Thursday, July 07, 2016

தில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்

'இனிமே இப்படித்தான்' என ஹீரோவாக நடிப்பதை உறுதிப்படுத்திய சந்தானத்தின் அடுத்த படம், 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கத்தில் உருவான படம், வெச்ச குறி தப்பாமல் இருக்கவே எடுக்கப்பட்டுள்ள இன்னொரு பேய் படம் என்ற இந்த காரணங்களே 'தில்லுக்கு துட்டு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.



பண்டிகை கால மாஸ் ஓப்பனிங் 'தில்லுக்கு துட்டு' படத்துக்கும் கிட்டியிருக்கிறது. கூட்டத்துக்கு மத்தியில் தியேட்டருக்குள் நுழைந்து இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தோம்.


டைட்டில் கார்டில் சந்தானத்தின் பெயரைப் பார்த்த உடன் ரசிக மனங்கள் தங்கள் கொண்டாட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் கரவொலிகளாலும், விசில் சத்தங்களாலும் தியேட்டரை அதகளம் செய்தனர்.



அந்த அதகளம் படம் முடியும் வரை நீடித்ததா?


கதை: தன் மகள் சனயாவை, சந்தானத்துக்கு திருமணம் செய்து கொடுக்க முன்வரும் சௌரப் சுக்லா, 'பேய்' பங்களாவுக்கு சந்தானத்தை குடும்பத்தோடு வரச் சொல்கிறார். சனயா, சௌரப் சுக்லா குடும்பமும் அந்த பங்களாவுக்கு வருகை புரிகிறார்கள். அதற்குப் பிறகு என்ன ஆகிறது? பேய் பங்களாவில் நடந்தது என்ன? சனயாவுக்கும், சந்தானத்துக்கும் திருமணம் நடந்ததா? என்பது மீதிக் கதை.



காமெடி - ஹாரர் படத்துக்கான கச்சிதத்தை திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநர் ராம்பாலாவை தமிழ் சினிமா வரவேற்கிறது.


தோற்றம், உடை, உடல் மொழி, நடன அசைவுகள், ஆக்‌ஷன் அதிரடி என ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் சந்தானம் நிறைவாக செய்திருக்கிறார்.



''கீரை சாதம் சாப்பிட்டுட்டு வாய் கொப்பளிக்கலையா. பல்லு கறை கறையா இருக்கு.'' , ''12 மணிக்கு பேய் வரும்னா, அதை சொல்ல 11.45க்கு நீ வருவியா.'' , ''பேயால நிறைய பேர் செத்திருக்காங்கன்னா, செத்தவங்க எல்லாம் ஆவியாகி அந்தப் பேயை பழிவாங்கலையா?'', ''எல்லா வருஷமும் பொறந்த தேதி ஜனவரி 21 தான்.'' என்று சந்தானம் பேசும் வசனங்களுக்கு வெடித்துச் சிரிக்கிறது தியேட்டர்.



ஆனாலும், இனியும் ''முட்டை தேடி வந்த டைனோசர் மாதிரி'', ''துண்டை கவுத்துப் போட்ட மாதிரி மூஞ்சி'',''பார்க்க ட்யூப்லைட் பட்டி மாதிரி இருந்தாலும் விஷயத்துல கெட்டி'' போன்ற உவமை சொல்லி கலாய்ப்பது நல்லாயில்லை சந்தானம். இனியாவது அதை நிறுத்தி(திருத்திக்) கொள்ளுங்கள்...



சனையா வழக்கமான கதாநாயகிக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
'ஒரு சீரியஸான டயலாக் கூட பேச விடமாட்டேங்குறாங்க என 'நிஜமாகவே அலுத்துக்கொள்ளும் ஆனந்தராஜ், 'மாசம் பொறந்து 20 நாள் ஆச்சு. ஒரு கொலை கூட பண்ணலையே. மாச டார்கெட் முக்கியம்' என அசைன்மென்ட் கொடுக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், 'மசாலா பால்' கேட்டே ரிப்பீட் அடிக்கும் கார்த்திக், 'முட்டாள் முட்டாள்' என சொல்லியே வில்லத்தனம் செய்யும் சௌரப் சுக்லா, நிறைய பேசி சோதிக்கும் கருணாஸ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.


தமனின் இசையும், கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்குப் பெரும் பலம். தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவில் இரண்டாம் பாதி முழுக்க பேய் வாசம்.


பேய் எஃபெக்ட்டை கலை இயக்குநர் ஏ.ஆர்.மோகன் அப்படியே கொட்டிக் கொடுத்திருக்கிறார். ஹரி தினேஷின் ஆக்‌ஷன் புத்திசாலித்தனம்.
பேய்ப் படங்கள் வழக்கமும், பழக்கமும் ஆனதாய் வரிசை கட்டி நிற்கும் போது, அதில் செட்டப் பேய், நிஜப் பேய் என வெரைட்டி காட்டிய விதத்தில் இயக்குநர் ராம்பாலா கவனிக்க வைக்கிறார்.


முதல் பாதியை இன்னும் கொஞ்சம் ஒதுக்கி, செதுக்கியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் கடைசி 10 நிமிடங்களை கறார் காட்டி கத்தரி போட்டிருக்கலாம்.
தப்பான ரூட்டில் பயணித்த சந்தானம் இரவே பங்களாவுக்கு வந்துவிடுகிறார். சரியான ரூட்டில் பயணிக்கும் சௌரப் சுக்லா அண்ட் கோ எப்படி காலையில் தான் பங்களாவை வந்தடைகிறார்கள்? போன்ற சின்ன சின்ன லாஜிக் பிரச்சினை மட்டுமே எட்டிப் பார்க்கிறது.


பேய்ப் படத்துக்கான அடிப்படை, பேயை விரட்டுவதற்கான சித்தரிப்பில் நம்பகத்தன்மையை காட்டிய விதத்திலும், நகைச்சுவையை அள்ளித் தெளித்த விதத்திலும் 'தில்லுக்கு துட்டு' வெளுத்துக் கட்டுகிறது.

நன்றி - த இந்து

0 comments: