Monday, July 07, 2014

அழகு குட்டி செல்லம் - ‘நீயா நானா’ ஆண்ட்டனியின் தயாரிப்பு அழகியல் சார்ந்த ஏ செண்ட்டர் படமா?

படைப்பூக்கமும் தீவிரமான விவாதமும் கொண்ட ‘நீயா நானா’ விவாத அரங்கு தமிழ்த் தொலைக்காட்சிகளில் தனி இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி, இயக்கிவரும் ஒருவர் படைப்பு சார்ந்த இன்னொரு துறையில் இறங்கும்போது தன் படைப்புத் திறனுக்குச் சவால் விடும் வேலையைத்தானே தேர்ந்தெடுப்பார்? ‘நீயா நானா’ விவாத நிகழ்வின் இயக்குநர் ஆண்டனி இதில் வித்தியாசப் படுகிறார். திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவுசெய்த இவர் எழுத்து அல்லது இயக்கத்தைத் தேர்ந்தெடுக்காமல் தயாரிப்பாளராகக் களம் இறங்குகிறார். ‘அழகு குட்டி செல்லம்’ என்னும் படத்தைத் தயாரித்துள்ள அவர் விரைவில் அதை வெளியிடுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். படத்தை இயக்க வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை என்று கேட்டால் அதற்கேற்ற உழைப்பைக் கொடுக்கும் அளவுக்கு இப்போது நேரம் இல்லை என்கிறார் புன்னகையுடன். “படத்தை இயக்குவது என்பது படைப்பூக்கம் மட்டும் சம்பந்தப்பட்ட வேலை கிடையாது. கடுமையான உழைப்பைக் கோரும் வேலை. ஒரு படத்தின் எல்லா அம்சங்களுக்கும் இயக்குநர் பொறுப்பேற்க வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவர்தான் கவனிக்க வேண்டும்” என்று சொல்லும் ஆண்டனி, தயாரிப்பு என்பது படைப்பூக்கத்திற்குச் சம்பந்தமில்லாத வேலை அல்ல என்றும் கூறுகிறார். சரியான கதை, அதற்கேற்ற இயக்குநர், அதற்கான இதர அம்சங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கும் ரசனையும் படைப்பூக்கமும் வேண்டும் என்று கூறும் ஆண்டனி, ஒரு திரைப்படம் எப்படி உருவாக வேண்டும் என்பதை ஆழமாகச் சிந்தித்து எல்லா விஷயங்களையும் ஒருங்கிணைப்பவர்தான் நல்ல தயாரிப்பாளர் என்று தான் நம்புவதாகக் குறிப்பிடுகிறார். 


“ஒரு படம் உருவாவதில் பல விஷயங்கள் இருக்கின்றன. நடிகர்கள் தேர்வு, இசை, படப்பிடிப்புத் தளம், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என எல்லாவற்றிலும் படைப்பூக்கமும் துல்லியமான ரசனையும் தேவை. ஒரு இயக்குநர் தனக்கு வேண்டியதைச் சொல்வார். ஆனால் சில சமயம் செலவை மனதில் கொண்டு அவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வார். அல்லது கட்டுப்படுத்திக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாவார். படைப்பின் தேவையை உணர்ந்த தயாரிப்பாளரால்தான் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் யோசிக்கும்படி ஊக்குவிக்க முடியும்” என்று சொல்கிறார் ஆண்டனி. 


‘அழகு குட்டி செல்லம்’ படத்துக்குப் பல அம்சங்களில் இதுபோன்ற பிரச்சினை வந்ததாகவும் படைப்பாளியின் கண்ணோட்டத்தோடு பார்த்ததா லேயே செலவைப் பார்க்காமல் அவற்றைக் கையாண்டதாகவும் குறிப்பிடுகிறார். ஒரு குறிப்பிட்ட வேடத்துக்கு யாரைப் போடலாம் என்ற கேள்வி வந்தபோது ஆண்டனி ஒரு பெயரைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது சம்பளம் அதிகம். அவரைப் போட்டால் பட்ஜெட்டிற்குள் படத்தை முடிக்க முடியாது. ஆண்டனி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப் பல முடிவுகளைக் கதையின் தேவையை ஒட்டி எடுத்ததால் செலவு திட்டமிட்டதைப்போல மூன்று மடங்காகிவிட்டது என்கிறார். 


“தலைப்புக்கான ஃபாண்ட், சுவரொட்டி டிசைன் ஆகியவை உள்பட எல்லா விஷயங்களிலும் படைப்பம்சம், தரம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்தோம்” என்று விளக்குகிறார். இந்நிலையில் தயாரிப்பாளரின் வேலையில் படைப்பம்சம் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்கிறார். “படைப்பூக்கமும் படைப்பின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் திறனும் உள்ளவர்கள்தான் தயாரிப்பாளர்களாகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அத்தகைய தயாரிப்பாளராக ஆவதுதான் என் விருப்பம்” என்று அவர் தெரிவிக்கிறார். 


பின்னாளில் இயக்குநராக விருப்பம் இருக்கிறதா என்று கேட்டால் புன்னகைதான் முதலில் பதிலாக வருகிறது. “இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை” என்கிறார் தொடர்ந்து. 


படத்தின் தலைப்பையும் முஸ்தீபுகளையும் பார்க்கும் போது ‘நல்ல சேதி’ சொல்லும் படமாக இருக்கும்போலத் தோன்றுகிறதே என்று கேட்டால், படம் ஒரு நல்ல படைப்புக்கான சிக்கல்களையும் உள் அடுக்குகளையும் கொண்டிருக்கும் என்கிறார். “ஃபீல் குட் அம்சம் இருக்கும். ஆனால் திகட்டும் விதத்தில் இருக்காது.” என்று விளக்குகிறார். 


படத்தின் இசை மிகவும் வரவேற்கப்படும் என்று அடித்துச் சொல்கிறார். வேத் சங்கர் சுகவனத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே நன்றாக வந்திருப்பதாகச் சொல்லும் இவர், இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க இசை அனுபவமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் நம்பிக்கையோடு. 


பட்ஜெட் அதிகரிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் படைப்பை உருவாக்குவதில் குறியாக இருந்த ஆண்டனி இப்போது படத்தை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். பரவலான ரசிகர்களைச் சென்றடைய வேண்டுமென்றால் சரியான நேரத்தில் சரியான விதத்தில் வெளியிட வேண்டும் என்பதை உணர்ந்த இவர் அதற்கான முயற்சிகளில் கவனத்தைக் குவித்துவருகிறார். 

நன்றி - த இந்து

0 comments: