Monday, March 14, 2016

உடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை சம்பவம்

ள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் கதை, சாதி வெறியாட்டத்தால் இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. உடுமலையில் தலித் இளைஞரை காதலித்து கரம்பிடித்தார் என்பதற்காகவே, இளம்பெண்ணையும், அவரை திருமணம் செய்த இளைஞரையும் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் மிகக் கொடூரமாக,  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது ஒரு கும்பல். இதில் இளைஞர் சங்கர் இறந்து விட... படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் கவுசல்யா.

கல்லூரியில் துவங்கிய காதல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொமரலிங்கம், சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன்தான் சங்கர். டிப்ளமோ படித்து முடித்த சங்கர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வியில் சேர்ந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த பழனியைச் சேர்ந்த கவுசல்யாவுக்கும், சங்கருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கவுசல்யாவின் வீட்டுக்கு இது தெரியவந்தது.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகக் கடுமையாக எதிர்த்தனர் கவுசல்யாவின் பெற்றோர். அத்தோடு அவரது உறவினர் வழியில் ஒருவருக்கு கவுசல்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்க, அதிர்ந்து போன சங்கர் - கவுசல்யா ஜோடி,  வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டது. அப்போது சங்கர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கவுசல்யா 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர், தனது மகளை சங்கர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர். அப்போது 'என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விரும்பிதான் இவரோடு வந்தேன்' என கவுசல்யா சொல்ல... அவர் மேஜர் என்பதால் சங்கருடனே அனுப்பி வைக்கப்பட்டார். 'கவுசல்யா இல்லாவிட்டால் நான் உயிர் வாழவே மாட்டேன்' என சங்கர் சொல்ல, சங்கரின் தந்தை இருவரையும் ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றார். சில நாட்களில் நிலைமை சீராகும். நிம்மதியாக வாழலாம் என நினைத்திருந்த சங்கர் - கவுசல்யா ஜோடிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

'காதல்' பட பாணியில் ஒரு மிரட்டல்

திருமணமான சில தினங்களில் அதாவது ஜூலை 24-ம் தேதி,  சங்கரின் வீட்டுக்கு வந்தார் கவுசல்யாவின் தாத்தா. மிக அன்பாக பேசினார். ஸ்கூட்டி பைக் ஒன்றை கொண்டு வந்து கவுசல்யாவுக்கு கொடுத்தார். 'எல்லாம் சரியாகிடும். பாத்துக்கலாம். நீ ஒண்ணும் பயப்படாதே' என ஆறுதல் கூறினார். சிறிது நேரத்தில் என்னை இந்த ஹாஸ்பிட்டல் வரைக்கும் விட்டுட்டு வந்துடுறியாமா என தாத்தா கவுசல்யாவிடம் கேட்க, மகிழ்ச்சியுடன் பைக்கில் சென்றார் கவுசல்யா. ஹாஸ்பிட்டல் முன்பு தயாராக இருந்த காரில் அப்படியே கடத்தி செல்லப்பட்டார். காதல் படத்தில் நாயகனையும், நாயகியையும் சந்திக்கும் நாயகியின் சித்தப்பா, அவர்களுக்கு ஆதரவாக பேசி கடத்தி செல்லும் சம்பவத்தை போன்றே அரங்கேறியது இந்த சம்பவம்.

கவுசல்யாவை காணவில்லை என சங்கர் மடத்துக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ஒரு வாரத்துக்கு பிறகு போலீசில் ஆஜர்படுத்தப்பட்டார் கவுசல்யா. இந்த ஒரு வாரகாலம் கெஞ்சியும், மிரட்டியும் துளியும் அவர் அசரவில்லை. காவல்நிலையத்தில் சங்கரை பார்த்த உடன்,  வேகமாய் வந்து கட்டியணைத்துக்கொண்டார் கவுசல்யா. ஆனால், அத்தோடு கவுசல்யாவின் குடும்பத்தினர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் கவுசல்யாவை மிரட்டிக்கொண்டே வந்தனர். அவ்வப்போது சங்கரும் இதில் சிக்காமல் இல்லை. அவரும் மிக இழிவான பேச்சுகளை கவுசல்யாவின் பெற்றோர்களிடம் இருந்து பெற நேர்ந்தது.

தொடர்ந்து வந்த மிரட்டல்கள்

'நீ வா. அவன் உன்னையா லவ் பண்றான். அவனுக்கு படிச்சா வேலை கூட கிடைக்காது. நீ கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும்' என பெற்றோர் எதிர்காலத்தை காட்டி அச்சுறுத்திய அத்தனை வார்த்தைகளையும் எளிதில் சமாளித்தார் கவுசல்யா. நாட்கள் சென்று கொண்டே இருந்தது. அவ்வப்போது மிரட்டலையும், இழிச்சொற்களையும் கேட்டுக்கொண்டே இருந்தார். சங்கர் கல்லூரி படிப்பை முடிப்பார். நல்ல வேலை கிடைக்கும். அப்போது வாழ்க்கையை இனிதாக துவங்கலாம் என காத்திருந்தார் கவுசல்யா.

எதிர்பார்த்த நேரம் வந்தது. கடந்த வாரத்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் சங்கர். அத்தோடு வளாக நேர்காணலில் வென்று வேலையும் பெற்றார். சென்னை சென்று வந்து வேலையை உறுதி செய்தார். ஏப்ரல் மாதத்தில் கவுசல்யாவின் பிறந்த நாள். இந்த மகிழ்வோடு, கவுசல்யாவுக்கு புத்தாடை வாங்கிக்கொடுக்க நினைத்தார் சங்கர். எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருந்த நேரம், கவுசல்யாவுக்கு வந்த ஒரு போன் கால் எல்லாவற்றையும் மாற்றியது.

எமனாக வந்த போன் கால்

போனில் பேசியது கவுசல்யாவின் குடும்பத்தார். எப்போதும் போல் எங்களோடு வந்து விடு என்ற அழைப்பு தான் அங்கு பிரதானமாய் இருந்தது. 'அவனுக்கு வேலை கிடைக்காது. அவனை நம்பி போய் என்ன பண்ணப்போறேன்?'னு கேட்டது கவுசல்யாவுக்கு நினைவுக்கு வந்தது. பெருமிதமாக சொன்னார். 'அவருக்கு வேலை கிடைச்சிருச்சு. சீக்கிரம் சென்னை போகப்போறோம். இப்போ என் பர்த்டேவுக்கு டிரெஸ் வாங்கித்தர்றேன்னு சொன்னார். இப்போ டிரஸ் எடுக்கதான் கிளம்பிட்டு இருக்கோம்'னு சொல்லியிருக்கார்.

அங்குதான் வந்தது பிரச்னை. இவர்கள் எப்படி நன்றாக இருக்கலாம் என நினைத்தார்களோ அல்லது சென்னை சென்று விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. உடுமலை பஸ் நிலையம் அருகே துணிக்கடையில் இருந்து வெளியே வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள்,  அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். ஓடஓட இவர்களை கொடூரமாக வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில்தான் சங்கர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிலையில் கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.

காதல் அல்ல... சாதி வெறியாட்டமே காரணம்

ஒரு காதல்தான் இத்தனை அட்டூழியங்களுக்கும் காரணமா என்றால் நிச்சயம் இல்லை. சாதி வெறியாட்டம் தான் காரணம்.  சங்கர் என்ற தலித் இளைஞன், கவுசல்யா எனும் மேல்சாதி என சொல்லப்படும் மற்றொரு சாதி இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. ஊர் பெரியவர்கள் மூலம், காவல்துறை மூலம் என எப்படியாவது கவுசல்யாவை பிரித்துவிட திட்டமிட்டனர். ஆனால், நாங்கள் இணைந்து வாழ விரும்புகிறோம் என உறுதிபட கூறி மறுத்து விட்டனர் காதல் ஜோடி. ஆனால், அத்தோடு இதை விட யாருக்கும் மனமில்லை. மீண்டும் மீண்டும் மிரட்டல், கடத்தல் என பல வகையில் காதல் ஜோடியை பிரிக்க முயற்சி நடக்கிறது. தான் உறுதியாக நின்று அத்தனையையும் தவிர்க்கிறார் கவுசல்யா. 'அவன் உன்னை வைச்சு காப்பாத்த மாட்டான். நீ நல்லாவே இருக்க மாட்டே' என பல சாபங்களை கடந்துதான், சங்கருக்கு வேலை கிடைத்து, சென்னை செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இவர்கள் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். சாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சாதியமைப்பை தகர்ப்பதில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதுதான் இவர்களுக்கான பிரச்னை. இதுதான் சாதி வெறியை அதிகரிக்கச் செய்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக இருக்கின்றன.

நாடக காதல் என்றால் பெண்ணை கொல்வது ஏன்?

காதலித்து கரம் கோர்த்த இவர்கள்,  கண்ணியமாக வாழ வேண்டியதை தடுப்பது ஏன் என்று கேட்டால் இது நாடக காதல் என்கிறார்கள். தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி, திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவதாகவும் சொல்கிறர்கள். அப்படியென்றால் வேலை கிடைத்து வாழ்வை இனிமையாக துவங்க வேண்டிய இவர்களை கொன்றது ஏன்? அப்படியே இளைஞர்தான் ஏமாற்றினார் என்றால், அந்த பெண்ணையும் வெட்டி வீழ்த்த உங்களை தள்ளியது எது?

திருமணமான 8 மாதங்களில் தன் காதல் கணவரை இழந்து விட்டு நிற்கிறார் கவுசல்யா. இப்போது கூட, ''இத்தனைக்கும் காரணம் என் பெற்றோரும், மாமாக்களும்தான். நான் நன்றாக வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை" என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

"இந்த கல்யாணத்துல எங்க அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. முதல்ல என்னை கடத்திட்டதாக சங்கர் மேல புகார் கொடுத்தாங்க. ஆனா, நான் மேஜருங்கறதாலயும், நான் அவரோடதான் போவேன்னு சொன்னதாலேயும் என்னை பிரிக்க முடியலை. தொடர்ந்து என் கணவரை பத்தி தப்பா சொல்லியும், சாதி பெருமை பேசியும் என்னை கூப்பிட்டாங்க. நான் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கலை. கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டேன். கெஞ்சியும், மிரட்டியும் பாத்து நான் ஒத்துக்காததால எங்களை கொல்ல முடிவு பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு நான் முக்கியமில்லை. சாதியும், வறட்டு கவுரமும்தான்.
ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்களை துரத்துனாங்க. அப்போ தப்பிச்சிட்டோம். கல்யாணம் ஆகி 8 மாசமாகிட்டதால இனி எந்த பிரச்னையும் இருக்காது. நல்லா வாழலாம்னு நினைச்சோம். இப்படி பண்ணிட்டாங்க. இதுக்கு என் அப்பா, அம்மா, மாமாக்கள்தான் காரணமா இருப்பாங்க" என தனது உடல் பிரச்னைகளை மறந்து ஆவேசமாக முறையிடுகிறார் கவுசல்யா.

இந்த சமூகம் சாதி வெறிப்பிடித்த சமூகமாக மாறிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தும் கடமை அரசுக்கும், வாக்கு கேக்க தயாராகும் அரசியல் அமைப்புகளுக்கும் உள்ளது.

இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காதிருக்கும் வகையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்.


-ச.ஜெ.ரவி

நன்றி - விகடன்

0 comments: