Sunday, March 29, 2015

கு அழகிரிசாமி யின் ” இரண்டு பெண்கள் ” ஒரு கில்மாக்கதையா? - சாருநிவேதிதா அலசல்

கோவில் திருவிழாக்களில் உறுமி மேளமும் நையாண்டி மேளமுமாக அடித்துப் பட்டையைக் கிளப்புவார்கள் அல்லவா? ஆட்டமும் தூள் பறக்கும். ஆடியவர், அடித்தவர், பார்த்தவர் எல்லோருமே அப்போது ஒரு உச்சகட்ட பரவச நிலையில் இருப்பார்கள். கு. அழகிரிசாமியைப் படிக்கும்போது அப்படிப்பட்ட உணர்வே ஏற்பட்டது. அதோடு அவரது கிண்டல், நையாண்டி எல்லாமும் சேர்ந்து ஏதோ வசியம் செய்யப்பட்டவர்களைப் போல் ஆகிவிடுகிறோம். இப்பேர்பட்ட எழுத்து வன்மை கொண்ட கு. அழகிரிசாமியின் பெயர்கூட இன்றைய தலை முறைக்குத் தெரிந்திருக்குமா என்று வருத்தத்துடன் யோசித்தேன். அதிலும் புதுமைப்பித்தன் இவ்வளவு பரவலாக அறியப் பெற்றிருக்கும்போது கு.அழகிரிசாமியின் பெயர்கூடத் தெரிந்திராத நிலை ஆச்சரியத்தையே அளிக்கிறது. 
வெறும் 47 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த கு.அழகிரிசாமி (1923–1970), சிறுகதைகளுக்காகவே அறியப்பட்டாலும் இசை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஓவியம், பத்திரிகை ஆசிரியர் (மலேஷியாவில் ஐந்து ஆண்டுகள் தமிழ் நேசன் பத்திரிகையில் பணி) என்று பல்வேறு துறைகளில் இயங்கித் தடம் பதித்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் கீர்த்தனைகளை எப்போதும் முணு முணுத்துக்கொண்டே இருப்பார் என்று அவரது பால்யகால நண்பரான கி.ராஜநாராயணன் குறிப்பிடுகிறார். கர்னாடக இசையை முறையாகக் கற்றவர். காருக்குறிச்சி அருணாசலத்தின் நெருக்கமான நண்பர். அவருக்காக அழகிரிசாமி எழுதிய இரங்கல் கட்டுரை, சங்கீத ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று. தியாகராஜரின் கீர்த்தனைகளில் இருந்தே அவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுத வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் என்கிறார் கி.ரா.  அதன் விளைவுதான் திரிவேணி என்ற கதை. 
அழகிரிசாமியும் கி.ரா.வும் ஒரே ஊர்க்காரர்கள் (இடைசெவல்). கி.ரா.வைப் போலவே அழகிரிசாமியின் தாய்மொழியும் தெலுங்கு. கி.ரா.வுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்களே தனிப் புத்தகமாக வந்துள்ளது. அழகிரிசாமி, கரிசல் மண்ணைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் எழுத்து எனக்குத் தஞ்சை மாவட்டத்து எழுத்தாளர்களையே நினைவூட்டியது. தஞ்சை எழுத்தாளர்களிடம் மட்டுமே அதிகம் காணக்கூடிய கிண்டலும், கேலியும், சுய எள்ளலும், பெண்கள் மீதான அதீத ஆர்வமும், அழகிரிசாமியின் கதைகளில் அனாயாசமாகத் துள்ளி விளையாடியதால் அப்படி நினைக்கத் தோன்றியது.

 
இரண்டு பெண்கள் என்ற கதை. கதை நடப்பது நாற்பதுகள் என்று யூகிக்க முடிகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் கல்யாணம் ஆகாத ஒரு இளைஞன். மேற்கொண்டு அழகிரிசாமி சொல்கிறார்: ‘‘மனித வாழ்க்கைக்கு மதுரையென்றாலும் ஒன்றுதான்; சென்னையென்றாலும் ஒன்றுதான். இரண்டும் ஒன்றுபோலவே மோசமாக இருக்கும்போது எங்கே இருந்தால் என்ன? மதுரையிலும் வீட்டு வாடகை அதிகம்; சென்னையிலும் வீட்டு வாடகை அதிகம்… மதுரையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரம்மச்சாரிகள் பேசக் கூடாது; சென்னையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரம்மச்சாரிகள் பேசக்கூடாது. மதுரையிலும் காதலிக்க வேண்டுமென்று விரும்பாத ஆண்கள் இல்லை. சென்னையிலும் காதலிக்க வேண்டுமென்று விரும்பாத ஆண்கள் இல்லை.”
மயிலாப்பூரில் ஒரு அறையை வாடகையை எடுத்துக்கொண்டு தங்குகிறான் இளைஞன். நிறைய வாசிப்பவன். தெருக்கார இளைஞர்கள் யாரும் அவனோடு பேசுவதில்லை. கிழவர்கள் மட்டும் பேசக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு பேச இளைஞனுக்கு விருப்பம் இல்லை. கிழவிகளோடும் வாலிபப் பெண்களோடும் மட்டும்தான் பேசலாம். ஆனால், அவர்களோடு பேசினாலும் உலகம் சந்தேகப்படும். சிறுவர்களோடு பேசலாமா என்றால், ‘’ஆசாமி கல்யாணமாகாதவன் என்று தெரிந்துகொண்டால், என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு சிறுவனும் தன் தன் அக்காளுடைய காதல் கடிதத்தைக் கொண்டு வருவதாகவே உறுதியோடு கருதி, மேல் நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பார்கள்.” இந்த நிலையில், இளைஞனிடம் நிறைய பத்திரிகைகளும் புத்தகங்களும் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளும் எதிர்வீட்டுப் பெண், தன் தந்தையைத் தூது விட்டு அந்தப் புத்தகங்களை வாங்குகிறாள். 
(அந்தக் காலத்தில் புத்தக வாசிப்புக்கு மக்கள் எப்படி அடிமையாக இருந்தார்கள் என்பதை அழகிரிசாமியின் பல கதைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அன்பளிப்பு என்ற அதிஅற்புதமான கதையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், வால்ட் விட்மனின் கவிதைத் தொகுதியை கதாசிரியனிடமிருந்து இரவல் கேட்கிறான்). நம் கதைக்கு வருவோம். இளைஞனின் பத்திரிகைகளும் புத்தகங்களும் எதிர்வீட்டில் இருந்து தெரு முழுவதும் போய் வருகின்றன. எதிர்வீட்டுப் பெண்ணும் இளைஞனும் ஒரே பஸ்ஸில் ‘காரியாலயம்’  போய் வருகிறார்கள்.
ஒருநாள், கடும் மழையில் அவளைத் தன்னுடைய குடையில் அழைத்து வருகிறான். தெருக்காரர்கள் ஒன்றும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இளைஞனுக்கு அந்தப் பெண்ணின் மீது துளியும் காதல் இல்லை. காரணம், அவள் அழகி அல்ல. அதைவிட முக்கியமான காரணம், கோடி வீட்டுப் பெண். அவளைப் போன்ற ஒரு கனக விக்கிரகம், பதினான்கு லட்சம் ஜனத்தொகை உள்ள சென்னையில் மொத்தம் பத்து பேர் இருந்தால் ஜாஸ்தி. அப்படிப்பட்ட சௌந்தர்யவதியை அந்த இளைஞன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஒருநாள், அவள் வீட்டுக்கும் இவனுடைய உதவி தேவைப்படுகிறது.
இனி அழகிரிசாமி: மதியம் மூன்று மணி. ஈஸிசேரில் அறிதுயிலில் இருந்தபோது யாரோ கதவைத் தட்டினார்கள். வந்து நின்றவன் கோடி வீட்டுக் கனக விக்கிரகத்தின் தம்பி. ‘’வா தம்பி”. இந்த இரண்டு சொற்களைச் சொல்லும்போது என் நாக்கு தழுதழுத்தது. பேச முடியாமல் திக்கு முக்காடினேன். அவர்களுக்கு, இளைஞனிடம் உள்ள டைப்ரைட்டர் வேண்டும். தானே கொண்டுபோய் கொடுத்து, மறுநாள் போய் (அப்போதுதானே இரண்டு நாள் போக முடியும்?) எடுத்துக்கொண்டு வருகிறான்.
மறுநாள், இளைஞனை வீட்டுக்காரர் காலி பண்ணச் சொல்கிறார். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கோடி வீட்டுக்குப் போனதுதான் பிரச்னை என்று தெரிகிறது. தான் தலையிட்டிருக்காவிட்டால், தெருப் பையன்களே அவனை ஏதாவது செய்திருப்பார்கள் என்கிறார் வீட்டுக்காரர். இவனும் அறையைக் காலி செய்துவிட்டு வேறு இடம் போகிறான். ஆனாலும் எதிர்வீட்டில் சிநேகம் வைத்துக்கொண்டபோது ஒன்றும் சொல்லாத தெரு, கோடி வீட்டுக்குப் போனதும் ஏன் தன்னைத் துரத்தி அடித்தது? அவனுடைய நண்பரான பத்திரிகை ஆசிரியர் விளக்கம் சொல்கிறார்: அழகில்லாத எதிர் வீட்டுப் பெண்ணோடு பழகினால் யாருக்கும் பாதகம் இல்லை. நீங்கள் குடியிருந்த வீட்டுக்காரரும், எதிர்வீட்டுக்காரரும், அந்தத் தெருவில் இருந்த அத்தனை பேரும் அந்தக் கோடி வீட்டு அழகி மீது வெறியோடு இருந்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் எவனுமே அந்தப் பெண்ணைக் கெடுக்கவும் தயங்கமாட்டான்.
இதேபோல் இன்னொரு கதை. தகப்பனும் மகனும். ‘’இது ஒரு சிறுகதை; கட்டுரை அல்ல” என்ற அறிவிப்போடு துவங்குகிறது கதை. காரணம், இன்றைய காலகட்டத்தில் எழுதப்படும் கதைகளைப்போல் படமெல்லாம் போட்டு விளக்குகிறார் அழகிரிசாமி. ரயில் பெட்டியின் இருக்கைகளின் படம். முதலாம் எண் இருக்கையில் கதாநாயகி. இரண்டாவது எண்ணில் அவள் தங்கை. மூன்றாவது, கதை சொல்லியின் நண்பர். எதிர் வரிசையில் முதலாம் இலக்கத்தில் கதைசொல்லி. இரண்டாவது எண்ணில் கதாநாயகர். அதாவது, நாயகியின் தகப்பனார். சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸில், கதாநாயகர் தன் இரண்டு மகள்களையும் மேலே குறிப்பிட்ட இரண்டு ஆசாமிகளிடம் இருந்தும் ‘காபந்து’ பண்ணி திருச்சியில் இறங்குவதுதான் 13 பக்கம் நீளும் இந்தக் கதை.
கதைசொல்லியும் அவன் நண்பரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணமும் சமீபத்தில் நடப்பதாகத் தெரியவில்லை. ஏன்? நண்பரைப் பற்றித் தெரியாது. ஆனால் கதைசொல்லிக்கு மனைவியாக ஒரு உலகப் பேரழகி வேண்டும். அவன் கண்ணில் அழகான பெண்கள் தட்டுப்படாமல் இல்லை. சில பெண்கள் தூரத்தில் இருந்து பார்க்க மட்டும் அழகாகவும், சில பெண்கள் போட்டோவில் மட்டும் அழகாகவும், சில பெண்கள் மூக்கு மட்டும் அழகாகவும், சில பெண்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டால் மட்டும் அழகாகவும் இருந்தார்களே ஒழிய, உண்மையில் அழகாக இல்லை. அழகான பெண்களும் கிடைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை.  ஏன்? இவன் அழகாக இல்லை. இப்படியாகக் கல்யாணம் தள்ளிக் கொண்டு போனது. ‘’ஆனால், எப்பொழுதாவது ஆகும் என்றுதான் நம்புகிறேன். என் எதிர்கால மனைவி (நீங்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால்) உங்கள் எதிர்கால மனைவியைப் போலவே பேரழகி. ஒரு இம்மியளவு குறைந்த அழகோடு, எந்தப் பெண் வந்து எனக்குக் கனகாபிஷேகம் செய்தாலும் நான் அவளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை”. 
இந்த நிலையில் எதிர் இருக்கைக் கதாநாயகியை – அதிலும் வயது வராத பெண் – நான் காதலித்துவிடுவேனா? அது ஏன் இந்த மரமண்டைக்கு – அதாவது, கதாநாயகருக்குத் தெரியவில்லை? நாயகியின் தங்கையோ, ஏழு வயதுக் குழந்தை. ஆனால், அந்தக் குழந்தையின் மீது காற்றில் நண்பரின் சட்டை நுனி பட்டாலும், கதாநாயகர் எழுந்து நின்று கத்துகிறார். ‘’நீங்களெல்லாம் தாய் தங்கையோடு பிறக்கவில்லையா, இத்யாதி, இத்யாதி”. அந்தக் குழந்தை, தூக்கத்தில் நண்பர் மீது சாய்ந்தால் அதற்கும் ஒரு ரகளை. இப்படியே அந்தத் தகப்பனும் இரண்டு பெண் குழந்தைகளும் திருச்சியில் இறங்கிப்போகிறது.
படு கிண்டலாக எழுதப்பட்டிருந்தாலும், கதையின் உள்சரடாக மனிதர்களின் மனோவக்கிரம் பற்றிய அழகிரிசாமியின் கோபம் கொந்தளித்தபடியே இருக்கிறது. கடைசியில், வெளிப்படையாகவே முடிக்கிறார். ‘’இவனெல்லாம் ஒரு அப்பனா? ஆபாசக் களஞ்சியம். தகப்பனுக்கு மகளைப் பார்த்தால் மகளைப்போல் காட்சியளிப்பாளா?  காமக்கருவியாகக் காட்சியளிப்பாளா?” இதுபோன்ற கதைகளைப் படித்தபோது, 60 – 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகளைப் போல் தோன்றவில்லை. ஏதோ சென்ற ஆண்டுதான் ஐரோப்பாவில் இருந்து ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் எழுதிய கதைபோல் இருக்கிறது. அதே சமயம், 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற வரலாற்றுப் பதிவாகவும் நாம் கு.அழகிரிசாமியின் கதைகளைப் படிக்கலாம். வரலாற்றைப் பதிவு செய்யும் பழக்கம் இல்லாத நமக்கு, இந்தக் கதைகள் கால எந்திரத்தில் பின்னோக்கிச் செல்வதான அனுபவத்தையும் தருகின்றன.

***
வாஸ்தவத்தில், இந்தத் தொடரில் எழுத நினைக்கும் ஆளுமைகளைப் பற்றி குறைந்தபட்சம் 500 பக்க அளவுக்காவது எழுத வேண்டும் என்ற அளவுக்கு விஷயம் கொட்டிக் கிடக்கிறது. அவர்களின் சாதனை அப்படிப்பட்டது. ஆனாலும், தூசு படிந்த நமது வரலாற்றின் பக்கங்களில் இருந்து சில ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதோடு என் பணி முடிகிறது. அழகிரிசாமியின் பிரபலமான சிறுகதையான “ராஜா வந்திருக்கிறார்”, உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக வரக்கூடியது. மானுட அறத்தைப் பற்றிப் பேசும் கதை அது. அதைப் படித்த பிறகு, ஒருவர் முன்பு இருந்ததைப்போலவே இருந்துவிட முடியாது. அவரது ஆளுமையிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதை அது.  
கு.அழகிரிசாமி இந்தக் கதைகளையெல்லாம் எந்தெந்த ஆண்டுகளில் எழுதினார், மலேஷியாவில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவர் என்ன செய்தார், ஏன் அந்தக் காலகட்டம் (1952-57) பற்றி அவர் எதுவுமே எழுதவில்லை என்றெல்லாம் பல கேள்விகள் என்னுள் எழுகின்றன.  அதையெல்லாம் ஒரு ஆய்வாளர்தான் சொல்ல வேண்டும். அத்தகைய ஆய்வாளருக்காக, கு.அழகிரிசாமியின் எழுத்தும் வாழ்க்கையும் காத்திருக்கின்றன.


நன்றி  - தினமணி

0 comments: