Saturday, May 26, 2012

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? ஜூ வி கட்டுரை

ரத்தம் கொடுத்தாத் தான் பெட்ரோல் கொடுப்பாங்களா?

மக்களை உறிஞ்சும் மத்திய அரசு
 

ப்பாவி மக்களைப் பற்றி மத்திய அரசாங்கத்துக்கு எவ்வளவு அலட்சியம் இருக்கிறது என்பதன் அடை​யாளம்தான் பெட்ரோல் விலை உயர்வு. மூச்சுக் காற்றைப் போல முக்கிய​மானதாக ஆகிவிட்டது பெட்ரோல். அதைப் பெறு வதற்கு இனிமேல் பாக்கெட் பணத்தை மட்டுமல்ல... உடம்பில் இருந்து ரத்தத்தையும் எடுத் துக் கொடுத்தால்தான் பெற முடியும் என்ற நிலைமையை மத்திய அரசு உருவாக்கி விட்டது! 


'பிரணாப் முகர்ஜியை நிதி அமைச்சரா வெச்சிருந்தா, இப்படித்தான் பண்ணுவார். பேசாம ஜனாதிபதி ஆக்கிடுங்க’ என்று, பொதுமக்கள் கொந்தளிக்கும் அளவுக்கு பெட் ரோல் விலையை உயர்த்தி விட்டார்கள்.


'பெட்ரோல் விலை விரைவில் உயரப்​போகிறது’ என்பதை, கடந்த 9.5.12  இதழில் எழுதி இருந்தோம். எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 7.67 இழப்பை சந்தித்து வருவதையும் சொல்லி இருந்தோம். ஆனால், ஒரேயடியாக லிட்டருக்கு 7.98 உயர்த்தி, மக்களின் வயிற்றில் இடியை இறக்கி இருக்கிறது மத்திய அரசு. படிப்படியாக உயர்த்தினாலாவது ஓரளவுக்கு அரசாங்கத்துக்கு தங்களது பிரஜைகள் மீது கரிசனம் இருப்ப​தாகச் சொல்லலாம். ஆனால், ஒட்டு​மொத்தமாக உயர்த்துவது ஆட்சியாளர்​களின் சர்வாதிகார மனோபாவத்தையே காட்டுவதாகப் பொது​மக்கள் கதறுகிறார்கள்.


விலை ஏற்றம் பற்றி செய்தி கிடைத்தவுடன் உயர்​ரக சொகுசு காரில் இருந்து சாதாரண டி.வி.எஸ். 50 வரை, பழைய ரேட்டில் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேகவேகமாக பங்க் வாசலில் தவம் கிடந்தன. ஆனால், பெட்ரோல் தீர்ந்து விட்டதாக பல பங்க்குகளும் அடைக்கப்பட்டு இருந்தன


. (அவர்களால் முடிந்த சேவை அது!) அதனால் அவசரத்துக்குப் பெட்ரோல் போட வந்தவர்களும், அவதிப்பட நேர்ந்தது.
இதுவரை இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று விலை ஏற்றி வந்த அரசு, இப்போது திடுமென ஒரேயடியாக உயர்த்தியதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கொதிக்கிறார்கள் மக்கள். 


இத்தனைக்கும் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறையவே செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 105 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், இப்போது 90 டாலர்களாகச் சரிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் விலையும் குறைவதுதானே நியாயம். ஏன் கூடுகிறது?எல்லாம் டாலர் செய்யும் மேஜிக்!


கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. கடந்த இரண்டே மாதங்களில் சுமார் 15 சதவிகிதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. முன்பு 49 ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கினால், இப்போது 56 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க வேண்டிய நிலை. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில்தான் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை என்றாலும் டாலருக்கு நிகராக அதிக ரூபாயைச் செலவழிக்க வேண்டி இருப்பதால், நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கிறது. அந்த விலை ஏற்றம் நம் தலையில்தான் விடிகிறது.


அது சரி. ரூபாய் மதிப்பு ஏன் திடீரென சரிகிறது? அதற்குக் காரணமும் கச்சா எண்ணெய்தான்.


அமெரிக்க டாலருக்கும் இந்திய ரூபாய்க்குமான சப்ளை மற்றும் டிமாண்டைப் பொறுத்துத்தான் ரூபாயின் ஏற்றம் இருக்கிறது. இந்திய அரசு செய்யும் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருக்கிறது. அந்த இறக்குமதிக்கான பணத்தை இந்திய அரசு, டாலரில்தான் கொடுக்க வேண்டும். இதனால் டாலருக்கு அதிக டிமாண்ட் ஏற்படுகிறது. அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது.


இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவு​களில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானதுதான். இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகித்தை நாம் இறக்குமதிதான் செய்கிறோம். அதிகஅளவில் இறக்குமதி செய்ய வேண்டி இருப்பதால், ரூபாய் மதிப்பு சரிகிறது. ரூபாய் சரிவதால் நாம் பயன்படுத்தும் பெட்ரோல் விலை உயர்கிறது.


இந்திய அரசாங்கத்தால் பெட்ரோல், டீசல் நுகர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ரூபாயின் சரிவையும் தடுக்க முடியவில்லை. எதிர்காலத்தில் விலை ஏறாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதாவது, எதுவும் செய்யத் தெரியவில்லை என்பதே இதற்கு முழுமையான அர்த்தம்.


பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், மாநில முதல்வர்கள் என்று பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வருகின்றன. ஆனால், எந்த மாநில முதலமைச்சரும், மாநிலங்கள் வசூலிக்கும் வரியில் சலுகை காட்டிவிடாமல், ஒட்டுமொத்தமாக மத்திய அரசையே போட்டுத் தாளிக்கிறார்கள். (மாநிலம் வசூலிக்கும் வரியில் சலுகை காட்டாத காரணத்தால்தான் டெல்லியைவிட சென்னையில் நான்கு ரூபாய் விலை அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டன அறிக்கை விடும் ஜெயலலிதா உணர வேண்டும்!)


இப்போது எழுந்திருக்கும் கடும் கண்ட னம் காரணமாக, ஓரிரு ரூபாய் வரை விலைக் குறைப்பு செய்யப்படலாம். ஆனால், இதில் சந்தோஷப்பட எதுவும் இல்லை. இன்று இல்லா விட்டால் நாளை மீண்டும் விலை உயரத்தான் போகிறது. வயிற்றெரிச்சலுடன் பங்க் வாசலில் நிற்கப்போகிறோம். அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகவும் பெட்ரோல் ஆகிவிட்டது. வாங்கவும் முடியவில்லை. வாங்காமல் இருக்கவும் முடியாது என்ற நிலைமையில் மத்தியதர வர்க்கம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது. அக்னி வெயிலை விட மத்திய அரசாங்கம் நடத்தி இருக்கும் இந்த அவஸ்தை வெயில் ரொம்பவே மக்களை வாட்டு கிறது!


3 comments:

MARI The Great said...

அருமையான கட்டுரை ..!

K SHANKAR said...

@வரலாற்று சுவடுகள் நிறைய வழிகள் உள்ளன... முதலில் பெட்ரோலிய பொருட்களை அத்த்யாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும்.. மேலும் அதனை தனியான ஒரு கொள்கையில் கையாள வேண்டும்.. வரிகளை பாதியாக குறைத்து அதில் வரும் வருவாய் இழப்பை வேறு பல வழிகளில் உடனடியாக சரி செய்யலாம்.. நிறைய வழிகள் உள்ளன.. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு..

Senthil Prabu said...

நச் பதிவு!!