Tuesday, February 09, 2016

விசாரணை-திரை விமர்சனம்:

ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் சில் லறை வேலைகள் செய்து பிழைக் கிறார்கள் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும். வாடகை வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத அவர்கள், ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது.இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத் தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கே.கே-வை (கிஷோர்) கைது செய்ய வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்துவேல் (சமுத்திரக்கனி) உதவியுடன் விடுதலையாகிறார்கள். தங்கள் நன்றியைக் காட்ட அவருக்கு உதவப்போய் வாழ்வா, சாவா என்ற பொறியில் மாட்டிக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டவர்கள் என்ன ஆனார்கள்? சமுத்திரக்கனிக்கும் கிஷோருக்கும் என்ன ஆயிற்று என்பதுதான் ‘விசாரணை’யின் பதைபதைக்க வைக்கும் கதை.மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்னும் நாவலின் அடிப்படையில் உருவாக் கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் கசப்பான சில உண்மைகளை அப்பட்டமாகப் பேசுகிறது. காவல் துறை விசாரணையின் நிஜ முகத்தின் குரூரத்தைக் காட்டுகிறது. காவலர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதையும் அவர்களால் எப்படி அதைச் செய்ய முடிகிறது என்பதையும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. அப்பாவிகள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும் இவர்கள், வேறொரு தளத்தில் இதே அமைப்பின் பலிகடாக்களாக மாறும் முரண்பாட்டையும் சித்தரிக்கிறது.

வெற்றி மாறன் முன்னிறுத்தும் யதார்த்தம் முகத்தில் அறையும் நடைமுறை யதார்த்தம். நம்மை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்ளும் சித்தரிப்புத் திறனுடன் இந்த யதார்த்தம் முன்வைக்கப்படும்போது அது நமக்கு நெருக்கமான அனுபவமாக மாறி விடுகிறது. இந்தச் சூழலில் யாருக்குமே நிஜமான பாதுகாப்பு இல்லை என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுவது தான் இந்தப் படத்தின் பெரிய வெற்றி.திருப்பங்கள் எதையும் திணிக்காம லேயே விறுவிறுப்பைக் கூட்ட முடியும் என்பதை வெற்றி மாறன் காட்டியிருக்கிறார். பார்ப்பவர்கள் முகத்தில் ரத்தம் தெறிப்பதுபோல் உணரவைக்கும் மிகை வன்முறை, இரைச்சலிடும் பின்னணி இசை, மிகையான உணர்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, நேரடி சாட்சிபோல விரியும் காட்சிகள் படத்துக்குள் நம்மை இழுத்துக்கொள்கின்றன.வெளி மாநிலத்தில் உதிரிகளாக வாழும் தமிழ் இளைஞர்களின் வாழ்வைச் சிக்கன மான காட்சிகளின் மூலம் முழுமையாகப் புரியவைத்துவிடுகிறார். செய்யாத குற் றத்தை ஒப்புக்கொள்ளக் கூடாது என்னும் அவர்களது உறுதியைத் தகர்க்கும் தந்திரங் களைக் காட்சிப்படுத்திய விதம், காவல் துறைச் செயல்பாடுகளின் வெவ்வேறு பரிமாணங்களையும் உணர்த்துவதாக உள்ளது.


ஏழைகள், அப்பாவி மனிதர்களுக்குப் பாதுகாப்பைத் தர வேண்டிய காவல் நிலையங்கள், அவர்கள்மீது மிக எளிதாக மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து விடுவதை நம்பகத்தன்மையுடன் காட்டி யிருக்கிறது படம்.


இந்த உரிமை மீறல்களின் நிஜமான சூத்திரதாரிகள் காவலர்களோ, காவல் அதிகாரிகளோ அல்ல; அவர்களை பொம்மைகளாக ஆட்டுவிக்கும், அதிகார வர்க்கம் என்பதைத் தோலுரித்துக் காட்டும் இரண்டாம் பகுதி, படத்தை விரிவான தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. காவல் துறை உள்ளிட்ட நமது குற்றவியல் நடைமுறை அமைப்பு சீரமைக்கப்பட வேண்டியிருக்கிறது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.


பல காட்சிகள் மனதில் நிற்கின்றன. கோயில் பிரசாதத்தைக் கொடுக்கும் காவல் துறை அதிகாரி மீது கைதிகளுக்குப் பிறக்கும் நம்பிக்கை உடையும் இடம், பல் உடைந்த பிறகு, “எனக்கு பல்லுதான் அழகுன்னு எங்கம்மா சொல்லும்” என்று முருகதாஸ் வருத்தப்படும் இடம், கடைசிக் காட்சிகளில் கிஷோரின் பரிதவிப்பு, விசாரணைக் கைதியின் மரணத்துக்குப் பின் காவலர்கள் போடும் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.காவல் துறை அதிகாரிக்கு இந்த இளைஞர்கள் மீது சந்தேகமும் பயமும் வருவதற்கான காட்சியில் போதிய அழுத்தம் இல்லை என்பதைப் படத்தின் குறையாகச் சொல்லலாம்.


தினேஷ், ‘ஆடுகளம்’ முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையும் இயல்பும் கூடிய நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். தன்னால் அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட அபாயத்தைக் கண்டு கண் கலங்கும் இடத்தில் சமுத்திரக்கனி மனதைத் தொடுகிறார். காவல் துறை விசா ரணையைத் தன் தொழிலுக்கே உரிய கெத்துடன் எதிர்கொள்ளும் கிஷோர், காவலர்களின் ‘கவனிப்பு’க்குப் பிறகு மண்டியிட்டுத் தவழ்ந்து பம்மும் காட்சியில் அசரவைக்கிறார்.காவலர்களின் பேச்சிலும், கைதி களின் பேச்சிலும் யதார்த்தம் தெறிக் கிறது. சமுத்திரக்கனி, கிஷோரின் உரையாடலில் அதிகார மொழியின் நுட்பம் வெளிப்படுகிறது.பாடல்களே இல்லாத இந்தப் படத்தில் பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் கவனிக்க வைக்கிறார். கிஷோரின் எடிட்டிங் படத்துக்கு கச்சிதத் தன்மையை வழங்குகிறது. ராமலிங்கத்தின் ஒளிப் பதிவு படத்தின் யதார்த்தத்தைக் காட்சிப் படுத்துவதில் துல்லியமாகச் செயல் படுகிறது.


அதிகார பீடத்தில் இருப்பவர்கள் தங் களைத் தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் சென்று மனித உயிர்களை எடுக்கவும் தயங்காத ஜனநாயக பயங்கர வாதிகளாக மாறியிருப்பதை, விளிம்பு நிலை இளைஞர்களைக் கொண்டு சொன்ன விதத்தில் வலுவான அரசியல் படமாகவும் மாறியிருக்கிறது விசாரணை.


நன்றி - த ஹிந்து

0 comments: