Sunday, May 18, 2014

இளைய தளபதி விஜய் ஒரு கடல் , அவருக்கு என் அடுத்த படம் ? - எம் சசிகுமார் கத்திக்குத்து பேட்டி @ த ஹிந்து

''ரொம்ப வேதனையான உதாரணம்தான். ஆனால், என்னோட சந்தோஷத்தையும் வலியையும் அப்படியே சொல்ல இதைவிட வேற உதாரணம் தெரியலை. அழகான குழந்தையைப் பெத்துக் கையிலக் கொடுத்திட்டு பிரசவக் காயத்துல செத்துப் போற அம்மா மாதிரி கையில தேசிய விருதுக்கான படத்தை எடுத்துக் கொடுத்திட்டு பாலு மகேந்திரா சார் இறந்திட்டார். அந்த விருதைப் பார்க்குறப்ப எல்லாம் சந்தோஷமும் துக்கமுமா மனசு ரெண்டுபட்டுப் போயிடுது." - பாலு மகேந்திராவின் நினைவுகளில் இருந்து இன்னமும் மீளவில்லை சசிகுமார். 'தலைமுறைகள்' படத்துக்காக தேசிய விருது வாங்கியவர், இப்போது 'தாரை தப்பட்டை' படத்துக்காக பாலாவின் பட்டறையில். 



''முதுமை கொடுக்கும் பரிசு மரணம்னு பாலு மகேந்திரா சாரே சொல்லியிருக்கார். நீங்கள் இன்னமும் அந்த இழப்பின் வலியிலிருந்து மீளவில்லையே..?"


 
''சமீபத்தில் சென்னை ரயில்வே ஸ்டேஷன் குண்டு வெடிப்பில் செத்துப்போன சுவாதியோட மரணம் என்னை பெரிசா பாதிச்சது. திருமணம் நிச்சயமான அந்தப் பொண்ணு எவ்வளவு கனவுகளோட ரயிலேறி இருக்கும்? அந்த அப்பாவிப் பொண்ணைக் கொன்னதன் மூலமா பயங்கரவாதமும் தீவிரவாதமும் என்னத்தை சாதிச்சிடுச்சு? முன்பின் அறியாத யாரோ ஒருத்தரோட மரணம்கூட நம்மள உலுக்குறப்ப, மனசுக்கு நெருக்கமானவங்களோட இழப்பு எவ்வளவு பெரிசா வலிக்கும்? பாலு மகேந்திரா சார் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திட்டுப் போயிருக்கார். முதல்ல சார் என்னைப் பார்க்க விரும்புறதா பி.ஆர்.ஓ நிகில் சொன்னார். 'நானே வந்து பார்க்குறேன்'னு சொன்னேன். 'நான் உன்னோட ஆபிஸ்க்கு வாரதுதான் முறை'ன்னு சொல்லி அவரே கிளம்பி வந்து 'தலைமுறைகள்' கதையைச் சொன்னார். 



படத்தோட பட்ஜெட்டை அவர் சொன்னப்ப, 'இந்த சின்ன தொகைக்குள் எடுத்திட முடியுமா'ன்னு கேட்டேன். சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்தவர், 'இதே மாதிரி சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரணும். கோடிகளில் இருக்கும் சினிமாக்கள் லட்சங்களுக்கு மாறனும். ஈரான், கொரியா படங்களை எல்லாம் நாம ஆச்சர்யமா பார்க்குற காலம்போய் நம்ம படங்களை அவங்க ஆச்சர்யமா பார்க்கணும்'னு சொன்னார்.



 ஒரு தயாரிப்பாளராக‌ படப்பிடிப்பிற்கு நான் போகவே இல்ல. நடிகனா ஒரே ஒரு நாள் போனேன். அன்றைக்கு நிறைய கூட்டத்தை வைத்து படப்பிடிப்பு. முதலில் கூட்டத்தை வைத்து எடுக்க வேண்டிய ஷாட் எல்லாம் எடுத்துட்டு, கடைசியா என்னைக் கூப்பிட்டார். ரொம்ப இலகுவா என்னோட போர்ஷனை முடிச்சார். 'அவளவுதானா சார்'னு ஆச்சர்யமா கேட்டேன். படத்தில் அந்தக் காட்சியோட உருக்கத்தைப் பார்த்து வியந்து போயிட்டேன். அன்றைய ஷூட்டிங் முடிந்த உடனே மேனேஜர் உதயகுமாரை கூப்பிட்டவர், 'இன்னிக்கு 600 பேர் கேட்டிருந்தோம். அதில ஒரு பொண்ணு வரலை. அதனால 599 பேருக்குப் பணம் கொடுத்தா போதும்'னு சொன்னார். ஒரு தயாரிப்பாளருக்கு எல்லா விதத்திலும் உதவுற படைப்பாளியா அவர் இருந்தார். நானும் அப்படி இருக்கணும்" 



''பாலு மகேந்திரா இளையராஜா மீது பேரன்பு கொண்டவர். இளையராஜா பற்றி உங்களிடம் ஏதும் சொல்லியிருக்கிறாரா?"


 
''நிறைய சொல்லியிருக்கார். 'இளையராஜா இல்லாம நான் வேலை பார்க்கவே மாட்டேன் சசி'ன்னு சிலாகித்துச் சொல்வார். 'ஒரு காட்சி எடுக்குறப்ப இதுக்கு பின்னணி இசை இருக்கக்கூடாதுன்னு நினைச்சு எடுப்பேன். அவரும் அப்படியே பண்ணிக் கொடுப்பார். என்னோட மெளனத்தைப் புரிஞ்சுகிட்டவர் ராஜா மட்டுமே'ன்னு வியந்து பேசுவார். சினிமாவில் ஒருத்தரை ஒருத்தர் புகழ்வது வழக்கமானதுதான். ஆனால், இளையராஜா சார் பற்றி பாலு மகேதிரா சார் பேசுவது ஆத்மார்த்தமும் உண்மையுமா இருக்கும்." 



''தேசிய விருது மட்டும் அல்லாது சர்வதேச விருதுகளையும் 'தலைமுறைகள்' பெற்றுக் கொடுக்கும் என்கிற பேச்சு இருக்கிறதே?"


 
''FMS எனப்படும் வெளிநாடு வியாபாரத்திற்கு நான் படத்தைக் கொடுக்காததற்குக் காரணமே சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகத்தான். பாலு மகேந்திரா சார் இருக்கும்போது ஒரு சிலர் வந்து பல திரைப்பட விழாக்களைச் சொல்லி அங்கெல்லாம் படத்தை அனுப்பச் சொன்னார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் வரவே இல்லை. திரைப்பட விழாக்கள் சம்பந்தமான விவரங்களைச் சொல்லக்கூட இங்கே உள்ள யாரும் முன்வரலை. மலையாளத்தில் உள்ள சிலரும் இந்தியில் உள்ள அனுராக் காஷ்யப் மாதிரியான ஆட்களும் சொல்லித்தான் எனக்கு இது சம்பந்தமான விஷயங்கள் தெரிய வந்தது. இப்போ ஒவ்வொரு விழாக்களையும் தேடிப் பிடிச்சு படத்தை அனுப்பிகிட்டு இருக்கேன். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்புவதற்குள் தேதி முடிந்துவிட்டது." 



''விருது குறித்த விவரங்கள் சொல்ல ஆள் இல்லையா? இல்லை, இங்கிருப்பவர்களுக்கு விருது குறித்த விவரங்களே தெரியவில்லையா?"


 
''தெரியும். நல்லாத் தெரியும். எங்கெங்கு விழாக்கள் நடக்கின்றன... எந்தெந்த பிரிவில் விருதுக்கு அனுப்பலாம் என்கிற விவரங்களைத் தெரிந்துகொண்டு அவர்களின் படங்களை மட்டும் அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், தவறியும் அடுத்தவர்களுக்கு இந்த விவரங்களைச் சொல்வதில்லை. ஒரு மலையாளப் படம் விருது வாங்கினால் அது கேரளாவுக்கே கிடைக்கிற பெருமையா இருக்கு. ஒரு ஆந்திரப் படம் விருது வாங்கினால் அது ஆந்திர மாநிலத்துக்கே கிடைக்கிற விருதா இருக்கு. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்த மனசு இல்லை. ஒரு தமிழ்ப் படம் விருது வாங்கினால், அதைத் தமிழ்த் திரையுலகிற்கே கிடைத்த விருதாத்தானே பார்க்கணும்.



 அந்த மனசோ பெருந்தன்மையோ இங்கே பலருக்கும் இல்லை. பெங்காலியில் ஒரு படம் நல்லபடி வந்தால், 'அதை அங்கே அனுப்பு... இங்கே அனுப்பு'ன்னு சொல்லி அத்தனை கலைஞர்களும் தோளில் சுமந்து கொண்டாடுறாங்க. இதைச் சொல்வதால் சிலர் மனசு வருத்தப்படலாம். படட்டும்... ஆனால், இந்த ஆதங்கத்தைச் சொல்றதால் இனியாவது நல்ல படைப்புகளுக்கு நல்ல வழிகாட்ட அவங்க முன் வருவாங்கன்னு நம்புறேன். என்னாலான முயற்சியா திரைப்பட விழாக்கள் எந்த நேரத்தில், எங்கெல்லாம் நடக்கின்றன என்பதைத் தொகுத்து ஒரு புத்தகமா போடப் போறேன். நான் பட்ட சிரமத்தைப் புதுசா வாரவங்க படக்கூடாது!" 



''சசிகுமார் படம்னாலே நட்பு மட்டும்தான்னு சொல்றாங்களே?"


 
''சொல்லட்டுமே... அறிமுகப் படத்திலேயே நட்பை ஆழமா சொல்லிட்டதால் இந்தப் பேராகிடுச்சு. 'நாடோடிகள்' அதை இன்னும் உறுதியாக்கிடுச்சு. 'போராளி' நட்புக்கான படமே கிடையாது. ஒரு தனி மனுஷனோட போராட்டம் அது. 'சுந்தரபாண்டியன்' நட்புக்கான அடையாளப் படமா வந்து, அந்தப் பேரை இன்னும் வலுவாக்கிடுச்சு. 'குட்டிபுலி' அம்மா பையனுக்கான பாசத்தைச் சொன்ன படம். 'பிரம்மன்' மறுபடியும் என்னை நட்பு வட்டத்திலேயே நிறுத்திடுச்சு. அடுத்தடுத்த படங்களில் நட்பைத் தாண்டிய நிறைய விஷயங்கள் இருக்கும்." 



''பிரம்மன் சக்சஸ் ஆகாததற்கு யார் காரணம்?"


 
''நான்தான் காரணம். என்னோட தோல்விக்கு வேறு யாரையும் நான் கைகாட்ட மாட்டேன். என் மீது எத்தகைய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பதே தெரியாமல் அந்தப் படத்தில் ரொம்ப சாதுவா கேரக்டரில் நடிச்சிருப்பேன். என்னோட படங்களில் பெரிய அளவுக்கு ஆக்ரோஷம் இருக்கும்னு நினைக்கிறாங்க. அதை 'சுந்தரபாண்டியன்', 'குட்டிபுலி' படங்கள் ரொம்ப உறுதியாக்கிட்டு போயிருச்சு.



 'நாடோடிகள்', 'போராளி', 'சுந்தரபாண்டியன்', 'குட்டிபுலி' இப்படி என்னோட படங்கள் எல்லாமே ரொம்ப டென்ஷான படங்கள். 'எத்தனை நாள்தான் நானும் கத்தியைத் தூக்கிட்டு திரியுறது, வேறொண்ணு பண்ணிப் பார்க்கலாமே'னு நினைச்சுதான் 'பிரம்மன்' பண்ணினேன். அதில், நான் ரொம்ப தன்மையான பையனா நடிச்சது பலருக்கும் உடன்பாடு இல்லாமல் போச்சு. 'பிரம்மன்' படத்தை 'சுந்தரபாண்டியன்' படத்திற்கு முன்னாடியே பண்ணியிருந்தால் நல்லா போயிருக்கும்." 




''எப்படி ரெடியாகுது பாலாவோட தாரை தப்பட்டை?"


 
''இன்னும் ஷூட்டிங் கிளம்பலை. அதனால படத்தைப் பற்றி இப்ப சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அண்ணனோட படத்தில் நடிக்கப்போற பரவசம் மனசு முழுக்க இருக்கு. பாலா அண்ணன் என்னை நடிக்க அழைச்ச நாள்தான் ஒரு நடிகனா நான் அங்கீகரிக்கப்பட்ட நாள்." 



''விஜய்யை வைத்துப் படம் இயக்கப் போறதா கிளம்புற செய்தி உண்மைதானே?" 

 
''சந்தித்தது உண்மை. கதை விவாதம் நடத்தியது உண்மை. மற்ற எந்த விஷயங்களையும் நாங்க இன்னும் தொடங்கலை. விஜய் இன்னிக்கு கடல் மாதிரி விரிஞ்சு கிடக்குறார். டெக்னிகல் விஷயங்கள் தொடங்கி டெய்லி அப்டேட் வரை அவருக்கு அத்துப்படி. அவரை வழிக்குக் கொண்டு வரணும்னா நாமளும் ஒரு கடலாத்தான் மாறணும். மாறிட்டாப் போச்சு!" 


நன்றி - த இந்து 





  • sadhasivasaravanan  from Salem
    இன்று தமிழக பல திரைப்படங்கள் சிறு துளியும் சமுக அக்கறை என்பது இல்லாமல் வருமானம் ஒனறுதான் நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிரகள்.தேசிய விருது இரண்டவது சமுக அக்கறை என்பது முதல் இருக்க வேண்டும் அது இன்று இல்லை.ஆபாசம்,அட்டகாசம்,அட்டவடி,இரட்டை வசனம் பாடல்கள்.படங்கள்,தமிழக திரைப்படங்கள் எல்லாம் கறை படியந்து உள்ளது.
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • sivashanmugam Vasu retd.,deputy secretarytogovt., at Government of Puducherry from Pondicherry
    தராதரம் எது என்ற புரிதல் இடத்திற்கு இடம் / மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது .





0 comments: