Monday, March 09, 2015

கொம்பன் - பருத்தி வீரன் பாகம் 2 ? - வசூல் இளவல் கார்த்தி பேட்டி

'பருத்தி வீரன்' பாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது 'கொம்பன்' பாத்திரம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி தெரிவித்தார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'கொம்பன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று காலை நடைபெற்றது. அச்சந்திப்பில் கார்த்தி பேசியது:
"'மெட்ராஸ்' படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. அது மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. கிராமம் சார்ந்த படங்களை தவிர்த்துக் கொண்டே வந்தேன். 'பருத்தி வீரன்' மாதிரியே இருக்கிறது என்று சொல்லுவார்கள் என பயந்தேன்.
இயக்குநர் முத்தையா என்னிடம் 'கொம்பன்' கதையைக் கூறினார். மாமனாருக்கும் மருமகனுக்கு இடையே நடக்கும் கதை. கல்யாணத்திற்கு முன்பு நடக்கும் விஷயங்களை நாம் நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து ஒரு கதை என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
ராஜ்கிரண், கோவை சரளா, லட்சுமி மேனன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என ஒன்று கூடும் போது படத்திற்கு வேறு ஒரு கலர் கிடைத்திருக்கிறது. மறுபடியும் மதுரையா என்று கேட்டேன், இல்லை ராமநாதபுரத்தில் இருக்கும் பழக்க வழக்கங்கள் வேறு என்று இயக்குநர் கூறினார்.
இப்படத்தில் தண்ணியடிக்காத ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 'கொம்பன்' என்ற பாத்திரம் 'பருத்தி வீரன்'-ல் இருந்து வேறு மாதிரி இருந்தது. அதற்குள் ஒரு ஆழமான எமோஷன் இருந்தது. ராஜ்கிரண் சார் கூட நடித்தது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.
இப்படத்தில் இறுதி காட்சியில் தான், நான் ராஜ்கிரணை 'மாமா' என்று அழைப்பேன். அக்காட்சியை நான் டப்பிங்கில் பார்க்கும் போது, ராஜ்கிரண் சார் நடிப்பில் அற்புதமாக பண்ணியிருக்கிறார். வில்லன், சண்டை என கமர்ஷியல் விஷயங்கள் அனைத்துமே கிராமத்துக்குள்ளயே இருக்கும்.
ஒவ்வொரு காட்சியும் நடித்து முடித்தவுடன், இயக்குநரிடம் 'பருத்தி வீரன்' சாயல் தெரிந்ததா என்று கேட்டு கேட்டு நடித்திருக்கிறேன். 'பருத்தி வீரன்' படத்தில் வீட்டுக்குள்ளேயே இல்லாத ஒரு பாத்திரம், 'கொம்பன்' படம் அப்படியே அதற்கு எதிர்மறையாக இருக்கும்." என்று தெரிவித்தார் கார்த்தி


நன்றி  - த இந்து

0 comments: