Sunday, May 18, 2014

தமிழகத்தில் காங்கிரஸை முந்திய நோட்டா

தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியைப் போல ஆனது நோட்டா. மற்ற கட்சிகளை விட அதிக அளவில் வாக்குகளை பெற்று, நோட்டா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 



இந்தியாவில் முதன்முறையாக 'நோட்டா' பொத்தான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் அறிமுகமானது. 



ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்ததை விட அதிமான எண்ணிக்கையில் இந்திய மக்கள் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர். 



வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தானாக, ’மேலே உள்ள யாரும் இல்லை’ (None Of The Above) என்பதே நோட்டாவாகும். புதிய வாக்காளர்கள், இளைய தலைமுறை, கட்சிகள் மீது பெரிய அளவில் அதிருப்தி கொண்டிருப்பவர்கள் ஆகியோர் வாக்களிக்காமல் இருப்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த பட்டியலில் வரும் மக்களின் சில பகுதியினராவது நோட்டாவை பயன்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் இதனை அறிமுகம் செய்தது. 


ஆனால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யம் அடையச் செய்யும் அளவுக்கு நாடெங்கிலும் நோட்டா பதிவாகியுள்ளது. 


நாட்டில் ஏற்கனவே கட்சிகள் எண்ண முடியாத அளவில் இருக்கும்போது, இந்த பொத்தானுக்கு வேலை இல்லை என்று நினைத்தவர்கள் எல்லாம் வாயடைத்துள்ளனர். மாற்று கட்சி என்று கூறி கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறிய கட்சிகளை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, பல வாக்காளர்கள் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர். 



பல தொகுதிகளில், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை விட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 


நோட்டாவில் முந்தியது தமிழகம் 

 
நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. பிஹார், தமிழகம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நோட்டா பதிவு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மாநில அளவில் தமிழகத்தின் மொத்த 39 தொகுதிகளில் 31 தொகுதிகளின் மக்கள் நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர். 



26 தொகுதிகள் கொண்ட குஜராத்தில், 23 தொகுதிகளில் நோட்டா பதிவாகி உள்ளது. 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 32 தொகுதிகளின் நோட்டா பதிவானது. 



இந்த சாதனையில் தமிழகம் தான் முதலிடம் பெற்றுள்ளது. முக்கியமாக நீலகிரி தொகுதியில், வாக்காளர்கள் கட்சிகளை ஒதுக்கிவிட்டு நோட்டாவுக்கு வாக்குகளை பெரிய அளவில் பதிவு செய்துள்ளனர். 



இந்த தொகுதியில் 46,559 பேர் நோட்டாவில் வாக்களித்துள்ளனர். இதேபோல, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18,053 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 


கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11,320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. 



மேலும், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை நோட்டா பெற்றது. இதற்கு அடுத்த இடத்தை தான் காங்கிரஸ் கட்சி பெற்றது. 



மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில், நாடெங்கும் உள்ள தொகுதிகளில் புதுச்சேரியில் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சதவீத அளவில் நோட்டா, கம்யூனிஸ்ட் கட்சிகளை மிஞ்சியுள்ளது. 



  • balasubramaniqan BALASUBRAMANIAN  from Mumbai
    இன்னும் பல பேருக்கு NOTA பற்றி முழுமையாக தெரியவில்லை .தெரிந்த பிறகு இன்னும் அதிகமானவர் NOTA வில் வாக்களிப்பார்கள்
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Pachaimuthu Dakashna  from Mumbai
    நோட்டா விற்கு வாக்களித்தது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழகத்தில் எல்லா தொகுதியுலுமே சராசரியாக குறைந்தது 500000 பேருக்கு மேல் வாக்களிக்கவே இல்லை. எத்தனையோ வேட்டபாளர்கள் 100000, 50000 என வாக்கு வித்தியாசத்தில் வெற்றியோ தோல்வியோ பெற்றிருக்கிறார்கள் . அப்படியானால் ஓட்டே போடாத இவர்களின் வாக்கு யாருக்கு!!!. இந்த வெற்றியோ தோல்வியோ எது உண்மையானது, நம்பகமானது.. உண்மையான வெற்றியாளர் யார்.. இந்த கேள்விக்கு வாக்களிக்க வராத மெகா அறிவு ஜீவிகள் தான் சொல்ல வேண்டும்.......
    about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (1)
    Chinnappan   Up Voted
    • Chinnappan  
      NOTA ஒரு தொகுதியில் ஜெயித்தால் என்ன நடக்கும் என்று தேர்தல் கமிசன் சொல்லட்டும்; இந்த 'மெகா அறிவு ஜீவி'களும் வந்து வாக்களிப்பார்கள்! அடுத்த தேர்தலில் எங்காவது ஒரு இடத்திலாவது NOTA ஜெயித்து இந்த நிலைமை வரத்தான் போகிறது! பொறுத்திருந்து பாருங்கள்!
      about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    NOTA-வில் விழுந்த வாக்குகளை மற்ற அரசியல் கட்சிகளுக்கு சரிசமமாக பங்கு POTA-ல் என்ன? வாக்குகள் விரயமாகுவதை தவிர்க்கலாமே!
    about 17 hours ago ·   (0) ·   (10) ·  reply (0)
    Chinnappan   Down Voted
  • eral mani  
    அரசியல் பிழைத்தால் வரும் காலம் நோட்டா செயித்தாலும் செயித்து விடும் எச்சரிக்கை . தொடக்கத்திலே இவ்வளவு பேருக்கு இது பற்றி புரிதல் இருக்கையில் வரும் காலம் இதைவிட அதிகம் வாக்கு நோட்டா பெரும். காங்கிரசை நோட்டா செயித்து விட்டதே ..
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • saravanan  from Bangalore
    நடுநிலை மக்கள், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள பெரிய அறைகூவல் இது. இதுவரை பிற அரசியல் கட்சிகள் எப்படிப்பட்ட வேட்பாளரை நிறுத்துவர் என்று கணக்கு போட்ட கட்சிகளுக்கு நோட்டா மக்கள் விடும் சவால். ஒழுங்கான வேட்பாளரை நிறுத்துங்கள். இல்லை நோட்டா இருக்கவே இருக்கிறது. நோட்டா மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்ரசாதம்
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Sundar,  from Hosur
    ஏற்கனவே திரு. ராஜ்நாத்சிங் அவர்கள் வைகோ அவர்களை வெற்றிபெற செய்யுமாறு தேர்தல் பிரச்சாரம் செய்தது பற்றி கீழ்க்கண்டவாறு ." தமிழ்நாட்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நீண்ட அனுபவமும், அப்பளுக்கட்ற நடத்தையும், சுயவாழ்வில் நல் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வரும் வைகோ அவர்களின் அருமையை இந்தமுறை விருதுநகர் மக்கள் தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங் மூலமாவது உணர்ந்துகொண்டால் கண்டிப்பாக ஏற்கனவே அவரைத் தோற்கடித்த தவறுக்கு ஒரு நல்ல பிராயச்சித்தத்தைத் தேடும்வகையில் அவரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வார்கள். பெருந்தலைவர் காமராஜரை மற்றும் வைகோ அவர்களை தலா ஒருமுறை தோல்வியுறச்செய்து ஏற்கனவே செய்த தவறுக்கு கண்டிப்பாக இது ஒரு பாவ விமோசனமாக இருக்கும்" என்று கருத்தை பதிவு செய்திருந்தேன். ஆனால் யானை தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டதுபோல் விருதுநகர் மக்கள் முக்கியமான மத்திய கேபினெட் அமைச்சராகும் வாய்ப்பிருந்த ஒரு திறமையான வேட்பாளரை ராஜ்நாத்சிங் அவர்களே விரும்பிக்கேட்டும் தேர்ந்தடுக்காமல் ஒரு பிரயோஜனமும் இல்லாத நபரை தேர்ந்தெடுத்ததன் பலனை ஐந்து ஆண்டுக்காலம் அனுபவிக்கட்டும்.
    about 20 hours ago ·   (20) ·   (6) ·  reply (1)
    eral mani · A.SESHAGIRI  · vijai   Up Voted
    Raj  · Chinnappan  · raman RAMAN  Down Voted
    • saravanan  from Bangalore
      மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மக்களை நிந்திக்காதீர்கள். விருதுநகர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் இல்லை. நான் மதிக்கும் தலைவர்களில் வைகோவும் ஒருவர். அணுஉலை எதிர்ப்பு-ஸ்பிக் ஆளை எதிர்ப்பு-கேரள எதிர்ப்பு என்று எதிர்ப்பு அரசியலை காட்டினாரே ஒழிய ஆக்கப்பூர்வமான திட்டத்தை அவர் கொண்டுவரவோ-குரல்கொடுக்கவோ இல்லை. அவரை, கம்யூனிஸ்ட் போன்ற போராளியாகத்தான் மக்கள் பார்கிறார்கள். வாழ் நாளில் அவர் விருதுநகர் மக்கள் அவர் ஜெயிக்க வழி இல்லை. அங்குள்ள சில இன மக்கள் அவரை ஜெயிக்க விடமாட்டார்கள். தேனியில் போட்டி இடாமல், விருதுநகரில் போட்டியிட்டது தவறு
      about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
      Chinnappan   Up Voted
  • sadhasivasaravanan  from Salem
    சரியானது தான் நோட்ட பலர்க்கு டாட்டா காட்டிவிட்டது.நீலகிரியில் தான் அதிகம் காரணம் மக்களுக்கு நன்றாக தெரியும் புரியும்.கடந்த ஆட்சியில் இவர்கள் செய்த சாதனைக்கு கிடைத்த பரிசு.
    about 20 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
    Chinnappan   Up Voted
  • Paramasivam Thamaraiselvan at Karaikal, India from Karaikal
    களத்தில் உள்ள நபரையோ கட்சியையோ ஏதோவொரு காரணத்தினால் பிடிக்கவில்லை என்று முடிவுக்கு வந்தவர்கள் தங்களது எதிர்ப்பை வாக்கு சாவடிக்கு வராமல் தவிர்ப்பதன் மூலம்தான் தெரிவிப்பர், ஆனால் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் தவறான மக்கள் விரோத போக்கு, பணம் படைத்த, பெரும்பான்மை சாதியை சார்ந்த மற்றும் குற்றப்பின்னணி உடைய நபர்களை பெரும்பகுதி தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது போன்றவற்றை எதிர்க்கும் மன திண்ணம் கொண்ட ரவுதிரமான போராளிகள்தான் மெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் எதிர்ப்பை நோட்டா மூலம் பதிவு செய்கின்றனர். எனவே இதனை வாக்குச்சாவடிக்கு வராதவர்கள் வரவைத்த திட்டம் என்பதை விட அரசியல் கட்சிகள் தங்களை திரித்திகொள்ள மக்களிடமிருந்தான சமிங்கை என்றே கொள்ளலாம்.
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    Chinnappan   Up Voted
  • Muthu.vadivel  from Salem
    நாடு எங்க போகுதுன்னு தெரில, எப்போ எல்லாம் சரி ஆகும்னு தெரில, ஒரு நாடு நல்ல இருக்கனும்ன நாட்டோட அரசியல்வாதி நல்லவரா இருக்கணும்னு எல்லாரும் சொல்லராங்க, நம்மல எத்தன பேர் நல்ல குடி மக்கள இருக்கொம்ங்கர ஆதங்கம் எனக்குள்ள இருந்து கிட்டே இருந்துச்சு, இப்போ நம்பிக்க வந்துருக்கு என் நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்க சிக்கரமே எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறன் பாப்போம் என்ன நடக்கும்னு
    about 21 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
    Chinnappan   Up Voted
  • Chinnappan  
    ஒரு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் NOTA வில் விழுந்தால் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல்கமிசன் தெரிவித்தால் இன்னும் அதிக வாக்குகள் NOTA வில் விழும்!

     நன்றி - த இந்து

0 comments: