Saturday, April 04, 2015

The Way Home - சினிமா விமர்சனம் ( உலக சினிமா - கொரியன் மேக்)

தி வே ஹோம் | The Way Home - மலைக்கிராமக் காட்சிகளாய் நம் கண்முன் விரிகிற இக்கொரிய மொழித் திரைப்படம் குழந்தைகள் திரைப்படத்திற்கான சிறந்த வகை மாதிரியாய் திகழ்கிறது.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட நாட்களின் பரபரப்புகள் முடிந்துவிட்டன. கொஞ்சம் இளைப்பாற கோடையும் வந்துவிட்டது. இப்போதிருக்கும் ஊரைவிட இன்னொரு ஊருக்கு செல்வதுதான் நல்லது. அங்குதான் நமக்கு அழகான அனுபவங்கள் காத்துக்கிடக்கின்றன. தி வே ஹோம் எனும் கொரிய திரைப்படத்தில் வரும் சிறுவன் சாங் வூ தனது பாட்டியின் கிராமத்திற்கு செல்லும்போது பெற்ற அனுபவங்களும் இத்தகையதுதான்.
கணவனைப் பிரிந்திருக்கும் ஒரு இளம்பெண் தற்போது சியோலில் பார்த்துவரும் வேலையையும் ஏதோ ஒரு காரணத்தினால் விட்டுவிட்டுகிறாள். வேறு புதிய வேலை ஒன்றை தேடவேண்டும். தனியாளாக இருந்து சிரமங்களை எதிர்கொள்ளவேண்டும். தனது 7 வயது மகனை வைத்துக்கொண்டு சிரமப்பட முடியாது. அதனால் தொலைதூர கிராமத்தில் இருக்கும் தன் அம்மாவிடம் கொஞ்ச நாளைக்கு விட்டுவிட்டு வரலாம் என முடிவு செய்கிறாள். அதன்படி அந்த இளம்தாயும் மகனும் ஒரு கோடைக்காலத்தின் இளங்காலையில் மலைக்கிராமம் ஒன்றிற்கு வந்துசேர்கின்றனர். மகனை அவன் பாட்டியிடம் விட்டுவிட்டு தாய் போய்விடுகிறாள்.
உயர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்த மலையின் ஒரு பள்ளத்தாக்கில் தன்னந்தனியே இருக்கும் மிகவும் பழமையான குடில் அது. வீட்டில் எங்குமே குழாய்த் தண்ணீர் இல்லை. நகரத்துப் பையனுக்கு தான் தங்கப்போகும் வீட்டைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. மிக வயதான அந்தப் பாட்டிக்கு காது கேட்குமே தவிர, வாய் பேச இயலாது. என்ன செய்வது. பொறுத்துக்கொள்ளவேண்டியதுதான். வீட்டின் வசதிகள் ஏதுமற்ற சூழலால் அவனுக்கு அடிக்கடி கோபம் வருகிறது. சுருக்கமாக சொன்னால், முகம் முழுவதும் சுருக்கம் விழுந்த பாட்டியை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அந்தக் கிராமத்துப் பாட்டி செய்கிற எந்த உணவையும் அவன் தொட்டுப் பார்க்கக் கூட விரும்பவில்லை. தான் கொண்டுவந்த பொம்மைகளோடு விளையாடுவது. தவிர, தான் கொண்டுவந்த பாக்கெட் உணவுகளை பிரித்துப் பிரித்து சாப்பிடுவது... மற்ற நேரங்களில் உம்மென்றிருப்பது... இது வழக்கமாகிப் போகிறது. இங்கிருந்து ஓடிவிடலாம் என நினைப்பான். ஆனால் அருகிலுள்ள மலைச்சாலையில் பேருந்து எப்போதாவதுதான் வரும் என்று அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வர அப்படியே சோர்ந்துவிடுவான்.
பொதுவாக நகரத்துக் குழந்தைகள் கிராமங்களுக்கு வரும்போது எதிர்கொள்கிற பிரச்சினைகள்தான் இவை. அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் பல விஷயங்கள் இருக்காது. ஆனால், கிராமத்தில் உள்ள வேறு சிறப்பு அம்சங்களால் ஈர்க்கப்பட்டு போகப் போக வெறுப்புணர்வு விலகிவிடும்.
ஆரம்பக் காட்சிகளில் பாட்டியிடம் கெண்டகி ப்ஃரைட் சிக்கன் (Kentucky fried Chicken) செய்துதரக் கேட்க, கோழியை சாதாரணமாக சமைத்துக் கொடுத்துவிட இவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வான். பசியோடு இரவைக் கழிக்க முடியாமல் பாட்டி தூங்கிவிட்டபிறகு அவள் சமைத்ததை எடுத்து சாப்பிட்டுப் பார்ப்பான். சுவையாக இருக்கவே அனைத்தையும் காலிசெய்துவிடுகிற காட்சியிலிருந்து படத்தின் வேகத்தில் சுவாரஸ்யம் கூடுகிறது.
பட்டிக்காட்டுச் சிறுவர்களைப் பார்த்ததும் இவன் அவர்களை கடுமையாக கேலிசெய்கிறான். ஒருமுறை மலைப்பாதையில் போகும்போது அங்கு இவனைத் துரத்தும் காட்டெருமையிடமிருந்து அவர்கள் இவனைக் காப்பாற்றிவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்களுடன் நட்பு பாராட்டுகிறான். மேலும் அந்த கிராமத்து சிறுமியுடன் ஈர்ப்புநேசமும் மலர்கிறது.
பாட்டி தன் வயதான காலத்திலும் ஆற்றுக்குச் சென்று துணிகளையெல்லாம் துவைத்துவந்து காயப்போடுவாள். இவனது கேம் பாய் பொம்மைக்கு பேட்டரி போய்விட, புது பேட்டரி கேட்டு பாட்டியிடம் கெஞ்சுவான். அவளிடம் ஏதுபணம்? தோட்டத்தில் விளைந்த முலாம்பழங்களை கூடையில் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள கிராமச் சந்தைக்கு அவனை அழைத்துச் செல்வாள். அங்கு அப்பழங்களை விற்று அந்தக் காசில் கேம்பாய் பொம்மைக்கு பேட்டரி வாங்கிக் கொடுப்பாள்.
அந்த கிராமத்தில் உள்ள இந்தப் பாட்டியின் தோழிகள் மிகவும் எளிமையானவர்கள். பாட்டி ஒரு கடையில் பண்டம் வாங்கும்போது கூட, வியாபாரத்தைத் தாண்டி, நலம் விசாரித்து, கூடுதலாக பொருளையும் தந்து உதவுவார்கள். அவர்களை இவன் வினோதமாகப் பார்க்கிறான். இவனை அறியாமல் பாசாங்கற்ற அந்த மனிதர்களின்மீது ஒரு பாசம் கவியத் தொடங்குகிறது.
பாட்டி கிழிந்த துணியைத் தைக்க ஊசியில் நூல்கோர்க்கத் தவிக்கும்போது அதை வாங்கி இவன் நூல்கோர்த்துக் கொடுப்பது உள்பட பாட்டியின் அனைத்துச் செயல்களையும் நுட்பமாகக் கண்டு வியப்பவனாக மாறுகிறான்.
தனக்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறாள், எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதை அறிந்த பிறகு என்றென்றும் மாறாத நேசம் செலுத்துபவனாக அவன் மாறிவிடுவதுதான் உச்சபட்ச சிறப்பு.
அம்மாவுக்கு வேலை கிடைத்துவிட, தன் மகனை அழைத்துச்செல்ல வருகிறாள். ஆனால் அவனுக்கு இப்போது தன் பாட்டியைப் பிரிந்து செல்ல மனமில்லை. வேறு வழியின்றி பாட்டியிடமிருந்து வருத்தத்தோடு விடைபெற்று அம்மாவுடன் செல்கிறான்.
இப்படம் 2002ல் வெளியானது. லீ ஜியாஸ் ஹியாஸ் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். அதனாலோ என்னவோ இயற்கையோடு இயைந்த வாழ்வின் உயிர்த்துவமிக்க பார்வைகள் படமெங்கும் விரிந்துகிடக்கின்றன. யூன் ஹாஸ் ஷிக்கின் ஒளிப்பதிவும் கிம் டே - ஹாஸ் மற்றும் கிம் ஹாம்- ஹீ ஆகியோரின் இசையும் நம்மை படத்தோடு மிகவும் ஒன்றிப் போகச் செய்கின்றன. வயதுமுதிர்ந்த கிடுகிடு பாட்டியாக நடித்த கிம் யோல் பூன் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுசொல்வதுகூட ஒருவேளை வெறும் சொற்களாகிவிடக்கூடும். தனது துடிப்புமிக்க நடிப்பால் நம் உள்ளத்தைக் கொள்ள கொண்ட சிறுவனாக தோன்றிய யூ சியோஸ் ஹோ இப்படத்தின் ஜீவநாடி.
பெரிய அறிவுரைகள், வளவள வசனங்கள், திடீர் திருப்பங்கள் என்று எதுவுமில்லாமலேயே காட்சிரீதியாகவே இழுத்துநிறுத்துகிறது திரைக்கதை. சாதாரண கோடைவிடுமுறைக் கதைகளைப் போல அல்லாமல் படத்தை உயர்ந்த தளத்திற்கு நம்மைக் கொண்டு சென்றுவிடுவது இப்படத்தின் கதையும் அதை உணர்வுபூர்வமாய் சொன்னவிதமும்தான்.நன்றி - த இந்து

0 comments: