Saturday, July 23, 2016

கபாலி - சினிமா விமர்சனம்

’என்னய்யா இன்னமும் யூத் மாதிரி ஹீரோயினைக் கொஞ்சிகிட்டு, டூயட் பாடிகிட்டு.. அங்கெல்லாம் அமிதாப் பச்சன்.....’ என்று வம்பிழுப்பவர்களுக்கு ‘இந்தா வெச்சுக்கோ’ என்றொரு கம்ப்ளீட் பேக்கேஜ் கொடுத்திருக்கிறார் ரஜினி.. இல்லையில்லை ரஞ்சித்.

’தண்டனைக் காலம் முடிஞ்சுடுச்சு. ஆனா, இவரை வெளில விடலாமா.. வேண்டாமா’ என்று மலேசிய அதிகாரிகளின் கலந்துரையாடலில் தொடங்குகிறது படம். வெளியே வருகிற ரஜினி,  தன் எதிரியை என்ன செய்கிறார்... தன் குடும்பத்தைக் கண்டுபிடித்தாரா... என்று இரண்டரை மணி நேரத்தில் சொல்கிற ரஞ்சித் ஸ்டைல் ரஜினி சினிமா!

படம் முழுவதும் ரஜினிதான்! ஆரம்ப காட்சியிலேயே 60 வயசு என்று காட்டிவிடுகிறார்கள். க்ளோஸப் காட்சிகளில் முகத்திலும் அது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அந்த ஸ்டைல்.. சான்ஸேயில்லை! ‘வயசானாலும்..’ என்ற வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. அத்தனை ஸ்டைலிஷ் நடை, உடை, பாவனையில். சிறையிலிருந்த சோகம் தெரியாமல் துள்ளலாக வந்து நின்று ‘ஹேய்.. எப்டி இருக்கேன்’ என்று ஜான் விஜய்யிடம் கேட்கும் காட்சியில் தொடங்கி, க்ளைமாக்ஸில் வில்லன் துப்பாக்கியை நீட்டியபடி இருக்க, இவர் சாவதானமாக சோஃபாவில் அமர்வது வரை.. கெத்து!


வழக்கமான நாயகிகள் செய்யும் எதையும் செய்யாமல், ராதிகா ஆப்தேவுக்கு நல்ல கதாபாத்திரம். அமைதியாகவே எக்ஸ்ப்ரஷனில் கவர்கிற இவருக்கு, ஒரு காட்சி மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதில் கங்குலி ஸ்டைலில், ரெண்டு ஸ்டெப் வைத்து சிக்ஸரடித்திருக்கிறார்.

’ரஜினி படம். இதுல சொன்னா எல்லா மெசேஜும் ஊர், உலகத்துகே போய்டும்’ என்று தான் பேச நினைக்கும் ஜாதி, வர்க்க அரசியல் எல்லாவற்றையும் படத்தின் பல இடங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் புகுத்தியிருக்கிறார் ரஞ்சித். படம் முழுவதும் ரஜினி கோட் சூட்டில் வருவது கூட குறியீடுதான். பயப்படாதீர்கள். படத்தில் அவரே சொல்லுவார்! 

படத்தில் நடிகர் சங்க மெம்பர்களில் பாதிபேருக்கு மேல் நடித்திருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவு நட்சத்திரப் பட்டாளம். ரஞ்சித்தின் நிலைய வித்துவான்கள் எல்லாருமே படத்தில் கொஞ்சமாகவும் அதிகமாகவும் வந்து போகிறார்கள். ஜான் விஜய், கலையரசன், ரித்விகா, தன்ஷிகாவுக்கெல்லாம் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு.

எதிரி கேங்கிலிருந்து ரஜினியைப் பிடித்துப் போய், அவரிடம் வந்து சேர்கிற தினேஷ்  கைதட்டல் வாங்குகிற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் சென்னை போக ரஜினி  முடிவெடுக்கும் காட்சியில் சந்தோஷமும், பதற்றமுமாக அவர் தலையாட்டும் சீன்.. குட் ப்ரோ.  வில்லனாக படம் முழுவதும் வரும் கிஷோரும், வின்ஸ்டன் சாவோ-வும் கேங்ஸ்டர்கள் என்பதால் குடியும் கொண்டாட்டமுமாகவே திரையில் இருக்கிறார்கள்.  
படத்தில் டானை அழிப்பது முக்கியமாகப் போய்க் கொண்டிருக்க, படாரென்று யு டர்ன் எடுத்து ராதிகா ஆப்தேவைத் தேட ஆரம்பிக்கிறது திரைக்கதை. அந்த சென்னை போர்ஷன் முழுவதும்... மிக மெதுவான பயணம்.

வசனங்களில் பஞ்ச் ஏதுமில்லை என்றாலும் வில்லனிடம் பேசும் காட்சிகளில் எல்லாம் அனல் பறக்கிறது. ‘உனக்கு எரியுதுன்னா நான் கோட் போடுவேண்டா’ ரஜினி எகிறும்போது கைதட்டல்கள் பறக்கிறது. மலேசியாவில் தன்ஷிகாவோடு ரஜினி இருக்கிற வீட்டை பறவைப் பார்வையில் காட்டிய முரளியின் கேமராவுக்கு ஒரு சபாஷ். படத்திற்கு தேவையான இசையைக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். மாயநதி ஒலிக்கும்போது மென்சோகம் நம்மையும் சூழ்கிறது. நெருப்புடா பிஜியெம்... வாவ்.

அந்த ஃப்ளாஷ்பேக் போர்ஷன் அச்சு அசலாக காளி, பில்லா கால ரஜினியை ஞாபகப்படுத்துகிறது. அதிலும் ரஜினி ராஜ்ஜியம்தான்.  செம ஸ்டைலாக நடக்கிறார்.. தலை கோதுகிறார். அநீதியைக் கண்டு கொந்தளிக்கிறார்.

‘படத்தில் கொஞ்சம் காமெடி சேர்க்க முடியுமா’ என்று ரஜினி கேட்டதாகவும் ரஞ்சித் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.  அதனாலா என்று தெரியவில்லை. படம் சற்றே இறுக்கமாகப் பயணிக்கிறது. ‘ஒன்லி ரஜினி மேஜிக்’ என்று தீர்மானித்துவிட்டதாலோ என்னவோ, ஸ்க்ரீன் ஸ்பேஸ் முழுக்க ரஜினிதான். ரஞ்சித்   தனக்கான அரசியல் பேசும் களமாகவும் படத்தைப் பயன்படுத்தியிருப்பது, ’இதெல்லாம் ரஜினி படத்தில் எதற்கு’ என்று டைஹார்ட் ரசிகர்களைக் குழப்பலாம். படம் ‘முடிந்தபிறகும்’ வரும் அந்த க்ளைமாக்ஸ்.. தேவையா  ரஞ்சித்? 

கபாலி நிச்சயம் ’லிங்கா’ இல்லை. ஆனால், பாட்ஷாவா..? அது ரஜினி ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்தது. ஆனால், எது எப்படியோ ரஞ்சித் ஸ்டைலில் உணர்வுகளைக் கலந்து, ரஜினி பேக்-கில் கொடுத்திருப்பது ரஜினி ரசிகர்கள்... ரஞ்சித் ரசிகர்கள்... இருவருக்கும் பிடிக்கும்!

நன்றி - விகடன்

டிஸ்கி - கபாலி நான் இன்னும் பார்க்கலை. 1000 ரூபா டிக்கெட் ரேட் என்பதால் அதை எதிர்த்து குரல் கொடுத்து விட்டு நாமே அதைப்பார்ப்பது முறை அல்ல என்பதால். நான் கேரளாவில் தான் இருக்கேன், இங்கே கவுண்ட்டர் ரேட் தான் . அதிகாலை 5 மணி காட்சி FDFS  கூட 100 ரூபா 75 ரூ க்கு ஆலப்புழா  வில் கிடைத்தது.ஆனால் தார்மீக முறைப்படி பார்க்கலை. நாளை ஞாயிறு காலை தான் 11 மணி ஷோ க்கு போறேன்