Sunday, May 20, 2012

நல்ல தங்காள் ஆட்சி - நல்லவை 10 , அல்லவை 10 - விகடன் கட்டுரை

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!


 நல்லவை  10


தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.


சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.


தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.


தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.

தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.


அல்லவை  10


சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.


5 comments:

முத்தரசு said...

வணக்கம் சித்தப்பு

ராஜி said...

ஜெயலலிதா பத்திய பதிவா?! நான் இந்த பதிவுக்கு வரலை, கருத்து எதுவும் போடலை. வீட்டுக்கு யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்கப்பா

MARI The Great said...

அதிகப்படியான புகழ்ச்சி ஆளும் அரசிற்கு ஆபத்து.., மேதகு கருணாவும் இதையேதான் செய்தார், தூக்கி எரியபட்டார் மக்களால். ஜெ-வும் அதை பின்பற்றினால் .., சொல்வதிற்கில்லை ... :(

'பரிவை' சே.குமார் said...

fifty fifty தானா...

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

கருணாநிதி ஆட்சியில் எங்க தெருவுக்கு மூன்று நாளைக்கு ஒரு முறை குழாயில் தண்ணீர் வந்தது. என்னைக்கு இந்த ஜெயலலிதா ஆட்சி வந்தது அன்றில் இருந்து ( குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் பஞ்சாயத்து தலைவர் ஆனதில் இருந்து ) சரியாய் ஒன்பது நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. நாங்களும் முறையிடாத நபர்கள் இல்லை. தண்ணீர் வந்த பாடும் இல்லை. ஏதாவது கொஞ்சம் சத்தமாக பேசினால் வீடு தேடி வந்து மிரட்டுகிறார்கள். என்ன கொடுமை சார் இது