Wednesday, March 02, 2016

தி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்

லியனார்டோ டி காபிரியோ நடித்த ‘தி ரெவனண்ட்’ திரைப்படம் 2016 வருட சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. படத்தின் இயக்குநர் அலெஜெண்டரோ கோன்சலே இனாரிட்டு நான்காவது முறையாக ஆஸ்கர் விருதைப் பெறுகிறார். ஒளிப்பதிவாளர் இமானுவல் லூபெஸ்கிக்கும் இது மூன்றாவது ஆஸ்கார். மொத்தமாக மூன்று ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொண்டது தி ரெவனெண்ட் திரைப்படம்.
'Revanant’ – என்றால் சாவின் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவன் என்று அர்த்தம். 2 மணி 36 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் மையக் கதை மகனைக் கொன்றவனான ஜான் ப்ரெட்ஜெரால்ட் (டாம் ஹார்டி) என்பவனைப் பழி வாங்கத் துடிக்கும் தந்தை ஹியூக் க்ளாஸின் (லியானர்டோ டி காப்ரியோ) போராட்டம் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1843 வருடப் பின்ணனியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் சுவாரஸ்யமான அம்சம் நம் வாழ்வில் பயணிக்கவே முடியாத வழித்தடங்களுக்கு நம்மை அறியாமல் அழைத்துச் செலவதே.
வண்டிகள் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பெல்ட்ஸ் (pelts) எனப்படும் விலங்குகளின் தோலை எடுத்துவர வெள்ளையர் குழுவொன்று காட்டுக்குச் செல்கிறது. அவர்களைத் தடுத்து தாக்குகிறார்கள் செவ்விந்தியர்கள். ஒவ்வொரு தாக்குதலும் மரண அடியாக இருக்கவே அமெரிக்கக் குழுவால் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திற்கு தப்பிச் செல்ல முடிவு செய்கிறார்கள். தனியாக ஒரு சூழலில் கரடியால் படுபயங்கரமாகத் தாக்கப்படுகிறான் க்ளாஸ். குற்றுயிராகக் கிடக்கும் கிளாஸுக்கு முதலுதவி சிகிச்சை அவன் குழுவினர் செய்தாலும் அவனால் நடக்க முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான சூழலில் அவனை வேறு சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஏற்கனவே அவன் மீது காழ்ப்புணர்வுடன் இருக்கும் பிரெட்ஜெரால்ட் அவனை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடலாம் என்று சொல்கிறான். ஆனால் மற்றவர்களுக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. கிளாஸ் பிழைக்க வாய்ப்பில்லை அவனை கொன்று மரியாதையாக அடக்கம் செய்துவிட்டு திரும்பிவிடலாம் என்று தொடர்ந்து அவன் வலியுறுத்தவே அப்படியே செய்யும்படி சொல்லிவிட்டு மற்றவர்கள் முன்னகர்ந்துவிடுகிறார்கள். தனித்து விடப்பட்ட நால்வர் குழுவான க்ளாஸ், பிரிட்ஜெரால்ட், க்ளாஸின் மகன் ஹாக் மற்றும் அவன் நண்பன் ஆகியோர் இரவு ஓரிடத்தில் தங்குகிறார்கள். பிரெட்ஜெரால்ட் தன் முடிவை செயல்படுத்தும் தருவாயில் அவனைத் தடுக்கிறான் ஹாக். அதனால் கோபமுற்ற பிரெட்ஜெரால்ட் க்ளாஸின் கண்முன்னாலேயே ஹாக்கைத் தாக்கிக் கொன்றுவிடுகிறான். அதற்குள் தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்த ஹாக்கின் நண்பன் திரும்பவே பிணத்தை ஓரிடத்தில் மறைத்து வைக்கிறான். அவனிடம் பிரெட்ஜெரால்ட் ஆபத்து மிக அருகே இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று சொல்லவே அவன் ஹாக்கை அழைத்துச் செல்லத் தேடுகிறான். ஆனால் அவனிடம் உண்மையை மறைத்த பிரெட்ஜெரால்ட் அவனுடைய மறுப்பையும் மீறி க்ளாஸை இழுத்துவந்து வெட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் தள்ளுகிறான். அவனைக் கொல்ல வேண்டாம் என்று அவன் தடுக்கவே, இதற்கு மேல் க்ளாஸ் தப்பிக்கவே வாய்ப்பில்லை என்று உணர்ந்த பிரெட்ஜெரால்ட் அங்கிருந்து கிளம்புகிறான்.
க்ளாஸிடம் மன்னிப்பு கேட்டு அவன் மீது ஒரு தண்ணீர் பாட்டிலைப் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான் ஹாக்கின் நண்பன். பேசக் கூட முடியாத வேதனையில், உடல் முழுவதும் ரணமாகிக் கிடக்கும் நிலையில் மகனின் கொடூர மரணம் க்ளாஸை துடிதுடிக்க வைக்கிறது. தன் கண் முன்னால் மகனைக் கொன்றவனைப் பழி தீர்க்க முடிவு செய்து உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிரைத் தக்க வைக்க பிரயத்தனப்படுகிறான்.
அதன் பின்னான க்ளாஸுடைய தனித்த பயணமே மீதிக் கதை. நெடிய மரங்கள் சூழ்ந்த காடுகளிலும், நீர்த் தேக்கங்களிலும், மிகப் பெரிய அருவிகளிலும், குளிர்ந்த நெடிய ஆறுகளிலும், பனிப்பாறைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் விழுந்தும், எழுந்தும், மீண்டும் அவனுடைய பயணம் தொடர்கிறது. தனித்த ஒருவனாக அவன் போராடுவது கொடிய மனிதர்களிடம் இல்லை. இயற்கையிடம். ஆனால் இயற்கை அவனை கைவிடவில்லை. அவன் உயிரோடு இருக்கிறான். இடையில் அவன் சந்திக்கும் ஒரு மனிதன் அவனுக்கு சில உதவிகள் செய்யவே அவனுக்கு குதிரையும் ஆயுதமும் கிடைக்கிறது. எப்படியோ பயணப்பட்டு பிரெட்ஜெரால்டை கண்டுபிடிக்கிறான். ஆவேசமான அவர்களின் இருவரின் சண்டையில் க்ளாஸ் பிரெட்ஜெரால்டைக் கொன்றானா இல்லையா என்பது தான் இறுதிக் காட்சி. பழிவாங்குதல் என்பது நம் கையில் இல்லை. அது இறைவனின் கையில் தான் உள்ளது என்கிறான் க்ளாஸ். டிகாப்ரியோவின் அற்புதமான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் நின்று நிலைத்து ஹூக் க்ளாஸ் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.
இத்திரைப்படத்தில் ரத்தம் திரை முழுவதும் வழிந்தோடினாலும், அடிபட்ட நாயகனின் உயிர்வதை அதீதமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், யாவற்றையும் மீறி அவனுடைய வாழ்தலுக்கான அவசியம், அதுவும் தன் எதிரியைக் கொன்று பழி தீர்க்கவேண்டும் எனும் வேட்கை அவனை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துப் பயணிக்க வைக்கிறது.
ஒரு படத்தை ரசிகனுக்கு மறக்க முடியாததாக மாற்றுவதற்கும் அற்புத திரை அனுபவத்தைத் தருவதற்கும் ஒரு காட்சி மனத்தில் பதிந்தால் போதும். தி ரெவனெண்டைப் பொருத்தவரையில் அப்படி பல காட்சிகளை சொல்லலாம். அதுவும் முக்கியமாக க்ளாஸ் அவனுடைய மனைவியைப் பற்றி நினைவு கூறும் சில காட்சிகள். அவள் கூறிய வார்த்தைகள் அவன் செவிகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். சுவாசிக்க கடைசி மூச்சு ஒன்று இருக்கும்வரை வாழ்வதற்காக போராட வேண்டும் என்பாள். தன் குட்டிகளைக் எதிரியிடமிருந்து காப்பாற்றவே அந்தக் கரடி அவனை கொடூரமாக தாக்கி இருக்கும். பின்னர் தன் மகன் சாகும் போது அவனுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும். மனிதனாக இருந்தால் என்ன விலங்காக இருந்தால் என்ன உணர்ச்சிகளும் தாயன்பும் எல்லாவற்றுக்கும் ஒன்று தான். கரடி அவனை கொடூரமாக தாக்கிக் கிழித்து கந்தலாகப் போட்ட நிலையிலும், அது தள்ளிச் சென்றுவிட்டதென எண்ணி தன் துப்பாக்கியை மீண்டும் எடுக்க, அது மீண்டும் வந்து அவன் மீது பாயும் போது க்ளாஸின் போராட்ட குணம் சித்தரிக்கப்பட்டுவிடுகிறது. உயிரே போனாலும் தான் நினைத்ததை சாதிப்பவன் என்பதை கூறாமல் கூறும் காட்சி அது. இப்படிச் சிற்சில சம்பவங்களால் பின்னப்பட்ட இப்படம் இருத்தல் சார்ந்த கேள்விகளை பார்வையாளனுக்கு கடத்துகிறது. உயிருடன் இருப்பது என்பது எவ்வளவு பெரிய அற்புதம் என்பதை கடைசியில் க்ளாஸ் உணர்கிறான் என்று அவனுடன் படம் முழுவதும் பயணுக்கும் நாம் உணர்கிறோம்.
படத்தை மற்றொரு தளத்திற்கு உயர்த்திச் செல்வது இதில் நாயகன் மேற்கொள்ளும் சலிக்காத பயணம், அது தரும் பேரனுபவம். உயர்ந்த மலைகளிலும், பனிப்பாதையிலும் நாமே பயணிப்பது போலத் தோன்றும் காட்சியமைப்புக்கள் அற்புதம். வானுயர்ந்த மரங்களின் நடுவே தென்படும் குளிர் நிலவு, எரிந்து விழும் நட்சத்திரம், பனிப் பிரதேசங்களில் தென்படும் இறந்த மிருகங்களின் தனித்த உடல் என பல காட்சிகளில் உறைய வைக்கிறார் ஒளிப்பதிவாளர். கரணம் தப்பினால் மரணம் எனும் நிலையில் தவழ்ந்தும் நடந்தும் ஓடியும் குதிரையில் பயணித்தும் கடைசியில் தேடியதை தேடியவனைக் கண்டடைகிறான் க்ளாஸ். வாழ்க்கை என்பது வெற்றி தோல்விகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அகமும் புறமுமான தொடர் பயணமும் அதன் மூலம் கிடைக்கும் தெளிவும் தான் மனித வாழ்வை பூர்ணமாக்கும் எனும் கருத்தை நேரடியாகச் சொல்லாமல் பார்வையாளர்களின் பங்களிப்புக்கு ஒரு களம் அமைத்துத் தருகிறார் இயக்குநர்.
'தி ரெவனெண்ட்' போன்ற ஒரு திரைப்படம் நிச்சயம் ஆஸ்கரை அடுத்து பல விருதுகளை வெல்லும். இது போன்ற படங்கள் தரும் பிரமிப்பிலிருந்து மீள, மீண்டும் மீண்டும் அத்திரைப்படத்தைப் பார்ப்பதன்றி வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

thanx - dinamani

0 comments: