Saturday, July 02, 2016

சுவாதி கொலையில் நடந்தது என்ன? ஒரு பார்வை

ஜூன் 24, வெள்ளிக்கிழமை. அன்று எப்போதும் போல்தான் பொழுது புலர்ந்தது. துளசி மாடத்தில் புதிதாக ஓர் இலை அன்றும் துளிர்த்தது. காலை 6.30 மணி. சந்தான கோபாலகிருஷ்ணன், தன் மகள் சுவாதியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் இறக்கி விடுகிறார்.
யாருக்கு தெரியும்... அப்போது சுவாதி, தாம் கடைசியாக சென்ற மசினகுடி சுற்றுலா குறித்த நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே, ரயில்நிலைய படிக்கட்டுகளில் ஏறிச் சென்றிருக்கலாம். மசனக்குடியின் பச்சைய வாசனையை கற்பனையாக தன் நாசியில் மீண்டும் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்திருக்கலாம். சுவாதிக்கு மலை ஏறுவது மிகவும் பிடிக்கும் என்பதால், சொல்லமுடியாது அந்த படிக்கட்டுகளை சிறு மலைப்பாதையாக நினைத்துக் கூட விறுவிறுவென ஏறி இருக்கலாம். 

நடைமேடை இரண்டில், பெண்களுக்கான சிறப்பு பெட்டி நிற்கும் இடத்தில், இப்போது  சுவாதி  6.46 மணிக்கு வரும் செங்கல்பட்டு தொடர்வண்டிக்காக காத்திருக்கிறாள்.  அருகில் ஒரு பொது தொலைபேசியகம் இருக்கிறது. அடுத்துள்ள சிறு கடையில், கடைக்காரர் அன்று வந்த தினசரிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். சற்று தொலைவில், ஆசிரியர் தமிழ் செல்வனும் கையில் செய்தித் தாளுடன் அதே தொடர்வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சிலரும் காத்திருக்கிறார்கள். 

சில நிமிடங்கள் அவளுடன் அடையாளம் தெரியாத நபர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, திடீரென அவளை வெட்டிவிட்டு, அவளது செல்ஃபோனை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். இந்த சம்பவத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைகின்றனர். இருவர், அந்த கொலையாளியை துரத்திக் கொண்டு செல்கின்றனர்.   கொலையாளி அங்கிருந்த சுவரில் ஏறிக் குதித்து, செளரஷ்ட்ரா நகரின் ஏழாவது தெரு வழியாக ஓடுகிறான்.

ரயிலுக்கு என்ன தெரியும்...? அது உயிரற்ற ஜடப்பொருள். அது சரியாக 6.46 மணிக்கு வருகிறது. அந்த தொடர்வண்டிக்காக காத்திருந்தவர்கள், ஏறிச் செல்கிறார்கள். சுவாதியுடன், அவள் கனவுகளும் மரணித்த நிலையில், குருதி தோய்ந்த அவளது உடல் அங்கே கிடக்கிறது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவள் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கு முன் உரையாடி விட்டுச் சென்ற  சந்தான கோபாலகிருஷ்ணன், இப்போது குருதி குளத்தில் கிடக்கும் தம் மகளை பார்த்து அழுகிறார்.  அதன் பின் பல தொடர்வண்டிகள் வந்து போய்விட்டன.  

8.30 மணிக்கு, செளராஷ்ட்ரா தெருவை சேர்ந்த 72 வயது முதியவர் ஆதிகேசவன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வருகிறார்.  குருதியில் மிதக்கும்  சுவாதியின் உடலைக் கண்டு, அதிர்ச்சியில் சரிந்து விழுகிறார். ஆனால், அதன் பின்னும் சுவாதி உடல் அப்புறப்படுத்தப்படவில்லை. ஏறத்தாழ 2. 15 மணி நேரம் அங்கேயே கிடக்கிறது.  9:20 மணிக்கு பின்னரே,  ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்தில் இருந்து சுவாதியின் உடலை, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்கிறார்கள்.

இதற்குள் செய்தி நிறுவனங்கள் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை முற்றுகையிடுகின்றன.  காற்றலைகள் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தமிழகமெங்கும் கடத்திச் செல்கின்றன. 
 

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது செய்தி நிறுவனங்கள், சென்னையில் உள்ள அனைத்து புறநகர் தொடர்வண்டி நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்கின்றன. எந்த நிலையத்திலும் சிசிடிவி கேமிரா இல்லை.

ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது. போலீசார் அந்த நபர்தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களுக்கு வெளியிடுகின்றனர்.


ஜூன் 26ம் தேதி,  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சௌராஷ்ட்ரா நகரில் உள்ள ஒரு தெருவில் இருக்கும் வரைகலை பயிற்சி மையத்தின்  கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அது வரை துப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்த காவல் துறையினருக்கு இந்த வீடியோ பதிவு பேருதவியாக இருக்கிறது.

இந்த இரண்டாவது வீடியோவை  போலீசார் வெளியிட்டு,  இது கொலையாளியின் மற்றொரு வீடியோ என்று தெரிவிக்கின்றனர். இப்போது காவல் துறைக்குன் புது பிரச்னை வருகிறது.  இரண்டு வீடியோவிலிருந்த நபர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது. இது புதுக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பி.ஜே.பி தலைவர் எச். ராஜா, சுவாதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் இதற்கிடையே, நகரத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது.

மாலை, நுங்கம்பாக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சுவாதிக்காக இளைஞர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஜூன் 27ம் தேதி, சென்னையின் மையப்பகுதியில், மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகம் உள்ள இடத்தில் ஒரு கொலை நடந்து, மூன்று நாட்களாகியும் துப்பு துலங்காததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே போலீசார் திணறுகிறார்கள்.  சுவாதி கொலை வழக்கு, ரயில்வே போலீஸிடமிருந்து சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றப்படுகிறது. உடனடியாக, கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள்  ஆகியோரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. சுவாதி முன்பு வேலை பார்த்த மைசூருக்கும்  தனிப்படை பிரிவு ஒன்று விரைகிறது.

சுவாதியின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.  இதற்கிடையே விசாரணையில் துன்புறுத்தியதாக சுவாதியின் பெற்றோர், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்கின்றனர்

சுவாதி குடும்பத்தினரை திமுக பொருளாளர் முக ஸ்டாலின், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், குஷ்பு, தமிழிசை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.  தமிழகத்தில் பெரும் அரசியல் பிரச்னையாக உருவெடுக்கிறது சுவாதியின் மரணம். 

ஜூன் 28ம் தேதி,   சுவாதி வழக்கு நத்தை வேகத்தில் நகர்வதால்,  தாமே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கில் இரண்டு நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால், தாமே விசாரணையை மேற்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறது நீதிமன்றம். 

நடிகர் ஒய்.ஜி மகேந்திரன், சுவாதியை பிலால் மாலிக் என்ற ஒருவன்தான் கொன்றான் என்ற தொனியில் ஒரு செய்தியை தன் முக நூல் பக்கத்தில் பகிர்கிறார். இது கடும் கண்டனத்திற்கு உள்ளாகிறது. பின் அந்த இடுகை தனது சொந்த கருத்தல்ல என்றும், தனக்கு வந்த செய்தியை பகிந்தேன் என்றும் இன்னொரு பதிவை வெளியிடுகிறார் மகேந்திரன்.

சுவாதி குறித்து பல தகவல்கள் உலாவியதால், அவரின் பெற்றோர், சுவாதிக் குறித்து எந்த அவதூறையும் பரப்ப வேண்டாமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.ஜூன் 29ம் தேதி, சுவாதியின் ஃபேஸ்புக் முடக்கம் செய்யப்படுகிறது. சுவாதியின் அக்கா நித்யா,  சுவாதி குறித்து ஒரு உருக்கமான கடிதத்தை எழுதுகிறார். அதில் சுவாதி மிகுந்த கடவுள் நம்பிக்கை  உடையவர் என்றும், அவள் குறித்து யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.

இதனிடையே, செங்கல்பட்டு பரனூர் அருகே கொலையாளி மறைந்திருப்பதாக தகவல் பரவுகிறது. சிசிடிவியில் பதிவான மாதிரி புகைப்படத்தை வைத்து, பரனூரில் வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை மேற்கொள்கிறார்கள்.ஜூன் 30ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் ஓடிய நபரின் தெளிவான புகைப்படத்தை வெளியிடுகிறது காவல்துறை. முக்கிய துப்பு ஒன்று  காவல்துறைக்கு கிடைக்கிறது. அதாவது, கடைசியாக சுவாதியின் கைபேசி, சூளைமேடு சிக்னலில் உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. சூளைமேட்டில் வீடுவீடாக விசாரணை மேற்கொள்கிறார்கள்.  கொலையாளியின் அடையாளத்தில் ஒருவன், ஒரு மேன்சனில் தங்கி இருப்பதாக கவல்துறைக்கு துப்பு கிடைக்கிறது.  அந்த கொலையாளி தங்கியிருந்த மேன்சனில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கிறார்கள். அருகிலுள்ள மேன்சன் காவலாளி  அளித்த தகவலின் பேரில் போலீசார் நெல்லை விரைகிறார்கள்.ஜூலை 1ம் தேதி,  செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல் . ஆடு மேய்த்து விட்டு மாலை வீடு திரும்பிய  ராம்குமாரை, சுவாதி கொலை வழக்கில் கைது செய்ய இரவு 10 மணிக்கு போலீஸார் முயற்சிக்கும் போது, பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு  ராம்குமார் முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.  ராம்குமாரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றதால் ராம்குமார் கழுத்தில் 18 தையல்கள் போடப்படுகிறது. 

- மு. நியாஸ் அகமது 


நன்றி - விகடன்

0 comments: