Sunday, July 13, 2014

பப்பாளி - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி கலெக்டராக ஆசைப்படும் ஒரு படிப்பாளியின் கதைக்கு 'பப்பாளி' என இரட்டை அர்த்த தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குனர். நல்ல வேளை ரைமிங்காக இருக்கட்டுமே என கூடுதலாக “பப்பாளி, தக்காளி” என பெயர் வைக்காமல் விட்டாரே என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. பொதுவாக பெண்களைத்தான் பப்பாளி, தக்காளி, என இளைஞர்கள் அழைப்பது வழக்கம். எனவே, அதையே பெயராக வைத்து இளைஞர்களை கவர்ந்துவிடலாம் என இயக்குனர் முடிவெடுத்திருப்பார் போலிருக்கிறது. இருந்தாலும் போனால் போகிறதென்று படம் முடிவடையும் போது விதை, வீரியம் என கொஞ்சம் வாசித்துத் தள்ளியிருக்கிறார்.

படத்தின் இயக்குனர் கோவிந்த மூர்த்தி இதற்கு முன் மூர்த்தி என்ற பெயரில் “கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன்” ஆகிய படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங்கிளலும் நகைச்சுவை தூக்கலாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனத்தை கொஞ்சம் தூக்கலாக சேர்த்திருக்கிறார். படத்தின் மையக் கருவுக்கும் தலைப்புக்கும் எப்படி சம்பந்தமில்லையோ, அப்படித்தான் சம்பந்தமில்லாத வகையில் ஆரம்பத்தில் சில காட்சிகள் நகர்கின்றன. 
 
தொலைக்காட்சித் தொடரில் நாயகனாக நடித்த ஒருவரை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என இயக்குனர் ஏன் முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. அதை சரிக்கட்டத்தான் படத்தின் நாயகியை அப்படி இப்படி காட்டியிருக்கிறார் போலும். அதிலும் நாயகியின் அறிமுகக் காட்சியை சென்சார் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு நாயகி அறிமுகக் காட்சியைப் பார்த்ததில்லை. அதிலும் வேகத் தடை மீது அவர் வரும் பைக்கில் ஏறி இறங்குவதெல்லாம் டூ மச், த்ரீ மச்...

கையேந்தி பவன் நடத்தி வரும் இளவரசுவின் மகன் செந்தில். ஐஏஸ் தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பதுதான் இவருடைய லட்சியம். அதே சமயம் ஒரு சில காதல் தேர்வுகளையும் எழுதி அதில் தோல்வியடைகிறார். அதன் பின் இஷாராவைப் பார்த்ததும் அவர் மீது காதல் வயப்பட்டு மீண்டும் ஒரு காதல் தேர்விற்கு முயற்சிக்க, இந்த முறை தேர்வில் வெற்றி பெற்று விடுகிறார். இஷாராவும், செந்திலும் காதலர்களாகிறார்கள். 
ஒரு சந்தர்ப்பத்தில் காதலன் செந்திலை, இஷாரா அவருடைய அம்மா சரண்யாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அப்போது கலெக்டர் ஆவதுதான் தனது லட்சியம் என்கிறார் செந்தில். அதனால், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். வருங்கால மருமகன் கலெக்டர் ஆனால் பெருமைதானே, ஏன் சரண்யா எதிர்க்கிறார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். சரண்யாவும் , நரேனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நரேனுக்கு மிகப் பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால், பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பின், குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது லட்சியம் வீணாகப் போய் அவர் ஒரு சாதாரண வேலைக்குப் போய்விடுகிறார். 
 

எங்கே, தனது கணவரின் லட்சியம் வீணானது போல் செந்திலின் ஐஏஎஸ் கனவும் வீணாகிப் போய் விடக் கூடாதென்றுதான் இஷாரா - செந்தில் காதலுக்கு சம்மதிக்க மறுக்கிறார். ஆனால், 'பாசிட்டிவ்வாக' யோசிக்க வைத்து சரண்யாவின் மனதை மாற்றுகிறார். செந்திலின் காதலுக்கு அவருடைய அப்பா எதிர்ப்பு தெரிவிப்பதால், இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார் சரண்யா. அதோடு, மருமகன் செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கும் பின்னணியில் இருந்து உதவுகிறார். 
அதே சமயம், மகன் செந்தில் வீணாகப் போக வேண்டும் என்று இளவரசு சாபம் கொடுக்கிறார். செந்தில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

இப்படி ஒரு தன்னம்பிக்கையான கதையை இடைவேளை வரை செந்தில், இஷாரா காதல் மூலம் விளையாட்டாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். அதிலும் அவ்வப்போது கொஞ்சம் ஆபாசமான காட்சிகள் வேறு. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் தவிர்த்திருந்தால் தரமான படமாக அமைந்திருக்க வேண்டிய படம், தகரமாக அமைந்து விட்டது.

திரைப்படத்தில் நடிக்கிறோம் என்றெல்லாம் செந்தில் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. சீரியலில் எப்படி நடித்தாரோ அப்படியேதான் நடிக்கிறார். ஒரு மெகா தொடரில் நடித்தவரை நாயகனாக போட்டுப் பெரிய திரையில் படமாகக் காட்டினாலும் ஏதோ ஒரு சீரியலையே பெரிய திரையில் பார்ப்பது போல்தான் இருக்கிறது. நடனமே வராத இவருக்கு நடனப் பாடலை வேறு வைத்து நம்மைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள்.
 நாயகியின் அண்ணன், நாயகனின் அண்ணன் என நடிக்க வேண்டியவருக்கு ஒரு முழு படத்தையும் தாங்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இடைவேளைக்குப் பின்னர் வலுவாக உள்ள சில காட்சிகள் இவருடைய வலுவில்லாத நடிப்பால் வீழ்ந்து போகின்றன.

'பப்பாளி' என்று பெயர் வைத்து விட்டோமே அதற்காக நாயகியை கொஞ்சம் கிளாமராக காட்ட வேண்டுமே என முடிவெடுத்தது போல தேவையேயில்லாத கிளாமரான காட்சிகள். அதிலும் ஒரு காட்சியில் காதலனை சந்திக்க திடீரென புடவையில் வருகிறார் இஷாரா. அதிலும் பொது மக்கள் கூடியுள்ள ஒரு பூங்காவில் வைத்து நாயகியைப் பார்த்து ஆபாசமாகப் பேசுகிறார் நாயகன். 
இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் எங்கே ஜெயிக்க முடியும் என்று இஷாரா நினைத்து விட்டாரோ என்னமோ. நிறைவாக நடிக்க முடியாதவர்கள்தான் குறையான ஆடைகளில் கவனம் செலுத்துவார்கள். இதில் தான் எப்படி இருக்க வேண்டும் என்று இஷாரா முடிவு செய்து கொள்வது நல்லது.

முதல் இரண்டு படங்களில் இயக்குனர் மூர்த்தியின் படங்கள் பேசப்பட்டதற்கு வடிவேலுவின் நகைச்சுவையும் ஒரு காரணம். இந்தப் படத்தில் வடிவேலு இடத்தில் சிங்கம் புலி. அவரும் முடிந்த அளவிற்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அரசியலைப் பற்றியும், காதலைப் பற்றியும் அவர் சொல்லும் 'கொள்கை' வசனங்கள் கைதட்டலைப் பெறுகின்றன. நாயகனின் நண்பனாக ஜெகன். நாமும் ஒரு படத்திலாவது நம்மை சிரிக்க வைத்து விடுவார் என பார்க்கிறோம், மனிதர் அசர மாட்டேன் என்கிறார்.

இடைவேளைக்குப் பின் படத்திற்கு நாயகன், நாயகி எல்லாமே சரண்யாதான். தன்னால்தான் கணவன் விஞ்ஞானி ஆக முடியவில்லையே என்ற ஏக்கத்தை, மருமகன் செந்திலை வைத்து தீர்த்துக் கொள்ள வைக்கும் கதாபாத்திரம். பல படங்களில் நாயகர்களின் அம்மாவாக நடித்து மனதைக் கவர்ந்தவர், நாயகனின் மாமியாராகவும் நடித்து பெயர் வாங்கிவிட்டார். தேசிய விருது பெற்ற இவரிடமிருந்தாவது செந்திலும், இஷாராவும் கொஞ்சம் நடிப்பைக் கற்றுக் கொள்ளலாம்.

சரண்யாவின் கணவராக ஆடுகளம் நரேன், இயல்பான அப்பா கதாபாத்திரம். இளவரசுவும், அவருடைய மனைவியாக நடித்திருப்பவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்களைப் பற்றியெல்லாம் கேட்கக் கூடாது. நன்றாக இருந்தால் சொல்லமாட்டோமா...

பப்பாளி - 'தலை முதல் கால் வரை' பல மருத்துவ குணம் கொண்ட ஒரு பழத்தின் பெயரை வேறு எதற்கோ பயன்படுத்தி விட்டார்களே....!
thanx - தினமலர் 
 
  • நடிகர் : செந்தில்(மெர்சி)
  • நடிகை : இஷா
  • இயக்குனர் :கோவிந்த மூர்த்தி
 diski -ராமானுஜன் - சினிமா விமர்சனம்
  http://www.adrasaka.com/2014/07/blog-post_218.html


நளனும் நந்தினியும் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/07/blog-post_5656.html

0 comments: