Wednesday, June 03, 2015

முருங்கை மோகினி! - கி.ராஜநாராயணன்

சுவர் விழுந்த மறுநாள்தான் எனக்குத் தெரிந்தது. சீனி நாயக்கரிடம் விசாரிக்கப் போனேன். நாயக் கர்வாள் கம்பங்கஞ்சியைத் தண்ணீர் விட்டுப் பிசைந்து கரைத்துக் கொண்டி ருந்தார். பக்கத்தில் உப்பும் சின்ன வெங்காயமும் இருந்தது பக்கமேளத் துக்கு. கை பிசைந்து கொண்டிருந்தாலும் கவனம் எங்கோ இருந்ததால் என்னை கவனிக்கவில்லை அவர்.
அந்த வீட்டின் அமைப்பு எல்லா காரை வீடுகளையும் போல ரெட்டை வீடுதான். ஏன் அப்படியே கட்டுகிறார்கள் பெரியாட்கள் என்று தெரியவில்லை. வாசலில் இருந்து வெளியே கால் வைத்தால் தெரு. பொதுத் தெரு அல்ல அது. அதனால் வீட்டின் முற்றம் பக்கத்தில் அமைந்திருந்தது. அந்த முற்றத்தில்தான் கூரை வேய்ந்த மண் தொழு. கூரை எப்பவோ விழுந்துவிட்டது. சுவர்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தன. அதில் இப்போது விழுந்தது தாய்ச் சுவர். மற்றதும் சீக்கிரமே விழுந்துவிடும்.
கால்நடைகளின் வீடுதான் தொழு. அவைகள் இல்லாதபோது அந்தத் தொழு வைப் பேணுதலாக யார் வைத்துக் கொள்வார்கள்? சில சமயம் தொழுவும் வீடாக ஆவதும் உண்டு. அதெல்லாம் ஊர் பெருகிவரும் நேரங்களில்தான். காலம் அருந்தல் ஆகிவிட்டது.
சம்சாரிகள் வீட்டில் ஒரு சுவர் விழுந்துவிட்டது என்றாலும் துக்கம்தான். வீட்டினுள் ஒரு பெண் ஆத்மா இல்லை என்றால் அது உயிர் இல்லாத வீடுதான்!
நாச்சியாள் போன அன்றே எல்லாம் போய்விட்டது. சீனி நாயக்கர் அதையெல் லாம் உணர்ந்துகொண்டாரா தெரிய வில்லை. அவருக்குக் காத்திருப்ப தெல்லாம் இனி துன்பம்தான்.
‘எனக்கென்னெ ராஜா’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
சீனி நாயக்கர் என்னைக் கவனித்து விட்டார். தான் பழங்கஞ்சியைத் தண்ணீர் விட்டுப் பிசைந்து கொண் டிருப்பது ராஞ்சனைப் பட்டதோ என்னவோ?
உள்ளுக்கு வாரும் என்று அழைத்தார். அங்கே உட்காருவதற்கு ஒரு பழைய கோணிச் சாக்குக்கூட கிடையாது.
கரைசலை நிறுத்திவிட்டு, மீதி செம்புத் தண்ணீரால் அதிலேயே கை கழுவிவிட்டு எழுந்தார்.
“வாரும், வெளியே போய்ட்டு வரலாம்...’’ என்று அழைத்தேன்.
மூச்சுக் காட்டாமல் என் பின்னால் நடந்து வந்தார். அவருடைய வீட்டுக்குப் பின்னால் ஒரு தோட்டம். அதில் இறங்கி நடந்தால் ஒரு குறுக்குப் பாதை ரோட்டுக் குக் கொண்டு போய்விடும். அந்தத் தோட்டத்தின் கரைக்கும் இவருடைய வீட்டுக்கும் நடுவே ஒரு முருங்கை மரம் இருந்தது.
அந்த முருங்கை மரம் இப்பவும் என் நினைவில் நிற்கிறது. தடியான அந்த மரம் ஒரு தூணின் கனத்தில் சாய்ந்து, இப்போதான் கீழே விழப் போவது போல நின்றுகொண்டே இருந்தது. அதன் மேலெல்லாம் பிசின். விதவிதமான நிறங்களில் வெளியே தள்ளி காய்ந்து போயிருக்கும். அந்தப் பிசின் இங்கே யாருக்கும் தேவையில்லை போலும். கசாயம் போட பட்டையைச் செதுக் கியிருப்பது தெரிகிறது. அந்தச் செதுக்கல் களின் விளைவுதான் இந்தப் பிசின்கள்.
காட்டுவாசி போல் தோன்றும் அந்த முருங்கை மரம், திடீரென்று பூ, பிஞ்சு, காய், என்று தோற்றங் கொள்ளும். ஓடி ஓடிப் பறிப்பார்கள் ஊர் மக்கள். யாரும் அந்த மரத்துக்கு ஒரு செம்புத் தண்ணீர் ஊற்றியதில்லை.
முருங்கை மரத்தை மோகினி என்பான் எழுத்தாளர் கு.அழகிரிசாமி.
முருங்கை மர மேட்டில் இருந்து இறங்கி நாங்கள் ரோட்டைப் பார்த்து நடந்தோம். ஒருவர் பின் ஒருவராக வரப்பின் மீது நடந்து வந்தோம். எங்களுக்கு முன்னால் குழந்தையை சுமந்துகொண்டு ஒரு பெண் சென்றாள். சீனி நாயக்கர் எனக்குப் பின்னால் வந்தார்.
வரப்பு இல்லாத சமதரை என்றாலும்கூட அவர் எனக்குப் பின்னால்தான் நடந்து வருவார். இப்படி அவர் ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலா கவே என்னோடு நிழலாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். எங்களைப் பிரித்த நாட்கள் எல்லாம், எனது மருத்துவமனைப் படுக்கை நாட்களே.
காலை எழுந்ததும் எங்கள் தோட்டத் துக்குப் பக்கம் நடையைக் கட்டுவேன். பார்வதி அம்மன் கோயில் படிகளில் தயாராக நின்று கொண்டிருப்பார் சீனி நாயக்கர். எனது தலை தெரிந்ததும், வந்தேனே என்று வந்து என்னோடு சேர்ந்துகொள்வார்.
பேச்சை எந்த இடத்தில் நேற்று விட்டோம் என்ற கவலை தேவையில்லை. எப்படி, எங்கே தொடங்க என்ற யோசனை யும் கிடையாது. போய்க் கொண்டே இருக்கும்போது தானாகவே ஒரு விஷயம் கிடைக்கும் பேச.
எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று எங்கள் கால்களுக்குத்தான் தெரியும். ரோட்டுப் பாலத்தைக் கடந்துவிட்டோம் என்றால் ரோட்டுக் கடைக்குப் போகிறோம் என்று அர்த்தம்.
இந்தக் காபி, டீயெல்லாம் ஒருவகையில் போதைப் பொருள் மாதிரிதான். ரோட்டுக் கடை கருப்பையா செட்டியார் காபி எங்களை அப்படி வசக்கியிருந்தது.
நுரை பொங்கும் காபி, மணத்துடன் தம்ளர்களில் முன்வைக்கப்பட்டது. பேப்பரைப் பார்த்துக் கொண்டே தொடுகறி போல் காபியை உறிஞ்சினோம். இவை யெல்லாம் வழக்கப்படிதான். கம்பங்கஞ் சியைப் பச்சைத் தண்ணீர்விட்டு பிசைந்த அன்று, ரோட்டுக் கடையில் தோசை சாப்பிட்டோம். தோசைக்கு செட்டியார் ’சையன்னாத் தோனா’ என்று செல்லப் பெயர் வைத்திருந்தார். அவரிடம் புலவு சாப்பிடுவீர்களா என்று கேட்பவர்களுக்கு, ‘‘மீன் கருவாடு ஆகும்; ஆடு, கோழி ஆகாது’’ என்பார்.
கடைக்கு வருகிறவர்களோடு ஊமை போல் பேசாமல் இருந்தால் எப்படி? எதை யாவது பேசி கலகலப்பாக்க வேண்டுமே என்று செட்டியார்வாள் நினைக்கிறார். இந்த ‘ஏழஞ்சிமையன்னா, ஒண்ணேமுக் காத்தையன்னா’வெல்லாம் அவரிடம் இருந்துதான் நாங்கள் தெரிந்துகொண்டது.
துணைக் காபி சாப்பிடாமல் திரும்ப மாட்டோம். அருவியில் குளிப்பவர்கள் துணைக் குளியல் போடாமல் வரக்கூடாது என்கிற கட்டு இருப்பது போலத்தான்.
வரும்போது வெயிலைத் தலையில் போட்டுக்கொண்டுதான் திரும்புவோம்.
- இன்னும் வருவாங்க…


thanx - the hindu

0 comments: