Tuesday, May 13, 2014

பசுமைப் புரட்சியின் தந்தை இந்தியாவின் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய விவசாயம் பற்றிய பேட்டி

எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.எஸ்.சுவாமிநாதன் 
 

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி

 
சுதந்திர இந்தியாவின் விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் அளவுக்குக் கொண்டாடப்பட்டவரும் இல்லை; தூற்றப்பட்டவரும் இல்லை. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பரிசீலனைப் பட்டியலிலும் நோபல் பரிசுப் பரிசீலனைப் பட்டியலிலும் தொடர்ந்து அவர் பெயர் இடம்பெறுகிறது. ‘டைம்' இதழ் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற 20 பேரில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது. ஒருபுறம் பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழப்படும் அவர், இன்னொரு பக்கம் இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவர் என்ற சாபத்தையும் எதிர்கொள்கிறார். ஆட்சியாளர்கள் பலருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. இந்திய விவசாயம் - இந்திய விஞ்ஞானம் இரு துறைகளைப் பற்றியும் அவரிடம் பேசினேன். இன்றைக்கு உங்களைப் பற்றி இரண்டு கதைகள் சொல்லப்படு கின்றன. நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்? இந்திய வேளாண்மையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவராகவா? இந்தியப் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவராகவா? 


 
நீங்கள் என்னுடைய பின்னணியைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அப்பா சாம்பசிவம் பெரிய மருத்துவர். கும்பகோணத்தில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருந்தவர். அந்த மருத்துவமனையை அவருக்குப் பின் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்றே என்னுடைய குடும்பத்தார் ஆசைப் பட்டார்கள். 1954-ல் நான் டெல்லியில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தபோது, எனக்கு முன் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட வாய்ப்புகள் எல்லா வற்றையும் உதறிவிட்டுதான் உள்ளே நுழைந்தேன். அன்றைக் கெல்லாம் பலராலும் அவநம்பிக்கையோடு பார்க்கப்பட்டது விவசாய ஆராய்ச்சித் துறை. இருந்தும் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், தேச பக்தி என்றால், அதை ஏதோ ஒரு விதத்தில் காரியமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த தலைமுறை என்னுடையது. வறட்சியையும் பஞ்சத்தையும் நேரடியாகப் பார்த்துத் துடித்த தலைமுறை என்னுடையது. இந்தியாவின் பிரதமர்கள் அன்றைக்கெல்லாம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு துடித்தார்கள் என்பதை நேருவின் எழுத்துகளைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். சாஸ்திரி வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்ட காலம் அது. இன்றைக்கு அபரிமித உணவு உற்பத்திக் காலத்தில் இதையெல்லாம் அறியாதவர்கள் யாரைப் பற்றியும் எதையும் பேசலாம். நாட்டில் அன்றைக்கு இருந்த உணவுப் பற்றாக்குறையையும் ஒரு வேளாண் புரட்சிக்கான தேவையையும் யாரும் மறுப்பதற் கில்லை. அதே சமயம், ஆயிரக் கணக்கான வருஷ விவசாயப் பாரம்பரியமிக்க நாடு இது. இப்படியொரு பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடும்போது, நீங்கள் எந்த அளவுக்கு நம்முடைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள்? 


 
ஒரு ஆராய்ச்சியாளன், இருக்கும் ஆதாரங்களைத் தொடாமல் தன் ஆராய்ச்சியைத் தொடங்க முடியாது. அது போதாதபோதுதான் புதியவற்றை நோக்கி நகர்கிறான். புதிய ரகப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான். ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் ஏன் நமக்குத் தேவைப்பட்டன என்றால், அவைதான் நம் தேவையைப் பூர்த்திசெய்ய வல்லவையாக இருந்தன. ஒரு டன் நெல்லை உற்பத்திசெய்ய 20 கிலோ நைட்ரஜனும் 15 கிலோ பாஸ்பரஸும் வேண்டும். செயற்கை உரங்கள் என்றால், இது ஒரு மூட்டை போதும். இயற்கை உரங்கள் என்றால், வண்டி வண்டியாக வேண்டும். இன்றைக்கும் எரு நல்ல உரம்தான். ஆனால், வீட்டுக்குப் பத்து மாடுகள் வளர்ப்பது எத்தனை சிறு விவசாயிகளுக்குச் சாத்தியம்? அடிப்படையில் இந்த மனோபாவம் மோசமானது. எல்லாத் தரப்பினருக்கும் அறிவியலும் வளர்ச்சியும் மாற்றமும் வேண்டும்; விவசாயிகள் மட்டும் அப்படியே அன்றைக்கிருந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது. தபால் அனுப்புவதில்கூடத்தான் நமக்குப் பாரம்பரியம் இருக்கிறது - புறாவிடம் கொடுத்தனுப்பிய பாரம்பரியம். ஏன் நமக்கு செல்போன்கள்? அப்படி என்றால், இந்திய விவசாயிகளிடத்தில் விஞ்ஞானிகள் கொண்டுவந்த பசுமைப் புரட்சியில் தவறே இல்லை என்கிறீர்களா? 


 
இந்தப் பசுமைப் புரட்சி என்கிற சொல்லாடலிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்றைக்கு நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்ய நம்முடைய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்கேற்ற புதிய ரகப் பயிர்களையும் கூடுதல் மகசூல் தரும் சாகுபடி முறைகளையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளான நாங்கள் போராடினோம். நாங்கள் கண்டறிந்தவற்றைப் பரிந்துரைத்தோம். அவ்வளவுதான். அரசாங்கம் அதை நம் விவசாயிகளிடம் எடுத்துச்சென்றபோது, ஒரு கோடி டன்னாக இருந்த நம்முடைய உணவு உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயர்ந்தது. இந்திரா காந்திதான் முதலில் அதைக் கோதுமைப் புரட்சி என்றார். கோதுமை மட்டும் அல்லாமல் நெல், பயறு வகைகள் எல்லாவற்றிலும் கூடுதல் உற்பத்தியைத் தரும் ரகங்களை நாங்கள் கொண்டுவந்திருந்ததால், வில்லியம் காட் என்ற அமெரிக்கர் அதைப் பசுமைப் புரட்சி என்றார். எல்லோரும் அதைப் பிடித்துக்கொண்டார்கள். உண்மையில், புதிய ரகப் பயிர்களிடமோ, நவீன வேளாண் முறையிலோ தவறு இல்லை; தவறு என்பது அவற்றை மனிதர்களாகிய நாம் பயன்படுத்திக்கொண்ட முறையில்தான் இருக்கிறது; மனிதனின் பேராசையில் இருக்கிறது. நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி.அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன் பாட்டைக் குறிப்பிடுகிறீர்களா? 


 
ஆமாம். எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. இவ்வளவுதான், இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அந்த எல்லையை மீறும்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். விவசாயிகள் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொடுக்கும்போது அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுப்பது கடமை அல்லவா? 


 
உண்மைதான். விவசாயிகளிடத்தில் இவற்றையெல்லாம் எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்; கூடுதலாகப் போனால் என்னென்ன அபாயங்கள் நேரும் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுக்க நம்முடைய வேளாண் துறை ஒரு பெரும் இயக்கத்தை நடத்தியிருக்க வேண்டும். அதேசமயம், எல்லா விவசாயிகளுமே தெரியாமல்தான் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல மாட்டேன். இந்தப் பயன்பாட்டில் அறியாமையும் இருக்கிறது; பேராசையும் இருக்கிறது. இந்தியாவுக்கு மரபணு மாற்றப் பயிர்கள் தேவைதானா? 

 
தேவை. ஆனால், அவற்றின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன? மக்களிடத்தில் அவை கொண்டுசெல்லப்படும்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறதா என்பதை யெல்லாம் உறுதிப்படுத்த நமக்கு ஒழுங்குமுறைக் கட்டுப் பாட்டு அமைப்பு தேவை. முதலில் அது உருவாக்கப்பட வேண்டும். 


ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு இந்தியாவில் சாலையோரக் கடைகளில்கூட மரபணு மாற்றக் காய்கறிகள் விற்கப்படுகின்றன. விற்பவர்-வாங்குபவர் இரு தரப்பினருக்குமே அவை மரபணு மாற்றப் பயிர்கள் என்பது தெரியவில்லை. மக்கள் பரிசோதனைக் கூட எலிகளாக்கப்படுகிறார்கள்? 


 
இது தவறு. அரசின் அமைப்புகள் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதி அளிக்க வேண்டும். 


சரி, ஜனநாயகத்துக்கு விஞ்ஞானிகளின் கடமை என்ன? 


 
ஒரே கடமை. அது புதிய ரகப் பயிர் கண்டுப்பிடிப்பாக இருந்தாலும் சரி; கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை கண்டுபிடிப்பாக இருந்தாலும் சரி, அது மக்களின் நல்வாழ்வுக்கான பணி. ஆனால், மக்கள் நலனுக்கு எதிரான விஷயங்கள் அவரவர் துறை களில் நடக்கும்போது பெரும்பாலும் இந்திய விஞ்ஞானிகள் ஏன் வாய்மூடிகளாக இருக்கிறார்கள்? அரசாங்கம் சொல்லித் தான் விஞ்ஞானிகள் ஒரு விஷயத்தில் இறங்குகிறீர்கள், நல்ல நோக்கத்துக்காகத்தான் அதைச் செய்கிறீர்கள் என்றாலும், காலப்போக்கில் அதன் விளைவுகள் தீமையை நோக்கிச் செல்லும்போது அதை மக்களிடம் தெரிவிப்பது கடமை இல்லையா? 


 
அப்படி இல்லை. விஞ்ஞானிகள் எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறார்கள். ஆனால், பொதுவில் அவர்கள் அரசாங்கத்தைச் சார்ந்து இருப்பதை நாம் உணர வேண்டும். இந்திய விஞ்ஞானிகளின் பெரும்பாலான ஆராய்ச்சிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கங்கள்தான் வழி நடத்துகின்றனவா? 


 
எல்லா நாடுகளிலுமே பன்னாட்டு நிறுவனங்கள் பணம் பண்ணவே ஆசைப்படுகின்றன. எல்லா நாடுகளிலுமே நாட்டுக்காக உழைக்கும் விஞ்ஞானிகள் நாட்டின் நலனையும் தேவையையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் விஞ்ஞானம் தீர்மான சக்தி இல்லை. அரசியலும் பொருளாதாரமுமே தீர்மான சக்திகள். நவீன வேளாண் முறைக்கு மாறி அரை நூற்றாண்டு ஆகும் சூழலிலும்கூட, இந்திய விவசாயம் மெச்சக்கூடிய நிலையில் இல்லை. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும் விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கிறது, வேளாண் சாகுபடிப் பரப்பளவு வீழ்கிறது, விவசாயம் கொஞ்சம் கொஞ்ச மாக அழிந்துகொண்டிருக்கிறது... இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்? 


 
இந்தப் பிரச்சினைகளெல்லாம் விஞ்ஞானத்தினால் ஏற்பட்டவை அல்ல. அரசியலால் ஏற்பட்டவை. அரசாங்கங்கள் பின்பற்றும் கொள்கைகளால் ஏற்பட்டவை. விஞ்ஞானத்தையும் அரசியலையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதே சமயம் ஒரு குடிமகனாக இந்திய விவசாயத்தைப் பற்றி எனக்கும் கவலைகள் இருக்கி்ன்றன. நான் இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல் இல்லை. வேளாண் ஆணையம் வேண்டும் என்று நான் என்னென்ன விஷயங்களை அன்றைக்குச் சொன்னேனோ, அதைத்தான் இன்றைக்குப் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


 வேளாண் பொருட்களுக்கான விலை நிர்ணயம் என்பது இப்போது உற்பத்திச் செலவு + 15% என்று இருக்கிறது. இதை உற்பத்திச் செலவு + 50% என்று மாற்றுவதில் நாம் சீர்திருத்தத்தைத் தொடங்க வேண்டும். இந்திய விவசாயிகளின் பங்கு வெறுமனே வயலோடு முடியாமல், சந்தையும் அவர்கள் கைகளில் வர வேண்டும். விவசாயம் ஒரு கூட்டுத்தொழிலாக மாற வேண்டும். இந்திய விவசாயிகள் வளம்குன்றா வேளாண்மைக்கு மாற வேண்டும். இந்திய விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்துவிட நம்மால் முடியும். - சமஸ், தொடர்புக்கு: [email protected]
 
 • Ramachandran Ramasamy Graduate teacher at TN GOVT from Kumbakonam
  நாட்டுக்கு பொருத்தம் நாமே நடத்தும் கூட்டு பண்ணை விவசாயம் !! என்றொரு திரையிசை பாடல் வரிகள் அன்னாரது எண்ணங்களை வெளிபடுத்துவாக உள்ளது !! வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் ,உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களையும் ,பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ,அதனை எந்தளவு பயன்படுத்த வேண்டும் ! எதற்கு மேல் பயன்படுத்த கூடாது ,அப்படி பயன்படுத்தினால் ஏற்ப்படும் விளைவுகள் மனிதனின் உடற்கூறுகளை எந்தளவு பாதிக்கிறது ,எதிர்கால சந்ததியினரை எப்படி பாதிப்புக்கு உள்ளாக்கும் என்னும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த தவறிவிட்டோம் என்றே எண்ணுகிறேன் .பல்வேறு பண்புகளை உடைய வெவ்வேறு ரகங்களை உருவாக்குவதில் நமது விஞ்ஞானிகள் பாராட்டத்தக்க பணி புரிந்துள்ளனர் என்பதில் மாற்றுகருத்து இல்லை !!
  about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
 • Vasudevan Venugopal  
  பசுமைப் புரட்சியின் தர்ம சங்கடமான அங்கங்களையும் கூட நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் விவரித்து, தடைக் கற்களைத் தவிர்க்கும் வழிகளைக் காட்டிய எம்.எஸ்.சுவாமிநாதனுடன் சமஸ் கண்டிருப்பது ஒரு பயனுள்ள நேர்காணல். தமிழ் இந்துவுக்குப் பாராட்டுக்கள்.
  about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • Dhasarathan  from Richmond
  சமஸ் அவர்களின் கூர்மையான கேள்விகளுக்கு மிகச் சரியாக விடை அளித்தார் டாக்டர் சுவாமிநாதன் அவர்கள்! வாழ்த்துக்கள்!!
  about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • VKV.RAVICHANDRAN Vanchinathan  
  நான் ஒரு விவசாயி என்ற வகையில் Dr .MS சுவாமிநாதன் அவர்களுடைய அருமையான பேட்டியை அளித்தமைக்கு இந்து பத்திரிக்கைக்கு விவசாயிகளது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 1960 களில் நமது மக்கட் தொகை 45 கோடி ஆகும்.இன்று நமது மக்கட்தொகை 125 கோடியை தாண்டிவிட்டது. ஆனால் அந்த காலகட்டத்தில் நம் மக்களுக்கு உணவளிக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலை இருந்து வந்தது.நாம் அதுவரை பாரம்பரிய ரகங்களைத்தான் பயிரிட்டுவந்தோம். ரசாயன உரங்களை பற்றியோ பூச்சிக்கொல்லி கள் பற்றியோ அப்பொழுது தெரியாது. 45 கோடி ஜனங்களுக்கு உணவளிக்க முடியாத சூழ்நிலையில் தான் அதிக விளைச்சல் தரக்கூடிய கோதுமை ரகங்களும் நெல் ரகங்களும் வெளியிடப்பட்டன. Dr .MS .சாமிநாதன் அவர்கள் கூறுவது போல அதிக ரசாயன எரு போட்டால் அதிக விளைச்சல் பெறலாம் என்ற தறான கருத்து நிலவியதாலேயே இன்று நாம் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளுக்கு காரணம். இதை உணர்ந்து செயல் பட்டால் நிச்சயம் விவசாயம் சிறந்து விளங்கும். நம் நலனுக்காக பாடு படும் வேளாண் விஞ்ஞானிகளின் உழைப்பிற்கு நன்றி செலுத்துவது நமது கடமை ஆகும்.
  about 24 hours ago ·   (4) ·   (1) ·  reply (0)
  Ram Ram  Down Voted
 • Ram Ram  from Bangalore
  நடந்தது என்னவோ நாசமா போச்சு...... (பசுமை புரட்சி) நடக்க ப் போவது எதுவோ நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன், அண்ணலின் பேச்சை கேட்டு பேராசை எதுவும் இல்லாமே பொறுப்பா மரபுப்புரட்சி ஐ ஜாம் ஜாம்னு ஆரம்பிச்சுட வேண்டியது தான்.
  a day ago ·   (4) ·   (1) ·  reply (0)
  Ram Ram  Up Voted
 • Raajaangam  
  தெளிவற்ற பொறுப்பற்ற பதில்கள்.
  a day ago ·   (7) ·   (10) ·  reply (0)
  Ram Ram  Up Voted
 • லிங்கசாமி லிங்கசாமி  from Mumbai
  விஞ்ஞான விவசாயம்,வீரிய ஒட்டு ரகங்கள் இல்லை என்றால் இன்று 120 கோடி மக்களின் பசி போக்க முடியாது. மரபணு மாற்றுப் பயிர்களில் நன்மையும் உண்டு; ஆபத்து கூடவே உண்டு. நுகரும் பொழுதே வருவது ஒரு ஆபத்து. இன்னொன்று எதிர் காலத்தில் அடுத்த சந்ததியைத் தாக்கக் கூடியது.ஆக எது வேண்டும் எது வேண்டாமென தீர்மானிக்க ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு வேண்டுமென விஞ்ஞானி எம்.எஸ்.எஸ். சொல்வதற்கு அரசு சிரத்தை எடுக்க வேண்டும். மண்ணும்,நீரும் மாசு படாமல் இருப்பின் அவை தருவன எல்லாம் நல்லதாய் இருக்கும்.
  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • செட்டி.ஜெ.ராஜன்,மதுரை Setty  from Chennai
  ''நடந்தது பசுமைப் புரட்சி அல்ல. பேராசைப் புரட்சி'' என்றால் அதற்கு யார் காரணம்..? ''நவீன வேளாண்முறையை மனிதன் பயன்படுத்திக்கொள்ளும் முறையில் பேராசை இருக்கிறது,அதனால் தலைமுறைக்குமான பாதிப்பு ஏற்பட்டு விடும்'', என்று விஞ்ஞானிகள் முறையிட வேண்டிய இடம், தங்களை இதற்காக யார் நியமித்தார்களோ அவர்களிடத்தில் அல்லவா? அப்படி சொல்லி இருந்தால் நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்ய துடித்த தலைவர்கள்,.தன் நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாக இடம் கொடுத்து இருக்க மாட்டார்கள் அல்லவா? நறுக்கு தெறித்தார் போன்ற கேள்விகளுக்கு சுவாமிநாதன் அவர்கள் மழுப்பலாகவே பதில் தெரிவித்து இருந்தார்..விஞ்ஞானத்தையும்,அரசியலையும் வேறுபடுத்தி பார்க்கத் தெரிந்த சுவாமிநாதன் அவர்கள் கடைசியில் ஒரு சராசரி குடிமகனைப் போல அரசாங்கத்திடமே விவசாயப் பிரச்சனைகள் தீர வேண்டுகோள் வைப்பது,மறுமலர்ச்சியை ஏற்படுத்தி விடலாம் என்று கூறுவதை கேட்க சங்கடமாக இருக்கிறது..ஒரு பழுத்த விவசாய விஞ்ஞானியிடம் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லையே..!? பாதையற்ற நிலத்தில் நிற்க வைத்துவிட்டாரோ.? ஆனால் ஒன்று அவரது அனுபவத்தை வணங்குகின்றேன்..!---செட்டி.ஜெ.ராஜன்,மதுரை
  a day ago ·   (4) ·   (0) ·  reply (0)
  Ram Ram  Up Voted
 • Palanivel Koothar Tamil Nadu # Electrical Engineer # Rationalist from Kozhikode
  மிகச்சரியான கூற்று..., இந்திய விவசாயிகளின் பங்கு வெறுமனே வயலோடு முடியாமல், சந்தையும் அவர்கள் கைகளில் வர வேண்டும்.
  a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
 • K.NAVUKKARASAN  from Kumar
  வேளாண்விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களிடம் கேட்கப்பட்டவை கேள்விகள் அல்ல ஒவ்வொன்றும் ஏவுகணைகள். சமஸ் அவர்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள். பதில்களில் உண்மையும் கவலையும் பளிச்சிட்டது. 19ஆம் நாற்றாண்டைப் பஞ்ச நூற்றாண்டு என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பசி தின்றது. பொருளியல் வள்ளுநர் மால்தஸ் அவர்கள், "மக்கள்தொகைப் பெருக்கம் பெருக்கல் விகிதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் இருக்கும்" என்று எச்சரித்தார். நாம் நம் வேளாண்விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் உழைப்பால் பசியை வென்றுவிட்டோம். ஆனால், இந்திய விவசாயிகள் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதில் காட்டும் தாராளத்தைக் கட்டுப்படுத்துவது யாருடையப் பொறுப்பு? கி.நாவுக்கரசன்,இராணிப்பேட்டை.
  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • pandaram  from Kumar
  எந்தப்புரட்சி வந்தேன்ன உழவர்கல் nilaiyil maatram ethuvum illaiya
  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • Thangadurai  from Mumbai
  இந்த அறிவியல் மாமேதை மனிதனின் பசிக்கு தற்காலிக பசி போக்கும் விஷத்தை உணவாக அளித்தது தவறில்லை என்று சொல்கிறார். நம் பாரம்பரிய இயற்கை விவசயமுறையே வெளிநாட்டு கொள்ளைகார கும்பல்களிடம் அளித்தவர்களே இவர்கள் தானே. வெட்கமில்லாமல் திரிகிறார்கள் தான் அறிவியல் விஞ்ஞானி என்று சொல்லிக்கொண்டு. விஞ்ஞானம் என்பது இயற்கையோடு இணைந்து இயற்கை சூழ்நிலை பாதிக்காமல் இருக்க செய்வதேயாகும். இவர்கள் செய்வது விஞ்ஞானம் இல்லை பண வேட்டை மட்டுமே!
  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • shanthi Elangovan  
  அன்றைய தேவைக்கேற்ப செயல்பட்டார். உண்மைதான். ஆனால் இன்று அதன் பிரயோகம் தவறான மார்க்கத்தில் ஆபத்தாக நிகழும்போதும் இவரது மனம் வருந்துவது போல தெரியவில்லையே...இப்போது சூழ்நிலைக்கு மருந்து எதாவது உள்ளதா இவரிடம்?கத்தியை பசித்த குழந்தையின் கையில் பழத்தோடு தரும்போதே அதன் பயன்பாடு முறைகளை தெளிவுற எடுத்து கூறாத அன்னை உண்டா? குழந்தை காயம் பட்டும் மனம் குற்ற உணர்ச்சியில் வருந்தி மருந்து தேடாமல் தன்மேல் தவறில்லை என்பதுபோல் பேசுவது பொறுப்பற்றதாக படுகிறது.அபிமன்யு கதை தான்..உள்ளே விட்ட காலை எடுக்கத்தான் தெரியவில்லை
  a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
 • Balamurugan Balamurugan Proprietor at Renaissance Automation from New Delhi
  பதவியில் உள்ளபொழுது அதை காப்பாற்றிக்கொள்ள மனசாட்சியை அடகுவைக்க வேண்டியது. பதவி போனபின் மனசாட்சி பேசுகிறதா? மானங்கெட்ட பிழைப்பு!
  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • Chinnappan  
  கடந்த காலத்தில் விவசாயத்தில் நடந்த சீரழிவிற்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இவரது நிலைபோலும்; பெருமை மட்டும் இவருக்குச் சொந்தம்! ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத்ததாம் ... அந்தத் தொனி - இவரது பேட்டியில் கேட்பதை எல்லாரும் புரிந்துகொண்டால் சரி!
  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  Ram Ram  Up Voted
 • P.Jothi  from New Delhi
  நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி anaivarum oppukkolla vendiya unnmai. parambariya vithaikalai azhithathu vinnanikal alla perasai piditha vivasaikale athan thimaiyai unnathatha arase
  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • Sri  from Mumbai
  நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி.... நல்ல விளக்கம் .....
  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • S.Periyasamy  from Ratmalana
  உண்மையில் உலகம் முழுவதும் பசுமைப் புரடச்சியினால் பயனடைந்தது. இன்று பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பட்டிணி இல்லாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் இந்த பசுமைப் புரட்சிதான் காரணம். பேராசிாியா் அவா்கள் குறிப்பிட்டதைப் போன்று எங்கள் விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற வேண்ம், கூடிய இலாபம் பாா்க்க வேண்டும் என நினைத்து அளவிற்கதிகமாக உரங்களையும், நாசினிகளையும் பயன்படுத்தியமையே சூழல் மாசடைய முக்கிய காரணமாகும். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் இந்த விவசாயிகளிற்கு முறையான விாிவாக்க கல்வி வழங்கப்படாமை ஆகும். அப்படியே தொிந்து கொண்டாலும் அதிக அக்கறை எடுப்பதில்லை. இதனை இன்னொரு விதத்தில் குறுப்பிடுவதாயின் புகைத்தலினால் ஏற்படும் தீமைகளை அறியாமலா புகைக்கின்றனா். தொிந்தே பிழை செய்கின்றனா். அது போன்றதே தேவையில்லது உரங்கரளயும், நாசனிகளையும் பயன்படுத்துவதும்.
  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • hari  
  அனைவராலும் நசுக்கப்படும் ஓர் இனம் பாவப்பட்ட விவசாயிகள் தான்
  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • Mauroof, Dubai  from Dubai
  நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி! பேராசைப் புகழ் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி. ரொம்ப நல்லவரா பேசுறாரே! ஐயகோ, இவருக்கு பதில் அளிக்க அமரர். நாம்மாழ்வார் போன்ற ஒருவர் இல்லையே! அனால், பேட்டியில் இவர் கூறியிருக்கும் சிலவற்றை மறுப்பதற்கும் இல்லை.
  a day ago ·   (16) ·   (4) ·  reply (0)
  Chinnappan  · raajaa  · Raajaangam  · Ram Ram  Up Voted
  K.NAVUKKARASAN   Down Voted
 • விமலா  
  விவசாயம் ஒரு கூட்டுத்தொழிலாக மாற வேண்டும் என்பது நடை முறை சாத்தியமா என்பதே கேள்வி ? கூட்டு பண்ணை முறைக்கு போக இந்திய விவசாயிகள் தயாராக இல்லை என்பதே உண்மை -நிலங்கள் மேலும் மேலும் உடைக்கப்பட்டு சிறு அளவுக்கு போகின்றன- அங்கெ பேரு அளவு விவசாயம் சாத்தியம் இல்லாமல் போகிறது --மேலும் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறிக்கொண்டு இருக்கும் காலத்தில் இனி பெரும் கேள்விகள் நம் முன் நிற்க போகின்றன - சிறு சிறு நிலங்கள் -பெரிய எண்ணிக்கை விவசாயம்- வானம்பொஇது விட்ட நிலை- தேக்கத்தை உடைக்க பெரும் திட்டங்கல்தேவை- இவரை போன்ற விஞ்சானிகள் தேவை அதிகம்-- விமலா வித்யா
  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • ராகம் Thalam  from Chennai
  ஆம். சுவாமிநாதன் அவர்கள் சொல்வது போல் விஞ்ஞானத்தின் சில உண்மைகளை சொல்வதற்கு அரசியல் மற்றும் சமூகக்காரணங்கள் வழிவிடுவதில்லை. உதாரணமாக பெண்களுக்குச் செய்யப்படும் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் 6% மீண்டும் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது என்பது அந்த அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை மக்களிடம் விளக்கி அவர்களை சம்மதிக்க வைக்கவேண்டும் என்று மருத்துவர்கள் விரும்பினாலும் அரசியல் மற்றும் சமூகக் காரணங்களுக்காக அதைச் சொல்லாமலேதான் இத்தனை வருடங்களும் இத்தனை அறுவை சிகச்கிச்சைகளையும் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அந்தத் திட்டத்தின் பயன் அளவிடமுடியாதது. ஒன்றிரண்டு தனிப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றாலும் ஒட்டு மொத்தமாக நாட்டிற்கு பயனைத்தான் அளித்தது. இப்பொழுது மக்களிடையே கல்வித்தரம் உயர்ந்ததினால் அறுவை சிகிச்சைக்குப் பின் கருத்தரித்தால் வழக்குப் போடுகிறார்கள். மருத்துவர்களும் அந்த சிகச்சையை குறித்து விளக்கி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதுபோலதான் எந்த அறிவியல் முன்னேற்றத்திற்கும் நேரும்.
  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  john.j   Up Voted
 • Ravi  from New Delhi
  சமஸ் அவர்களின் கூர்மையான கேள்விகளுக்கு மிகச் சரியாக விடை அளித்தார் டாக்டர் சுவாமிநாதன் அவர்கள்! வாழ்த்துக்கள்!!
  a day ago ·   (0) ·   (1) ·  reply (0)
  Ram Ram  Down Voted
 • ரமேஷ்  from Dindigul
  விவசாயிகளுக்கு சரியான வழிகாட்டுதலை வேளாண்மைத்துறையும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களும் தர தவறியதே இந்த நிலைக்கு காரணம். விவசாயிகளை நேரடியாக கிராமங்களுக்கு சென்று ஆலோசனைக்கூறும் வேளாண் அதிகாரிகள் மிகவும் அரிதாகிக்கொண்டே வருகின்றனர். விவசாய்கள் எந்த விதையை, உரத்தை, பூச்சிமருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பன்னாட்டு நிறுவனங்களும் வியாபரிகளுமே தீர்மானிக்கின்றனர். துரதிஷ்டவசமா அதனை கட்டுபடுத்தும் நிலையில் விவசாய கொள்கைகள் இல்லை. வேளாண் கல்லூரியில் படித்ததை வைத்து கொண்டு, விவசாய துறையில் குப்பை கொட்டுபவர்களுக்கும், விவசாயத்தின் யதார்த்த நிலைக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம். உரம் மட்டும் பூச்சிமருந்து பயன்பாட்டிற்க்கு கடுமையான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். போட்டி மனபான்மையுடன் விவசாயிகள் செயல் படுவதது நல்லதே. ஆனால் அவர்கள் பின்பற்றும் நடைமுறை சரியா தவறா என்று தெளிவுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இவ்வளவு செயற்கை உரங்களை பயன்படுத்தியும் நம் நாட்டின் நெல் மற்றும் கோதுமை பயிர்களின் Productivity, சீனா மற்றும் பல முன்னேறிய நாடுகளை விட குறைவு என்பதும் வருத்தபடவேண்டிய விஷயம்
 நன்றி - த ஹிந்து

0 comments: