Tuesday, June 16, 2015

தில் தடக்னே தோ -திரை விமர்சனம்

‘ஜிந்தகி ந மிலேகி தோபாரா’ படத்துக்குப் பிறகு ஜோயா அக்தர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘தில் தடக்னே தோ’.
பயணங்களைப் பிரதானமாக வைத்து திரைக்கதை அமைப்பது ஜோயா அக்தருக்குப் பிடித்தமான விஷயம். அது ‘தில் தடக்னே தோ’ படத்திலும் தொடர்கிறது. பாலிவுட்டின் ஆடம்பரமான குடும்ப டிராமாவாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஜோயா.
கமல் மெஹ்ரா (அனில்) ஒரு கோடீஸ்வரத் தொழிலதிபர். எதிர்பாராதவிதமாக அவர் தொழிலில் திவாலாகிவிடுகிறார். மீண்டும் தொழிலில் நம்பகத்தன்மையைப் பெறுவதற்காக கமல் - நீலம் (ஷெஃபாலி) தம்பதி தங்கள் முப்பதாவது திருமண நாளைக் கப்பலில் கொண்டாட முடிவுசெய்கின்றனர். மகன் கபீர் (ரன்வீர்), மகள் ஆயிஷா (பிரியங்கா), மருமகன் மானவ் (ராகுல்), புளுட்டோ (கமல் குடும்பத்தின் நாய்) என அனைவரும் கப்பல் பயணத்துக்குத் தயாராகின்றனர். கமலின் தொழில்முறை நண்பர்கள் அனைவரையும் கப்பல் பயணத்துக்கு அழைக்கின்றனர். இந்தப் பயணத்தில் ஆயிஷா தன் முன்னாள் காதலர் சன்னியை (ஃபர்ஹான்) சந்திக்கிறார். கபீருக்குக் கப்பலில் நடன கலைஞராகப் பணிபுரியும் ஃபரா (அனுஷ்கா சர்மா) மீது காதல் வருகிறது. இந்தக் கப்பல் பயணம் கமல் குடும்பத்தினர்களின் வாழ்க் கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் ‘தில் தடக்னே தோ’
மேல்தட்டுக் குடும்பங்களில் திருமணமான தம்பதிகள் எப்படி ஒரு கட்டத்தில் போலியாக வாழ ஆரம்பித்துவிடுகின்றனர் என்பதற்கு உதாரணமாக கமல் - நீலம் தம்பதி கதாபாத்திரங்களை அமைத் திருக்கிறார் ஜோயா. திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் தன் சொந்தக் குடும்பத்தாலேயே எப்படி வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறாள் என்பதையும், காதல் இல்லாத திருமணம் ஒரு பெண்ணை எப்படிப்பட்ட மன நெருக்கடிகளுக்கு உள்ளாக்கு கிறது என்பதையும் ஆயிஷாவின் கதாபாத்திரம் விளக்குகிறது.
தொழிலதிபர் அப்பாவுக்கு மகனாகப் பிறந்துவிட்டால் என்ன சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்கு உதாரணமாகக் கபீர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்த நான்கு கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் படத்தின் இன்னொரு முக்கியமான கதா பாத்திரம் புளுட்டோ.
இதுதான் திரைப்படத்தின் கதைசொல்லி. புளுட்டோவுக்கு நடிகர் ஆமிர் கான் குரல் கொடுத்திருக்கிறார். புளுட்டோ படம் முழுக்கப் பார்வையாளர்களுக்கு மனித சுபாவங்களைப் பற்றி விளக்கு கிறது.
இயக்குநர் ஜோயா அக்தரும், திரைக்கதை எழுத்தாளர் ரீமாவும் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். ‘ஜிந்தகி ந மிலேகி தோபாரா’ படத்தின் பயணம் செய்த மேஜிக்கை ‘தில் தடக்னே தோ’ பயணம் செய்யவில்லை. கடல் வழியாகப் பயணித்தாலும் இந்தத் திரைக்கதையில் ஆழம் இல்லை. படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. இரண்டாம் பாதி திரைக்கதையும் விறுவிறுப்பு இல்லாமல் மெதுவாக நகர்கிறது. படத்தின் மூன்று மணிநேர நீளத்துக்கும் ஜோயா அக்தர் திரைக்கதையில் எந்த நியாயத்தையும் செய்யவில்லை.
மேல்தட்டுக் குடும்பங்களில் இருக்கும் போலித் தனங்கள், சொந்தக் குழந்தைகளை ‘பிசினெஸ்’ காரணிகளாகப் பார்க்கும் தன்மை போன்ற வற்றைக் கதைக்களமாக அமைத்ததற்காக வேண்டுமானால் ஜோயாவைப் பாராட்டலாம். ஆனால், அந்தப் பிரச்சினைகள் சரியாகக் கையாளப் படவில்லை.
படத்தின் கேமரா கடலையும், கப்பலையும் அழகியலோடு பதிவுசெய்கிறது. பெரும்பாலான காட்சிகள் கப்பலிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு பதிலாக, துருக்கியை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சுற்றிக் காட்டியிருக்கலாம். படத்தின் பின்னணி இசையைவிடப் பாடல்கள் அதிகம் கவர்கின்றன. ‘கேர்ள்ஸ் லைக் டு சிங்’ பாடலையும், ‘கல்லா(ங்) குடியான்’ பாடலையும் உதாரணமாகச் சொல்லலாம்.
வசனத்தை ஃபர்ஹான் அக்தர் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கதாபாத்திரங்களின் வசனங்கள் வாழ்க்கைக்கு புத்தி சொல்வது போலவே எழுதப்பட்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, பெண்களுக்கு சுதந்திரம் அளிப் பதைப் பற்றி மானவ் கதாபாத்திரமும், சன்னி கதாபாத்திரமும் விவாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால், பிரதான கதாபாத்திரங்களுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. உதாரணமாக, அனுஷ்காவின் கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் கட்டமைப்பு மேலோட்டமாக இருக்கிறது. படத்தின் பலமாக அனில், பிரியங்கா, ரன்வீரின் நடிப்பைச் சொல்லலாம்.
மேல்தட்டுக் குடும்பங் களில் இருக்கும் பிரச்சினை களைப் பேச நினைத் திருக்கும் ஜோயா, அதை அழுத்தமாகப் பதிவு செய்யத் தவறியிருக்கிறார்.

நன்றி - த இந்து

0 comments: