Showing posts with label பழ நெடுமாறன். Show all posts
Showing posts with label பழ நெடுமாறன். Show all posts

Wednesday, March 27, 2013

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.



அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.



தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.



மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.



வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.



அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.



அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.



    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.



இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.



ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

Thursday, May 03, 2012

காந்தியடிகள் ஒரு கையெழுத்துப்போடவே எங்கப்பா கிட்டே காசு கேட்டவர் - பழ நெடுமாறன் பேட்டி @விகடன்

1.' 'நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போதேனும் உணர்ந்து இருக்கிறீர்களா?'' 
''நிறைய முறை உணர்ந்திருக்கிறேன்! எங்கள் முதல் சந்திப்பே உங்களுக்கு ஆச்சர்யமூட்டும். 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை, பாண்டி பஜாரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அதையட்டி விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காக சிறைக்குச் சென்றிருந்தேன்.


அந்த நால்வரில் பிரபாகரனும் அடக்கம். அப்போது வரை நான் பிரபாகரனை நேரில் சந்தித்தது இல்லை என்பதால், மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். நான்குஇளைஞர் கள் வந்தனர். இராகவன், உமா மகேஷ்வரன், ஜோதீஸ்வரன் என ஒவ்வொருவரும்தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். நான்காவ தாக நின்ற இளைஞர், 'அண்ணா,மன்னித்துக் கொள்ளுங்கள்...


 நான்தான் பிரபாகரன்’ என்று சொன்னபோது, திகைத்துப்போனேன். ஏனெனில், அவர் எனக்குப் புதியவர் அல்ல. என் வீட்டில் அவரும் வேறு சில இளைஞர்களும் அதற்கு முன் பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது எம்.எல்.ஏ-வாகஇருந்த நான் பெரும்பாலும் வெளியூர்களில்தான் இருப்பேன். சென்னை வீட்டில் இந்த       இளைஞர்கள்தான் தங்கியிருப்பார்கள்.அவர்களில் ஒருவராக பிரபாகரன் இருந்திருக்கிறார் என்பதும் அதை வெளிப்படுத்தாமலேயே அத்தனை நாட்கள் என்னிடம் பழகிவந்திருக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம் அளித்தது.


அப்போது எல்லாம் நான் பிரபாகரனிடமே பல முறை, 'உங்கள் தலைவர் பிரபாகரனை அழைத்து வாருங்கள், சந்திக்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறேன். 'சரி, சரி’ என்று அவரும் பணிவாகத் தலையாட்டியிருக்கிறார். அவரும் அவருடைய தோழர்களும் ரகசியம் காத்த தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. இந்தக் கட்டுக்கோப்புதான் விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய பலம்.''  



2.''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று எங்கோ படித்திருக்கிறேன். இந்தச் செய்தி உண்மையா?'' 


''உண்மைதான்.1938-ம் ஆண்டு காந்தி ராமேஸ்வரத்துக்கு வந்தார். அப்போது மதுரையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வீடு, எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. என் அப்பா பழனியப்பனார் அப்போது இளைஞர். ஜார்ஜ் ஜோசப்பின் மனைவி, மதுரை ரயில் நிலையத்தில் காந்தியைப் பார்ப்பதற்காகக் கிளம்பியிருக்கிறார். என் அப்பா காந்தியின் மீது பெரும்பற்று கொண்டவர் என்பதால், 'நீயும் வா’ என அவரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். 


ரயில் வந்ததும், காந்தியைப் பார்த்து உண வைக் கொடுத்திருக்கிறார் அந்த அம்மை யார். காந்தியைப் பார்த்த பரவசத்தில் அப்பா அவரிடம் கையெழுத்து பெற முயற்சித்து இருக்கிறார். 


அதற்கு காந்தி அவர்கள் சிரித்துக் கொண்டே, 'ஒரு கையெழுத்துக்கு 5 ரூபாய் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார். அவசர மாகக் கிளம்பிச் சென்றதால், அப்போது அப்பாவிடம் காசு இல்லை. உடனே, தன்னு டைய கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து 'இதை வைத்துக்கொண்டு கையெழுத்துப் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.


 அதைப் பார்த்து திருமதி ஜோசப், 'இது இவருடைய திருமண மோதிரம்’ என்று காந்தியிடம் சொல்ல... உடனேகாந்தி, தன் டைரியில் ஒரு பேப்பரைக் கிழித்து 'காந்தி’ எனத் தமிழிலேயே கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார். இப்போதும் அந்தக் கையெழுத்து பத்திரமாக என்னிடம் இருக்கிறது!''




3. ''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற் றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார் களா?'' 


 ''ஒற்றுமை நிறைந்த இனமாக, தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடும் இனமாக தமிழினம் வடிவெடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறை என்ன? மதவெறி, சாதிவெறி போல தமிழர்கள் கட்சி வெறியால் பிளவு பட்டு உள்ளனர். அரசியல் கட்சிகளே மதங் களாக மாறிவிட்ட நிலையில், மக்களைப் பக்தர்களாக்கிக் குளிர்காய்கின்றனர்.


 இது மிகவும் ஆபத்தான போக்கு. ஏற்கெனவே சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் தமிழ கத்தை வஞ்சிக்கின்றன. மத்திய அரசுதமிழ் நாட்டை மதிப்பதே இல்லை. இந்த நிலையில் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளின் போக்கும் இதே சுயநலத்துடன் நீடித்தால், இந்தியாவில் எல்லா வகையிலும் தமிழகம் பின்தங்கிய மாநிலமாக மாறிவிடும்!''



4.''தமிழீழம் பற்றி ஆதியோடு அந்தமாகத் தெரிந்துகொள்ள நான் என்ன புத்தகம் படிக்க வேண்டும்?''


''வரலாற்று அறிஞர் முருகர் குணசிங்கம் எழுதிய 'இலங்கைத் தமிழர் வரலாறு’ என்ற நூல் படித்தால், முழுமையான வரலாறு அறிந்துகொள்ளலாம்!''


5.''கவிஞர் கண்ணதாசனுடன் நெருங் கிப் பழகியவர் நீங்கள். அவருடனான நினைவுகளில் மறக்க முடியாததைக் குறிப்பிடுங்களேன்?'' 


''ஒன்றல்ல... இரண்டல்ல... பல சம்பவங்கள் உண்டு. ஒருமுறை குடும்பக் கட்டுப்பாடு விழாவுக்கு கவிஞரை அழைத்து இருந்தார்கள். 14 குழந்தைகளுக்குத் தகப்பனான அவர் அந்த விழாவில் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வத்தில் நானும் சென்று இருந்தேன். பேச்சைத் தொடங்கும்போதே, 'எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமானவன் நான் என்பதால், என்னைப் பேச அழைத்திருக்கிறார்கள்’ என்று அவர் சொன்னபோது, அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது


.
இன்னொரு சந்தர்ப்பத்தில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஹார்மோனியத்தில் மெட்டை இசைத்துக்காட்ட, பாடல் எழுதுவதற்காக எதிரே அமர்ந்திருந்தார் கவிஞர். அவர் மெட்டை இசைத்தார். கேட்டதும், கண்களை மூடி, 'மறுபடியும் வாசிச்சுக்காட்டு’ என்று  எம்.எஸ்.வி-யிடம் சொன்னார் கவிஞர். 


அவர் மறுபடி வாசித்தார். அதைக் கேட்டதும், 'போ... போ... இந்த மெட்டுக்கு எல்லாம் பாடல் எழுத முடியாது’ என்று சொல்லி விட்டார். உடனே எம்.எஸ்.வி. எழுந்து சற்று தள்ளிப்போய் நின்றுகொண்டு, 'இந்த மெட்டுக்குப் பாட்டு எழுதலேன்னா, அப்புறம் என்ன நீங்க கவிஞர்?’ என்று கேட்டுவிட்டு வாசலுக்கு வெளியே ஓடிப்போய்விட்டார். 'பிடி, பிடிய்யா அவனை’ எனக் கவிஞர் சற்று கோபத்துடன் சத்தமிட... எம்.எஸ்.வி. பயத்துடன் வெளியிலேயே நின்றுகொண்டுஇருந்தார். 


பிறகு கோபம் தணிந்ததும், 'உள்ளே... வா’ என்று அழைத்து... அதே மெட்டுக்கு மறுபடியும் பாடல் எழுதிக் கொடுத்தார். வெளியானதும் பெரிய அளவில் பிரபலமான அந்தப் பாடல்.... 'யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கடா போங்க...’  


காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, இந்திரா காங்கிரஸில் இணைந்தார் கண்ணதாசன். நான் காமராஜர் காங்கிரஸிலேயே தொடர்ந்தேன். இருந்தாலும், நான் காமராஜரின் பிறந்த நாளை தேசியத் திருவிழாவாக மதுரையில் நடத்தியபோது கவிஞரைஅழைத் தேன். எந்த மறுப்பும் சொல்லாமல் முந்தைய நாளே வந்திருந்து விழா குறித்து மதுரையின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். அத்தகைய அரசியல் நாகரிகம் மிகுந்தவர் கவியரசர்!''



6.''ராஜீவ் காந்தியின் மரணச் செய்தியை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?'' 


''கோவை ரயில் நிலையத்தில் இறங்கிய ஓர் அதிகாலைப் பொழுதில் ராஜீவ் கொலை செய்தியைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னை இந்திராவின் குடும் பத்தோடு நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், என்னை ராஜீவின் மரணம் கூடு தலாகப் பாதித்தது. ஆனால், இதைப் பற்றி பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பம் பிறகு வரவில்லை. காரணம், அதன் பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை!''  



''7. விலைவாசி உயர்வு, லஞ்சம், தமிழ்நாட்டு சாதிப் பிரச்னைகள்பற்றி எல்லாம் பேசாமல் எப்போதும் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பது ஏன்?'' 


 ''யார் சொன்னது? நாங்கள் அனைத்துப் பிரச்னைகளைப் பற்றி பேசியும் எழுதியும் போராடியும்வருகிறோம். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதி நீர்ப் பிரச்னைகளுக்கு முதன்முதலாகக் குரல் கொடுத்தது எங்கள் தமிழர் தேசிய இயக்கம்தான். 


ஆனால், இலங்கைப் பிரச்னைபற்றி நான் சொல்வது மட்டுமே ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுகிறது. எங்களு டைய மற்ற போராட்டங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. இதனால் உங்களுக்கு அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அது தவறு. ஈழத் தமிழர்களின் நலன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்குத் தமிழ்நாட்டு தமிழர் நலனும் முக்கியமே.''



8. ''இலங்கைப் போரை இந்தியா ஆதரித்ததற்கு 'சீனாவின் ஆதிக்கம்அங்கே வந்துவிடும்’ என்பது மட்டும்தான் காரணமா?''   


''இது ஒரு திசை திருப்பும் பேச்சு. ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில், இலங் கையில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தைக் கொண்டுவருவதற்கான ரகசிய முயற்சி நடந்தது. உடனே இந்திராகாந்தி நாடாளு மன்றத்தில், 'இந்தியப் பெருங்கடல் எல்லை யில் எந்த நாட்டு ராணுவத்தளம் அமைக்கப் பட்டாலும், இந்தியா அதைத் தனக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதும்’ என எச்சரித்தார். உடனே, ஜெயவர்த்தனா அடங்கிப்போனார். 



அதைப் போல, 'சீனாவிடம் உதவி பெற்றால், அதை நாங்கள் எங்களுக்கு எதிரானதாகக் கருதுவோம்’ என்று ராஜபக் ஷேவை நோக்கி இந்தியா எச்சரித்திருந் தாலே இலங்கை அடங்கிப்போயிருக்கும். ஆகவே, சீனாவைக் காட்டி இந்தப் பிரச்னை யைத் திசை திருப்புவது சரியானது அல்ல. உண்மையான காரணம் என்ன? இந்தியா வில் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், மிசோரம் எனப் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தின் சரிபாதி அங்குதான் நிற்கிறது.


 ஒருவேளை இலங்கை யில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால்,இந்தியா வில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்ட மிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார் கள்!''



9.''உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் அடைய விரும்பிய லட்சியத்தை இன்று வந்து சேர்ந்துவிட்டீர்களா?'' 


''மாணவர் பருவத்தில் அண்ணன் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்து என் அரசியல் வாழ்வைத் துவங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தபோது, ஒர் தமிழன் பெரும் பதவியில் இருக்கும்போது அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தன் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார் சம்பத்.


பெருந்தலைவரின் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி சீரழிய ஆரம்பித்துவிட்டது. என்றைக்கு இந்திய ராணுவம் ஈழத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதோ, அன்றைக்கே நாங்கள் காங்கிரஸ் கட்சியை மறந்துவிட் டோம். தமிழர் தேசிய இயக்கத்தைத் தொடங்கினோம். எங்கள் லட்சியம், தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்தச் செய்வதுதான். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண்டு இருக் கிறோம்!''

முற்றும் 

நன்றி - விகடன் 


டிஸ்கி 1 -

வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி http://www.adrasaka.com/2012/04/blog-post_8963.html

டிஸ்கி 2 -

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ நெடுமாறன் பேட்டி வீடியோ   http://www.adrasaka.com/2012/04/blog-post_19.html

டிஸ்கி 3 -

பிரபாகரனை நம்ப வைத்து கழுத்தை அறுத்த ராஜீவ் காந்தி - பழ நெடுமாறன் வெளியிடும் உண்மைகள் http://www.adrasaka.com/2012/04/blog-post_12.html



 டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Thursday, April 26, 2012

வீரப்பன் விவகாரத்தில் நடந்தது என்ன? பழ நெடுமாறன் பேட்டி

1. வீரப்பனை நேரில் சந்தித்தவர், அவர் மிகவும் நம்பியவர்களுள் நீங்களும் ஒருவர் என்ற முறையில் அவரைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உண்மையாக, நேர்மையாகச் சொல்லுங்கள்?'' 
''வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான். ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது. வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி வைத்திருந்தபோது, அவரை மீட்பதற்காக நான் உள்ளிட்ட குழுவினர் காட்டுக்குள் சென்றோம். 

அப்போது எங்களையும் வீரப்பன் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தால், யாராலும் எதுவும் செய்துஇருக்க முடியாது. எங்களை அனுப்பிவைத்த அரசாங்கமும் கண்டுகொள்ளாமல்தான் விட்டிருக்கும். நாங்கள் அரசை நம்பி அல்ல... வீரப்பன் என்ற தனி மனிதனின் நேர்மையை நம்பித்தான் காட்டுக்குள் சென்றோம். வீரப்பனும் கடைசி வரையில் அந்த நேர்மை யைக் காப்பாற்றினார்.


வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினர் சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தன மான தாக்குதல்களை நாம் அறிவோம். ராஜ்குமார் கடத்தல் சமயத்தில் 'பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு தர வேண்டும்’ என்பது வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. அதற்காக அவர் ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஊர் வாரியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் குறிக் கப்பட்டு இருந்தன.


 அந்தப் பட்டியலில் வீரப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இல்லை. ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அதிரடிப் படை கொன்றிருந்தது. நான் இதைப் பற்றி வீரப்பனிடம் கேட்டபோது, 'என் குடும்பம் அழிந்தது... அழிந்ததுதான். நான் இழப்பீடு வாங்கி என்ன செய்யப்போறேன்? என் பெயரைச் சொல்லி அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதும்’ என்று சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார். வீரப்பனிடம் இருந்த இந்தப் பெருந்தன்மை அவரை வேட்டையாடிய அதிகாரிகளுக்கு இல்லை.



அந்தச் சமயத்தில் நான் மொத்தம் ஐந்து நாட்கள் காட்டுக்குள் இருந்தேன். அந்த ஐந்து நாட்களும் எனக்காக எல்லோரும் சைவ சாப்பாடுதான் சாப்பிட்டனர். எந்த வசதியும் இல்லாத காட்டுக்குள் வீரப்பன் செய்த உணவு உபசரிப்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது!''



2. ''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களைவைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்களே?'' 


''அது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்களை ஆதரிப்பதால், நாங்கள் எவ்வளவோ சொந்த இழப்புகளுக்கு ஆளாகிஇருக்கிறோம். காவல் துறையின் நெருக்கடி, பொய் வழக்குகள், உளவுத் துறையின் கண்காணிப்பு எனப் பல வகைகளிலும் எங்கள் அரசியல் வாழ்க்கையும் சொந்த வாழ்க்கை யும் சிக்கலில்தான் தள்ளப்பட்டு இருக்கிறது.


ஈழத் தமிழர்களைக் கொண்டு நாங்கள் ஆதாயம் அடைந்தோம் என்பது அபாண்டத்திலும் அபாண்டமான குற்றச்சாட்டு. அப்படி ஏதாவது ஆதாயம் அடைந்திருந்தால், எங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துவரும் மத்திய, மாநில அரசுகள் இத்தனை காலம் சும்மா விட்டுவைத்திருக்குமா? வழக்குப்போட்டு உள்ளே தள்ள எவ்வளவு நேரம் ஆகும்?''

3. ''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?'' 


''நிச்சயமாக!


இரண்டாம் உலகப் போரில் 50 லட்சத்துக் கும் அதிகமான யூத மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தது ஹிட்லர் கும்பல். போரின் முடிவில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதும், மற்ற குற்றவாளிகளுக் குச் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததும் வரலாறு.


செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006-ம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நான்கு ஆண்டு காலமாகவிசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறை யிலேயே உயிர் துறந்தார்.


அண்மையில் சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது  சர்வ தேச நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.


ஒரு நாட்டின் அதிபராக இருப்பது, மக்களைக் கொல்வதற்கான உரிமம் அல்ல. அப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும்போது, நாகரிகச் சமுதாயம் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் தண்டிக்கும். ஆகவே, சர்வதேச சமூகம் ராஜபக்ஷேவையும் போர்க் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும் ஆகாது!''


4. ''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?'' 


''நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. முகாம்களில் இருந்து வெளியேறிப் போகச்சொல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், வெளியில் சென்று அந்த மக்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், அவர்களின் நிலங்களில் எல்லாம் சிங்களர்கள் குடியேறிவிட்டார்கள். முகாம்களிலும் இருக்க முடியவில்லை. குழந்தைகள், வயதான பெரியவர்கள் எல்லோரும் நல்ல உணவோ, தங்கும் இடமோ கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின் றனர். இப்படித் தமிழர்கள் பட்டினியாலும் நிர்க்கதியாலும் சாக வேண்டும் என்றுதான் ராஜபக்ஷே அரசு எதிர்பார்க்கிறது!''




5. ''வாடகைக்கு வீடு கிடைப்பதில் உங்களுக்குச் சிக்கல் என்று கேள்விப் பட்டேன். அது உண்மையா?'' 


''எங்கள் கட்சி அலுவலகத்துக்கு ஒரு வாடகைக் கட்டடத்தைப் பிடித்து முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் எல்லாம் போட்ட பின்னர், கட்டட உரிமையாளர் 'தர முடியாது’ எனப் பின்வாங்கிவிட்டார். காரணம், உளவுத் துறை அவரை மிரட்டி இருக்கிறது. இப்படி எத்தனையோ சம்பவங்கள். சென்னை நகர எல்லையைக் கடந்து பல்லாவரத்தில் எங்கள் அலுவலகம் இருப்பதற்கு இந்த வீட்டுப் பிரச்னையும் ஒரு காரணம்.

 இவற்றையும் தாண்டி எங்களுக்கு வீடு தருபவர்களும் அலுவலகத்துக்கு இடம் தருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த எல்லோருமே இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறோம். மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியாகவும் மிரட்டப்படுகிறோம். எங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அரசியல் வாழ்வின் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப் பழகிக்கொண்டுவிட்டேன்!''



6. '' 'ஈழத் தமிழர்கள்’ என ஏன் பிரித்துச் சொல்ல வேண்டும்? தமிழர்கள் என்று சொன்னால் போதாதா?'' 


''அப்படிப் பொதுவாகச் சொல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தபோதிலும், ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் ஆஸ்திரேலியர்கள், கனடாவில் வாழ்ந்தால் கனேடியர்கள், அமெரிக்காவில் வாழ்ந்தால் அமெரிக்கர்கள். அந்த நாட்டுப்பற்றை விட்டுக்கொடுக்க முடியாது. மலேசியா வில் வாழ்பவர்கள் மலேசியத் தமிழர்கள், இந்தியாவில் வாழ்பவர்கள் இந்தியத் தமிழர்கள், ஈழத்திலே வாழ்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான்.

 தேச எல்லைகளைக் கடந்து நம்மை மொழி ஒன்றிணைக்கிறது என்பதுதான் இதில் முக்கியம். இந்த வித்தியாசங்களை ஏற்றுக்கொண்டுதான் நாம் ஒன்று சேர முடியுமே தவிர, அதை அழித்துவிட்டு முடியாது. ஆகவே, 'எல்லோரும் தமிழர்கள்’ எனப் பொதுவாக வரையறுப்பது பொறுத்தமற்றது!''


7. '' 'ஏன்தான் இந்த அரசியலுக்கு வந்தோமோ?’ என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டா?'' 


''அரசியலில் சலிப்புக்கு ஒருபோதும் இடம் இல்லை. மக்களுக்குத் தொண்டு புரியத்தான் வந்திருக்கிறோம். அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவது இல்லை. என் அரசியல் வாழ்க்கையில் எத்த னையோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். தடாவில் சில நாட்கள், பொடாவில் 18 மாதங்கள் என ஐம்பதுக்கும் அதிகமான முறை என்னை இந்த அரசுகள் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றன. ஒருமுறைகூட அதற்காக வருந்தியதோ, சோர்வு அடைந்ததோ இல்லை.

 மாறாக, மேலும் உற்சாகத்துடன் மக்கள் பணிபுரியும் உந்துதலே ஏற்படும். பதவிக்காகவும்  பணத்துக்காகவும் அரசியலுக்கு வருபவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய சலிப்புகள் ஏற்படலாம். மக்கள் நலனை மனதில்கொண்டு அரசிய லுக்கு வருபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் உற்சாக தினம்தான்!''


8.  ''ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு எதை, யாரைக் காரணம் என்பீர்கள்?''   


''பின்னடைவுக்கு முக்கியமான முதல் காரணம், சர்வதேசச் சூழல்தான். அமெரிக் காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட 9/11 சம்பவத்துக்குப் பிறகு, உலக நாடு களின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையே வேறுபாடு காணப் பல நாடுகள் விரும்பவில்லை. 


எல்லா நாடுகளும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதன் ஓர் அங்கமாகத்தான் விடுதலைப் புலிகளும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இப்படி ஒன்றுசேர்ந்த நாடுகளின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை எடுத்துக்கொண்டால், காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், நாகாலாந்து போன்ற பல இடங்களில் தேசிய இனப் போராட்டங்கள் நடக்கின்றன.

 சீனாவில் திபெத் மக்கள் நீண்டகாலமாக தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். பாகிஸ்தானில் சிந்து மாநில மக்களும், எல்லைப்புறத்தைச் சேர்ந்தவர்களும் விடுதலைக்காகப் போராடுகின்றனர். இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்ட இந்த நாடுகள் முயற்சி செய்கின்றன. அதனால்தான், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதத்தின் பெயரால் கொச்சைப்படுத்தி சிங்கள அரசுக்குத் துணை நிற்கின்றன. உலக அளவிலான ஆளும் வர்க்கங்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட கள்ளக்கூட்டும் சூழ்ச்சியான நடவடிக்கைகளும்தான் ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம்!''  


-அடுத்த வாரம்... 


 '' 'நம்மைவிட பிரபாகரனுக்கு 'அலர்ட்னஸ் - உஷார்தன்மை’ அதிகம்!’ என்கிறார் எனது போலீஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அதை எப்போ தேனும் உணர்ந்திருக்கிறீர்களா?'' 




 ''உங்கள் தந்தை காந்தியடிகளிடம் கையெழுத்து கேட்டு, அதற்கு அவர் காசு கேட்டார் என்று படித்த ஞாபகம். அது உண்மையா?'' 


 ''எதிர்காலத் தமிழகம் குறித்த உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? முன்னேற்றப் பாதையில்தான் தமிழர்கள் செல்கிறார்களா?'' 


- இன்னும் பேசலாம்...

thanx - vikatan