Thursday, May 15, 2014

பாம்பு வழிபாடு-வைக்கம் முகம்மது பஷீர்-சிறுகதை ( த்ரில்லர் )

பிறந்து வளர்ந்தது மூவாற்றுப்புழை நதிக் கரையில் இருக்கும் தலயோலப்பறம்பில்தான். வைக்கத்திற்கு அருகில் அது இருக்கிறது. மூவாற்றுப்புழை நதியில் வருடத்தில் இரண்டு முறை வெள்ளப் பெருக்கு உண்டாகும். கரைகளைக் கடந்து ஓடவும் செய்யும். ஒரு காலத்தில் நாங்கள் பெரிய படகுகளில்தான் வசித்ததே. அதாவது- பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு உண்டாகிற காலத்தில். அந்த மலையிலிருந்து வரும் நீரில் பலவும் மிதந்து வரும். யானை இறந்து மிதந்து வருவதையும் நான் பார்த்திருக்கிறேன். பிறகு… மரங்கள், பாம்புகள்… பாம்புகள் இறந் தவை அல்ல. அவை மரங்களின் கொம்புகளிலும் வீடுகளின் மீதும் அபயம் தேடி இருந்து கொண்டிருக்கும். (அன்று நதியில் தெற்குப் பக்கம் வாய்க்கால் வெட்டப்பட்டிருக்கவில்லை.) நீர் குறைந்துவிட்டால் பாம்புகளின் ஆர்ப்பாட்டம்தான். பாம்பு கடித்து சிலர் இறப்பார்கள். பாம்பினைப் பார்த்தால் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் அடித்துக் கொல்வார்கள். நீர் குறைந்து வீடுகளில் ஈரம் மாறி காய்ந்து வரும் காலம். அன்று நாங்கள் வசித்துக் கொண்டிருந்த வீடு வாப்பா ஒரே மாதத்தில் உண்டாக்கியது. நதியின் இக்கரையில் அப்போது வாப்பாவிற்கு ஒரு பலசரக்குக் கடை இருந்தது. எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் வாப்பாவிற்கு மரத்தடி வியாபாரம்தான் வேலையாக இருந்தது. மரத்தடிகளால் ஆன மிதவையை நதியின் வழியாகக் கொண்டு வந்து கரையில் ஏற்றி நிறுத்தியிருப்பார். அந்தக் காலத்தில் நான் காலையில் எழுந்தவுடன் பார்ப்பது யானைகளைத்தான். மரத்தடி களை ஏற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் யானைகளை.
அன்றொரு நாள் இரவு பதினோரு மணிக்கு நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்காக எழுந்தேன். பார்த்தபோது சமையலறைக்கு அருகிலிருந்த மண்ணால் ஆன திண்ணைக்கு முன்னால், மணல் பரப்பப்பட்ட மூன்று கற்களை வைத்து தேங்காய் மட்டைகளை எரிய வைத்து உம்மா நெய்யப்பம் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
வாப்பாவும் மற்ற பிள்ளைகளும் உள்ளே உறக்கத் தில் இருந்தார்கள். உம்மா விற்குத் துணையாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் இருந்தாள். அவள் கொஞ்சம் தேங்காய் நார்களைக் கொண்டு வந்து கயிறு பிரித்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கு உம்மாவிற்கு அருகில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. வாசலிலும் பிற இடங்களிலும் அடர்த்தியான இருட்டு இருந்தது. நானும் இருட்டிற்குள் நுழைந்தேன். வாசலுக்கு அருகில் புதியதாக தோண்டப்பட்ட கிணறு இருந்தது. அதற்கு அரைச்சுவர் கட்டப்படாமல் இருந்தது. கிணற்றின் கரையில் இருந்த பானையில் நீர் மூடி வைக்கப்பட்டிருந்தது. நான் இருட்டில் சிறுநீர் கழித்து விட்டு கழுவிக்கொண்டு வந்து உம்மாவின் அருகில் உட்கார்ந்து, முறத்திலிருந்து நெய்யப்பத்தை எடுத்து பிய்த்து தின்ன ஆரம்பித்தேன். நான் வாசலை நோக்கி கால்களை நீட்டி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். நான் கால்களை ஆட்டும்போது பிரித்துக் கொண்டிருக்கும் கயிற்றில் கால்கள் பட்டன. அப்படியே நெய்யப்பத்தைத் தின்று கொண்டிருக்கும்போது, திடீரென்று நான் கதகளியில் முத்திரை காட்டுவதைப் போல இருந்து விட்டேன். ஒரு அசைவும் இல்லை. வலக் கையில் இருந்த நெய்யப்பத்தை வாய்க்கு கொண்டு செல்கிறேன். அப்படியே நின்று விடுகிறது. காரணம், என்னுடைய வலக் காலின் முழங்காலுக்கு அருகில் பாம்பின் வால் அசைகிறது. வளைந்த வால் அல்ல. பருமன் குறைந்து வளையாமல் இருக்கும் கறுப்பு நிற வால். தலையை என்னுடைய பாதத்தில் வைத்துவிட்டு பாம்பு என்னுடைய காலில் அழகாகச் சுற்றியிருந்தது. கறுப்பு நிறப் பாம்புதான். ஆங்காங்கே வெள்ளை நிறத் தில் புள்ளிகள் இருக்கின் றனவோ என்று சந்தேகம். நான் அப்படி உட்கார்ந்திருப் பதை கயிறு பிரித்துக் கொண்டிருந்த இளம்பெண் பார்த்தாள். அவளுக்கு சிரிக்க வேண்டும் போல தோன்றியது. ஆனால், திடீரென்று சிரிப்பு பயங்கரமான கூச்சலைப் போன்ற அழுகையாக மாறியது. உம்மாவும் பார்த்துவிட்டாள். உம்மாவும் இளம்பெண்ணும் சேர்ந்து வாய்விட்டு உரத்த குரலில் கூப்பாடு போடத் தொடங்கினார்கள். வாப்பா எழுந்து வந்தார். எரிந்து கொண்டிருந்த கயிறு, பந்தம், விளக்குகள், பிரம்புகள் ஆகியவற்றுடன் சில நொடிகளில் பக்கத்து வீடுகளில் இருந்து பல வகைப்பட்ட ஜாதிகளையும் மதங்களையும் சேர்ந்த பத்து முப்பது ஆட்கள் வாசலில் கூடிவிட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் ஒரு பிடியும் கிடைக்கவில்லை. விளக்கு களின் ஒரு பெரிய அரை வட்டம் வாசலில் இருந்தது. வெண்மை நிறத்தில் கால், “பளபளா’ என்று மின்னிக் கொண்டிருந்த கறுப்பு நிறப் பாம்பு. மூச்சை அடக்கிக் கொண்டு நிற்பதற்கு மத்தியில் “அசையக்கூடாது அசையக்கூடாது’ என்று யாரோ கூறினார்கள். தொடர்ந்து யாரோ கூக்குரல் எழுப்பினார் கள். சத்தத்தைக் கேட்டு என்னுடைய மாமா வந்தார்.
நான் அசையாமல், மூச்சைக்கூட ஒழுங்காக விட முடியாமல் இருந்தேன்.
“என்ன ஜாதி?’ -யாரோ கேட்டார்கள். பாம்புகளின் இனத்தை நன்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள். கரும்பாம்பு என்ற இனத்தைச் சேர்ந்த- பயங்கர விஷத்தைக் கொண்ட பாம்புதான் என்னுடைய காலில் சுற்றியிருக்கிறது.
ஏதோ பச்சை மருந்து அரைத்துக் கலக்கப்பட்ட நீரைத் தெளித்தால் அது இறங்கிப் போய்விடும். வாப்பா சொன்னார்:
“”வேண்டாம்.”
நீரைத் தெளித்து அது என்னுடைய காலில் கடித்துவிட்டால்…?அது இறங்கி வர்றப்போ நாம கொல்வோம்.” -சிலர் கொல்வதற்குத் தயாரானார்கள். ஒரு அற்புதத்தைக் கொண்டது என்னுடைய காலில் சுற்றியிருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை. அது முழுமையாக முறுக்காமல் சுற்றியிருந்தது. அது எதற்காக என்னுடைய காலில் சுற்ற வேண்டும்? நான் வாசலில் பாய்ந்து சென்றபோது அது அங்கே இருந்திருக்கிறது. இருட்டில் சென்றபோது விளக்கை எடுத்துக்கொண்டு செல்லவில்லை. அதன்மீது கால்களை வைத்திருந்தால்…? பாம்பு கடித்து மரணமடைந்த பலரைப் பற்றியும் நான் நினைத் துப் பார்த்தேன். ஒரு ஐந்து நிமிடங்கள் கடந்தபிறகு எனக்கே தெரியாமல் அது சுற்றி இருந்ததை விடுவித்துக்கொண்டு ஆட்களுக்கு மத்தியில் அஸ்திரம் புறப்பட்டு செல்வதைப் போல ஒரு பாய்ச்சல்.
நான் மூச்சைவிட்டேன். ஏதோ பச்சை மருந்தை அரைத்து கலக்கிய நீரைக் கொண்டு வந்து கழுத்திற்குக் கீழே என்னைக் கழுவினார் கள்- பாம்பு சுற்றிய காலையும். வந்தவர்கள் எல்லாருக்கும் நெய்யப்பமும் சுடும் தேநீரும் தந்தார்கள்.
இதுதான் பாம்பிற்கும் எனக் குமிடையே இருக்கும் முதல் உறவு!
அந்த காலத்தில் பாம்பு பிடிப்பது என்பது முக்கியமான வேலையாக இருந்தது. நீர்ப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற பாம்புகளை விரட்டி வாலைப் பிடித்துத் தூக்குவேன். தலயோலப் பறம்பில் இருந்த வீட்டின் முன் பக்கத்தில் பொதுச்சாலை இருந்தது. அன்று அது வெறும் மணல் போட்ட சாலையாக இருந்தது. மழை பெய்யும்போது, ஆங்காங்கே வாய்க்கால்கள் நிறைந்து சாலையில் நீர் இருக்கும். மீன்களும். நீர் வேகமாக வற்றிவிடும். பெரிய விரால் மீன்கள் சில நேரங்களில் வழி தவறி சாலையில் நெளிந்து வரும். அந்தக் காலத்தில் வாப்பா ஒரு எலெக்ட்ரிக் டார்ச் விளக்கைக் கொண்டு வந்தார். அடர்த்தியான வட்ட வடிவ கண்ணாடியைக் கொண்டது. அதிலிருந்து மூன்று வகையான வெளிச்சம் வரும். பச்சை, சிவப்பு, மஞ்சள். அந்த விளக்கை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவும் ஏதோ பொருள் வாங்குவதற்காகவும் நான் ஒரு மாலை நேரத்தில் சந்தைக்குப் போயிருந்தேன். எல்லா கடைகளும் அங்கேதான் இருந்தன. அதிக தூரமில்லை. சந்தையில் இருந்தபோது ஒரு மழை பெய்தது. மழை நின்றதும் நான் வீட்டிற்கு வந்தபோது, வெள்ளை நிற- மணல் நிறைந்த சாலையின் நடுவில் ஒரு நல்ல பாம்பு வந்து கொண்டிருக்கிறது. நான் வேலியிலிருந்து ஒரு கடலாமணக்கு குச்சியை ஒடித்து எடுத்து பாம்பை நோக்கிச் சென்றேன். பார்த்தபோது ஒரு பெரிய விரால் மீன்!
அவனை அப்படியே பிடித்துக் கொண்டு போய் வீட்டில் உம்மாவிடம் கொடுத்தேன். அதற்குப் பிறகு நான் விரால் மீனைச் சாப்பிடுவதில்லை. அதைப் பார்க்கும் போதெல்லாம் நல்ல பாம்பு நினைவில் வந்துவிடும்.
அன்று ஒரு மதிய நேரத்தில் மழை பெய்து முடிந்தபோது, சாப்பிட்டு முடித்து பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன். வீட்டில் முன் பக்கத்தில் இருந்த பாதையில் நீர் நிறைந்திருந்தது. அங்கு ஒரு இளம் பெண் நீரில் ஒரு கூடையைக் கவிழ்த்து வைத்திருப்பதைப் பார்த்தேன். அவள் என்னிடம் சொன்னாள்:
“”இதில் ஒரு நீர்ப் பாம்பு இருக்கு.”நான் சொன்னேன்
கூடையை எடு. நான் அதை வாலைப் பிடித்துத் தூக்குறேன்.”
அவள் கூடையை மெதுவாகத் தூக்கினாள். வால் பகுதி வெளியே வந்தது. நீர்ப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு ஆகியவற்றின் வால்கள் ஊசியைப் போல இருக்கும் என்று கூறினேன் அல்லவா? சில இனத்தைச் சேர்ந்த பாம்புகளின் வால்களும் அப்படித்தான். ஆனால், நல்ல பாம்பு முதலானவையின் வால் “டங்கு’ என்று வந்து நிற்கும்! அதன் வால் ஊசியைப் போல இல்லை. திடீரென்று அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. நான் அந்த வாலைப் பிடித்துத் தூக்கி னேன். மொத்தத்தில் ஒரு மாதிரியான வெள்ளை நிறத்தில் இருந்தது. அது பாதியிலிருந்து இருந்த பகுதியை வளைத்து மேல் நோக்கி உயர்த்தி படத்தை விரித்துக் கொண்டு நின்றது.
“என் உம்மா, நல்ல பாம்பு!’
நான் அதைத் தரையில் போட்டுவிட்டு ஓடினேன்
 
 
நன்றி - சிறூகதைகள்.காம்

0 comments: