Wednesday, August 08, 2012

வேதாந்தம் - சுஜாதா - சிறுகதை

பாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி


- தொண்டரடிப்பொடி


ஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலிகள் இருந்தன. கீழ உத்தர வீதியில் இருந்த நரசிம்மாச்சாரி என்னும் இந்தி வாத்தியாருக்கு வேலை போய்விட்டது. ரங்கு அவருக்கு ‘‘ஓய் இனிமே ‘லட்கா, லட்கி, யஹ் கலம் ஹை, தவாத் ஹை’ன்னு எதாவது குதிரை ஒட்டினீர்… கையை ஒடிச்சுருவா. பேசாம கொஞ்ச நாளைக்கு தொன்னை தச்சுண்டு, வாழைப்பட்டை உரிச்சுண்டு இரும். கலகமெல்லாம் அடங்கறவரைக்கும் லீவு எடுத்துண்டு ஆத்திலயே இரும்!’’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினான்.
‘‘என்னடா ரங்கு! ஜீவனத்துக்கு எங்கே போவேன்?’’ என்று அழாக் குறையாகக் கேட்டார். நரசிம்மாச்சாரிக்கு இந்தி தவிர வேறு எதுவும் சொல்லித்தரத் தெரியாது. இவருக்கு முன் இருந்த பாச்சா இந்தி எதிர்ப்பை எதிர்பார்த்துச் சட்டென்று மேத்தமட்டிக்ஸ§க்கு மாற்றிக் கொண்டார். சாரியை வாத்தியாராக வைத்துக்கொள்வதே சலுகைதான் என்று ஹெட்மாஸ்டர் சொன்னாராம். ரொம்ப ரொம்பக் கிட்டப்பார்வை. பகலில் பசுமாடு தெரியாது. பூதக்கண்ணாடி போன்ற சோடாபுட்டிக் கண்ணாடி போட்டும் புத்தகங்களை முகத்துடன் தொட்டுக் கொண்டுதான் படிக்க முடியும். பையன்கள் விஷமம் செய்தால் பொதுவாக அந்த திக்கைப் பார்த்து அதட்டுவார். யார் என்று அவருக்குத் தெரியவே தெரியாது. ‘‘அங்க என்னடா சத்தம்?’’ என்று மட்டும் கேட்பார். விஷமம் செய்யும் மாணவர் களைக் கிட்டத்தில் வந்தால்தான் அடிக்க முடியும். அவர்கள் சற்று துரத்தில் நின்றுகொண்டே சமாளிப்பார்கள். வீட்டில் கஷ்ட ஜீவனம்.

நான் அப்போது சிவில் ஏவியேஷனில் ஏ.டி.சி. ஆபீஸராக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்திருந்தேன். தற்காலிகமாகத் திருச்சியில் போஸ்டிங். ஸ்ரீரங்கத்திலிருந்து செம்பட்டுக்கு தினம் ஜீப்பில் செல்வேன்.இந்தி எதிர்ப்பால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி லீவு விட்டிருந்தார்கள். இந்தி வாத்தியாரை வேலை நீக்கம் செய்தாகி விட்டது என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டியிருந்தது. ‘இல்லையேல், பள்ளி கொளுத்தப்படும். எச்சரிக்கை!’ என்று போராட்டக்குழு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டக்குழுவில் ஸ்ரீரங்கத்து மூஞ்சிகள் யாரும் இல்லை. அது எதோ அந்நியப் படையெடுப்பு போல. எப்ப வருவார்கள், எப்பப் போவார்கள் என்று சொல்ல முடியவில்லை!‘‘பாவம்டா நரசிம்மாச்சாரி. எதாவது பண்ண முடியுமா பாரு… ஏதாவது உங்க ஆபீஸ்ல கிடைக்குமா பாரு.’’
‘‘இந்தி வாத்தியாருக்கா? ஏரோட்ரோம்லயா… என்ன விளையாடறியா?’’

ரங்கு என்னிடம், ‘‘நீ வேணா வேதாந்தம் கிட்ட சொல்லிப் பாரேன். உனக்கு ஃப்ரெண்டுதா&ன? ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி!’’
வேதாந்தம், ஸ்ரீரங்கத்தின் ஆர்.எஸ்.எஸ். சாகையின் தலைவன். அந்தக் கால ஆர்.எஸ்.எஸ். பற்றி கொஞ்சம் சொல்கிறேன். ஒரு காலத்தில் என்னை ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடந்தன. காலேஜில் கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்தால் நிறைய மார்க் போடுகிறார் என்று கேள்விப்பட்டேன். நான் கெமிஸ்ட்ரியில் வீக். அதனால் ஒருநாள் போய்த்தான் பார்க்கலாமே என்று காலை முனிசிபல் லைப்ரரி பக்கத்தில் – இப்போது அதை நேத்தாஜி சாலை என்று சொல்கிறார்கள் – போனால் மைதானத்தில் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் கட்டளைகளாக இருந்தன. பையன்கள் காக்கி டிராயர் அணிந்துகொண்டு ஒல்லிக்கால் தெரிய தய்னா பாய்னா பண்ணிக் கொண்டிருந்தார்கள் ‘நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமி’ பாடினார்கள். சிலர் கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சில தலைவர்களுக்கு விசில் இருந்தது.மாமா மாமாவாக உள்ளவர் களெல்லாம் பனியனும் தொப்பை மேல் அரை டிராயரும் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். அதனால் நான் வரிசையிலிருந்து நீக்கப்பட்டேன். மேலும் அதிகாலையில் எழுந்து போவது சிரமமாக இருந்தது. ஏனோ பாட்டியும் நான் சங்கத்தில் சேருவதை அங்கீகரிக்கவில்லை!வேதாந்தம் இப்போது பார்த்தாலும் ‘‘ஆர்.எஸ்.எஸ்-ல சேராம டபாச்சுட்ட பாரு…’’ என்று விசாரிப்பான். அவன் வந்தால் ஒளிந்துகொள்வேன்.இப்போது நரசிம்மாச்சாரிக்காக வேதாந்தத்தை பார்க்கப் போக வேண்டியிருந்தது.‘‘இந்தி வாத்தியாரை பள்ளிக் கூடத்தை விட்டு டெம்பரரியா நீக்கிட்டா வேது. பாவம் ரொம்பக் கஷ்டப்படறேர். அவரைக் காப்பாத்த வேற வழியிருக்கா?’’ என்று கேட்டேன்.அவன் யோசித்து, ‘‘நரசிம்மாச்சாரிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’’‘‘சும்மா… மனிதாபிமானம்தான்!’’‘‘மனிதாபிமானமா… இல்லை அவாத்தில் மூணு பெண்ணு இருக்கே, அதில ஏதாவது…’’‘‘சேச்சே நான் அவாத்துப் பக்கம் போனதே இல்லை. அவள்ளாம் கறுப்பா சேப்பான்னுகூட தெரியாது!’’ என்றேன்.‘‘எல்லாம் சேப்பு. பாக்க நன்னாவே இருக்கும்பா. ஒண்ணு பண்றேன்… தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஒரு வியக்தி என்னைப் பார்க்க வருவார். அவர்கிட்ட சொல்லி பிரைவேட்டா ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். எதுக்கும் சாரியை இந்தில எதும் உளறாம இருக்கச் சொல்லு. ஊரே கொல்லுன்னு போச்சு. அவனவன் கர்ச்சீப்பை தலைல கட்டிண்டு அரியலூர் வரைக்கும் போய் ரயில்வே ஸ்டேஷன்லாம் இந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிச்சுட்டு வரான். ஒரு ஸ்டேஷன் அழிச்சா நாற்பது ரூபாயும் பொட்டலமும் தராங்க. நான்கூட பிக்ஷாண்டார் கோயிலுக்கு தார் டின்னோட போ&னன். அதுக்குள்ள யாரோ அழிச்சுட்டான்!’’
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அங்கம் அது. மைய அரசின் அலுவலகங்களில் இந்தியில் எழுதியிருப்பதை தார் பூசி அழிப்பது. அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ரயில்நிலையங்களிலும் கிடைத்த அத்தனை போர்டுகளையும் அழித்து ரோடு போட தார் இல்லாமல் பண்ணிவிட்டார்கள். இனிமேல் அழிக்கவேண்டுமானால் புதுசாக போர்டு எழுதினால்தான் உண்டு என்று பண்ணிவிட்டார்கள். ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று மதில் எல்லாம் எழுதி ரங்கராஜா டாக்கீஸ் ‘அன்னையின் ஆணை’ பட போஸ்டர் ஒட்ட முடியாமல் – இடமே இல்லாமல் போய்விட்டது.
ஸ்ரீரங்கத்தில் பெண்கள்தான் அதிகம் இந்தி படித்தார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருச்சிக்கு காலேஜ் அனுப்பப்படாத பெண்கள் கல்யாணத்துக்குக் காத்திருக்கும்போது தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ், டைப் கிளாஸ் இவற்றுடன் இந்தி கிளாஸ§ம் போய் வந்தனர். அதற்கான சான்றிதழ்களை இந்தி பிரசார சபா கொடுத்துவந்தது. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று எம்.ஏ. லெவல் வரைக்கும் படிக்கலாம். இந்த பரீட்சைகள் எல்லாம் ஒத்திப் போடப்பட்டிருந்தன. திருச்சி கெயிட்டி, ஜூபிடர் போன்ற தியேட்டர்களில் இந்திப்படம் காண்பிப்பதை நிறுத்தி ‘நீச்சலடி சுந்தரி’ என்று டப்பிங் படம் போட் டார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு வேளை. எங்களுக்கெல்லாம் ஓ.பி. நய்யாரின் இசை ரொம்பப் பிடிக்கும். ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’, ‘ஆர்பார்’ போன்ற படங்களில் ‘ஆயியே மெஹரபான், ஹ¨ன் அபிமே ஜவான்’ போன்ற பாடல்களை அர்த்தம் புரியாமல் பாடிக் கொண்டிருப்போம். இப்போது அவற்றை கிராமபோனில் கேட்டதை கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போட்டோம்.தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஷர்மா வந்திருந்தார். அவரிடம் நரசிம்மாச்சாரியின் வேதனையை வேதாந்தம் சொல்லி அழைத்துச் சென்றான்.அவர், ‘‘நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. சபாவிலிருந்து உங்களுக்கு அரைச் சம்பளமாவது தரச்சொல் கிறேன். தனிப்பட்ட முறையில் பாடங் கள் நடத்த, படிக்கக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. இங்கிலீஷ் கற்பதில்லையா? பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது!’’ என்று தைரியம் சொல்லிவிட்டு நரசிம்மாசாரி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுதாகச் சொன்னபோது, ‘‘தா&ன தா&ன மே நாம் லிக்கா ஹை (ஒவ்வொரு தானியத்திலும் பெயர் எழுதியிருக்கிறது)’’ என்று பழமொழி சொன்னார்.‘‘அதெல்லாம் சரி. இவர் கஷ்டம் தீர என்ன செய்ய?’’ என்றபோது நரசிம்மாச்சாரிக்கு ஐம்பது ரூபாயும் வேதாந்தத்துக்கு பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுப் போனார். ஒப்பந்தம் என்னவென்றால், ‘எங்கள் வீட்டு மாடியில் பிரைவேட்டாக இந்தி கிளாஸ் ஆரம்பிப்பது. யாராவது வந்து கேட்டால் அதை தையல் கிளாஸ் என்றோ பிரெஞ்ச் கிளாஸ் என்றோ சொல்லிவிட வேண்டியது. விளம்பரம் எதும் கூடாது. ஒரு அம்பது பேராவது சேர்ந்தால் தொடர்ந்து சபா பணம் அனுப்பும். அதற்குள் கலகங்கள் அடங்கிவிடும்!’ என்றார்.எங்கள்வீட்டு மாடியில் வாசல் திண்ணை அருகில் மர ஏணி வைத்து மேலே ஹால் போன்ற இடம் இருந்தது. கம்பி கேட்டை பூட்டிவிட்டால் யாரும் மாடி ஏறி வர முடியாது. பத்திரமான இடம்தான்.

இருந்தும் முதல் கிளாஸ் ஆரம்பித்த போது சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. நரசிம்மாச்சாரி முகத்தில் சவுக்கம் போட்டு மறைத்துக்கொண்டு சாயங்காலம் வெயில் தாழ இங்குமங்கும் பார்த்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தார். ‘‘கீழ வாசல்ல டி.கே-காரங்க வேஷ்டியை உருவறாங்க ரங்கு.’’

‘‘அந்த வழியா ஏன் வந்தீர்… நான் என்ன சொன்&னன்?’’
‘‘எனக்கென்னவோ பதஷ்டமா இருக்கு வேது!’’‘‘பயப்படாதேயும்.’’கிளாசில் சேர விரும்புபவர்களுக்கு தற்போது ‘பாஸ்வேர்டு’ என்கிறார்களே, அந்த மாதிரி ஒரு ரகசிய சமிக்ஞை வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தது. அதை உச்சரித்தால்தான் உள்ளே அனுமதி. நாற்பது பேர் சேருவதாகச் சொல்லியிருந்ததாக ரங்கு சொன்னான்.

ராத்ரி ஏழு மணிக்கு கிளாஸ் என்று பெயர். ஏழரை ஆச்சு… எட்டாச்சு… ஒருவரும் வரவில்லை. நான், வேதாந்தம், நரசிம்மாச்சாரி ஒரு கரும்பலகையில் சாக்கட்டியில் எழுதப்பட்ட ஸ்வாகத் அவ்வளவு தான்.

‘‘என்னடா ஆச்சு?’’வேதாந்தம், ‘‘எல்லாரும் பயந்தாரிப் பசங்க ஓய்!’’‘‘என்னடா வேது… வேதனையா இருக்கு. ஒரு பாஷை கத்துக்கறதுக்குக்கூட இந்த நாட்டில உரிமை கிடையாதா? என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம்?’’வேதாந்தம், ‘‘நம்ம தாய்மொழியைப் புறக்கணிச்சுட்டு இந்தி கத்துக்கோன்னு சொன்னதுதான் தப்பு!’’‘‘வேது, நீ யார் கட்சி?’’‘‘என்னை சொந்த அபிப்ராயம் கேட்டா, எனக்கு இந்தி பிடிக்காது. சம்ஸ்க்ருதம்தான் எல்லாம். ஆனா, உம்ம சங்கடம் வேற. கவலைப்படாதேயும். இவங்களையெல்லாம் பாடித்தான் கறக்கணும்’’ என்றான் வேதாந்தம். காத்திருந்து பார்த்து எட்டரை மணிக்கு நரசிம்மாச்சாரியை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது.‘‘என்ன பண்ணப்போறேனோ… பேசாம தமிழ் வாத்தியாரா இருந்திருக்கலாம். எங்கப்பா ஆனமட்டும் சொன்னார்…’’‘‘நீர் போய்ப் படும். இந்த வயசில தமிழ் வாத்தியாரா மாறமுடியாது!’’‘‘பாச்சாதாண்டா கெட்டிக்காரன்! சட்டுனு கணக்கு வாத்யாராய்ட்டான் பாரு… இத்தனைக்கும் எல்.டி. கூட இல்லை.’’அப்போது தீர்த்தம் கொணடு வந்து வைத்த மூத்த மகள் கல்யாணியைப் பார்த்தேன்.‘‘வேது, எனக்கு ஒரு ஐடியா…’’‘‘எனக்கும் அதேதான் ஐடியா! எம்மா உனக்கு இந்தி தெரியுமா?’’

‘‘தெரியுமே மாமா!’’

‘‘எங்கே ஏதாவது இந்தில சொல்லு?’’

‘‘பாரத் ஹமாரா தேஷ் ஹை. பஹ¨த் படா ஹை. இஸ் மே கங்கா பெஹ்தி ஹை.’’‘‘உன் போட்டோ இருக்கா?’’ என்றான் வேதாந்தம்.‘‘இல்லையே… எதுக்கு?’’தெற்கு வாசலிலிருந்து கஸ்தூரியை அழைத்துவந்து அவளை ‘சுள் சுள்’ என்று நாலைந்து போட்டோக்கள் எடுக்க வைத்தான்.‘‘எதுக்கு மாமா?’’‘‘எல்லாம் உங்கப்பாவுக்கு ஒத்தாசை பண்ணத்தான். அப்பாகிட்ட சொல்லாதே?’’ என்றான்.வேது திருச்சிக்குப் போய் அதை ப்ளாக் எடுத்து ஒரு நோட்டீஸ் அச்சடித்தான்‘இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் லாங்வேஜஸ்.

லேர்ன் ஆல் வேர்ல்டு லாங்வேஜஸ்.

காண்டாக்ட் வேதாந்தம் பிரின்ஸிபல்’‘ஒன்ஆஃப் அவர் டீச்சிங் ஸ்டாஃப்’ என்று கல்யாணியின் போட்டோவை போட்டிருந்தான். புசுபுசு ரவிக்கையுடன் பக்கத்தில் ஒரு பூச்செண்டை தொட்டுக் கொண்டு எடுத்த போட்டோ அட்டகாச மாக இருந்தது. அதும் இத்தனை இளம்வயதில் மூக்கு குத்தியிருந்தது கிறக்கமாக இருந்தது.

வேது தம்பியின் கிரிக்கெட் சிநேகிதர்களைக் கூப்பிட்டு வீடு வீடாகப் போட்டுவிட்டு வரச் சொன்னான்.‘‘வேது, ப்ராப்ளம் ஏதாவது வருமா?’’‘‘இதில எங்கயாவது ‘இந்தி’ங்கிற வார்த்தை இருக்கா பாரு…’’ என்றான்.இல்லைதான். அந்தச் சுற்றறிக்கைத் துண்டுப்பிரசுரம் ஆச்சரியமான விளைவைத் தந்தது. வெள்ளிக்கிழமை மாலையிலேயே ஜனங்கள், ‘‘மாமா இங்க எங்கயோ…. ஏதோ கத்துத் தாராளாமே… எங்க பட்டாபி கத்துக்கணும்னான்!’’ என்று விசாரித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். ‘‘லைஃப்ல ஒண்ணு ரெண்டு லாங்வேஜ் கத்துக்கறது இம்பார்ட்டெண்ட் பாருங்கோ…’’முதல் கிளாஸ் ஹவுஸ் ஃபுல். கேட்டு கதவைப் பூட்ட வேண்டியிருந்தது.வேதாந்தம்தான் கல்யாணியை அழைத்து வருமுன் ‘நமஸ்தே சதாவத்சலே மாத்ருபூமி’ பாடிவிட்டு ‘‘பிரின்ஸிபல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’’ என்றான்.நரசிம்மாச்சாரியும் தன் அடர்ந்த தலைமயிரையும் தாடியையும் தள்ளி வாரிமுடிந்து புதுசாக மொரமொரவென்று தோச்ச கோட்டு போட்டுக்கொண்டு ஏறக்குறைய அழகாக இருந்தார்.‘‘நம் பாஷைகள் எல்லாமே ப்ராசீனமானவை. சம்ஸ்க்ருதத்தில் பிறந்தவை. அது தேவபாஷை. தேவநாகரி லிபி என்பதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்’’ என்று பாணினி, ஐந்திரம் என்று ஏதேதோ பேசினார். லேசான சலசலப்பு ஏற்பட்டது. ‘‘அந்த டீச்சரை வரச்சொல்லு வேது!’’ என்று குரல்கள் கிளம்பின.‘‘நாந்தாம்பா டீச்சர்..’’‘‘அப்ப நோட்டீஸ் போட்டது?’’வேதாந்தம், ‘‘வருவாடா… ஆலா பறக்காதீங்க. முதல்ல இண்ட்ரொடக்டரி கிளாஸ். அப்புறம்தான் மத்ததெல்லாம்.’’

‘‘வேது… என்னடா இது?’’ என்றார் நரசிம்மாச்சாரி புரிந்தும் புரியாமலும். ‘‘ஒண்ணுமில்லை ஓய்… நீர் பாடத்தை நடத்தும்.’’ அப்போது கல்யாணி வந்தாள். ‘‘கூப்டிங்களா மாமா?’’ வகுப்பு மௌனமாகியது.

‘‘கல்! வா! அப்பாவுக்கு ஒத்தாசையா அ ஆ இ ஈ சொல்லிக் கொடு. கல்யாணி போர்டில் எழுதியதை மாணவர்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொன்னான். அவர்கள் ஆர்வமாக எழுதி அவளிடம் திருத்தி வாங்க விரும்பினார்கள். நானோ வேதாந் தமோ திருத்தவேண்டாம் என்றார்கள். அருகில் சென்று சந்தேகம் கேட்டார்கள். மாணவர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். கீமான்தாங்கியான சீமாச்சுவிலிருந்து மாங்கொட்டை நாணு, தனகோபால், ரகு, நந்து எல்லோரையும் பார்த்தேன்.

கல்யாணி வளப்பமான பெண். அதனால் அவள் சிரத்தையாகக் கற்றுத் தந்தாலும் மாணவர்கள் கவனம் பிசகியது.

சாரியிடம

் யாரும் சந்தேகம் கேட்க வரவில்லை.

கஸ்தூரியை வரவழைத்து வகுப்பை போட்டோவும் எடுக்க வைத்தோம்.சாரியைப் பார்த்து அவர்கள், ‘‘உமக்கேன் சிரமம்? டாட்டரே பாடம் நடத்தட்டும்!’’ என்றார்கள்.நரசிம்மாச்சாரி கோபமாக இருந்தார்.அவர்கள் போனதும், ‘‘வேதாந்தம் நீ பண்றது உனக்கே நன்னா இருக்கா? அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை!’’

‘‘பாரும்… ஆள் சேர்ற வரைக்கும் ஒரு வாரம் இவ வந்துட்டுப் போகட்டும். சபாவில இன்ஸ்பெக்ஷன் வர வரைக்கும்தா&ன? பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான்!’’

‘‘எனக்கு இதில சம்மதமே இல்லை வேதாந்தம்!’’

‘‘ஒரு வாரம் சமாளிச்சு அம்பது பேர் சேந்துட்டா, ஆயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்கா சபாவில.’’

மறுநாள் அட்மிஷனுக்கு இன்னும் சில பேர் விண்ணப்பம் செய்தார்கள். காலையே வந்து சிலர் விசாரித்து விட்டுப் போனார்கள். ஜாக்கிரதை யாகத்தான் பதில் சொன்னோம். எங்கும் இந்தி என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. மாடி ஹாலில் முப்பது பேருக்கு மேல் உட்கார இடமில்லாததால் இரண்டு கிளாஸ் ஷிஃப்ட் போடுவதாக முடிவெடுத் தோம். யார் யாரோ மேல அடையவளைஞ்சான், நொச்சியம் போன்ற இடங்களில் எல்லாம் வந்து சேர விருப்பம் தெரிவித்தார்கள்.விஷயம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தெரிந்து போய்விட்டது. இவர்கள் மாற்றுப் பெயரில் இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள், ‘புறப்படு தமிழா… ஆரிய மாயையை அடக்கக் கொதித்து எழு!’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா!’’ என்று சத்தம் போட்டார்கள். சாரி புறக்கடையை விட்டு வெளிவரவில்லை. கல்யாணி தான் வெளியே வந்து, ‘‘அப்பா கோட்டைக்குப் போயிருக்கார்!’’ என்று பொய் சொன்னது. விஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்!’’ ‘‘மாமா உங்களை இந்தி வாத்தியார் அழைச்சுண்டு வரச்சொன்னா”ர். ஒரே கலாட்டா… நெருப்பு வெக்கப் போறாளாம்.’’
நாங்கள் ஓடிச் சென்று பார்த்த போது ஊர்ப்பையன்கள் யாரையும் காணோம். பொன்மலையிலிருந்து வந்த ரௌடி கும்பல். அவனவன் கையில் கழி – கம்பு, அரிவாள் வைத்திருந்தார்கள்.

வேதாந்தம் நிலைமையை எடை போட்டான்.‘‘பாருப்பா… யாரோ உங்களுக்குத் தப்பா சொல்லியிருக்கா. இந்தியாவது தொந்தியாவது… என்ன எங்களுக்குப் பைத்தியமா? தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ் நடத்தறா இந்தப் பொண்ணு.’’‘‘இவளா, பாட்டா! ஏய் எங்க பாடு… பார்க்கலாம்’’ என்றான்.கல்யாணி உட&ன கணீர் என்ற குரலில், ‘பாரத தேசம் என்ற பெயர் சொல்லுவார் துயர் வெல்லுவார்!’ என்று பாடி ‘நீராரும் கடலுடுத்த’வும் பாடினாள். எல்லாரையும் திகைக்க வைத்தாள். கூடவே அதன் தங்கையும் பாடியது. வேதுவும் சேர்ந்துகொண் டான்.‘‘சார் கோட்டைக்குப் போயிருக் கார். வந்ததும் சொல்றேன். கலாட்டா பண்ணணும்னா நிச்சயம் பண்ணுங்கோ. இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்குச் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.’’ ராஜகோபால் முரடர். சேர்த்தி உற்சவத்தின்போது மாந்தோலாலேயே மட்டையடி அடித்துக் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவார்

இவர்கள் இந்தி கிளாஸ் எதுவும் நடத்தவில்லை என்ற உறுதிமொழியில் வேதாந்தத்தின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டுதான் கலைந்தார்கள்.

வேதாந்தமும் நானும் உள்ளே சென்றோம். புறக்கடையில் தோக்கிற கல்லில் சாரி உட்கார்ந்திருந்தார். ‘‘சாரி உமக்கு ஹெல்ப் பண்ண நினைச்சு, உயிருக்கே ஆபத்தாயிடுத்து. கொஞ்ச நாளைக்கு இந்தி கிளாஸே வேண்டாம்!’’ என்றான்.

‘‘நான் போய் காவேரில குதிக் கிறேன்’’ என்றார்.‘‘அப்படி சொல்லாதீங்கப்பா..!’’‘‘ஓய் காவேரில முழங்கால் அளவு கூட ஜலம் இல்லை. குதிச்சா முட்டிதான் பேரும். கொஞ்சம் பொறுமையா இரும்… நான் உமக்கு வழி சொல்றேன்’’ என்றான்.‘‘நீ வரதுக்கு முன்னாடி வீதில நின்னுண்டு என்னவெல்லாம் கத்தினான் தெரியுமா? பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான்!’’கல்யாணி, ‘‘என்ன கிளாஸ்ப்பா..’’
‘‘சும்மார்றி அறிவுகெட்ட முண்டம்!’’சாரிக்கு வேறு மார்க்கம் பார்க்க முடியாத நிலையில் எனக்கு டெம்பரரி டிரான்ஸ்ஃபர் முடிந்து லீவில் போன ஏ.ஏ.ஓ. வந்துவிட்டதால் மீண்டும் மீனம்பாக்கத்துக்கு டியூட்டிக்கு திரும்ப வரும்படி ஆர்டர் வந்துவிட்டது. எனக்குச் சாரியை நினைத்து வருத்தமாகத்தான் இருந்தது.ஊருக்குக் கிளம்புமுன் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் ஜங்ஷன் போவதற்கு லால்குடி பாசஞ்சர் பிடிக்கக் காத்திருந்தேன். வாசலில் இந்தி எதிர்ப்பு உண்ணாநோன்பு என்று பெரிசாக போர்டு எழுதி பந்தல் போட்டுச் சிலர் ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர் பேராசிரியர் மறையிறுதி என்று என் கையில் திணிக்கப்பட்ட நோட்டீஸிலிருந்து தெரிந்தது. அவர் தலைமையில் சாகும் வரை உண்ணாநோன்பு எனத் தெரிந்தது.
‘மைய அரசே ராணுவத்தை வாபஸ் வாங்கு!’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்!’ என்று எழுதி கண்ணாடிப் பெட்டியில் ரூபாய் நோட்டுகள் அடைந்திருந்தன. ‘‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக…’’ என்று அவ்வப்போது கோஷம் லேசாக எழுந்தது. நிறைய நோட்டுகளும் நாணயங்களும் சிதறியிருக்க… அவ்வப்போது கண்ணாடிப் பெட்டியைத் திறந்து பெரிய பையில் திணித்துக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் மறையிறுதியை கவனித்தேன். மூன்று நாள் தாடி… முழங்கையில் முறுக்கிவிட்ட ஜிப்பாவினால் அடையாளம் கண்டுகொள்ளச் சற்று நேரமாயிற்று.
‘‘வேதாந்தம் நீயா?’’

‘‘வா… வா… பக்கத்தில உக்காரு. தோழர்களே இவர் என் நண்பர் அரங்கத்தரசு. தாய்மொழிக்காக எதுவும் செய்வார். ஆரம்ப எழுத்தாளன். மைய அரசுப் பணியை நிராகரித்துவிட்டு நம் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்… வா கொஞ்ச நேரமாவது உக்காரு. ரயில் எங்களை மீறிப் போகாது!’’‘‘அரங்கத்தரசு வாழ்க!’’ என்று கோஷம் எழுந்தது. சங்கடமாக இருந்தது. நான் அவன் அருகில் அசௌகரியமாக உட்கார்ந்து காதருகில்,

‘‘இதெல்லாம் என்னடா வேதாந்தம்?’’‘‘தாய்மொழியைக் காப்பாத்தப் போராட்டம். ஒரே நாளில் ஐயாயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு.’’‘‘இந்த நிதியை என்ன பண்ணப் போறே…’’

மெள்ளக் குரலைத் தாழ்த்தி ‘‘நரசிம்மாச்சாரிக்கு கொடுக்கப் போறேன்’’ என்று கண் சிமிட்டினான் வேதாந்தம்.நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

1 comments:

தமிழ் பையன் said...

அந்தக் காலத்தை அழகாகக் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் சுஜாதா. இப்படி எல்லாம் செஞ்சுதான் தமிழர் எல்லோரும் இந்தி படிக்க விடாமல் ஒரு தலைமுறையை ஒழிச்சுட்டாங்க.