Saturday, June 13, 2015

சிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்சியம்

இந்தியப் படங்களில் இடம்பெறும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளின் தரம் குறித்து இத்துறையில் கோலோச்சும் ஹாலிவுட் நிறுவனங்களுக்கு ஒரு இளக்காரமான பார்வை உண்டு. கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றுக்காகச் செலவுசெய்ய பட்ஜெட் இல்லாதவர்கள் என்று நம்மைக் குறைத்து மதிப்பிட்டதுதான் இதற்குக் காரணம்.
ஆனால் சிவாஜி, எந்திரன், மஹாதீரா, நான் ஈ, ரா ஒன், டெல்லி சபாரி உட்படக் கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான பல இந்தியப் படங்கள் அவர்களின் இந்த எண்ணத்தைச் சுக்கு நூறாக உடைத்துப் போட்டுவிட்டன. முதலில் அவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த ஷங்கரின் ‘சிவாஜி’ படத்தை எடுத்துக்கொள்வோம்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கூடை சன் லைட்.. ஒரு கூடை மூன் லைட்… ஒன்றாகச் சேர்ந்தால் அதுதானே என் ஒய்ட்’ என்ற பாடலில் கறுப்பு ரஜினி, வெள்ளைக்கார ரஜினியாக மாறிய அதிசயத்தைக் கண்டு, நமது ரசிகர்கள் மட்டுமல்ல ஹாலிவுட் விஷுவல் எஃபெக்ட் நிறுவனங்களும் வியந்தன. நடிகர் ஒருவரின் உடல் நிறத்தை விஷுவல் எஃபெக்ட் மூலம் மாற்றிக்காட்டிய அதிசயம் ஹாலிவுட்டில் மட்டுமல்ல உலகில் வேறு எங்குமே அதற்கு முன் பார்த்திராத அதிசயமாகவே இருந்தது.
இயக்குநர் ஷங்கரின் கற்பனையில் உருவான இந்தக் காட்சியைச் சாத்தியமாக்கியவர் அந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட் சூப்ரவைஸரான ஸ்ரீநிவாஸ் எம். மோகன். அசலான இந்தியத் திறமையாளர் என்று பாராட்டப்படும் இவர் ‘இண்டியன் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஷங்கரின் படங்களுக்கு ஏற்கெனவே பணியாற்றியிருக்கிறார். நூறு சதவீதம் நம்பகத் தன்மை காட்சியில் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் ஷங்கரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய, ‘கலர் கரெக்‌ஷன்’ என்ற உத்தியை இவர்கள் நாடவில்லை.
(படப்பிடிப்பின்போது கிடைக்காத வண்ணங்களை ‘கலர் கரெக்‌ஷன்’ மூலம் காட்சிகளில் கொண்டுவர முடிவதுதான் ‘கலர் கரெக்‌ஷன் அல்லது கலர் கிரேடிங்’ எனும் உத்தி. இதைப் பற்றி விரிவாக பின்னர் ஓர் அத்தியாயத்தில் அலசுவோம்.) நடிகரின் உடல் வண்ணத்தை கலர் கரெக்‌ஷன் மூலம் மாற்றுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொண்டது நிவாஸ் மோகன் குழு.
வெள்ளையான ஓர் ஐரோப்பிய நடிகரின் உடல் நிறத்தை எடுத்து அப்படியே ரஜினியின் உடல் நிறத்துக்கு ‘கிராஃப்டிங்’ செய்வதுதான் சரியாக இருக்கும் என்று முடிவுசெய்தனர். இதற்காக ஐஆன் நிறுவனத்தின் ‘ப்யூஷன்’ (Eyeon Fusion) என்ற காம்போசிட்டிங் மென்பொருளைப் பயன்படுத்தினார்கள். போர், தீ விபத்து போன்ற பெரும் விபத்துகளால் ஏற்படும் மோசமான காயங்களில் மேல் தோலை இழந்துவிட நேரும்.
அதுபோன்ற சமயங்களில் உடலின் மற்றொரு பகுதியிலிருந்து தோலை எடுத்து, இழந்த இடத்தில் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யும் முறை ‘காஸ்மெடிக் சர்ஜரி மருத்துவத்தில் உள்ளது. ரஜினி வெள்ளையாக மாறியதைக் கிட்டத்தட்ட இதே முறையுடன் ஒப்பிட்டு நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். இதை ‘டிஜிட்டல் ஸ்கின் கிராஃப்டிங்’ என்று சொல்வது சரியாக இருக்கும்.
இனி ரஜினி எப்படி வெள்ளைக்காரராக மாறினார் என்று பார்க்கலாம். முதலில் ஜாக்கி என்ற ஐரோப்பிய பாலே நடன மாடலை இயக்குநர் ஷங்கர் தேர்வுசெய்தார். ஐந்து நிமிடங்களைத் தாண்டி நீளும் ‘ஒரு கோடி சன் லைட்’ பாடலை 630 ஷாட்களாக 4கே ரெஸ்சொல்யூஷனில் படம் பிடித்திருந்தார் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த். ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலின் ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினியையும் உடன் ஆடிய நடனக் கலைஞர்களையும் வைத்து முதலில் படம்பிடித்தனர். பிறகு அதே ஷாட்டை ஒளியமைப்பு மாறிவிடாமல், நடன மாடலை ரஜினியின் இடத்தில் நிறுத்தி, ரஜினி ஆடிய அதே அசைவுகளை ஆடச்செய்து படம் பிடித்துக் கொண்டனர்.
பின் ரஜினி நடித்த ஷாட்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டன. ரஜினியின் முகம் கை, கால் ஆகிய பகுதிகள் ரோட்டோஸ்கோப்பிங் முறையில் துல்லியமாகக் கத்தரிக்கப்பட்டு நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட இடங்களில் ஐரோப்பிய மாடலின் முகம், கை, போன்றவை பொருத்தப்பட்டன. ரஜினியின் கண்கள், புருவம், மீசை, வாய், போன்றவை தனியாக வெட்டி யெடுக்கப்பட்டுப் வெள்ளைத் தோல்மீது பொருத்தப்பட்டது.
இப்படி வெள்ளைக்கார ரஜினி உருவானது போது மூன்று விஷயங்களில் இண்டியா ஆர்ட்டிஸ்ட்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும் சவாலைச் சந்தித்தனர். அவற்றில் முதன்மையானது வெள்ளையாக மாற்றப்பட்ட ரஜினியின் முகத்தில் இயல்பான மேடுபள்ளங்கள் சரியாக, துல்லியமாக அமைய வேண்டிய 3டி டிராக்கிங் (3d tracking) கடினமாக வேலை வாங்கி நேரத்தைத் தின்றது. இரண்டாவதாக உதட்டசைவுகளைப் பாடல் வரிகளுக்கு ஏற்பக் கச்சிதமாகப் பொருத்துவது சவாலானது.
மூன்றாவதாக ஐரோப்பிய மாடலின் உடல் நிறத்தின் அசல் தன்மையில் எவ்விதச் சேதாரமும் இல்லாமல் (soft fluffy skin texture) ரஜினியின் முகத்துக்கு இடமாற்றம் செய்தது போன்றவை கடும் உழைப்பைக் கோரின. ஸ்ரீநிவாஸ் மோகன் வழிகாட்டலில் உலக அளவில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான தேசிய விருதையும் இப்படம் வென்றது.
இதே கூட்டணிதான் அனிமேட்ரானிக்ஸும் ரோபாட்ரானிக்ஸும் ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றிருந்த நிலையை ‘எந்திரன்’ படத்தில் எட்டிப் பிடித்துச் சாதனை படைத்தார்கள். எந்திரன் படத்தில் நிகழ்த்தப்பட்ட அனிமேட்ரானிக்ஸ் அட்டகாசத்தை அடுத்து பார்ப்போம்.


நன்றி  -த இந்து

0 comments: