பொங்கல் வெளியீடாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 4 படங்கள் வெளியாக இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


'கதகளி', 'கெத்து', 'தாரை தப்பட்டை' ஆகிய படங்கள் முதலில் தங்களது பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியது. இறுதியில் இக்கூட்டணியில் இணைந்தது 'ரஜினி முருகன்'.


4 படங்களுமே முக்கியமான படங்கள் என்றாலும், 'ரஜினி முருகன்' படம் வெளியீடுவது குறித்து பைனான்சியர்களிடம் திருப்பதி பிரதர்ஸ் தனது பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. 'கதகளி' மற்றும் 'கெத்து' ஆகிய படங்கள் முதலில் தங்களது திரையரங்க ஒப்பந்தத்தை தொடங்கின.1050 திரையரங்குகளை 4 படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதால் முதலில் ஒப்பந்தத்தை தொடங்கிய 'கெத்து' மற்றும் 'கதகளி' ஆகிய படங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். ஆனால், டிசம்பரில் திரையரங்குகள் வெளியீட்டுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை 'ரஜினி முருகன்' படக்குழு அப்படியே பொங்கல் வெளியீட்டுக்கு புதுப்பித்தது. இதனால், மீண்டும் திரையரங்க ஒப்பந்தத்தில் சிக்கல் நீடித்து வந்தது.இறுதியாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏரியாக்கள் தவிர, 'ரஜினி முருகன்' மற்ற இடங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த பொங்கல் திரையரங்க உரிமையாளர்களுக்கு உற்சாகப் பொங்கலாக அமைந்திருக்கிறது.


அனைத்து திரையரங்குகளிலுமே 2 படங்கள் வெளியாகிறது. காலை - மதியம் காட்சிகளில் ஒரு படமும், மாலை - இரவு காட்சிகளில் ஒரு படமும் திரையிட இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் 4 படங்கள் வெளியாகி இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.