Friday, January 02, 2015

ஒரு தமிழ்ப்பண்டிட்டின் முதல் இரவு அனுபவம் - சிறுகதை -ஜ ரா சு

சினிமா ஸெட் கெட்டது – முதலிரவு அறை அட்டகாசமாக மலர்களாலும் பட்டு ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


கட்டிலில் நுரை மெத்தையும் குஷன் திண்டுகளும் காத்திருந்தன.
“ஒராள் ஒராள்’ என்று கட்டிலுக்கு வாய் இருந்தால் குதிரை வண்டிக்காரன் மாதிரி கூவி இருக்கும். ஏனென்றால் கட்டிலில் ஒருத்தர்தான் – “ழ’ பித்தன் என்ற பெயர் கொண்ட கீழைப் பெருமழை எழிலெழு கிழவோன் – மட்டும்தான் அமர்ந்திருந்தான்.
இன்னும் ஒருத்தருக்காக கட்டில் காத்திருந்தது. அந்த ஒருத்தர் மல்லிகா.
அவன் தேர்ந்தெடுத்த அழகு தேவதை அவள். முத்து பவளத்தில் ஒளிந்திருக்கும் நீரோட்டம் போல அவள் மேனியில் எழில் ஓட்டம். இளமைக்குத் தக்க உயரம், உடற்கட்டு, அணிகள்.
யார் பார்த்திருக்கிறார்கள் ரம்பையையும், ஊர்வசியையும்.
இவள் மாதிரி அவர்கள் இருக்கக்கூடும்.
வெகு நேரம் நின்றுகொண்டே இருந்தவள் வாய் திறந்தாள். “”பளம் சாப்பிடுறீங்களா.”
திடுக்கிட்டான். “”ப்ளம்மா?”
“”இல்லை. பளம். ஒரு ஆப்பிள் பளம் நறுக்கட்டுங்களா?”
அவன் முதலில் ஏதோ ஒரு பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோது அவனுக்கு “ழ’ வாத்தியார், ஊதுவத்தி வாத்தியார் என்ற பெயர்கள் உண்டு. இது மல்லிகாவுக்கு தெரியுமோ தெரியாதோ.
பள்ளி ஆசிரியருக்கு மாணவர்கள் சூட்டும் கேலிப் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்குமா என்ன.
அவள் மறுபடியும் கேட்டாள். “”எந்தப் பளம்?”
“”பழம் இருக்கட்டும். இன்னிக்கு என்ன கிழமை?”
“”வியாளக் கிளமைங்க.”
“”வியாழக் கிழமை! ரொம்ப சரி. போன வியாழன்தானே பிள்ளையார் சதுர்த்தி?”
“”ஆமாங்க.”
“”உனக்குக் கொழுக்கட்டை பிடிக்குமா?”
“”கொளுக்கட்டைங்களா? பிடிக்கும்.”
“”என்னென்ன வகை இருக்கு கொழுக்கட்டையிலே?”
“”எள்ளுக் கொளுக்கட்டை, உளுந்து கொளுக்கட்டை,
வெல்லக் கொளுக்கட்டை.”
“கழுகுகளுக்கு கொழுக்கட்டை பிடிக்குமா?”
ஒருத்தருடைய நடத்தையையும் பழக்க வழக்கத்தையும் உறவையும் துவங்குமுன் அவர்களை சோதனை செய்வான். நகர சோதனை மாதிரி “ழ’கர சோதனை. சாதாரணமானவர்களிடமே சோதனை நடத்துபவன் மனைவியாகிவிட்டவளிடம் நடத்தமாட்டானா?
மனையாளுக்கு ழகரம் எவ்வளவு தூரம் வருகிறது என்பதை அவனுடைய கெட்டிக்காரத்தனம் சோதிக்கத் துவங்கியது.
“”கேட்டனே, கழுகுகளுக்கு கொழுக்கட்டை பிடிக்குமா?” மறுபடியும் கேட்டான்.
“களுகுங்களுக்கா? வந்து… வந்து தெரியலீங்க. நான் களுகுங்களுக்கு கொளுக்கட்டை போட்டுப் பார்த்ததில்லே.”
“”கிழவி கிழவனுங்களுக்குக் கொழுக்கட்டை சாப்பிட ரொம்பப் பிடிக்குமில்லையா?”
“”கிளவன் கிளவிங்கள்னு எங்க வீட்டிலே யாருமில்லே. தாத்தா பாட்டியெல்லாம் கிராமத்திலே இருக்காங்க.”
“”ரொம்ப நேரமா நிற்கிறாயே உட்காரு. நான் நேரம் கழித்து வந்ததிலே உனக்கு வருத்தமா?”
“”நீங்க நேரம் களிச்சி வரலீங்களே. சரியாகத்தானே வந்தீங்க.”
“”வீட்டையெல்லாம் ஒழிச்சு வைப்பியா? அது பிடிக்குமா உனக்கு?”
“”நல்லா ஒளிச்சி வைப்பேனுங்க.”
“”நீ ஒளிச்சி வெச்சிட்டால் நான் எப்படிக் கண்டுபிடிக்கிறது?”
“”ஒளிச்சி இல்லீங்க. ஒளிச்சி..”
“”அதாவது ஒழிச்சி..”
“”ஆமாங்க ஒளிச்சி..”
பல்லைக் கடித்துக் கொண்டான்.
முதலிரவு அறை அவனைப் புழுங்கச் செய்தது. மல்லிகா பாஷையில் புளுங்கச் செய்தது.
“ழ’கரம் வராத பையனின் நாக்கில் அவன் ஊதுவத்தியால் சுட்டுப் பெரிய கலவரமே கீழைப் பெருமழையில் ஏற்பட்டு, விசாரணை, ஸஸ்பென்ட் அது இது என்று அமர்க்களமாகி கல்வி உயர் அதிகாரி கணேசனார் மட்டும் அவனை ஆதரிக்காமலிருந்திருந்தால் அவன் வேலையும் போய், சிறைத் தண்டனையும் அடைந்திருப்பான்.
“”உனக்கு “ழ’வைத் தவறாக உச்சரித்தால் அவ்வளவு கோபம் வருமா? உன்னைப் பாராட்டுகிறேன்” என்று மேலதிகாரி கணேசனார் அவனைச் சிக்கலிலிருந்து விடுவித்து அவனை மேலே மேலே உயர்த்தினார்.
அதெல்லாம் ஞாபகம் வந்தது. சிந்தனை இறுக்கமாயிற்று.
வாழ்க்கை பூராவும் “ழ’ சப்தத்தை விகாரப்படுத்துகிறவளுடனேயே கழிக்க முடியுமா?
வாழ்க்கையை மல்லிகா வாள்க்கை என்றுதான் சொல்லுவாள். கழிக்க என்பது களிக்க. வாழைப்பழங்கள் வாளைப்பளங்களாகத்தான் ஆயுளுக்கும் இருக்கும்.
அவளுடைய பளக்கம் ஐயோ இப்போதே பழக்கம், பளக்கமாகிவிட்டதே.
அவளைக் கழித்துக் கட்டுவதே புத்திசாலித்தனம். என்ன கலவரம் வந்தாலும் நஷ்டம் ஏற்பட்டாலும் குத்து வெட்டு அடி உதை விழுந்தாலும் விழுந்து விழுந்ததாக இருக்க வேண்டும். அது ஒரு நாளும் விளுந்ததாக ஆகக் கூடாது. அதுவும் தன் வீட்டுக்குள்ளேயே “ழ’ கொலை நிகழ்வதை அவனால் சகிக்க முடியாது.
கலவரமில்லாமல் சாமர்த்தியமாகக் கழற்றிக் கொள்ள வேண்டும்.
ஓரிரு மாதம் சகித்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு
ஏதாவது பிரச்னை கிளப்பி விவாகரத்து.
“ழ’வைக் கெடுப்பவர்களுக்கு மன்னிப்பே தரக்கூடாது.
“பால் வெச்சு ரொம்ப நாளி ஆவுதுங்க.”
“”ரொம்ப நாளி ஆவுதா? ஆகட்டும் ஆகட்டும், பழியை உன்மீது போட்டுவிட மாட்டேன். பயப்படாதே. நான் எந்த ஊர்க்காரன் தெரியுமா?”
“”தெரியும்”
“”சொல்லு பார்க்கலாம்.”
“”கீளைப் பெருமளை.”
அவன் நெஞ்சிலே கொள்ளியைச் செருகினாற்போலிருந்தது. அவன் ஊரின் தலையிலும் மேற்படி கொள்ளியையே வைத்ததுபோல் உணர்ந்தான். எழிலெழு கிழவோன் என்ற தன் பெயரை அவளால் சத்தியமாக ஆயுளில் சொல்ல முடியாது. எளிளெளு கிளவோன் என்று அவள் கொலை செய்யாதிருக்க அவள் வாயில் நுழைகிற மாதிரி சின்னதாக “ழ’ வராத பெயராக ஒன்றை அவன் சீக்கிரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அவனுடைய மனைவி அழகாக இருந்தால் மட்டும் போதாது. “ழ’ உச்சரிக்கத் தெரியாதவளோடு அவனால் அமைதியாக தாம்பத்தியம் நடத்த முடியாது முடியாது முடியாது.
பாலைத் தந்தாள்.
“”தமிழே! நீ வாழ்க! நீடூழி நீ வாழ வேண்டும்!” என்று கூறியவாறு அதை வாங்கி வெறுப்புடன் குடித்தான்.
விரல்களும் கையும் மெய்யும் அழகாக எழில் ஓவியமாகத்தான் இருக்கிறாள்.
ஆனால் “ழ’?
இத்தனை அழகியிடம் வெறுப்புக் கொள்ளலாகாது.
அவள் தமிழே பேசாவிட்டால் அவனுக்கு வெறுப்பு வராது.
அவளிடம் கேட்டான். “”உன்கிட்டே ஒரு வேண்டுகோள். தப்பாக எண்ணாதே.”
“”சொல்லுங்க.”
“”நீ தமிழே பேச வேண்டாம். ஓரளவுக்கு ஆங்கிலம் தெரியுமல்லவா? எனக்கும் ஓரளவு புரியும். ஆங்கிலத்திலேயே நீ பேசு. கஷ்டப்படுவாயோ.”
“”ஒரு கஷ்டமுமில்லை. இங்கிலீஷில் சரளமாகப் பேசுவேன்.”
“”சந்தோஷம். வேறு என்ன மொழி தெரியும்?”
“”இந்தி பேசுவேன். ராஜபாளையத்திலிருந்தபோது அங்கு சமஸ்கிருதம் கற்றேன். வடமொளியில் நன்றாகப் பேசுவேன். திராவிட மொளிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் பேச, எளுத வரும்.
பெங்காளி படிப்பேன். எளுதுவேன் – தாகூரை ஒரிஜினலாக ரசிக்க பெங்காலி கற்றேன். டிப்ளமோ ஹோல்டர்.
மொளிகள் கற்பதுதான் என் பொளுது போக்கு.”
அவனுக்குத் தலை சுற்றியது. தமிழும், ஓரளவு ஆங்கிலம் மட்டுமேதான் அவனுக்குத் தெரியும். அவளோ சகல பாஷா பண்டிதையாக… சும்மா அளக்கிறாளா?
“”எங்கே, ஒரு வாக்கியம் சொல்கிறேன். நீ அதை உனக்குத் தெரிந்த எல்லா மொழியிலும் எழுதிக் காட்டுப் பார்ப்போம்.”
அவள் பேனாவை எடுத்தாள். பேப்பரை எடுத்தாள். “”சொல்லுங்க.”
சொன்னான். “”இனிய ஆச்சரியத்தை என் கணவர் வெளிப்படுத்தினார்.” இதையே இந்தி, கன்னடம், தெலுங்கு. பெங்காலி, பிரெஞ்ச், ஜப்பான் – உனக்குத் தெரிந்த எல்லா மொழியிலும் எழுது பார்ப்போம்.”
“”நேபாளிளீஸ்கூட வரும்.” எல்லாவற்றையும் இரண்டு நிமிஷத்தில் எழுதி அவனிடம் ஒப்படைத்தாள்.
அவனுக்கு படிக்கத் தெரிந்தால்தானே.
அவளது வித்தையின் முன் மானசீகமாகச் சுருண்டு விழுந்தான்.
“”எப்படி இத்தனை மொழி இந்தச் சின்ன வயசில்?” அவளை மிருதுவாக அணைத்துக் கொண்டான்.
“”மொளிகள் கற்பதுதான் என் பொளுது போக்கு!”
இப்போது “ழ’கரம் ளகரமாகக் கொலை செய்யப்பட்டாலும் அவனுக்கு ஏனோ ரத்தம் கொதிக்கவில்லை. ஏனோ என்ன ஏனோ?
மரியாதை தந்து தலை வணங்கினான்.
இவ்வளவு மொழி கற்ற இந்த சரஸ்வதி தேவியால் “ழ’ வை உச்சரிக்கக் கற்றுக்கொள்ள முடியாதா என்ன?
பன்மொழிப் புலவரான மனைவிக்கு அந்த விதத்தில் தான் ஆசானாகப் போவதில் அவனுக்குப் பெருமையே இப்போது ஏற்பட்டது.
“”நான்தான் – இந்தக் கீழப் பெருமழை எழிலெழு கிழவோன்தான் உனக்கு இனிமேல் ஆசிரியர்?”என்று அவள் காது மடலில் கிசுகிசுத்தான்.
குறும்பாக ஏதோ சொல்கிறான் என்று நினைத்து நிதானத்துடன் அவள் புன்னகைத்தாள்.


- தினமணி கதிர்


ஜ.ரா. சுந்தரேசன்

சிறுகதை : ழகரக் கொலை

 

டிஸ்கி - டைட்டில்  மட்டும்  மார்க்கெட்டிங் உத்திக்காக மாற்றப்பட்டது.என்னை  மன்னிக்கவும், ஈரோட்டில்  5 ரூபாக்கு 10 மன்னிப்பு


1 comments:

'பரிவை' சே.குமார் said...

ழ -கரக் கொலை ரொம்ப நல்லாயிருக்கு...