Wednesday, June 29, 2016

அம்மா கணக்கு - திரை விமர்சனம்:

அறிமுக இயக்குநர் அஷ்வினி ஐயர் திவாரியின் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான ‘நில் பத்தி சன்னாட்டா’ என்ற இந்தி படத்தின் ரீமேக் ‘அம்மா கணக்கு’. தமிழிலும் அஷ்வினியே இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராயுடன் இணைந்து நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.


வீட்டு வேலைக்காரியாக இருக்கும் சாந்தியின் (அமலா பால்) கனவாக அவளுடைய மகள் அபி என்கிற அபிநயா (யுவஸ்ரீ) இருக்கிறாள். அவளை எப்படியாவது படிக்கவைத்து வாழ்க்கையில் நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுகிறாள். காலையில் டாக்டர் நந்தினி (ரேவதி) வீட்டில் வேலைபார்க்கும் சாந்தி, நான்கு இடங்களில் வேலைபார்த்து அபியைப் படிக்கவைக்கப் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறாள்.



பத்தாவது படிக்கும் அபிக்கோ படிப்பில் சுத்தமாக ஆர்வமில்லை. எப்போதும் டிவி, ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருக்கிறாள். தன் மகளின் பொறுப்பற்றதனத்தைப் பற்றி தினமும் தன் முதலாளியம்மா நந்தினியிடம் புலம்புகிறாள். ஒரு கட்டத்தில், அபியை வழிக்குக் கொண்டுவர அவள் அம்மா அதிரடியாக ஒரு முடிவை எடுக்கிறாள். அந்த முயற்சி வெற்றிபெற்றதா, அம்மாவின் கனவை அபி புரிந்துகொள்கிறாளா இல்லையா என்பதுதான் ‘அம்மா கணக்கு’.




அமலா பாலின் நெருக்கடியும் அதைத் தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளும் முதல் பாதியில் பிசிறின்றிக் காட்டப்படுகின்றன. பிரச்சினைக்கான தீர்வாக ரேவதி முன்வைக்கும் யோசனை நடைமுறை யில் சாத்தியம்தானா என்பதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் இருந்தால் முதல் பாதியை ரசிக்க லாம். அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவைக் காட்டும் காட்சிகளும் வசனங் களும் பொருத்தமாக உள்ளன. குறிப்பாக இடை வேளைக்கு முன்பு இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி அழுத்தமாக உள்ளது.



மொத்தப் படமுமே நாடகத்தன்மை கொண்டிருந் தாலும் இரண்டாம் பகுதியில் அது தூக்கலாகத் தெரிகிறது. ஆங்காங்கே வரும் திருப்பங்கள் படத்தை ஓரளவு சுவையாக ஆக்கினாலும் எதுவுமே பார்வையாளர்களைப் படத்தோடு ஒன்றச்செய்யும் அளவுக்கு இல்லை.



நானும் வேலைக்காரியாக விரும்புகிறேன் என்று 15 வயதுப் பெண் சொல்கிறாள். தன்னுடைய தேர்வு அது என்றும் அழுத்தமாகச் சொல்கிறாள். அவள் அப்படிச் சொல்வதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்த இயக்குநர் மெனக் கெடவில்லை. கடைசியில் அவள் மனம் மாறும் காட்சியும் அவள் பார்வையில் ஏற்படும் மாற்றமாக இல்லாமல், சென்டிமென்ட் சார்ந்ததாக இருப்பதும் படத்தின் ஆதார நோக்கத்தைப் பலவீனமாக்குகிறது.



மறு ஆக்கப் படங்களுக்குக் கூடுதல் கவனம் தேவை. சற்றுப் பிசகினாலும் மறு ஆக்கப் படங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடிய குறைபாடுகள் இப்படத்தில் பல இடங்களில் வெளிப்படுகின்றன. ‘நில் பத்தி சன்னாட்டா’வுடன் ஒப்பிடும்போது இதில் கதாபாத்திரங்கள் தேர்வு கச்சிதமாக இல்லை. அமலா பாலின் நடிப்பு நன்றாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்துவதற்கு அவர் எடுத்திருக்கும் முயற்சி பெரியளவு எடுபடவில்லை. 15 வயதுப் பெண்ணுக்குரிய பாவனைகள், உடல் மொழி, பேசும் விதம் ஆகியவற்றை யுவ நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். ரேவதி போகிறபோக்கில் நடித்ததுபோல இருக்கிறது, சமுத்திரக்கனியின் பாத்திரம் அவருக்குப் பொருந்த வில்லை. நகைச்சுவைக்காகத் திணிக்கப்பட்ட விசித்திரமான உடல் மொழி ஒட்டவே இல்லை.



வசனங்கள் இந்தியிலிருந்து அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் சில இடங்களில் பொருத்தமாக இல்லை. ‘கணக்கு பெண்களுக்கு பழைய எதிரி’ என்று சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது. ஆனால், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வசனங்கள் நன்றாக உள்ளன.


இளையராஜாவின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. பாடல்கள் பெரும்பாலும் காட்சிகளுக்குப் பின்புலமாகவும் சுருக்கமாகவும் ஒலிப்பதால் அவற்றைத் தனித்து உணர முடியவில்லை. ஓரிரு இடங்களில் பாடல்களின் முதல் வரிகள் ஈர்க்கின்றன.


வாழ்க்கையை மாற்றும் சக்தி கல்விக்கு இருக் கிறது என்ற செய்தியை வெகுஜன மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஷ்வினி. அந்த முயற்சி பாராட்டுக்குரியது


நன்றி - த இந்து

0 comments: