Tuesday, August 21, 2012

மணி அத்தையும் முளைப்பாரியும்!-தே.புதுராஜா - கல்கி 3 ம் பரிசுக்கதை


 மூன்றாம் பரிசுக் கதை



மணி அத்தையும் முளைப்பாரியும்!



தே.புதுராஜா



அன்றொரு ஞாயிற்றுக் கிழமை காலைப் பொழுது, தமிழ் தினசரி ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அருகில், எம்.பி.ஏ., முதலாமாண்டு படிக்கும் என் மகள், ‘நெட்டில்’ எதையோ ‘வலை’ போட்டுத் தேடிக்கொண்டிருந்தவள் திடீரென்று, டாடி... வாட் இஸ் மொல்பரி?" என்றாள் கண்களைக் கணினித் திரையை விட்டு அகற்றாமலேயே.



மல்பெரியா...? அது செம்பருத்தி மாதிரி ஒரு வகைச் செடிடா. பட்டுப் புழு வளர்க்கிறதுக்காக பயிர் செய்வாங்க. அந்தச் செடியோட இலைகளைச் சாப்பிட்டுத்தான் பட்டுப் புழுக்கள் எல்லாம் கூடு கட்டும்" என்கிறேன் நான்.



ஐயோ... டாட்... ஐ நோ தட். ட்வெல்த் பயாலஜில படிச்சிருக்கேன். பட், நான் கேட்டது அது இல்ல. ம்... இந்த... வில்லேஜ் ஃபெஸ்டிவெல் டைம்ல கேர்ள்ஸ் எல்லாம் தலைல வெச்சுத் தூக்கிட்டுப் போவாங்களாமே..." என்றவள் கேள்வியை முடிப்பதற்குள் எனக்குப் புரிந்துவிட்டது.



ஓ... அதுவாடா, அது ‘மெல்பரி’ இல்லடா, முளைப்பாரி" என்று நான் பதில் சொல்லும் போதே என் மண்டைக்குள் காலச்சக்கரம் ‘ரிவர்ஸ் கியரில்’ நாற்பதாண்டுகள் பின்னோக்கிச் சுழன்றது. ‘முளைப்பாரி’ என்றதுமே கூடவே மணி அத்தையின் முகம் மனசுக்குள் வருவதைத் தவிர்க்க இயலாது. கூடவே, தாங்க முடியாத மனவேதனையும்!



எனக்கு நான்கோ ஐந்தோ வயதிருக்கலாம் அப்போது. பள்ளி செல்லாத பருவம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அன்றுதான் முதன்முதலில் மணி அத்தையைப் பார்த்தேன். அதுவரையிலும் பின்கொசுவம் வைத்து வரிந்து கட்டிய அம்மாவையும், முக்கால் பாவாடையும் குரங்குக் குப்பாயமும் போட்ட அக்காவையும் மட்டுமே பார்த்த என் கண்களுக்கு, தாவணி கட்டிய பன்னிரண்டு வயது மணியத்தையின் தோற்றமும், அவள் சிரித்த முகமும் குரவை மீன் கண்களும் ஒருவித ஈர்ப்பாக இருந்தன. கருப்பும் இல்லாது வெளுப்புமில்லாது ஒரு நிறம்!



அப்பாவுக்கு மீசை இல்லாவிட்டால் இப்படித்தான் இருப்பாரோ... என்று நினைக்கத் தோன்றும். அதனாலேயே அவளிடம் சுலபமாக என்னால் ஒட்டிக் கொள்ள முடிந்தது.



அன்பென்றால் அப்படியோர் அன்பை அதுவரையிலும் நான் யாரிடமும் உணர்ந்ததில்லை. என்னதான் அம்மா - அப்பாவின் பாசம், தாத்தா- பாட்டியின் அக்கறையான அன்பு என்றாலும் அத்தைமார்களின் அன்பென்பது சற்றுச் செல்லம் கலந்த ஸ்பெஷல். அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள்.



அந்த வயதுக்கே உரிய ஆனால் அதே குறும்புத்தனத்தை நான் மணி அத்தையிடம் காட்டியபோது, அப்படியே இடக்கையால் என்னை அணைத்துக்கொண்டு வலது உள்ளங்கையில் உதைத்த என் பாதத்தை ஏந்திப் பிடித்து அப்படியே ‘என் செல்லக் குட்டி...’ என்றவாறு பாதத்தில் அழுத்தமாகஒரு முத்தம் கொடுத்துச்சு. அப்பவே என்னோட சேட்டை, குறும்பு எல்லாமே தூள்தூளாகிக் காணாமப் போச்சு. அன்னிலேர்ந்து மணி அத்தையோட அன்புக்கு நான் அடிமை! அவருக்கு நான்னா உசிரு.



மணி அத்தையோட கூட்டுக்கா அக்கா ஒண்ணு பக்கத்துத் தெருவில இருந்து தெனக்கும் வரும். எங்கப்பத்தா, சித்தப்பா எல்லாமே அதை ‘மூக்கையா மக’ன்னுதான் கூப்பிடுவாங்க. மணி அத்தை எப்பவும் வாடி, போடின்னுதான் பேசுவாங்க. அந்தக்காவுக்கும் என்னைய ரொம்பப் புடிக்கும். ‘அழகு பெத்த பய’ன்னு என் கன்னத்தைப் புடிச்சுக் கொஞ்சும். ஆனாலும் எம்மேல அந்தக்காவுக்குக் கொஞ்சம் பொறாமைதான். ஏன்னா அதுக்கு மட்டுமே சொந்தமான மணி அத்தை பாசம் பூராவும் இப்ப என் பக்கம் திரும்பிடிச்சே! அந்தளவு அவங்களுக்குள்ள ஒரு நெருக்கம்! என்னமோ சொல்வாங்களே ‘உசிர் தோழி’ன்னு... அதை நான் அவங்ககிட்டத் தான் பார்த்தேன். ஒருநாள் கூட அவங்க ரெண்டு பேரும் பார்க்காம இருக்கவே மாட்டாங்க. அப்படியொரு கூட்டு.



மணி அத்தை ஒருநாள் வாசலில் உட்கார்ந்து மடியில என்னை வெச்சுக் கொஞ்சிக்கிட்டிருந்துச்சு. அப்ப அப்பத்தா வந்து, ஏலா... மணி... அந்தா அந்தச் சருவச் சட்டில மொச்சப் பயத்த ஊறவெச்சு மொளக்கட்ட வெச்சிருக்கேன். அதயெடுத்து தோலப் பிதுக்கிட்டு புளிச்சாறு வையி. பெறகு அந்த ரெண்டாவது அடுக்குப் பானைல சாம அரிசி இருக்கு. அதில ஒரு அரப்படி போட்டு வடிச்சு வையி. ஒழவுக்குப் போன ஙொண்ணன் உச்சிக்கு வீட்டுக்கு வந்திருவான் கஞ்சிக்கு


. அதுக்குள்ள கஞ்சி தண்ணி காய்ச்சி வக்கிற சோலியப் பாருடீ. அதவிட்டுப்புட்டு ஒஞ்சோட்டுக்காரி அந்த ‘அமுக்கி முத்தம்மா’ மூக்கையா மக கூட சேந்து சொட்டாங்கல்லு ஆடுறதும் சோழிமுத்து ஆடுறதுமிண்டு பொழுதப் போக்கடிக்காத. நான் பேச்சியக்கா கூட மேற்கு மலைக்கு வெறகுக்குப் போயிட்டு வாரேன்"ன்னுட்டே மூலையிலேர்ந்த பானைலேர்ந்து புளிச்சதண்ணிய ரெண்டு சொம்பு மோந்து குடிச்சுப்புட்டு, சும்மாட்டுத் துணியும், வெட்டறுவாளும் எடுத்துக் கக்கத்தில வெச்சிக் கிட்டுக் கௌம்பிடிச்சு அப்பத்தா.



அப்பத்தா போனொன்னே மணி அத்தை என்னைப் பார்த்து எஞ்செல்லக் குட்டி... இங்கனயே ஒக்காந்து வெளாடுவியாம். அத்தை உனக்கு மொச்சப் பயறு உரிச்சு புளிச்சாறு வெச்சு, சாமக்கஞ்சி காய்ச்சி ஊட்டி விடுவனாம்"ன்னு சொல்லிக்கிட்டே உள்ளே போய் சருவச்சட்டிய எடுத்திட்டு வந்த அத்தை அப்பிடியே அதையே வெச்ச கண்ணு வாங்காமப் பறந்துகிட்டு நிக்கிது. நான் என்னமோ ஏதோன்னு அத்தை மொகத்தைப் பார்க்கிறேன்.


அந்த மொளச்ச பயத்தை அப்பிடியே கையில அள்ளிப் பார்த்த அத்தை, ஆத்தத்தோ... இப்பத்தான் தொப்புள்கொடி அறுத்த பச்சப் பிள்ள கணக்கா இருக்கேத்தே...! இதப்போயி எப்பிடி மனசொப்பி உரிச்சுப் புளிச்சாறு வக்கிறது?"ன்னுட்டு சட்டிய கீழ வெச்சிட்டு வீட்டுக்குள்ள ஓடிப் போயி ஒரு கொத்தை எடுத்து வருது. கொல்லப் பக்கமாய்ப் போயி மண்ணப் போட்டுக் கொத்துது. பெறகு அந்தப் பயறு பூராத்தையும் மண்ணில கொட்டித் தண்ணியத் தெளிச்சு விட்டுட்டு, பொழச்சுப் போங்க"ன்னுட்டுத் திரும்பி வருது. இப்ப அத்தை மொகத்தப் பாக்கணுமே... அம்புட்டுச் சந்தோஷம்! எனக்கு ஒண்ணும் புரியலை.





பிறகு கொஞ்ச நேரத்திலேயே மணி அத்தை சாமக்கஞ்சி காச்சி, மௌகு ரசம் வச்சு, தேங்காத் தொவையல் அரச்சு எனக்கு ஊட்டி விட்டுச்சு. அப்பா! என்னா ருசி! அப்பிடியே சர்ர்...ன்னு நாக்கில ஊறிச்சு. எத்தனை காலமானாலும் அந்த ருசி நாக்க விட்டுப் போகாது.



பிறகு, சித்தப்பா வந்து மொணங்கிக்கிட்டே சாப்பிட்டு அப்பிடியே தூங்கிடிச்சு. ஆனா அதுக்குப் பிறகு வெறகுக் கட்டோட வந்த அப்பத்தாதான் மணி அத்தையைப் பேயோட்டிருச்சு.

ஏண்டீ... கேனப்பய மகள... நான் என்னா சொல்லிட்டுப் போனேன். நீ என்னாடி செஞ்சு வெச்சிருக்கவ? எங்கடி மொச்சப் பயத்த?"



அப்பத்தா, அத்தை, அதை மண்ணில கொட்டிடுச்சு" என்று விவரம் தெரியாமல் நான் போட்டுக் கொடுக்க, அப்பத்தா மாரியாத்தா கணக்கா கத்துது! சித்தப்பாவும் எந்திரிச்சு அது பங்குக்குத் திட்டுது மணி அத்தையை. அதோட மணியத்தையோட கூட்டுக்கார அக்காவையும் சேத்துத் திட்டுது. அதாலதான் மணி அத்தை கெட்டுப் போகுதாம்! இப்பிடியே காலம் ஓடுது. நானும் பள்ளிக்கொடம் போயி இப்ப மூனாப்பு படிக்கிறேன்!



அன்னிக்குப் பொழுதுசாய நேரம் மணியத்தையோட கூட்டுக்காரக்கா வேகவேகமா, நல்லநாய் சாட்டிட்டாய்ங்கடீ. இந்த வருசமாச்சும் எப்பிடியும் மொளப்பாரி எடுத்திடணும்டி. நானும் போன ரெண்டு வருசமா நெனச்சிக்கிட்டேருக்கேன். ஒண்ணுந் தோதுப்படலடி. இந்த வட்டம் உங்க வீட்லயே ரெண்டு பேரும் சேந்து மொளப்பாரி வளக்கலாம்டி மணி. நீ என்னாடி சொல்றே?"



எனக்கென்னமோ கொஞ்சங்கூட ஒப்பலடி. பாவம், கானப்பயத்தையும் தட்டாம்பயத்தையும் தண்ணி ஊத்தி வளத்திட்டு பாங்கெணத்தில கொண்டு போய் கொட்றதுக்கு எப்பிடி டீ மனசு ஒப்புது உங்களுக்கு?"ன்னுச்சு மணி அத்தை.



இவ ஒருத்தி... சீமைலயில்லாதவ! எதெதுக்குத்தான் பாவ புண்ணியம் பாக்கிறதிண்டு வெவஸ்தயே இல்ல?"


எனக்கு ஒப்பல. வேணுமிண்டா நான் மாவௌக்கு எடுக்கிறேன்"ன்னுச்சு மணி அத்தை.



க்கும்டி.. மாவௌக்கெடுக்கிறதுன்னா கிள்ளுக்கீறன்னு நெனச்சியா?"

இங்க பாரு... எங்க வீட்ல ரெண்டு ஓட்டப்பான கெடக்கு. நான் போய் எடுத்துட்டு வாரேன். நீ காப்படி கானப்பயறு, தட்டாம்பயறு, ஒரு அரைக்காப்படி பாசிப் பருப்பும் மட்டும் எடுத்து வை"ன்னுட்டு ஓட்டோட்டமா ஓடிப் போச்சு.

மணி அத்தை கூட்டுக்காரிக்காக ஒத்துக்கிச்சு.

கோபமாய் வந்த அப்பத்தா, மணி அத்தையைப் பார்த்துக் கத்துது.

பயத்தப் பூரா அள்ளிக்கிட்டுப் போயி? என்னாடி செய்யப் போறவ?"


கோயிலுக்கு மொளப்பாரி வௌக்கப் போறோம்த்தா."


ஙொண்ணஞ் சொன்னது சரியாத்தான் போச்சு. ஏன்டி, அந்த அமுக்கி முத்தம்மா கூடச் சேந்து வீணாப் போறவ. ஒனக்கெதுக்கு அந்தச் சோலி? பேசாம பயத்தக் கொண்டு போய் பானைல போட்டுட்டு வேற சோலி கெடந்தாப் பாரு. அந்தச் சிரிக்கி மூக்கையா மக இங்கன வரட்டும் பேசிக்கிறேன்."



ஏன் ஆத்தா எல்லாப் பேரும் அவளவே வய்யிறீங்க? நீங்க நெனக்கிற மாதிரிலாம் அவ கெட்டவ கெடையாது ஆத்தா. அவ உடுத்திச் சிங்காரிச்சிட்டு வாறதைப் பார்த்து எல்லாமே அவள மோசமா நெனக்கிறீக. ஆனா அவளுக்குப் பச்சப்புள்ள மனசு ஆத்தா."

க்கும்... ஒடனே ஒசாரத்துக்கு வந்திருவியே ஒஞ்சோட்டுக்காரிக்கு. உன்னோட சோட்டுக்காரி சரியில்லைன்னு உன் அண்ணந்தான் சொல்லிருக்கான். பாத்துடி மணி. ஒன்னிய கரை சேக்கிற வரைக்கும் நான்தான வயித்தில நெருப்பக் கட்டிக் கிருக்கணும்?"



ஆத்தா... எனக்கும் இந்த மொளப் பாரியும் களுதையெல்லாம் ஒப்பலதான் ஆத்தா. பாவம் அவ ஆசப்பட்றாளேண்டு தான் இந்த ஒத்த தடவ மட்டும் சரின்னு சொன்னேன் ஆத்தா"ன்னு சொல்லி அப்பத்தாவ ஒருவழியா ஒத்துக்க வச்சிச்சு மணி அத்தை.



ரெண்டு மண் பானையோட வந்த மூக்கையா மக, அதை அப்பிடியே பண்ணருவாளக் கொண்டி கொத்திக் கொத்திப் பக்குவமா ஒடச்சிச்சு. மேல்பாதியைக் குப்புறக்கா கவுத்துப் போட்டு கீழ்ப்பாதிய அது மேல வச்சு செம்மண்ணும், மணலும், காஞ்ச பசுஞ்சாணியும் கலந்து அதில ரெப்பிச்சு. நல்லா சமமா பரப்பின மண் மேல நடுக்கொண்டு வட்டமாய் கொஞ்சம் கானப்பயத்த தூவுது. அதச்சுத்தி இன்னொரு வட்டமாய் கொஞ்சம் தட்டாம் பயத்தையும், ஓரமா பாசிப் பயத்தையும் ஒரு வட்டமாய்த் தூவிச்சு. மிச்ச மண்ண அள்ளி அது மேல தூவி, கொஞ்சம் தண்ணியத் தெளிச்சு ஓரமாய் வச்சிருச்சு. அதே மாதிரி ரெண்டு தயார் பண்ணிட்டு, இந்தாடி மணி... அம்புட்டுதாண்டி. இப்பிடியே இதுகள தூக்கிட்டுப் போயி வெயில் படாத மூலையில வச்சு பஞ்சாரத் தப்போட்டு மூடி வையி. தெனமும் விடியக் கருக்கல்லயம் பொழுதுசாய நேரத்திலயும் கொஞ்சம் தண்ணிய தெளிச்சு மூடிட்டா போதும். எட்டா நாள் எடுத்துப் பாத்தா அம் புட்டழகா வளந்திருக்கும் மாளப்பாரி! செப்புப் பானையை வௌக்கிச்சோடி அது மேல அப்பிடியே தூக்கிவச்சி கொண்டுக்குப் போக வேண்டியதுதான். நான் வாறண்டீ மணி"ன்னு கௌம்பிடிச்சு அந்தக்கா.



ஒரு வாரம் ஓடிப் போச்சு. பொழுது விடிஞ்சா கோயில் நல்ல நா. ஊரே சடங்கான கொமரிப்பிள்ளை கணக்கா சிங்காரிச்சு நிக்கிது. தெருவுக்குத் தெருவு எங்க பாத்தாலும் வேப்பிலையும், மாவிலையுமா தொங்குது. வாழமரம் வேற கட்டியிருக்கு. திரும்பின பக்கமெல்லாம் கொழா ரேடியா காதைப் பொளக்குது. பள்ளிக்கொடம் விட்டொன்னே நேரா அப்பத்தா வீட்டுக்குத் தான் போனேன். மணி அத்தையைப் பாக்க. வீட்ல யாரையும் காணோம். சித்தப்பா மட்டும் இடுப்பில ஒரு துண்டைக் கட்டிக்கிட்டுக் கண்ணாடியைப் பாத்து மொகமழிச்சிக்கிட் டிருந்திச்சு.





மணி அத்த எங்க சித்தப்பா?" என்றேன்.



தெருக் கொழாய்ல தண்ணி புடிக்கப் போயிருக்கும்டா. போய்ப் பாரு"ன்னிச்சு சித்தப்பா.




சரின்னிட்டுக் குடுகுடுன்னு வெளிய ஓடியாந்தனா அப்பத்தான் மூக்கையா மக வருது எதிர.




எங்டகா ஙொய்த்தய? மொளப்பாரிக்குத் தண்ணி கிண்ணி ஊத்தினாளோ என்னமோ"ன்னுக்கிட்டே வீட்டுக்குள்ள போச்சு. கொஞ்ச நேரத்தில அழுதுகிட்டே வெளிய ஓடியாந்திச்சு. அப்பத்தான் இடுப்புல தண்ணிக் கொடத்தோட மணி அத்தை வருது எதிர்ல. ஏய்.. .என்னாடி அழுகிறவ? ஆத்தா ஏதாச்சும் வஞ்சிச்சா? சொல்லுடி"ன்னு பதறிப் போயி கேக்குது மணி அத்தை.

மணி... நான் உசிரோடு இருக்க மாட்டேண்டி. எங்கூடப் பெறந்தவங்கெணக்காத்தானடி நெனச்சேன் நானும்... இப்பவே நாண்டுக்கிட்டுத் தொங்கலைன்டா நான் மூக்கையாவுக்குப் பெறக்கலடி..."ன்னு அழுதுக்கிட்டே வேகமா ஓடுது அந்தக்கா.

விடியக்கருக்கல்ல கொட்டுச் சத்தம் கேட்டு எந்திரிச்சுப் பாத்தா தெருவுல ஆம்பளையும் பொம்பளையும் மஞ்சத் தண்ணியைக் கலக்கி வச்சிக்கிட்டு அவுக அவுக மொறப் பிள்ளைக மேல ஊத்தி ஒரே அலம் பல் பண்ணிட்டுத் திரியுதுக. அத்தையோட மொகத்திலதான் சிரிப்பே காணோம்.



பொழுதுசாய நாலு மணிக்கெல்லாம் கோயில்லேர்ந்து கொழா ரேடியால கூப்பிடுறாய்ங்க. மொளப்பாரி தூக்கிற பொம்பளப் பிள்ளைகள்லாம் உடனே கௌம்பி கோயில் மண்டபத்துக்கு வரவும்"ன்னு. மணி அத்தை அவசரமாய் தயாராகுது. மூக்கையா மக வந்து வீட்டுக்கு வராம தெருவோரமாய் நிக்குது. ‘அமுக்கி முத்தம்மா’வா வாற அக்கா இன்னக்கென்னமோ ‘அழுக்கு முத்தம்மா’வா வந்திருக்கு. எனக்கே ஆச் சர்யமாய்ப் போச்சு. பெறகு மணி அத்தைதான் ரெண்டு மொளப்பாரியையும் தூக்கிட்டு வந்து ஒண்ண அது கூட்டுக்காரிகிட்ட குடுத்திட்டு, இன்னொன்ன தூக்கி மண்டைல வச்சிக்கிட்டு அப்பிடியே கோயில் மண்டபம் போகுதுக. நானும் கூடவே போறேன்.



ஒரு சுத்துச் சுத்தி திரும்ப கோயில் மண்டபத்துக்கு வந்திட்டு கோயில் கெணத் தில தொப்புக்கட்டி தொப்புக்கட்டின்னு மொளப் பாரிய போடுதுக. அப்பத் தான் பாக்கிறேன் மணி அத்தையை. வரிசையில காணம்! மூக்கையா மககிட்ட கேக்கிறேன்.



ஓட்டோட்டமா அப்பத்தா வீட்டுக்குத் தான் போனேன். அங்கன நான் பாத்தது மணி அத்ததானா? மூஞ்சியெல்லாம் வீங்கி, கண்ணுலாம் செவந்து, ஒதட்டுக்கிட்ட காயம் வேற. பாக்கவே என்னமோ மாதிரி இருந்திச்சு. நான் கிட்டப் போயி, என்னாத்தே?"ன்னவொடனே என்னிய அப்பிடியே கட்டிப்புடிச்சிட்டு அழுதுச்சு. ஒடனே கண்ணத் தொடச்சிட்டு, ஒண்ணு மில்லடா செல்லம். நீ வெரசா பள்ளிக் கொடம் கௌம்பு"ன்னு சொல்லி என் கன்னத்தில அழுத்தமா ஒரு முத்தம் குடுத்திச்சு.

பொழுதுசாய பள்ளிக்கொடம் விட்டு அப்பத்தா வீட்டுக்குப் போகலாமின்னுட்டுப் போனா ஊர்ப் பொம்பளைகளும் பெரிசுகளும் கூடி நிக்கிதுக. ஒரே ஒப்பாரிச் சத்தம்! கூட்டத்துக்குள்ள முண்டியடிச்சு உள்ள போயி பாக்கிறேன். மண்டையே வெடிக்கிறாப்ல இருக்கு. கூடியிருந்த பொம்பளைக பேசிக்கிச்சுக.

யே... யாத்தே.... அப்பிராணிப்பிள்ள இந்த மணி போயி இப்பிடிச் செய்வாளாக்கா? அந்த மூக்கையா மகதான் என்னமோ செஞ்சு பாவம் இந்தப் பச்ச மண்ணையும் சேத்துக் கூட்டிட்டுப் போயிருப்பா. சாவுல கூட ரெண்டு பேருக்கும் எம்புட்டு ஒத்தும பாத்தியாக்கா? தாவிணித் துணியைப் போட்டு ரெண்டு பேரும் இடுப்பச் சேத்துக் கட்டியிருக்காளுக. ரெண்டு பேர் சடையும் ஒண்ணா முடிஞ்சு, ரிப்பன் துணியப் போட்டு ரெண்டு பேர் கால்களையும் ஒண்ணாக்கட்டி, கைக்குக் கைகோத்த மேனிக்கி ஒண்ணா குருவனூத்துப் பாலத்தில ஏறி பெரியாத்தில தவ்வி யிருக்காளுக!



அங்கேருந்து ஒரு மயில் தொலவுல மரத்துப் பாலத்துக்கிட்டத்தான் கண்டுபுடிச்சுத் தூக்கியிருக்காக. காட்டுப் பொணத்த வீட்டுக்குக் கொண்டு வரப்பிடாதின்னு அங்கனயே எரிச்சுப்பிட்டு வந்திட்டாகலாம்கா. பாவி மக... மூஞ்சியக் கூட பாக்க முடியாமப் போச்சேக்கா..."ன்னு மூக்கச் சிந்திக்கிட்டு அழுகுதுக.



‘மணி அத்தை செத்துப் போச்சா!?’ என்னால ஏத்துக்கவே முடியலை.



நேத்து நீ தூங்கினப் பெறகு நான் அப்பத்தா வீட்டுக்குப் போயிருந்தேன்டா. அப்ப.. சித்தப்பா மணியத்தையப் போட்டு வௌக்கமாத்தக் கொண்டி அடிச்சிச்சு. மொளப்பாரியத் தூக்கிட்டு மந்தக்காட்டுக்கு எவனப் பாக்கலா போனேன்னு கேட்டு ரொம்ப நேரமா அடிச்சிச்சு..." அக்கா சொல்லிக்கிட்டிருக்கும் போதே என்னையறியாம மணியத்தே...."ன்னு கத்திட்டேன். அக்காவும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுகுது. எப்படா விடியும்னு முழிச்சிக்கேருத்தேன்.


 பொழுது விடிஞ்சொன்ன எந்திரிச்சு ஒரே ஓட்டமா மந்தக்காட்டுக்கு ஓடுறேன். அங்கன போயி மூச்சு வாங்க ஆவலா நாலாபக்கமும் தேடறேன். ஒரு மூலையில வரப்போரமா ஈர மண்ணில மணி அத்த கொட்டின (நட்டுவச்ச) மொளப்பாரி! ஓடிப் போயி கிட்டத்தில ஒக்காந்து அதுகளத் தடவிப் பாக்கிறேன். அப்படியே எம்மணியத்தையோட சிரிச்ச மூஞ்சி அதில தெரியுது! என் மணியத்தை சாகல... என் மணியத்த சாகல..."ன்னு கத்துறேன்.



சித்தப்பாவப் பார்க்கப் புடிக்கலை.எனக்கு அதுக்குப் பெறகு அந்த வீடு மட்டுமில்ல. அந்த ஊரே ஒப்பாமப் போச்சு.



ஹும்... காலம் உருண்டோடிப் போச்சு. போன வருஷம் அந்த மனுசன் சாவுக்குக் கூட நான் போகவேயில்லை. இதோ... இப்ப எனக்கும் ஒரு வயசுக்கு வந்த மக இருக்கா. பேர் ‘மணிப்பிள்ளை’!



டாட்... டாட்... என்ன டாட்... ஒரு மாதிரியா ஃபீல் பண்றீங்க..." என்று என் மகள் என்னை உலுக்க...



ஆங்... மணியத்தை... மொளப்பாரி..." என்று நான் உளற...



ஓ... டாட்... இன்னும் நீங்க அதப்பத்திதான் திங்க் பண்ணிட்டு இருக்கீங்களா? ‘தி மேக்கிங் அஃப் மொல்பாரிய’ கிராம் ஃபெஸ்ட் டமில்நாட் டாட்காம்ல போயிட்டு நான் பார்த்திட்டேன் டாட்" என்கிறாள் என் மகள்.



இப்போதுதான் நன்றாகக் கவனித்தேன் என் மகளின் கண்களை. ஆம், மணி அத்தையேதான்!


 நன்றி  கல்கி, புலவர் தருமி

0 comments: