Tuesday, June 09, 2015

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்குத் தெரியவே தெரியாது: கனிமொழி விளக்கம்

கனிமொழி | கோப்புப் படம்
கனிமொழி | கோப்புப் படம்
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலன் சசிதரனை தனக்குத் தெரியாது என்றும், அவரை சரணடைய தான் கூறவில்லை என்றும் திமுக எம்.பி. கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இறுதிகட்ட போரின்போது இலங்கை ராணுவத்திடம் தனது கணவர் எழிலன் சசிதரன் சரணடைந்ததாகவும், அவர் சரணடைவதற்கு திமுக எம்.பி. கனிமொழியின் உந்துதலே காரணம் என்றும் எழிலனின் மனைவி ஆனந்தி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ள கனிமொழி 'தி இந்து'விடம் கூறும்போது, "இந்திய அரசின் சார்பிலோ அல்லது இலங்கை அரசின் சார்பிலோ யாரையும் சரணடையச் சொல்லும் உரிமை எனக்கு இல்லை.
இந்தக் கட்டுக்கதைக்கு பின்னணியில் இருப்பவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. சசிதரன் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. எல்லோருக்கும் தெரிந்திருக்க அவர் விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவரும் அல்ல. இரண்டாவதாக நான் அவரைச் சரணடையுமாறு அறிவுறுத்தினேன் எனக் கூறுவது முற்றிலும் தவறானது. இறுதிக்கட்ட போர் உச்சத்தில் இருந்தபோது யாராவது ராணுவத்திடம் சரணடையுமாறு அறிவுரை கூறுவார்களா?" என்றார்.
ஆனால், எழிலனின் மனைவி 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டியின்போதும், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கின்போதும், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போன தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் சரணடைவதற்கு முன்னதாக திமுக எம்.பி. கனிமொழியுடன் சேட்டிலைட் போனில் உரையாடினார்" என தெரிவித்திருக்கிறார்.
இவ்விவகாரம் குறித்து திமுக செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, "விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய விதத்தில் இருந்தேஅவர்கள் யாருடைய அறிவுரையையும் ஏற்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும், கழுத்தில் சைனைடு குப்பியுடன் திரியும் ஒருவர் இலங்கையில் இருந்து சேட்டிலைட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராணுவத்திடம் சரணடையவா என கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்க முடியும்? இலங்கைப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்தோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்றார்.


நன்றி - இந்து

0 comments: