Monday, March 30, 2015

உறுமீன் - ஹீரோவும் வில்லனும் கடைசி வரை சந்திக்காத வித்தியாசமான திரைக்கதை - இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி. பேட்டி

எல்லோருமே உறுமீனுக்காக காத்திருப்பவர்கள்தான்!

வித்தியாசமான முயற்சிகளுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதுமே முதல் இடம் உண்டு. அப்படி எடுக்கப்படும் படங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் சினிமாவுக்கு முன்னோடி முயற்சியாக அமையும். "சேது', "சுப்ரமணியபுரம்', "மூடர்கூடம்' என்று இங்கே ட்ரெண்ட் செட்டராக அமைந்த படங்கள் நிறைய இருக்கிறது. அப்படியொரு முயற்சியாக "உறுமீன்' படத்தை இயக்கி வருகிறார் சக்திவேல் பெருமாள்சாமி. அறிமுக இயக்குநர்தான். ஆனால், அனுபவ இயக்குநர் போல பேசுகிறார்.
 ""சினிமா பின்புலம் இல்லாத குடும்பம், ஆனால், எனக்கு சினிமா ஆசை நிறைய இருந்தது. வீட்டில் எடுத்தவுடன் "சினிமாவுக்குப் போறேன்னு' சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கம். அதனால், சினிமா பற்றிய தொழில்நுட்பம் சார்ந்து படிக்கலாம் என்று நினைத்தேன். பி.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். குறிப்பாக, எடிட்டிங் துறையில் பயிற்சி பெற்றேன்.
 எனக்கு, உதவி இயக்குநராக ஒருத்தரிடம் இருந்து, வேலை பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. காரணம் கோயம்புத்தூரில் இருந்து வருகிறோம். இங்கே வந்தால், சாப்பாட்டுக்கும், வாழ்க்கையை நகர்த்துவதற்கு பெரிய போராட்டம் இருக்கும் என்று தெரியும். அதனால் தொழில்நுட்ப ரீதியாக சினிமாவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
 நான் சென்னைக்கு வந்த நேரத்தில் எடிட்டிங்கில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தது. அதாவது கணினி மயமான எடிட்டிங். அப்போது திரைப்படத்துறையில் இருந்த பழைய எடிட்டர்களுக்கு எங்களுடைய உதவிகள் தேவையாக இருந்தது. ஏனெனில், அவர்கள் கணினி எடிட்டிங் கற்றுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் கற்றுக்கொண்டு உள்ளே வந்தோம். இது சினிமாவில் இருப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
 தொடர்ந்து, தியேட்டரில் சினிமா ஆபரேட்டராக இருக்க வாய்ப்பு அமைந்தது. இதுவும் சினிமாவைக் கற்றுக்கொள்ள உதவியது. இந்தமாதிரியான காலகட்டத்தில் விளம்பரப் படங்கள் நிறைய பண்ணினேன். கணினிமயமான எடிட்டிங்கில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவுட்புட் தரமுடியும். மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் படங்களில் இப்படியான பணி செய்யும் வாய்ப்புகள் எனக்கு அமைந்தது. அவர் படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதை ஸ்பாட்டில்தான் எடிட் பண்ணுவோம். இந்த மாதிரியான வாய்ப்புகள் எனக்கு நல்ல அனுபவங்களைத் தந்தது.
 அப்போது கிடைந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு இயக்குநராக முயற்சி பண்ணினேன். இந்த சமயங்களில் "புகைப்படம்', "மாலை பொழுதின் மயக்கத்திலே', அப்புறம் ஒரு கன்னடப்படம் என மூன்று படங்களில் உதவி இயக்குநராகவும் இருந்தேன். இந்தப் படங்கள் பெயர் சொல்லும்படி இல்லாமல் இருக்கலாம். என்றாலும், அவை எனக்கு முக்கியமான படங்கள்தான்'' என்று நிறுத்தியவர், தான் தயாரிப்பாளர்களை அணுகிய விதத்தை விவரித்தார்.
 ""ஒரு தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்வதைக் காட்டிலும், அதை ஒரு குறும்படமாக, அல்லது டிரெயிலராகக் காட்டினால் நன்றாக இருக்கும். அந்த மாதிரிதான் நிறைய புது இயக்குநர்கள் முயற்சித்து வந்தார்கள். நான் என்னுடைய கதைகளை சின்னச் சின்ன டிரெயிலராக ரெடி பண்ணி தயாரிப்பாளர்களிடம் காட்டினேன்.
 இப்படி உருவானதுதான் "உறுமீன்' படத்தின் கதையும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர்தான். இவர் மட்டுமல்ல... இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் எல்லோரும் நண்பர்கள்தான். உதவியாளர்கள் நிலையில் இருந்து அப்படியே ஒரு படத்துக்குள் நுழைந்தோம். அதனால் எனக்கு எல்லாமே ஈஸியாக இருந்தது'' என்றவரிடம், "படத்தின் கதை என்ன?' என்று கேட்டோம்.
 ""இது கற்பனைக்கு எட்டாத உலகம் இல்லை. எல்லாமே நம்முடைய கற்பனைக்குள் இருப்பதுதான். உயிரற்ற ஒரு பொருள் ஃபேண்டஸியாக மாறும் போது, எப்படியிருக்கும்? இந்தமாதிரியான கதையை நிறைய பேர் ட்ரை பண்ணியிருக்கிறார்கள். நான் எதையும் புதுசாக சொல்லவில்லை. நான் இதுக்குள் சொல்லுகிற விஷயம், இரண்டு பெரிய விஷயங்கள். ஒன்று வனம். இன்னொன்று ஒரு பெரிய நகரம். இந்த இரண்டையும் ஒரு ஒப்பீடாக வைத்துக்கொண்டு படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன்.
 வனம் என்பது பச்சை. நகரம் என்பது என் பார்வையில் இருட்டு. இந்த இரண்டுக்கும் இருக்கிற ஒரு தொடர்பு. இது ரொம்ப பெரிய விஷயம்தான். ஆனால், அதை லேசாக தொட்டிருக்கிறேன்.
 இந்தியாவுக்குள் கார்ப்பரேட் வளர்ச்சி எப்படியெல்லாம் உள்ளே நுழைந்தது? இதனால் நாம் என்னென்ன பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறோம்? அடைந்திருக்கும் நன்மைகள் என்ன? இதையெல்லாம் மேலோட்டமாக படம் பேசும். விளைவுகளைப் பற்றி பேசவில்லை. ஆனால், சில உண்மைகள் இரக்கமற்றதாகச் சுடும்.
 நீங்கள் காலையில் ஒரு தேநீர் கடையில் தேநீர் பருகுகிறீர்கள். 19 ரூபாய் பில் வந்தது என்றால், ஒரு ரூபாய் சில்லரை இல்லை என்று சாக்லேட் தருகிறான் கடைக்காரன். நமக்கு அது வேண்டுமா.. வேண்டாமா.. என்றாலும் அது திணிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில் மட்டும் 2014ஆம் ஆண்டில் சாக்லேட் விற்பனை ரூ. 10,000 கோடி என்று புள்ளி விவரம் சொல்கிறது. இதில் 10 சதவிகிதம் சாக்லேட் திணிக்கப்பட்டதுதான். இது ஒரு கார்ப்பரேட் கலாசாரம்.
 இந்த மாதிரி வலிய திணிக்கப்பட்ட பொருளாதார விஷயங்களை மேலோட்டமாகச் சொல்லாமல், பிரச்னையாக சொல்கிறோம். இது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? இந்தப் புள்ளிதான் "உறுமீன்'. பாடம் நடத்துறது மாதிரி இருக்காது. பக்கா கமர்ஷியல் ஃபிலிம்''.
 "யார் யார் நடிக்கிறார்கள்?'
 ""இதில் நாயகன், நாயகி என்று யாரும் கிடையாது. படத்தின் போக்கில் கேரக்டர்கள் வந்துபோகும். முக்கியமான பாத்திரத்தில் பாபி சிம்ஹா. இவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன். இன்னொரு பாத்திரத்தில் "மெட்ராஸ்' கலையரசன். இவர்தான் படத்தின் மெயின் வில்லன். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு கதை இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாபி சிம்ஹாவும் கலையரசனும் இறுதி வரை சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள்.
 நாம் ஒருத்தரை நெகட்டிவ், பாசிட்டிவ் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை அது பாசிட்டிவ்தான். அவர்கள் செய்யும் செயல்கள்தான் பிரச்னையாக மாறுகிறது. இந்தக் கண்ணோட்டம்தான் படம் முழுக்க இருக்கும்.
 உலகத்திலே அதிவேகமான வேட்டை, கொக்கு மீனை கொத்துவதுதான். 29 நொடிகளில் அது நிகழ்கிறது. அதிலும் முக்கியமான இன்னொரு விஷயம், மீன் சாகப்போறது மீனுக்கே தெரியாது. கொக்கோட வயிற்றுக்குள் சென்றுதான் சாகும். "ஓடு மீன் ஓட, உறுமீன் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு' என்பார்கள். மற்ற எல்லா வேட்டையையும்விட இந்த வேட்டைதான் வேகமான வேட்டை. இது எப்படி கண நேரத்தில் நடக்கிறதோ, அதுபோலத்தான் வாழ்க்கையில் சில பொருளாதார விஷயங்கள். கால்சென்டர் பின்னணியில் படம் நடக்கிறது. அங்கு என்ன மாதிரியான வாழ்க்கைச் சூழல் இருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம். அவ்வளவுதான். இங்கே எல்லோருமே "உறுமீனுக்காக காத்திருப்பவர்கள்தான். கொக்கு வேட்டையின் 29 நொடிப் பயணம் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதனால்தான் படத்துக்கு "உறுமீன்' என்று தலைப்பு வைத்திருக்கிறோம்'' என்கிறார் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி.
 - மன்முருகன்  


 நன்றி  - தினமணி
0 comments: