Friday, August 31, 2012

விழா மாலைப் பொழுதில்- அசோகமித்திரன் -சிறுகதை

அறை வெளியே நிறைய நடமாட்டம் கேட்டது. நான் வெளியே வந்தேன். ஒரு அதிகாரி என்னைத் தடுத்து நிறுத்தி, ”இனாகுரேஷனுக்கு முந்தி ஒரு இன்டர்வியூவும்  கிடையாது என்று உனக்குத் தெரியாது? உன் கார்டைத் தடுத்து நிறுத்தி  விடுகிறேன் பார், நீ ·பெஸ்டிவல் உள்ளேயே நுழைய முடியாது” என்றான்.

அப்போது புடைசூழ ஜெயதேவியும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்து,
”மறக்காதீங்க சார். கட்டாயம் ஹோட்டலுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு
என்னைக் கடந்து போனாள். அந்த அதிகாரி அவளைப் பின் தொடர்ந்து போனான்.

துவக்க விழா கலாட்டாவும் கூத்தாகவும் இருந்தது. சாலையில் போலீஸ்காரர்கள்  கூட்டத்தைக் கலைக்க தடியடி செய்திருக்கிறார்கள்.

மேடையில் அடுத்தடுத்து அபத்தமும் உளறலும். சினிமாத்துறைத் தலைவர்கள் கையை  வீசிப் பிதற்றினால் மத்திய மாநில மந்திரிகள் அசையாமல் நின்று
பிதற்றினார்கள். இதெல்லாம் எனக்குப் பழக்கமாகிப் போனவை. மந்திரி ஒருவர்
காது கொடுக்கக் கிடைத்தால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு சினிமாப்
பிரமுகர் தவறாமல் சினிமாத் தொழிலே நசித்துச் செத்துக்கொண்டிருக்கிறது
என்றும், அந்த மந்திரி உடனே அத்தனை வரிகளையும் ரத்து செய்து அவர்கள்
அடுத்த நிமிடம் உயிர் வாழ அரசாங்கம் இன்னும் உதவிகள் புரிய வேண்டும்
என்பார்கள். மந்திரிகள் தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியம், எப்படி
மூலை முடுக்கெல்லாம் சினிமாவும் சினிமா நடிகர்களும் பாட்டுகளும் ஊடுருவி இருக்கின்றன என்றும், நாட்டின் அத்தனை இடர்பாடுகளையும் தீர்க்கும்படியான கருத்துப் படங்களையே சினிமாத் தயாரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என்பார். அதே மந்திரி மேடையில் நடிகை என்று ஒருத்தி இருந்துவிட்டால், அவர் உரையில் பாதி அவளுக்குத்தான் என்பதுபோலத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பேசுவார். அந்த நடிகை எழுந்தால் அவர் எழுந்துவிடுவார். அவள் அவருக்கு மாலை அணிவித்தால் அவருடைய உயரம் அரை அடி உயரும் அல்லது குறையும். இதெல்லாம் அங்கிருப்போருக்குத் தேச முக்கியத்துவம் உடையதாகத் தோன்றக் கூடும். உண்மையிலேயே அதுதான் உண்மையோ என்னவோ?

என் கண்களுக்கு எல்லாமே அபத்தக் களஞ்சியமாகத்தான் தோன்றியது. அஷோக்குமார் சற்று முதிர்ச்சியுடன் பேசக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் அவரும் தடுமாறினார். அவருக்கு அது திரைப்பட விழா ஒன்றின் துவக்க நிகழ்ச்சி என்றே மறந்துவிட்டது. சட்டென்று நினைவுக்கு வந்து திரைப்பட விழாக்களின்
இன்றியமையாதத் தன்மையை அவர் எப்போதும் உணர்ந்ததாகக் கூறினார்.

முன்னர் இதே மாதிரி ஒரு நிகழ்ச்சியில் வேறோர் நகரில் தேவிகாராணி பேசியது எனக்கு நினைவுக்கு வந்தது. விழாவுக்கு வராத அயல்நாட்டு டைரக்டர்களை எல்லாம் அவள் வரவேற்றாள். அந்த டைரக்டர்கள் வரவில்லை, அவர்கள் படங்களைத்தான் காட்டப் போகிறது என்று விழா நெறியாளர் அவளுக்கு மேடையிலேயே சொன்னார். ஏன் எனக்கு முன்னமேயே இதெல்லாம் சொல்லவில்லை என்ற அவள் சிறிது
கடுகடுத்தாள். ஒரு வைபவத்துக்காக யாரையாவது அழைத்தால் அந்த நபரிடம்
முன்கூட்டியே முக்கிய விவரங்களைத் தெரிவித்துவிட வேண்டும் என்றாள்.
எனக்கு அஷோக்குமாரே தேவிகாராணியாக மாறிவிட்டது போலிருந்தது. அவரும் அவளும் சேர்ந்து நடித்த ‘அச்சுத் கன்யா’ கண்முன் தோன்றியது. செக்கச் செவேலென்று இருக்கும் வதனத்துடன் படிப்படியாக வாரிப் பின்னப்பட்ட கறுத்த கேசத்துடன் அவள் ஹரிசனப் பெண்ணாக நடித்தாள். அப்போது அவள் காதலன் யாராக இருக்க முடியும்? பிராமணப் பையனாக அஷோக்குமார். யாராவது தேவிகாராணிதான் பிராமணப் பெண், அஷோக்குமார் ஹரிஜன இளைஞன் என்று கூறியிருந்தால் தயங்காது
நம்பிவிடலாம். அந்தப் படத்தை ஒரு ஜெர்மன் டைரக்டர் டைரக்ட்
செய்திருந்தார். ஆதலால் தேவிகாராணியும், அஷோக்குமாரும் சர்வதேசத்
திரைப்பட விழாவைத் துவக்க மிகவும் பொருத்தமானவர்கள். பிராமணப் பையன், ஹரிஜனப் பெண் எப்படிப் பார்த்தாலும் காதல் நிறைவேறாது. ‘அச்சுக்
கன்யா’வில் நிறைவேறவில்லை. ஆனால் அதன் பிறகு வந்த பல படங்களில் அத்தகைய காதல் கைகூடிவிடும் ஒரே ஒரு வில்லன் எதிர்க்க எட்டுப் பேர் கதாநாயகனையும் கதாநாயகியையும் மணமுடித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று செயல்படுவார்கள். இந்த எட்டுப் பேரில் காமெடியனும் ஒருவனாக இருப்பான். முடிவில் அவனும் அவனுடைய ஜோடியை மணந்துகொள்வான்.

அஷோக்குமார் மேலும் மேலும் தடுமாற எனக்கு ‘அச்சுத் கன்யா’ அப்படியே
சென்னை வரையில் விரிவடைந்தது.

ஒரு வழியாக அஷோக்குமார் அவர் பேச வேண்டியதையும் பேச வேண்டாததையும் பேசி முடித்துவிட்டார். அடுத்துக் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். இந்த சினிமாக்காரர்களுக்கு புத்தி ஏதாவது இருக்கிறதா? ஒரு ஆர்க் லாம்ப்பை ஏற்றச் சொல்லக்கூடாது? குத்துவிளக்காம் குத்துவிளக்கு! எல்லாம் பத்திண்டு
எரியும்.

சூட்டும் டையும் அணிந்த அஷோக்குமார் மேடையோரத்தில் வைக்கப்பட்ட பெரிய குத்துவிளக்கருகே சென்றார். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து திரி. ஒரு திரியை ஏற்றினால் போதாது. ஐந்தையும் ஏற்றவேண்டும்.

சூட்டும் டையும் அணிந்த திரைப்பட விழா அதிகாரியும் குத்துவிளக்கருகே
சென்றார். அது போதாது என்று மாநில முதலமைச்சர். அவர் ராஜரிஷி, அல்லது
பக்கிரிராஜா அல்லது கோலோச்சும் சந்நியாசி. அவருடைய கஷாயத்தைவிட
நெற்றியில் தரித்திருந்த குங்குமப் பொட்டு பயமுறுத்தியது.

அஷோக்குமார் குத்துவிளக்கை ஏற்றத் தயாராக இருந்தார். ஆனால் அவராக
ஏற்றிவிடக் வடாது. ஜெயதேவி துணைபுரிந்தபடிதான் அவர் ஏற்ற வேண்டும்.
அப்படித்தான் செய்தி ஒலிபரப்பு இலாகாவும், திரைப்பட விழா நெறியாளர்
அலுவலகமும், மந்திரியும், முதல் மந்திரியும் நிர்ணயித்தார்கள். ஜெயதேவிக்
குச்சியை கிழிக்க அதை வாங்கிக் கொண்டு அஷோக்குமார் திரிகளை ஏற்றுவார். ஆனால் நெருப்பை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் வாங்கலாமா? பெருத்த அபசகுனமாச்சே! அதிலும் எடுத்ததற்கெல்லாம் சகுனமும் ஜோசியமும் பார்க்கும் சினிமாக்காரர்கள் விழாவில் அபசகுனமாக ஒன்றும் நடக்கக்கூடாது. முதலிலும் முடிவிலும் திருப்பதி சாமிக்குப் பூஜை நடத்தியாக வேண்டும். அந்த நாளில் வேறு எந்த கோயிலருகே சாமியார் பிரபலமாயிருக்கிறாரோ அவருடைய ஆசியைக் கோர வேண்டும். இங்கே ஹைதராபாத் பிரபல சாமியார் யார்?

எங்கிருந்தென்ற தெரியாமல் ஜெயதேவி மேடையில் தோன்றினாள். முன் நான்கைந்து வரிசைகள் தவிர இதரப் பார்வையாளர் மத்தியில் கரகோஷமும் சீட்டியடித்தலும் நிகழ்ந்தன. ஜெயதேவி சிலைக்குரிய முகத்தை மிகுந்த தேர்ச்சியோடு நிலைத்து வைத்துக் கொண்டிருந்தாள். இதைத்தானே ‘சஸ்டெயிண்ட் எக்ஸ்பிரஷன்’ என்பார்கள்?

ஒரு பெண்மணி மெழுகுவர்த்தி ஒன்றைக் கொண்டுவந்தாள். அது சிவப்பு
வர்ணத்தில் முறுக்கேறியதாக இருந்தது. ஜெயதேவி நெருப்புக் குச்சியால் பற்ற வைக்க முயன்றாள். மூன்று குச்சிகளாலும் முடியவில்லை. அஷோக்குமார் முதல் குச்சியிலேயே மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்துவிட்டார். எவ்வளவு லட்சம் சிகரெட்டுகளைப் பற்ற வைத்திருப்பார்? விழா நெறியாளர்கள் கைகாட்ட அஷோக்குமார் குத்துவிளக்குத் திரிகளைப் பற்ற வைப்பதில் முனைந்தார். ஒன்று எரித்தால் முந்தையது அணைந்தது. கடைசியாக எல்லாத் திரிகளையும் ஏகமாக வெளியே இழுத்துப் பற்ற வைக்க ஒரு தீவட்டி போல எரிந்தது. நான் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து ‘ஹாஹா’ வென்று சிரித்தேன். அரங்கம் முழுவதும் கரகோஷம் செய்தது. ஜெயதேவி முதலில் என்ன செய்வதென்று நின்றாள். அப்புறம் அவளும் கைதட்டினாள்

2 comments:

Yoga.S. said...

அருமை!அசோகமித்திரன் கதைகள் நகைச்சுவையுடன்,விழிப்பையும் ஏற்படுத்துபவை!

ராஜி said...

thanks for sharing