கத் தக்கது.''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-ymYvJGv58xC5KYG-BbiE-SPfVCG21CrpEQ2-9y8-2UQGOLGAFs_sYkLc-uIh-2GrYP0CKD9ZP7y2rGC31QNLwePeCbDx_MswPnwccSctTtSIQpACIkbsCyuSkLDSC_yTjt1txBdnFZw/s1600/vaiko_2.jpg


4. ''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''


''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.


ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால், மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத மனிதராக அவர் இருக்கிறார்.

 இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின் எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின் எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. 

அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது, அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால், அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர் குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.


இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும் கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல் திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள், காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.


மூன்றாவது... சாராயக் கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய், பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.


 ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது. தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம் இவர்கள் இருவரையும் சபிக்கும்!''

http://www.vaiko-mdmk.com/vaiko_img/nadaipayanamhtml/img/vaiko_big61.JPG


5. ''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''


''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். 80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே!

 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!



யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.



நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.


 தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார். ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார். இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.


தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAXA2BaLH5NRLgz1z51PXObXERn1U6BSLlQU1VNBsN1j3fYYVomcZVKIKskaVzuJ8CFEz6hANjzSr3nh8kTNzDQeZDhzhXEGgrglf5PAifBbDndDpu2PYWQ2GDw372O1FCD6vVgTdFf5I/s1600/jayalalitha_vaiko_alliance-cartoon.jpg

6.''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''


''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?


கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள் நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை - இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு.

 திறமையான அவருக்கு காலம் தங்கத் தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது. திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும் கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக் குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை. பரிதாபப்படுகிறேன்.


எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும் பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''




7.''அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''


''இரண்டு கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.


இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''


8.''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''


''எங்களை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''

http://seithy.com/siteadmin/upload/vaiko13-072011x411.jpg


9.''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''


''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத் தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''
- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
 
நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.  
 
 

3 comments:

Anonymous said...

என்ன பாஸ், வழக்கு எண் உங்கள இப்புடி சொதப்பிருச்சி.. உங்க "எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43" ஆனா வந்ததோ 55/100?...

வழக்கு எண் 18/9

சி.பி.செந்தில்குமார் said...

@மொக்கராசு மாமா

ஹா ஹா அது ஓக்கே , ஸ்லிப் ஆகிடுச்சு, ஆனா இதுக்கு முன் வந்த லீலை உட்பட லேட்டஸ்ட் 3 ப்டங்களின் மார்க் துல்லியமா கணிச்சதை நீங்க கண்டுக்கவே இல்லையே அது ஏன்? அப்போ வந்து “ நண்பா.. நீங்க சொன்ன மாதிரியே சேம் மார்க்”னு சொல்லி இருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன் ..

சரி விடுங்க..

Unknown said...

வைகோவின் பேட்டி மிக மிக அருமை......தெளிந்த நீரோடை போல்.