Wednesday, August 08, 2012

பெண் ஜென்மம்! - 2ம் பரிசு ரூ 7500 பெற்ற கல்கி போட்டிக்கதை -

பெண் ஜென்மம்!எஸ்.முத்துச்செல்வன்
வாளியில் தண்ணீர் நிரம்பி வழிய ஆரம்பித்தபோது சுயநினைவு தட்ட, பைப்பைத் திருகி நிறுத்தினாள். நிரம்பத் தடவியிருந்த எண்ணெய்ப் பிசுக்கு அழுக்கோடு சிதறியோட சீயக்காய் அரப்பை, தண்ணீர் சேந்திக் கரைத்துத் தலையில் அழுத்தி, தேய்க்க ஆரம்பித்தாள். குளியலறைக் கதவை ஊடுருவி, கம்பெனிக்குள் நுழையும் பணியாளர்களை அழைத்து வரும் பேருந்துகளின் ஹாரன் சத்தம் அவள் காதைத் துளைத்தது. அவசரமாகத் தண்ணீரைக் குவளையில் எடுத்து, தலைக்கு ஊற்றினாள். மீண்டும் மீண்டும் தலையைத் தேய்த்து நீரை மொண்டு ஊற்றிக் கொண்ட வளுக்கு நினைவில் அம்மாவின் முகம் தட்டுப்பட்டது.தண்ணீயைப் பாத்துப் பாத்துச் சேந்துடி."


கோபத்தில் முகம் சிவக்க, திரும்பி அம்மாவை முறைத்தாள்.


என்னடி முறைக்கிறே அடிபைப்ல தண்ணீரை அடிச்சு எடுத்து வர்றவளுக்குத் தானே தெரியும்"


யாரோ குளியலறைக் கதவைத் தட்டி, ஏய்... எவடி இவ்வளவு நேரம் குளிக்கிறது..."


சுதாரித்தவள் அவசரமாக குளித்துவிட்டு நினைவுகளையும் துவட்டிய துண்டையும் உதறி விட்டு வெளியேறினாள். வெளியே நின்றிருந்தவள் முணு முணுத்ததைக் கண்டுகொள்ளாது படியிறங்கினாள்.


சௌம்யா, தங்கியிருக்கும் கம்பெனியின் விடுதியிலிருந்து பார்த்தால் சற்றுத் தொலைவில் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியின் நுழைவாயில் தெரியும். ஜன்னல் வழியே பார்த்தவள் பரபரத்தாள். கம்பெனிக்குள் அனைத்து பஸ்களும் நுழைந்துவிட்டிருக்க பணியாட்கள் ஷிப்டுக்கு வேகவேகமாகச் செல்வது தெரிந்தது. வேகமாக கம்பெனிக்கு நடக்க ஆரம்பித்தாள்.வேலைக்குச் சேர்ந்து இன்று இருபத்தைந்து நாட்கள். முதல் நாளிலிருந்தே வீட்டு நினைவு அலைக்கழிக்கிறது. கண்களில் நீர் தளும்ப மனத்தை அடக்க பழகிக் கொண்டாள்.அப்பாதான் இப்படியொரு கம்பெனி பற்றி விசாரித்து இருநூறு கிலோமீட்டர் தள்ளி வந்து சேர்த்துவிட்டார். வீட்டில் இவள் இரண்டாவது. இவளுக்குப் பிறகு நான்கு பேர். அம்மா தான் புலம்புவாள்.எப்படித்தான் கரை சேர்க்கப் போறேனோ?"பையன் பிறப்பான் என்று அம்மாவும் அப்பாவும் நினைக்க ஆறு பேரும் பெண்ணாகப் பிறந்தது பற்றி யாரிடம் குறைசொல்வது? இவள் ருதுவான போது ‘அய்யோ இவளுமா?’ என்றுதான் அம்மா எரிச்சலோடு கத்தினாள். அக்கா கார்த்திகா ருதுவாகி ஆறேழு மாதம் ஆகியிருந்தது. அடிவயிற்றின் வலியை விட அம்மாவின் எரிச்சல் மனத்தைச் சுக்குநூறாக்கியது.


வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் எல்லாமே பிரமிப்பு. நேற்றைக்கு கரட்டாம்பட்டியில் ஓடியாடித் திரிந்த வாழ்க்கை திடீரென்று தடம் புரண்டது போல் இருந்தது.கார்த்திகா ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்கிறாள். பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்திருந்ததால் படிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்த்தாள்.படிச்சா... படிச்ச மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும். ஏதாவது ஜவுளிக்கடை, ஜெராக்ஸ் கடைன்னு வேலைக்குச் சேர்த்து விடுங்க. மிச்ச சொச்சத்தைச் சேர்த்து வைச்சு கரைசேர்க்கவாவது ஆவும்." அம்மாவின் தின புலம்பல் அப்பாவைப் பாடுபடுத்திக் கொண்டிருந்தது. இவளும் படிப்பை நிறுத்திவிட்டதால் சும்மா பொழுதை வீட்டில் கழிக்கவில்லை. அவரைத் தோட்டத்தில் அவரை பறிக்க, கடலைக்காய் பிடுங்க என்று கூலி வேலைக்குச் செல்வாள். கம்பந்தட்டை அறுக்கவும் சென்றிருக்கிறாள்.சௌம்யா யாருடி? நீயா... போ. கட்டிங் மாஸ்டர் குவாலிடி ஆபிஸர் எல்லாம் கூப்பிடறாங்க உன்னை."கட்டிங் செய்து கொண்டிருந்த துணியை வைத்துவிட்டு டேபிளைச் சுத்தப்படுத்தி விட்டுச் சென்றாள்.வந்து எத்தனை நாளாவுது? இப்படியா துணியை வெட்டறது?"கட்டிங் மாஸ்டர் சத்தமிட்டபோது அவள் மனம் நடுநடுங்கியது. சரியாகத்தானே வெட்டினோம். காஸ்ட்லியான துணிவேறு.துணியோட ரேட்டு என்ன தெரியுமா? வேலை செய்யத்தான் வந்தியா? பொழுது போக்க வந்தியா? இன்னையோட போகட்டும். அடுத்த முறை தப்பு பண்ணினே சம்பளத்துல பிடிச்சுக்குவோம். போ... லைன் சூபர்வைசர் யாரு? அந்தத் தறுதலையக் கூப்பிடு" என்றபடி அவர் நகர்ந்தார்.டேபிளுக்கு வந்தாள். டயா பதினாலு என் பதில் நான்கை ஒன்பது போல் எழுதியிருப்பது போன்று தெரிய எல்லாமே தவறாகப் போய்விட்டது. விளக்கம் சொல்லாது அழுகையை மென்று முழுங்கி சரியான டயாவினை செட் செய்து துணியை கட் செய்தாள்.இந்த மாதத்தோடு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். போனதும் தங்கைகளோடு கூத்தடிக்க வேண்டும். எல்லா விளையாட்டுகளையும் அலுப்பு தீர விளையாடியது நெஞ்சுக்குள் அலையடிக்கிறது. தோற்று விட்டால், தோற்றவர்களை ‘தோத்தான் தும்பான் சோறு சட்டி திம்பான்’ என்று கேலி பண்ணினால் அழுவார்கள்.இங்கே எல்லாவற்றையும் டி.வி. பெட்டி முழுங்கிக் கொண்டு அதுவே கதியெனக் கிடக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இலவச டி.வி.கூட இல்லை.ஏய் வெறும் சாப்பாட்டைக் கிளறிக்கிட்டு இருக்கே, போய் ரசம் வாங்குடி" - பக்கத்தில் அக்கா சத்தமிட நினைவைத் தட்டி விட்டு தட்டை எடுத்துக் கொண்டு உணவு பரிமாறும் இடத்துக்குச் சென்றாள்.சாப்பிட்டு மாடிப்படி ஏற ஏற புளிக்குழம்பு சாப்பாடும் கேரட் பொரியல் வாசமும் ஏப்பத்தோடு வரும்போல் இருந்தது. துணிகளைத் துவைத்துக் காயப்போட வந்தபோது கீழிருந்து வார்டன் மைக்கில் ஒவ்வொரு மாடியிலும் இருக்கும் சில பெண்களை மட்டும் பெயர் குறிப்பிட்டுக் கீழே வரும்படி அழைத்தார்.கீதா, கீர்த்தனா, ஸ்ரீதேவி, கனகா, லட்சுமி, அமுதா, ஆயிஷா, கௌசல்யா, சித்திரைச் செல்வி, சசிகலா, பவித்ரா, பவுலின் மேரி, மகாலட்சுமி, இலக்கியா, பிருந்தா, நதியா, குஷ்பு, பிரியதர்ஷினி, சௌம்யா..."அரக்கப் பரக்கக் கிளம்பினாள்.ஐந்து ஃப்ளோரில் தங்கியிருக்கும் நானூறு பேர் சொச்சத்தில் முப்பது நாப்பது பேராவது டைனிங் ஹாலில் இரைச்சலோடு குழுமியிருந்தனர்.

உஷ் சத்தம் போடாதீங்கடி."பதினைந்து நிமிடங்கள் கழித்து பணியாளர் துறையின் மேலதிகாரி, வாய்பொத்தி அழுதபடி ஒரு அம்மாள், சோகமாக வெளிறிப்போன முகத்தோடு ஒல்லியாக ஒரு அண்ணன், சிவப்பாக தாட்டியாக சட்டையை இன் செய்து அலட்சிய முகபாவத்தோடு மற்றொரு அண்ணன் என நான்கு பேர் வந்தனர்

.

நம்ம ஹாஸ்டலில் ரூம் நெம்பர் அது18 ல் தங்கியிருந்த மாலாவோட அம்மா, அண்ணன், அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளை உங்க முன்னாடி நிக்கிறாங்க. மூன்று தினத்துக்கு முன்னாடி அவுட் பாஸ் வாங்கி ஊருக்குப் போறேன்னு கிளம்பிப் போன மாலாவைக் காணவில்லை."நிறைய பேர் ‘அய்யோ’ என்று பயம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். மாலாவின் ஊருக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து ஊர்ப் பெண்களையும் அழைத்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. மாலா குறித்தும் அவள் முக அடையாளம் குறித்தும் எதுவும் நினைவில் தட்டுப்படவில்லை. ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் யார் யாரை நினைவில் வைப்பது? நிச்சயம் பண்ணின பிறகு காணாமல் போய்விட்டாள். மாலாவைக் கட்டிக்க இருந்த மாப்பிள்ளை வெறுப்பான பார்வையை எங்கள் மீது வீசினார்.அன்றைக்கு முழுதும் காணாமல் போனவளைப் பற்றித்தான் பேச்சு. எனக்கு என்னவோ வீட்டு நினைப்பு மறந்து விட்டது போலிருந்தது. ஆனால் காலையில் எழுந்ததும் இந்த மாதம் எப்போது முடியும்... சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்குக் கிளம்பிட வேண்டும் என்று மனம் தவியாய்த் தவிக்க ஆரம்பித்தது.கீதாக்கா... இந்த மாதம் சம்பளம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போகணுங்க்கா."வார்டன் கிட்டே கேளு."வார்டன் மேடம் பொரிய ஆரம்பித்தாள். வீட்டுக்கெல்லாம் போக முடியாது. சம்பளத்தை வந்து வாங்கிட்டுப் போகச்சொல்லு. வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு எவனையாவது கூட்டிட்டு சுத்தறது. அந்த மாலா சனியன் பண்ணின கூத்துல ரூல்ஸ்லாம் ஸ்ட்ரிக்ட்டா போட்டிருக்காங்க."உள்ளுக்குள் மனம் அதிர்ந்தது. அழுகை வந்தது.அங்கிருந்து நைட்டியில் இருந்த ஒரு அக்கா, அவளை வார்டனிடமிருந்து நைச்சியமாக அழைத்து மொட்டை மாடிக்குச் சென்றாள். இவளைக் குறித்து எல்லாம் விசாரித்தாள். பின் சம்பந்தமே இல்லாமல், எவனையாவது லவ் பண்றியாடி" என்றாள்.சௌம்யா வெடுக்கென்று அவளை விட்டு விறுவிறுவென்று படியிறங்கி ரூமுக்கு வந்து சுருண்டு படுத்தாள். முணுக்கென்று கண்களில் நீர் கட்டியது. எப்போது கண் அசந்தாள் என்று தெரியவில்லை. லேசாக நினைவு தட்டியபோது பேச்சுக்குரல் காதுகளில் இரைந்தது.இவ யாரடி... இப்படிப் படுத்துக்கிடக்கிறா."

புதுசுடி... விடு... அவ போக்கல விட்டுட்டோம்."

அந்தச் சமயத்துல வயித்தைப் பயங்கரமாய் வலிக்குதடி."யேய்... வாழைப்பழம் சாப்பிட்டால் வலி குறைஞ்ச மாதிரி ஃபீலிங் வருமாம்டி."சரிங்க பாட்டி."புதுசா ஒரு லைன் சூபர்வைசர் வந்திருக்கான் பார்த்தியா."என்னடி உன் ரசனை. அவன் ஒரு ஆளு..."ஆமாப்பா நேத்து சிரிச்சேன். உம்முன்னு முறைச்சான்."ஏய் நிஜமா அவ ஓடிப் போயிட்ட மாதிரி பேசுற."அவ பேச்சை விடுங்கடி. சித்ரா கல்யாணத்துக்கு எவ எவ வரப்போறது."நிறையபேர் அறையில் கூடிவிட்டது போல் தெரிந்தது. எழுந்திரிக்கலாமா. எழுந்து தான் ஆகவேண்டும்.

பசி வயிற்றைக் கிள்ளுகிறது. யாரோ அவளை எழுப்பினார்கள். அவள் தூக்கத்தில் விழிப்பது போல் விழித்து எழுந்தாள்.

வாடி சாப்பிட."

ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கும் போது ஒரே கலகலப்பான பேச்சாக இருந்தது.ஏய், நீயும் கல்யாணத்துக்கு வரத்தானே?"இல்லக்கா... வந்து... நான்..."அவ பாருடி... சம்பளம் கொடுக்கிற தேதியில் இருந்து இரண்டு நாள் தள்ளி கல்யாணத்தை வச்சிருக்கிறா?"நிறைய மொய்ப் பணம் வசூல் பண்ண பிளான் பண்ணியிருப்பாடீ..."சௌம்யாவுக்குப் பின்னால் அடித்தது போன்று யோசனை. இவர்கள் கல்யாணத்துக்குக் கிளம்பும்போது அப்படியே கிளம்பிட வேண்டியதுதான்.சம்பளப் பணத்தை பேக்கின் இடையில் வைத்து, சுடிதார்களை மடித்து வைத்து மறைத்தாள். முதல் நாள் இரவு கல்யாணப் பெண் வீட்டில் தங்குவதால் ஆளுக்கு ஒரு பேக் வைத்திருந்தனர். சௌம்யா வரும்போது பெரிதாக ஒன்றும் கொண்டு வரவில்லை. ஒரே ஒரு மாற்று சுடிதார், கிழிந்ததைத் தைத்து வைத்திருந்த ஒரு நைட்டி அவ்வளவுதான்.தினேஷ் சார்தான் கிடுக்குப்பிடி போட்டார். இவள் புதுசு என்பதால் கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டார். உண்மையைச் சொல்லி விடலாம் என்று ஒருகணம் யோசித்தாள். யோசனையை அழித்தாள். ‘கீர்த்தனக்காதான் இவளுக்குப் பொறுப்பு’ என்று சொல்ல அரைகுறையாக தலையசைத்தார்.கல்யாண மண்டபத்தில் கீர்த்தனக்கா நல்ல மூடில் இருந்த சமயம், அக்கா எங்க ஊரு இங்க பக்கத்துலதான். வீட்டுக்குப் போயிட்டு தங்கச்சி பாப்பாவையெல்லாம் பார்த்துட்டு சம்பளப் பணத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன்க்கா" என்று கெஞ்சிக் கேட்டாள்.சரி, உடனே திரும்பிடுவியா? தலையைத் தலையை ஆட்டாதே. ஒருநாள் இருந்துட்டு உடனே வந்து சேரு. இந்தா ஃபோன் நெம்பரு. ரிஸ்க் எடுத்துருக்கேன்டி... என்னைக் கவுத்துறாதே."மென்று விழுங்கினாள். உண்மையைச் சொல்லிவிடலாமா? வேண்டாம். விட மாட்டார்கள். தான் காணாமல் போய்விட்டால் தானே பிரச்னை. ஃபோன் எண் இருக்கிறதே. ஃபோன் செய்து வீட்ல போக வேண்டாம்னுட்டாங்க என்று சொல்லி விடலாம். வீட்டுக்குப் போகிறோம் என்கிற சந்தோஷமே அலை அலையாக உற்சாகத்தை எழுப்பியது.சாயங்காலம் வெயில் தாழ்ந்திருந்தது.எங்கிருந்து ஓடி வந்தாளோ தெரியவில்லை கடைக்குட்டி கனகா, ‘ஹய்யா... அக்கா...’ என்று தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டாள். குனிந்தவளின் முகமெங்கும் முத்தமிட்டாள்.இவளுக்குத் தொண்டையை அடைத்தது. வாசல் பகுதியில் இருக்கும் அப்பாவின் சைக்கிளைக் காணவில்லை. பால் கேனில் ஊற்றும்போது சிதறிய பால் சிதறல்கள் மண்ணில் ஈரமாக மினுங்கின. அவர் வருவதற்கு இரவு ஏழெட்டு மணியாகும்.விறகுக் கட்டைகளை அம்மா கீழே போட்டாள். தலை சும்மாட்டை உதறி முகத்தை ஒற்றி எடுத்தவள் இவளைக் கண்டாள்.என்னடி இப்ப வந்துருக்கே."

வந்ததே பிடிக்கலையோ என்று சௌம்யாவுக்குப் பட்டது. எதுவும் பேசாமல் கிடந்தாள். ஆனால் அம்மா விடவில்லை.

\

இல்லைம்மா ரெண்டு நாள் லீவு விட்டுட்டாங்க."அப்பாவிடம் மட்டும்தான் சொல்ல வேண்டும். இவள் தொணதொணப்பு ஜாஸ்தியாகிவிடும். பால் கேன்கள் உரசும் சப்தங்களோடு சைக்கிளை நிறுத்தும் ஓசை கேட்டது

.

தனியாவா வந்தே லீவா" என்றார். பொதுவாக தலையசைத்தாள்.அம்மா இல்லாத நேரம் பார்த்து சம்பளத்தைத் தந்தவள், எனக்கு அங்கே இருக்கவே பிடிக்கலைப்பா. இங்கனேயே ஜவுளிக் கடை, ஜெராக்ஸ் கடைனு வேலைக்குச் சேர்த்து விடுப்பா. பாப்பாவையெல்லாம் விட்டுட்டு இருக்க முடியலை."
அங்கேயெல்லாம் இந்தச் சம்பளம் எல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா. உங்களை நான் எப்படி கரை சேர்க்கறதுன்னு முழிக்கிறேம்மா. பால் வருமானம் முன்னே மாதிரியில்லே."
அவர் பேசப் பேச இவளுக்கு அடி மனசிலே பயம் எழுந்தது.காலை பரப்பியபடி அசந்து கார்த்திகா தூங்கிக் கொண்டிருந்தாள். கால் பாதங்கள் வெடித்து சிமெண்ட்பால் தீற்றல்களோடு கிடந்தது. மற்ற நால்வரும் ஒருத்தரையொருத்தர் அணைத்தபடி கால்கள் மேல் கால்கள் போட்டுத் தூக்கத்திலிருந்தனர்.அடுத்த நாள் -எக்கா இன்னைக்குதான் சூப்பர் சாப்பாடு" என்றாள் ஒரு தங்கை.வக்கணையா திங்கணும்னா எல்லாரும் உக்காந்திருந்தா ஆகாது" - அம்மா வெறுப்பாகப் பேசினாள்.ஏதேனும் பேசினால் வம்பாகும். வெளியே காலை வெயில் சுள்ளென்று வீதியில் உறைந்திருந்தது. ஊரே ‘வெறிச்’ என்று தான் இருக்கிறது.தீபாவளி சமயத்துலதான் ஜவுளிக் கடைகளுக்குப் போய் வேலை கேட்க முடியும்" என்று பக்கத்து வீட்டு நர்ஸ் அக்கா சொல்லி விட்டாள். அவள் பணிபுரியும் ஆஸ்பத்திரியில் கூட்டுற வேலையையாவது வாங்கிக் கொடுக்கா என்றவளை முறைத்துக் கொண்டு அம்மாவிடம், ‘போட்டு விட்டு’ போய் விட்டாள்.இந்த நாறக் கழுதை வேலையத் தலை முழுகிட்டுத்தான் இங்கே வந்திருக்கா போலிருக்கே."அப்பா எதுவும் பேசவில்லை. அன்றைக்கு காய்கறி எதுவுமில்லாமல் வழக்கம் போல் ரசம், வாதநாராயண் இலை துவையல் என்று சமைத்துப் போட்டாள் அம்மா.என்ன செய்வது, பாப்பாக்கள் நிறம் மங்கின. ஒட்டுக் கிழிசல்களோடுதான் வாழ்கின்றனர். சிமெண்ட்பால் ஊறின கால்களோடு அக்கா. தாம் சம்பாதிப்பது திருமண நல்வாழ்வுக்கு எனில் அது சப்பைக்கட்டுதான். சம்பாதிப்பது ‘எவன்ட்டேயோ பிடித்துக் கொடுக்க’ என்பது பேச்சுக்குத்தான். வயதுக்கு வந்து விட்டாளே அடுத்து கல்யாணம், பிள்ளை குட்டி... குடிக்கிற புருஷனோ... குடிக்காத புருஷனோ, பிடிச்ச புருஷனோ... பிடிக்காத புருஷனோ...காலை பால் சப்ளைக்குச் சென்றுவிட்டு அப்பா வரும்போது மணி பனிரெண்டரை இருக்கும். வீட்டில் யாருமில்லை. பாப்பாக்கள் பள்ளியில். அக்கா கட்டட வேலையில். அம்மா காட்டு வேலைக்கு.யப்பா இன்னிக்கு ரெண்டு நாப்பது வண்டில கிளம்பறேம்பா" என்றாள்.பேக்கைத் துடைத்து ரெடி செய்தாள். ஒரு நைந்த போர்வையை மட்டும் எடுத்து வைத்திருந்தாள்.வீட்ல அம்மாட்ட பாப்பாகிட்டேயெல்லாம் சொல்லிட்டியாம்மா?"நீங்க சொல்லிடுங்கப்பா."சைக்கிளிலிருந்து பால் கேன்களைக் கழட்டினார். வீட்டு படலைச் சாத்தினார். சைக்கிளை மிதித்தார். முன் ஹாண்ட் பாரில் பேக்கும் பின் கேரியரில் அவளும். பல நாட்கள் படிந்திருந்த பால் வீச்சம் மூக்கைத் துளைத்து இறங்கிக் கொண்டிருந்தது.ஒற்றையடிப் பாதையைக் கடந்து வண்டிப் பாதையைக் கடந்து சிறு சாலையில் மினி பஸ்ஸுக்குக் காத்திருந்தனர்.மினி பஸ்ஸின் பின் சீட்டில் உட்கார்ந்தாள். பஸ்ஸின் பின் கண்ணாடி வழியே சைக்கிளை மிதித்து மேடேறிச் செல்லும் தந்தை இறங்கி சைக்கிளை இறுகப் பிடித்துக்கொண்டு பின்னால் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸைத் திரும்பிப் பார்ப்பதைப் பார்த்தாள்.சௌம்யா சட்டென்று திரும்பிக் குனிந்து கொண்டாள். கண்களில் நீர் கட்டியது. பஸ் குலுங்களோடு திருப்பத்தில் திரும்பி வேக மெடுத்தது.


டிஸ்கி -

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்- http://www.adrasaka.com/2012/

07/10000.html


நன்றி - கல்கி, புலவர் தருமி

1 comments:

Unknown said...

அருமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி! பரிசு பெற்றவருக்கு என் வாழ்த்துக்கள்....