Showing posts with label KALAIGNAR. Show all posts
Showing posts with label KALAIGNAR. Show all posts

Wednesday, November 07, 2012

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு -கலைஞர், வை கோவுக்கும் பங்கா?

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு!

‘‘மாயமான சி.டி. எங்கே? மறைத்தது ஏன்?’’

எஸ். சந்திரமௌலி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுபடியும் ஒரு பரபரப்பு. வழக்கின் சிறப்புப் புலனாய்வுக் குழு தலைமை புலனாவு அதிகாரி கே.ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தி படுகொலை சதி: சி.பி.சி. கோப்புக்களில் இருந்து (Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files) என்ற ஆங்கிலப் புத்தகம் தான் பரபரப்புக்குக் காரணம். இவர் ஏற்கெனவே ராஜீவ் காந்தி படுகொலை பற்றி ஒரு டி.வி.டி. வெளியிட்டவர்.


 ஸ்ரீபெரும்புதூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ மாயமானது ஏன்? சதித் திட்டத்தில் கருணாநிதி, வைகோ போன்ற தமிழக அரசியல் வாதிகளுக்கு உள்ள தொடர்பு? என ஆங்கிலப் புத்தகத்தில் இவர் எழுப்பியுள்ள கேள்விகள்தான் சர்ச்சையின் மையம். அவரிடம் பேசியதில் இருந்து...


இப்போது எதற்காக இந்தப் புத்தகம்?


ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தவர். அவர் சாதாரண விபத்தில் இறக்கவில்லை. விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட சதித்திட்டத்தில் பலி ஆனார். சவாலான அந்தப் புலனாய்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், விசாரணையின்போது, சில விஷயங்கள் மறைக்கப்பட்டன.


 சிலரை விசாரணை செய்ய அனுமதி இல்லை. சில அரசியல்வாதிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடியவில்லை. அதற்கு அனுமதி கிடைத்திருந்தால், விடுதலைப்புலிகளுக்கு இந்த சதித்திட்டத்தில் உதவியவர்கள் யார், யார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும். சி.பி.., அரசியல் நிர்பந்தத்துக்கு எப்படி வளைந்து கொடுக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகம்."


சதி நடந்த அன்று ஸ்ரீபெரும்புதூரில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, புலனாய்வுக் குழுவின் கைக்கு வராமல், மாயமானதாகச் சொல்லி இருக்கிறீர்களே?

ஆமாம். ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ச்சியை வீடியோ எடுத்தவரிடமிருந்து, மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் வாங்கிச் சென்றிருக்கிறார். அதை தில்லியில் .பி. அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள். அதில் சந்தேகத்துக்குரிய பெண்ணைப் பற்றி அன்றைய .பி.யின் தலைவர், இன்றைய மே.வங்காள ஆளுனர் எம்.கே. நாராயணன் மத்திய உள் துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


 அந்த வீடியோ மறுபடியும் சென்னை வீடியோகிராபரிடம் திரும்பக் கொடுக்கப்பட்டு அது தமிழ்நாடு வழியாக எங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால், அதில் ராஜீவ் படுகொலை பற்றிய தூர்தர்ஷன் செய்தி கிளிப்பிங்கும் சேர்க்கப்பட்டு இருந்தது. விழா நிகழ்ச்சி எடுக்கப்பட்ட வீடியோவில் தூர்தர்ஷன் செய்தி எப்படி இருக்க முடியும்?


தவிர, படுகொலையை நடத்துவதற்காக சென்னை வந்த விடுதலைப்புலி குழுவினர், உள்ளூர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோடு நெருக்கமாகி, அவர்கள் மூலமாகவே ஸ்ரீபெரும்புதூரில் கூட்ட மைதானத்தில் ராஜீவ் காந்திக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அந்தத் தகவல் வெளியானால், அது காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று அந்த விஷயத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர விடாமல் தடுத்து விட்டார்கள்."


புத்தகத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர்பு பற்றி விவரித்திருக்கிறீர்களே?

தமிழகத்தின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தினர் புலிகளின் அனுதாபிகள். 20 சதவிகிதத்தினர் ஆதரவாளர்கள். மீதி 20 சதவிகிதத்தினர் தீவிர ஆதரவாளர்கள். எனவே, ராஜீவ் கொலையோடு சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்படும்படி ஆதாரங்கள் இருந்தால் மட்டும், அவர்களை விசாரிக்கலாம் என்று நாங்கள் லட்சுமண ரேகை அமைத்து விசாரணையைத் தொடங்கினோம்.



 சம்பவம் அன்று அதே ஸ்ரீபெரும்புதூரில் மணிக்கூண்டு அருகில் கருணாநிதி கலந்து கொள்ளும் தி.மு.. பிரசாரக் கூட்டத்துக்கும் போலீஸ் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ராஜீவ் காந்தியின் கூட்டம் பற்றிய விவரங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே, தி.மு..வால் முடிவு செய்யப்பட்டு, கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கோரும் கடிதமும் கொடுக்கப்பட்டது. போலீஸ் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், கடைசி நேரத்தில் அந்தக் கூட்டத்தை ஏன் கருணாநிதி ரத்து செய்தார்?  


அன்று நடக்க இருந்த சம்பவம் பற்றி கருணாநிதிக்குத் தெரியாது என்றால், அவருக்குக் கூட்டத்தை ரத்து செய்ய ஆலோசனை சொன்னது யார்? என்று விசாரிக்க விரும்பினேன். ஆனால், கருணாநிதியை விசாரிக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக டி.ஜி.பி. கேட்டுக் கொண்டதன் பேரில் கருணாநிதி கூட்டத்தை ரத்து செய்து விட்டதாகவும், எனவே விசாரணை தேவையில்லை என்றும் சொல்லி விட்டார் புலனாய்வுக் குழுத் தலைவரான கார்த்திகேயன்."


இந்த வழக்கில் வைகோவை அரசு தரப்பு சாட்சியாகச் சேர்த்திருந்தீர்களே?


வைகோ, அரசு தரப்பு சாட்சியாக கூண்டில் நின்று, ‘நான் பிரபாகரனை நன்றாக அறிவேன்; ஆனால் இந்த சதித்திட்டம் பற்றி எனக்குத் தெரியாதுஎன்று சொன்னார். ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு பிரபாகரனுக்குக் காரணம் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக வைகோ பேசிய வீடியோ கேசட் ஒன்றைப் போட்டுக் காட்டியபோது, ‘வீடியோவில் இருப்பது நான்தான்; ஆனால் குரல் என்னுடையது இல்லைஎன்றார். ஆனால், அது அவரது குரல்தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. ஹாஸ்டைல் விட்னஸ் ஆகிவிட்ட வைகோவின் மீது வழக்குத் தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யாதது ஏன்? என்பதற்கு எனக்கு விடை தெரியவில்லை."


நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?


திறமையான அதிகாரிகள் உயிரைப் பணயம் வைத்து, தங்கள் கடமையை ஆற்றினாலும், அரசியல் நிர்பந்தம் காரணமாக அவர்கள் கண்டுபிடிக்கும் அத்தனை உண்மைகளும் வெளிச்சத்துக்கு வருவதில்லை."


நன்றி - கல்கி  





ராஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள்
**********************************

இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.



உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.



உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..




என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?



1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.



எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை




 இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.





அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’





சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..




நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.




பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.



நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’



அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?



இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள்.




 படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.



மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.




வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.



என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.




அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’



சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’



சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?



ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.



சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.




மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.




அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.




அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.



இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.



எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.




ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?



அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.



சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!
 

Thursday, September 20, 2012

கூடங்குளம் - மறைக்கப்பட்ட உண்மைகள் - விளக்கங்கள் - ஓ பக்கங்கள் ஞாநி @ கல்கி

ஓ பக்கங்கள்

கூடங்குளம் இன்று - ஒரு கேள்வி பதில்!

ஞாநி

கூடங்குளத்தில் இத்தனை நாட்களாக அமைதியாகப் போராடி வந்த மக்கள் திடீரென்று அணு உலைக்குள் நுழைய முற்பட்டதனால்தானே வன்முறை ஏற்பட்டது?


இல்லை. இது தவறான பிரசாரம். இடிந்த கரை மக்கள் அணு உலைக்குள் நுழைய வேண்டுமென்றால், சாலைகள் வழியே கூடங்குளம் பக்கம்தான் செல்ல வேண்டும். அவர்கள் அந்தப் பக்கம் செல்லவே இல்லை. தங்கள் இடிந்தகரை கிராமத்தின் கடற்கரைப் பகுதிக்குத்தான் சென்றார்கள். அந்தப் பகுதிக்கருகே அணு உலையின் சுற்றுச்சுவர்தான் இருக்கிறது. நுழைவு வழி எதுவும் கிடையாது. சுவரையடுத்து கடற்கரை வரை புதர்கள். பின்னர் மணற்பரப்பு. அடுத்து கடல். மணற் பரப்பில் கூடிய மக்கள் அங்கேயே இருந்து முற்றுகைப் போராட்டம் செய்யப் போவதாகத்தான் தெரிவித்தார்கள்.


அதற்காகப் பந்தல் போடத் தொடங்கினார்கள். அதைக் கண்டு அரசு பயந்தது. இடிந்தகரை லூர்து கோவில் மைதானத்தில் சுமார் 400 நாட்களாக பந்தலில் உண்ணாவிரதமிருந்தது போல இங்கேயும் தொடர்ந்து உட்கார்ந்துவிடப் போகிறார்களே என்ற பயத்தில் அவசர அவசரமாக தடியடி, கண்ணீர்ப் புகை பயன்படுத்தி மக்களை அடித்து விரட்டியது.


அணு உலையை முற்றுகை இடுவது என்பது வன்முறையில்லையா?


இல்லை. அவர்கள் உலை வளாகத்துக்குள் நுழையப் போவதாகச் சொல்லவில்லை. முயற்சிக்கவும் இல்லை. வெளியே உட்கார்ந்து தர்ணா செய்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறவழி முறை.


பெண்களையும் குழந்தைகளையும் முன்னே நிறுத்தி கேடயமாக்கி உதயகுமாரும் இதர தலைவர்களும் தப்பித்துக் கொள்வது கோழைத்தனமில்லையா? இது காந்திய அறவழியா?



விருப்பமில்லாதவர்களைக் கொண்டு வந்து முன்னே நிறுத்தினால்தான் தவறு; கோழைத்தனம். ஓராண்டுக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இதில் கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் பெண்கள்தான். தங்கள் குடும்பம், அடுத்த தலைமுறைகளின் பாதுகாப்பு பற்றிய கவலையில் அவர்கள் பங்கேற்பது மட்டுமல்ல, ஆண்களையும் அவர்கள்தான் வழிநடத்துகிறார்கள். குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு வந்து போராடுவது பெண்கள் வழக்கமல்ல.

காந்தியின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் வந்து போராடியது வரலாறு. தாங்கள் நேசிக்கும் தலைவரை போலீசிடமிருந்து காப்பாற்ற முயற்சிப்பது போராடும் சாதாரண மக்களின் இயல்பு. நெருக்கடி நிலையின்போது வரதராஜனைக் காப்பாற்றியது போன்று இன்று உதயகுமாரையும் காப்பாற்றியிருக்கிறார்கள்.


போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை இல்லாத கடுமையோடு பேசுகிறார்களே?


உண்மையில் ஜெயலலிதா அரசை தன் அடியாளாக நினைத்து மத்திய அரசு நடத்துகிறது. போராடுவோரைக் கொன்றால் கூட காங்கிரசுக்கு மகிழ்ச்சியாகத்தானிருக்கும். ஒரிசாவில் முதல் நாள் போராட்டத்திலேயே ஒரு பெண் போலீசை அடித்து உதைத்த காங்கிரசாருக்கு 400 நாள் அறவழியில் போராடுவோர்தான் தீவிரவாதிகளாகத் தெரிவார்கள்.


அணு உலையில் எரிபொருள் நிரப்பத் தடையேதுமில்லை என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் ஏன் மக்கள் போராடவேண்டும்? மேல் முறையீட்டுக்குச் செல்ல வேண்டியதுதானே?


சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது கூடங்குளம் இடிந்தகரை மக்கள் அல்ல. அவர்கள் எப்போதும் களத்தில்தான் அமைதியாகப் போராடி வருகிறார்கள். அவர்களை ஆதரிக்கக்கூடிய அறிவுஜீவி-நேச சக்திகளில் ஒன்றான பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்புதான் வழக்கு தொடுத்தது. அது மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. தவிர கடந்த 400 நாட்களாகவே பல அணு உலை தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அதனால் மக்கள் அங்கே தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லமுடியுமா என்ன? சட்ட ரீதியான போராட்டம் ஒருபக்கமும், களத்தில் அறவழிப் போராட்டம் இன்னொரு பக்கமுமாக நடப்பதில் எந்த முரண்பாடும் இல்லை.


உச்ச நீதிமன்றம் சொன்னால் ஒப்புக்கொண்டு விடுவார்களா?



என்ன சொல்லும் என்பதைப் பொறுத்தது அது. உச்ச நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு மக்களுக்கு ஏற்கத்தக்கதாக இல்லையென்றால் தொடர்ந்து போராடுவதில் என்ன தவறு? பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இல்லாத தாக்குவதற்காக, அரசாங்கங்கள் தீர்ப்பு வந்த பின் சட்டங்களைத் திருத்தியிருக்கின்றன. காவிரி நீர் பங்கீடு பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இன்றுவரை கர்நாடக அரசு மதித்து நிறைவேற்றவே இல்லையே. ஓர் அரசாங்கமே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதபோது, அதன் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லையே. ஆனால் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாக்கப் போராடும்போது மட்டும் நீதிமன்றத்தைக் காட்டி மிரட்டுவது நியாயமா? தவிர இந்தப் பிரச்னையில் கீழ் நீதிமன்றம் பல முக்கியமான வாதங்களைப் புறக்கணித்துவிட்டது. அவற்றை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை மக்கள் சார்பில் வழக்கு தொடுப்பவர்களுக்கு இருக்கிறது.


என்ன விஷயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்?


இந்திய அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம், உலக அணுசக்தி ஒழுங்குபடுத்தல் முகமை ஆகியவற்றின் விதிகளின்படி அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பாக, சுற்று வட்டாரப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் ஒரே ஒரு கிராமத்தில் சுமார் 50 பேர் முன்னால் ஓர் உரையை நிகழ்த்திவிட்டு, ஒத்திகைகள் மொத்தமாக நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தித் துறை சாதிக்கிறது.


புகோஷிமா அணு உலை விபத்துக்குப் பின் இந்திய அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம் அமைத்த குழு, இனி இந்திய அணு உலைகளில் பின்பற்றவேண்டிய கூடுதல் பாதுகாப்புக்கான வழிமுறைகளை வகுத்தது. மொத்தம் 17 நெறிமுறைகள். அவற்றைக் கூடங்குளத்தில் நிறைவேற்றாமல் அடுத்த கட்டத்துக்குச் செல்லக்கூடாது. அவற்றை நிறைவேற்ற இரு வருடங்கள் தேவைப்படும் என்று வாரியமே சொல்லியிருக்கிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் எரி பொருள் நிரப்பும் பணியை வேகமாகச் செய்ய அணுசக்தித்துறை அவசரப்படுகிறது. அதற்கு தமிழக அரசு போலீஸ் உதவியை அளித்து மக்களை ஒடுக்குகிறது.


அணு உலைகளே வேண்டாம் என்பவர்கள் ஏன் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டும்? தொடர்ந்து உலையை மூடு என்ற போராட்டத்தையே செய்ய வேண்டியதுதானே?


உலையே வேண்டாம் என்பதுதான் சரியான கருத்து. ஆனால் உலை வேண்டும் என்பவர்கள் அக்கறை காட்டவேண்டிய விஷயம் உலையின் பாதுகாப்பு அம்சங்கள். அவர்கள் அதற்குக் குரல் கொடுக்காமல் இருப்பதால், அவர்கள் சார்பில் அவர்கள் நன்மைக்காகவும் சேர்த்து உலை எதிர்ப்பாளர்கள் பேச வேண்டியிருக்கிறது.


உலை பாதுகாப்பானது என்று அப்துல் கலாம் முதல் பல நிபுணர்கள் சொன்னதைக் கேட்டு உலை எதிர்ப்பாளர்கள் கூட மனம் மாறலாம் இல்லையா?

எதிர்ப்பாளர்கள் திறந்த மனதோடு மத்திய அரசின் நிபுணர் குழு, மாநில அரசின் நிபுணர் குழு கொடுத்த அறிக்கைகளை எல்லாம் படித்தார்கள். தங்களுக்கு உதவுவதற்காக, அணு உலைகளை எதிர்க்கும் விமர்சிக்கும் விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசித்தார்கள். அரசாங்க விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கைகள் தொடர்பாக பல கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பினார்கள். அவற்றுக்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முன்வரவே இல்லை. எதிர்ப்பாளர்கள் அமைத்த மாற்று விஞ்ஞானிகள் குழுவைச் சந்தித்து விவாதிக்கச் சொல்லியும் அரசு விஞ்ஞானிகள் தயாராக இல்லை. இவையெல்லாம் இல்லாமல் எப்படி வெறும் வாய்ப்பேச்சை நம்பி மக்கள் ஒப்புக்கொள்வார்கள்? விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?


அரசும், உலையை நிறுவிய ரஷ்ய கம்பெனியும் தானே பொறுப்பு?


நஷ்ட ஈடு யார்யார் தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் ரஷ்யாவுடன் மன்மோகன் சிங் அரசு போட்ட ஒப்பந்தத்தை வெளியிடச் சொல்கிறோம். அதை வெளியிட அரசு தொடர்ந்து மறுக்கிறது. இது ராணுவ ரகசியம் அல்ல. ஆனாலும் மறுக்கிறார்கள்.


இப்போது இதெல்லாம் அன்னிய என்.ஜி. .க்களின் சதி என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சொல்லுகிறாரே?


இது ஏற்கெனவே நாராயணசாமி ஓராண்டில் பல முறை சொல்லி அடிபட்டுப்போன அவதூறு. சில தொண்டு நிறுவனங்கள் மீது ரெய்டு கூட செய்யப்பட்டது. ஆனால் கடைசியில் நாடாளுமன்றத்திலேயே இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றுதான் அமைச்சர் பதில் சொல்ல வேண்டியிருந்தது.


இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?


போலீசை வைத்து மக்களை அடித்து நொறுக்கிவிட்டு அணு உலையைத் திறப்பது தான் தீர்வு என்று மத்திய அரசும் மாநில அரசும் நினைக்கின்றன. இது தீர்வு அல்ல. இந்த நினைப்புதான் பிரச்னை.


அப்படியானால் என்ன செய்யவேண்டும்?


முதலில் அறவழியில் போராடிய மக்கள் மீதும் அவர்களைச் சிறப்பாக நெறிப்படுத்திய தலைவர்கள் மீதும் போட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்ற வழக்குகள் முடியும் வரையிலும், பாதுகாப்பு தொடர்பான எல்லா விதிமுறைகளும் பின்பற்றப்படும்வரை, எரிபொருள் நிரப்பி உலையை மேலும் ஆபத்தானதாக ஆக்காமல் நிறுத்த வேண்டும். இரு தரப்பு விஞ்ஞானிகளையும் ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கச் செய்ய வேண்டும். இந்திய அணுசக்தித் துறையின் கடந்த காலச் செயல்பாடுகள் பற்றி சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். உலக நாடுகள் எல்லாம் அணு உலைகளை மூடி வரும் நிலையில் நமது அணு உலைகள் பற்றிய மறுபரிசீலனையை நேர்மையாகச் செய்யவேண்டும்.


இதையெல்லாம் இந்தக் கூடங்குளம் உலையைக் கட்டுவதற்கு முன்பே செய்திருக்கலாம் இல்லையா?



சுமார் 40 வருடங்களாக இந்தியா வெங்கும் அணு உலை எதிர்ப்பு அறிஞர்கள் சொல்லி வந்ததை அரசு அலட்சியப்படுத்தியது. இடிந்தகரை உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னர்தான் முதல்முறையாக அணுசக்தித் துறை பதில் சொல்லவே ஆரம்பித்திருக்கிறது.


இந்த எதிர்ப்பை உலை கட்டும் முன்பு ஆரம்பத்திலேயே செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று கலைஞர் கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?


அதைச் சொல்லும் தகுதியே அவருக்குக் கிடையாது. 1987-88 சமயத்தில், அப்போது தினசரி சந்திக்கும் முரஸோலி மாறனிடம் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் எடுத்துச் சொன்னோம். அதையடுத்து அவர் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு. செயற்குழுவில் தீர்மானம் போடவைத்தார். அடுத்த சில மாதங்களில் தி.மு. ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. மே 1, 1989ல் கலைஞர் முதல்வராக இருந்த போது கன்னியாகுமரியில் அணு உலையை எதிர்த்து மாபெரும் மீனவர் பேரணி நடந்தது. அதில் கலைஞரின் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் இறந்தார். ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையை அவர் அணுகிய விதம் இதுதான்.


ஜெயலலிதா அணுகிய விதம் வித்தியாசமானதா?


முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள், பின்னர் மார்ச் 18 சங்கரன்கோவில் தேர்தல் முடியும்வரை போராட்டத்துக்கு ஆதரவு நிலை எடுப்பது போல சில செயல்களைச் செய்தார். தேர்தல் முடிந்த மறுநாளே மக்கள் மீது போலீஸ் முற்றுகையை ஏவி, பால், குடி நீர், உணவு எதுவும் கிராமங்களுக்குச் செல்லவிடாமல் தடுத்தார். அந்த அணுகு முறையின் அடுத்த கட்டம்தான் செப்டெம்பர் 10 தடியடி.


இப்போது ஜெயலலிதா என்ன செய்யவேண்டும்?


வாராவாரம் ஊடகங்களைச் சந்தித்து விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முன்வர வேண்டும். தேர்ந்தெடுத்த சில அதிகாரிகளையும் கட்சிக்காரர்களையும் மட்டுமே சந்திப்பது என்ற பழக்கத்தைக் கைவிடவேண்டும். அசல் உலகம் என்ன என்று அவருக்குத் தெரியாமல் அவரை வைத்திருப்பதில் சில அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லாபம் இருக்கலாம். ஆனால் நஷ்டம் மக்களுடையது.



ஒரு பக்கத் தகவல்கள் மட்டுமே ஜெயலலிதாவுக்குக் கிடைக்கின்றன என்பதும் அதன் அடிப்படையில்தான் அவர் முடிவுகள் எடுக்கிறார் என்பதும் தான் அவரது மிகப்பெரிய பலவீனம். இதிலிருந்து வெளியே வராவிட்டால் அவருக்கு அதிகபட்ச நஷ்டம் அடுத்த தேர்தல் தோல்வி. ஆனால் மக்களுக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகம். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து விசுவாசமாக .தி.மு..வுக்கு வோட்டுப் போடும் மீனவ மக்களின் ஓட்டை, ஜெயலலிதா அணு உலை விவகாரத்தைக் கையாண்ட விதத்திலும்; இடிந்தகரை தாக்கு தலையடுத்தும் இழந்து விட்டார் என்று இப்போதே சொல்லலாம். அதை மனத்தில் வைத்துத்தான் கருணாநிதி, தாக்குதல் நடந்து 48 மணி நேரம் வரை யோசித்துவிட்டு பின்னர், இடிந்தகரை மக்கள் சார்பான அறிக்கையை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்

. அடுத்த 25 வருடங்களுக்கு நிச்சயமாக மீனவர் ஓட்டு தனக்கு உறுதிப்பட வேண்டுமென்றால் ஜெயலலிதா செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். போலீஸ் நடவடிக்கைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, (மக்கள் ரொம்ப நல்லவர்கள்; உடனே மன்னித்துவிடுவார்கள்! ) கூடங்குளம் அணு உலையைக் கைவிடும்படி மத்திய அரசுக்குச் சொல்லவேண்டும். எப்படியும் அதிலிருந்து மின்சாரம் பெரிதாக வந்துவிடப் போவதில்லை. ஓட்டாவது வருகிறமாதிரி பார்த்துக் கொள்ளலாம்.


மற்ற அரசியல் கட்சிகள் என்ன செய்யவேண்டும்?


அணு உலையை இதுவரை ஆதரிக்கும் கட்சிகள் எல்லாரும் நேர்மையாக அணு உலைப் பிரச்னையைப் பரிசீலிக்க வேண்டும். அணு உலை கூடாது என்ற போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் போராடும் மக்கள் மீது அரசு வன்முறை நடந்த பிறகு தெருவுக்கு வந்து குரல் கொடுக்கும் அபத்தத்தைக் கைவிட வேண்டும். செப்டெம்பர் 9 அன்றே இடிந்தகரையில் மக்கள் கடற்கரையில் கூடினார்கள். போலீஸ் சுற்றி வளைத்தது. அன்றே ஆதரவுக் கட்சிகள் எல்லாம் தமிழ்நாடெங்கும் பின்னர் நடத்திய சாலை மறியல், போராட்டம், தர்ணா எல்லாவற்றையும் நடத்தியிருந்தால், நிச்சயம் அரசு செப்டெம்பர் 10 காலை இடிந்தகரை மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்கியிருக்கும்.

 thanx - kalki, tharumi