Wednesday, June 03, 2015

CHINA TOWN - சினிமா விமர்சனம் ( டிடெக்டிவ் த்ரில்லர்}

ஹாலிவுட்டின் திரைக்கதை ஆசான் ஸித் ஃபீல்ட்(Syd Field) தன் புத்தகங்களில் அதிகம் குறிப்பிடும் படம் ‘சைனா டவுன்’. ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் படத்தையே திரும்பத் திரும்பச் சிலாகித்து உதாரணம் காட்டுவார் இவர்.
இந்தப் படத்தைப் பார்த்து முடித்த போது ஸித்ஃபீல்ட் மிகைப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ரோமன் போலன்ஸ்கி படைப்பாக்கத்தில் வந்த படம். அசலான திரைக்கதை பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற இதை ஒரு மர்மப் படம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது. வசதி கருதி துப்பறியும் படம் என்று சொல்லலாம்.
சிக்கிய துப்பறிவாளன்
ஜேக் எனும் துப்பறியும் பாத்திரத்தில் கதாநாயகனாய் ஜேக் நிக்கல்சன் வருகிறார். தனது கணவர் பெயர் ஹோல்லிஸ் முல்ரே என்றும் அவரது நடத்தை மீது தனக்குச் சந்தேகம் எனவும் கூறி, உண்மையைத் துப்பறிந்து தனக்குத் தெரிவிக்குமாறு திருமதி மல்ரே என்ற ஒரு பெண்மணி ஜேக்கை துப்பறிய ஒப்பந்தம் செய்கிறார்.
இதனால் நீர்வளத்துறையில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றும் ஹோல்லிஸ் மல்ரேயைப் பின் தொடர்கிறார் ஜேக். மனைவி சந்தேகப்பட்டதுபோலவே அவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிகிறது. அது தவிர தண்ணீரைத் தனியார்மயமாக்குதலையும் அவர் எதிர்க்கிறார் என்பதும் புரிகிறது. அமெரிக்காவின் தண்ணீர் பிரச்சினை பூதாகரமாக வெடித்த காலகட்டம் அது.
எப்படியோ செய்தி கசிந்து அவரின் முறைகேடான காதல் புகைப்படத்துடன் நாளிதழில் செய்தியாக வெளியாகிறது. இந்த நேரத்தில் துப்பறிவாளர் ஜேக்கை சந்திக்க இன்னொரு பெண்மணி வருகிறார். “நான்தான் ஹோல்லிஸின் நிஜமான மனைவி. எனது பெயர் ஈவ்லின் மல்ரே. நான் உங்களைத் துப்பறியப் பணிக்கவில்லை. என் கணவன் பெயரை அவதூறு செய்தமைக்காக உங்கள் மீது வழக்கு தொடுக்கிறேன்!” என்கிறாள்.
திருமதி மல்ரேயை சிக்க வைக்க அவரது பெயரில் தன்னை யாரோ பகடைக் காயாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்கிறார் ஜேக். ஈவ்லின் மல்ரேயிடம் “உங்கள் கணவர் இன்னொரு பெண்ணுடன் இருந்தது நிஜம்தான்” என்று கூறுகிறார். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. பின் வழக்கையும் வாபஸ் வாங்குகிறார்.
கொலையும் முடிச்சும்
அச்சமயம் குடிநீர் வரும் பெருங்குழாயில் ஹோல்லிஸ் மல்ரே இறந்து கிடக்கிறார். அது கொலையா, தற்கொலையா எனத் தெரியவில்லை. உண்மையை அறிய இம்முறை ஈவ்லின் மல்ரே தாமாகவே முன்வந்து ஜேக்கை ஒப்பந்தம் செய்கிறார். ஈவ்லினின் தந்தையும் கணவரும் அந்த ஊரின் நீர் வளத்தைத் தனியார் சொத்தாக வைத்திருந்தவர்கள். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவர்கள்.
இதனிடையில் ஈவ்லினின் தந்தையும் பெரும் செல்வந்தருமான நோவா க்ராஸ் துப்பறிவாளர் ஜேக்கை அழைத்து இறந்துபோன மருமகன் ஹோல்லிஸின் அந்தரங்கக் காதலி பதுங்கியிருக்கும் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்குமாறு ஒப்பந்தம் செய்கிறார். தன் மகள் பொறாமைக்காரி என்றும் அவளை நம்ப வேண்டாம் என்றும் கூறுகிறார்.
ஈவ்லினோ “தன் தந்தை எதற்கும் துணிந்தவர், ஆபத்தானவர்” என்கிறாள். ஈவ்லினும் ஜேக்கும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கிய நிலங்களின் தகவல்களைத் திரட்டுகிறார்கள். விவசாயிகள் நிலத்தைப் பிடுங்கி, வில்லாக்கள் அமைத்து அவர்களிடம் நீரை அதிக விலைக்கு விற்கும் திட்டம் புரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ஹோல்லிஸ் மல்ரே கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வருகிறார்கள். உண்மைக்கு நெருக்கமாக ஜேக் வந்துவிட்டதில் கோபமாகும் எதிரிகளின் கையாட்கள் ஜேக்கின் மூக்கை அறுத்து மிரட்டுகிறார்கள். ஆனால், ஜேக் பின்வாங்குவதாக இல்லை.
உதவியும் உறவும்
துப்பறிதலில் ஜேக்கிற்கு துணைப் போகிறாள் ஈவ்லின். அது அவர்களுக்குள் அந்தரங்கமான உறவாக மாறுகிறது. அவர்கள் நெருக்கமாக இருக்கும் தருணத்தில் ஈவ்லினுக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு. உடனே திரும்புவதாகச் சொல்லிப் புறப்படுகிறாள் ஈவ்லின். அவளைப் பின் தொடரும் ஜேக், ஈவ்லின் காவலில் மல்ரேவுடன் பார்த்த அந்த அந்தரங்கப் பெண் இருப்பதை அறிகிறார். ஈவ்லினை ஜேக் நேருக்கு நேர் கேட்கும்போது, “அவள் என் தங்கை” என்கிறாள். இதற்கிடையில் ஜேக்கை முதலில் ஒப்பந்தம் செய்த போலி மனைவி கொலையுண்டு கிடக்கிறாள். போலீஸ் ஜேக்கிடம் ஈவ்லினை ஒப்படைக்கக் கோருகிறது. இல்லாவிட்டால் கைதுதான்.
ஹோல்லிஸ் மல்ரே கொலையிலும் துப்பு கிடைக்கிறது. ஈவ்லினை அறைந்து உண்மையைக் குடைகிறார். “யார் அந்தப் பெண்? ஏன் இந்தக் கொலை?” என்று. அந்தப் பெண் கேத்ரீனை தன் தங்கை என்றும் தன் மகள் என்றும் மாறி மாறிக் கூறுகிறாள். உண்மை தெரிகிறது. கசப்பும் காயமுமாய் அவள் நிலை புரிகிறது.
ஈவ்லினின் தந்தை நோவா க்ராஸின் சுயரூபம் புரிய, ஈவ்லினையும் கேத்தரீனையும் சைனா டவுனுக்குத் தப்பிச் செல்ல ஏற்பாடு செய்கிறார் ஜேக். தந்தையிடமிருந்து கேத்தரீனை மீட்க முடியாமல் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகிறாள் ஈவ்லின். சைனா டவுனில் இதெல்லாம் சகஜம் என்ற வசனத்துடன் படம் முடிகிறது.
இரு அடுக்குகள்
உண்மை துப்பறியப்படுகிறது. ஆனால், அது குரூரமாக இருக்கிறது. உலகம் புரிகிறது. ஆனால் அதை மாற்ற முடியவில்லை. தன் குறிக்கோளான துப்பறிதலைச் சரியாகச் செய்கிறான் நாயகன். இறுதியில் ஒரு தனி மனிதனாய் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.
நீருக்கான யுத்தம் 30களிலேயே அமெரிக்காவில் தொடங்கி விட்டது. அதுபற்றி 60-களில் கதையாகவும் 1974-ல் ‘சைனா டவுன்’ படமாகவும் பதிவாகியுள்ளது. இதை நீர் பற்றிய அரசியல், தொழில் மற்றும் குற்றப் பிண்ணனியை நுட்பமாகப் பேசும் படம் எனலாம்.
அதேநேரம் குடும்பத்தில் உள்ள வன்முறை மற்றும் பலாத்காரம் ஏற்படுத்தும் தாக்கம் தனி மனிதரோடு போய்விடுவதில்லை. அது ஒரு சங்கிலித் தொடர். அதன் சமூக உளவியல் தாக்கங்கள் நீண்ட காலம் தொடரும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
சமூகத்தில் அதிகாரம், பணம், செல்வாக்கு உள்ளவர்கள் ஏற்படுத்தும் அமைப்புகளும் சட்டங்களும் நியாய தர்மங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஒழுங்கு என்பதும் மீறல் என்பதும் சம்பந்தப்பட்ட அதிகார மையத்தின் விழுமியம் சார்ந்ததே என்பதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது இந்தப் படம்.
படத்தின் உள்ளடக்கம் இப்படி இரண்டு அடுக்காகச் செயல்பட்டாலும் சீரான, குழப்பமில்லாத திரைக்கதை, பார்வையாளனையும் துப்பறியும் கதை நாயகனையும் ஒருசேரப் பயணிக்க வைத்து, இறுதியில் உண்மையை அறிய வைக்கிறது. ரோமன் போலன்ஸ்கியின் மேதமை ஒரு மைல் கல் படைப்பைத் தந்தது எனலாம்!
தொடர்புக்கு: [email protected]



thanx - the hindu

0 comments: