Tuesday, March 24, 2015

கொம்பன் -ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம் - கார்த்தி பேட்டி

“இயக்குநர் முத்தையாவோட வாழ்க்கையில் அவருடைய அப்பாவிற்கும், தாத்தாவிற்கும் நடந்த ஈகோ யுத்தத்தைத்தான் கதையாக வடிவமைத்திருக்கிறார். இதில் சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் கூட நடந்திருக்கின்றன” என 'கொம்பன்' படம் எப்படித் தனக்கு நெருக்கமானது என்று உற்சாகமாகத் தொடங்கினார் கார்த்தி
கொம்பன் படத்தின் கதை என்ன?
ராமநாதபுரம் ஏரியா ஆப்பநாடு பகுதியில் ஆடு வியாபாரம் செய்கிறவன்தான் கொம்பையா பாண்டியன். தண்ணி அடிக்காத, கெட்ட பழக்கம் இல்லாத நல்லவன். இந்த மாதிரியான கதாபாத்திரம் இதுவரைக்கும் நான் பண்ணியது இல்லை. மாமனார் - மருமகன் ஈகோதான் கதைக்கரு. ராஜ்கிரண்தான் நடிக்கணும்னு பல ஆண்டுகளாக இந்தக் கதையை வைத்திருந்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.
திருமணமான புதிதில் புது மாப்பிள்ளைகள் மாமனாரை வம்புக்கு இழுப்பார்கள். அவர் வீட்டில் இருக்கும்போதே, “உங்கப்பா சாப்பிட்டாரா”னு கிண்டல் பண்ணுவாங்க. கல்யாணம் ஆன உடனே மாமனார் - மருமகன் இருவருக்குள் நடக்கும் காமெடி, உரசல் எல்லாம் இந்தப் படத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது.
கல்யாணத்திற்கு முன்பு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பல கதைகள் வந்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு நடப்பது பற்றிய காட்சிகள் அமைந்த படங்கள் குறைவு. அதிலும் மாமனார் - மருமகன் உறவில் சமீபத்தில் எந்தப் படமும் வந்ததில்லை. அந்த வகையில் ‘கொம்பன்' அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
படத்தின் விளம்பரங்களில் ‘பருத்தி வீரன்’ படத்தின் சாயல் தெரிகிறதே..
‘பருத்தி வீரன்' படத்தில் இருந்து வேற மாதிரித் தெரிய வேண்டும் என்று மீசை எல்லாம் வைத்துப் போய்ப் பார்த்தால் எல்லாருமே அந்த மாவட்டத்தில் இதே மாதிரிதான் மீசை வைத்திருந்தார்கள். அந்த ஊர்க்காரனாக மாற என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாமே பண்ணியிருக்கிறேன்.
‘பருத்தி வீரன்' படத்தை இன்னும் மறக்காமல் இருப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. முடிந்தளவிற்கு அப்படத்தின் ஞாபகம் வராமல்தான் நடித்திருக்கிறேன். ‘கொம்பன்' ஆரம்பிக்கும்போது ‘பருத்தி வீரன்' ஞாபகம் வந்தாலும், முடியும்போது கண்டிப்பாக இது வேறு படம் என்று ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
தொடர்ச்சியாகக் கிராமத்து வேடங்களே வருகிறது என்று லட்சுமி மேனன் சலித்துக்கொண்டிருக்கிறார் கவனித்தீர்களா?
திரையுலகை விட்டு விலக இருக்கிறார் என்று செய்திகள்கூட வந்தது. பிறகுதான் அந்தச் செய்தி தவறு என்று கேள்விப்பட்டேன். லட்சுமி மேனனுக்கு உண்மையில் நடிப்பைவிடப் படிப்பில் ஆர்வம் இருக்கிறது. ஒரே மாதிரியான கிராமத்து வேடங்களே வருகிறதே என்ற எண்ணம் அவங்ககிட்ட இருக்கிறது.
நகரத்தில் வளர்ந்த பெண், மார்டனான பெண். ஆனால் கிராமத்து வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துவதால் அனைவருமே அதே மாதிரியான வேடத்திற்கு அவரைக் கூப்பிடுகிறார்கள். ஒரு நடிகையாக அவங்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். மற்றபடி சினிமா மேல கோபம் எல்லாம் இல்லை. திறமையான நடிகை.
அண்ணனும், தம்பியும் வெவ்வேறு கதைக்களங்களில் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறீர்களே எப்படி?
அமையுறதுதான். நல்ல கதைகள், நல்ல இயக்குநர்கள் நம்மைத் தேடி வர வேண்டும். நல்லவேளை எனக்கு அவரை மாதிரிப் படங்கள் அமையவில்லை. அவர்கூட யார் போட்டி போடுவது? இருவருடைய படங்களும் வேறு மாதிரி அமைவது சந்தோஷமாக இருக்கிறது.
ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் மாதிரி உங்களுக்குப் போட்டி யார்?
ஏன் இப்படிச் சிக்கலில் மாட்ட வைக்க நினைக்கிறீர்கள். என்னுடைய முந்தைய படத்திற்கும், இந்தப் படத்திற்கும்தான் போட்டி. என் படத்தைப் பார்க்க வருபவர்கள் என்னிடம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். நான் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லையே!
எனது முந்தைய படத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பொறுத்துதான் அடுத்த படத்திற்கு மக்கள் வருகிறார்கள். முந்தைய படத்தைவிட இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது, எவ்வளவு தரமாக இருக்கிறது இதைதான் பார்க்கிறேன். ஒவ்வொரு நடிகருக்குமே அவருடைய முந்தைய படத்தோடுதான் போட்டி என்பது என் கருத்து.
வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
ஒவ்வொரு படத்துக்கும் உழைக்கிறேன். நிறைய உழைத்த படங்கள் சரியாகப் போகாதபோது ரொம்ப வருத்தப்படுவேன். ஆனால், அப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த படத்தைப் பாதிக்கும். ஒரு படம் தோல்விக்கு நான் மட்டுமே காரணம் கிடையாது. ஆனால், எல்லாப் பொறுப்பும் என்னைத்தான் பாதிக்கும். தோல்வி வரும்போது எல்லாம் அடுத்த படம் ஜெயிக்கிறோம் என்று தன்னம்பிக்கையோடு எழுந்துவிடுவேன்.
இந்தப் படத்தை நான் பண்ணியிருக்கணும் என்று நீங்கள் நினைத்த படம் எது?
‘மெட்ராஸ்' அப்படி நான் பண்ணிய படம்தான். அந்தப் படம் எனக்காக உருவாக்கப்பட்டதில்லை. கதையைப் படித்தபோது ரொம்ப பிடித்தது. என்னை அப்படத்துக்குப் பொருத்திக் கொண்டேன். மற்றபடி நான் பார்க்கும் படங்கள் நல்லாயிருக்கும்போது, நாம் நடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தது இல்லை. படம் நல்லாயிருக்கும் பட்சத்தில் படக்குழுவினருக்குப் போன் பண்ணி மனதாரப் பாராட்டிவிடுவேன். அது தான் என்னுடைய பாணி.
உங்கள் படத்தின் கதை, காட்சிகள் பற்றி உங்கள் மனைவியிடம் பேசுவீர்களா?
நீங்க வேற. அப்படி எல்லாம் பேச ஆரம்பித்தால் வீட்டில் சண்டை வந்துவிடும். வீட்டிற்குப் போனால் சினிமாவை மறந்துவிடுவேன். படத்தைப் பற்றி பேசினாலே, “24 மணி நேரமும் படத்தைப் பற்றி சிந்திக்கிறீங்களே” என்று மனைவி கேட்பார். அதனால் என் படத்தைப் பற்றி மனைவியோடு விவாதிப்பதில்லை.


thanx  - the hindu • Gow  
  Enaku Surya Na Romba Pidikum Karthi Unga Padam Madras சூப்பர் Komban Padam Vetri Pera Vazhthukal
  2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Shankar  
   சூரியாவிடம் ஒரே போன்ற நடிப்பு உள்ளது.நமக்கு அவரிடம் இருந்த லயிப்பு போய் அலுப்பு வந்து விட்டது.இவரும் ஒரு groove இல் வந்து விட்டார்.இந்த இருவரின் அளப்பல்கள் வேறு நம்மை படுத்துகின்றன.
   Points
   15400
   2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • பூபாலன்  
    அண்ணணோடு மோதினா அண்ணன் படம் ஓடாது
    3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Jay  
     ஒரு ஆண் அவன் வீட்டிலேயே அவன் செய்யும் தொழில் பற்றி சுதந்திரமாக பேச முடியவில்லை என்பதை கூட ஏதோ பெரிய நகைச்சுவை போல சொல்லிகொள்கிறான் ! கொடுமை !
     Points
     3525
     3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
     • செல்வகுமார Chozhan  
      சாதிய ரீதியான படங்களில் நடிப்பதை முதலில் நிறுத்தவும். ஏற்கனவே பருத்திவீரனில் சேர்வையாக, இப்போ கொம்பனில் மறவராக. நடிகர் சிவகுமாருக்கு மகனாக பிறந்து ஒரு தமிழரான நீங்களே எப்படி இது போன்ற படங்களில் கூச்ச நாச்சம் இல்லாமல் நடிக்கீன்றீர்கள்? கடந்த மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்ட கொலைகள். பாதிக்கப்பட்டது தமிழ் சமூகங்களான தேவேந்திர குல வேளாளர் (மள்ளர்), கோனார் (இடையர்), நாடார்(சானார்). கொலை செய்தது ஒரே சமூகம்....
      3 days ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
      • shankar  
       இன்னும் இந்த தமிழ் சமூகம் இப்படி எதாவது பிடித்துகொண்டு உருப்படாமல்போய் கொண்டு இருங்கள்...படத்தை படமாக பாருங்கள் அது ஒரு சமூகத்தின் கண்ணாடி.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.have tolerance .

     0 comments: