Wednesday, June 10, 2015

மனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநாராயணன்

  • ஓவியங்கள்: மனோகர்
    ஓவியங்கள்: மனோகர்
‘‘ஆரு வச்ச தீயோ வீடு அழிஞ்ச தில குத்தமில்லெ’’ என்று ஒரு சொல்.
அந்தத் ‘தீ’ சீனி நாயக்கரைப் பலமாகப் பற்றிக்கொண்டது.
ஒருநாள் சீனி நாயக்கர் வீட்டுத் தொழு வின் மண் சுவர் சாய்ந்து விழுந்துவிட்டது.
சத்தம் கேட்டுப் போய்ப் பார்த்தேன். அவரும் அங்கே இருந்தார்.
வெளிப்பக்கம் விழாமல் உள்பக்கமே விழுந்திருந்தது. வெளிப்பக்கம் விழுந் திருந்தால் செலவழித்து அந்த மண்ணை யெல்லாம் எடுத்து உள்பக்கம் போட வேண்டியதிருக்கும். அப்படிச் செய்ய முடியாத சொந்தக்காரனுக்கு, நாளாசரி யாக அந்த மண்ணை ஊர்க்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். சுவர் மண் ணுக்கு அப்படி ஒரு கிராக்கி. ‘கேட்டுப் பாதி; கேக்காமல் மீதி’ என்று காணா மலே போய்விடும்.
அந்த மண்ணை ‘நத்தமண்’ என்று சொல்லுகிறார்கள். கருப்பு மண் அல்ல; சாம்பல் நிறம்போல இருக்கும். மழைக்குக் கரையாது. அடைமழை பெய்தால் பாசிதான் பிடிக்கும். சுவரின் அடிவாரங்களை மட்டும் வீட்டுக்காரன் கைபார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் சுவரின் அடிவாரம் இத்துக்கொண்டே வந்து ஒருநாள் இப்படி விழுந்துவிடும்.
நத்தத்து மண் என்பது ‘ஆகிவந்த மண்’ என்றே சொல்ல வேண்டும்.
நாகலாபுரம், புதூர் பக்கம் பந்தல்குடி என்று ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ஒரு மண் உண்டு. அந்த மண்ணின் விசேடம் என்னவென்றால் மழை பெய் தால் நனையாது!
மண்சுவர் எழுப்பி வீடுகட்டி, தட்டட்டி போட்ட பனைவிட்டங்களின் மேல் மூங் கில் தெப்பையை விரித்து, அதன் மேல் அந்த மண்ணைக் கனமாக (ஒரு நாலு விரக்கடை கனத்தில்) விரித்து வைத்து விட்டால் போதும். எவ்வளவு கனமழை பெய்தாலும் வீட்டினுள் நீர் சொட்டாது.
அந்த மண் இப்போது பார்க்க மட்டுமே கிடைக்கும். கொண்டுவரக் கிடைக்காது. ஆற்று மணலைத் துடைத்து எடுத்துக்கொண்டு போனது போல் காணாமல்போய்விட்டது.
இந்த ‘நத்தத்து மண்’ பற்றி நான் ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது பிரஸ்தாபித்தேன்.
‘‘மண்ணை கரைந்து போகாமல் செய்ய ஒரு பக்குவம் இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு, ‘‘மெதுவாக ஓடிச் செல்லும் ஆழமில்லாத வாய்க்கால் தண்ணீரில் தேங்காய்ப் பருமன் உள்ள ஒரு மண்கட்டியை எடுத்து வைத்தால், கொஞ்ச நேரத்தில் அந்தக் கட்டி கரைந்து காணாமல் போய்விடும்.
அதே அளவு மண்ணை எடுத்து நீர் தெளித்துப் பிசைய வேண்டும். நீர் தெளித் துத் தெளித்துப் பிசைந்து கொண்டே இருந்து அதை ஒரு உருண்டையாக்கிய பிறகு, அதே வாய்க்கால் தண்ணீரில் வைத்தால், ஓடுகிற தண்ணீரால் அந்த மண் கட்டியைக் கரைக்கவே முடியாது.
குயவர்கள் மண்ணை அப்படித்தான் காலால் மிதித்துப் பிசைகிறார்கள்.
மண்வீட்டை சுவர் வைத்துக் கட்டு வதற்கு முன்னால் அதேபோல் கால் களால் மிதித்து மிதித்து மண்ணுக்கு பலம் சேர்க்கிறார்கள்’’ என்றார் ரசிகமணி.
வீடு கட்டுவதற்கு மண்ணைத் தெரிந் தெடுப்பதற்கே ஒரு திறமை வேண்டும். எல்லாப் பாறைகளிலும் சிற்பங்கள் செய்ய முடியாது. அப்பேர்பட்ட மண் இருக்கும் இடத்தையே ‘நத்தம்’ என் கிறார்கள்.
இந்த நத்தத்தின் பெயர்களிலேயே ஊர்கள் இருக்கின்றன. உச்சிநத்தம், ஆவல்நத்தம், பழங்காநத்தம், பாலவநத் தம், தொண்டமாநத்தம் என்று.
இந்தச் சுவர்கள் விழும்போது யார் பேரிலும் விழுவதில்லை. காய்ந்துபோன மரமட்டைகளும் அப்படித்தான். அவ் வளவு கவனம் அவைகளுக்கு!
பயனில்லாமல் இப்டி வீட்டுச் சுவர் கள் இடிந்து கிடக்கின்றனவே என்று நினைத்துவிட வேண்டாம். மீண்டும் அவை பயன்படுகின்றன என்பது ஒரு புறம். அதில், மழைக் காலம் முடிந்தவுடன் முளைக்கும் செடிகொடிகள் பச்சிலை களாக இருப்பது இன்னொரு அதிசயம்.
பனை நார்க் கட்டிலில் பாட்டி உட் காந்து கொண்டிருக்கிறாள். காலை நேரம். பச்சிளம் குழந்தைகளை இடுப் பில் தூக்கிவைத்துக்கொண்டு தாய்மார் கள் வருகிறார்கள்.
“ரெண்டு நாளாகக் குழந்தைக்குப் பச்சை நிறத்தில் வயத்தோட்டம் போகிறது” என்கிறாள் தாய்.
பாட்டி குழந்தை வயிற்றைத் தடவிப் பார்க்கிறாள்.
“ஒண்ணுஞ்செய்யாது, பயப்படாதெ. ரெண்டு நாளைக்கு ‘சுவத்துமண் கசாயம்’ போட்டுக் கொடு, சரியாப் போயிடும்…” என்கிறாள்.
இந்த மண்கட்டிக் கசாயம் காய்ச்சப் பட, குட்டிச் சுவர் மண்ணைத்தான் பயன்படுத்தினார்கள். ஆச்சர்யமாகக் குணம் தரும். அந்தப் பக்குவம் இப்போது மறந்துபோய்விட்டது.
பாட்டி சொல்லும் பக்குவங்கள் அப்போது எள்ளி நகையாடப்பட்டன. இப்போ அதை நினைத்து நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கிறது.
‘சுவர் ஒட்டிப் பச்சிலை’ என்று ஒரு பச்சிலைச் செடி. அதுவும் இந்த குட்டிச் சுவர்களிலும் இடை சந்துச் சுவர்களிலும் தான் பார்க்கலாம். காயங்களுக்கும் ரணப் புண்களுக்கும் ‘சொன்னாங்க’மான மருந்து. ஆச்சர்யமாகக் குணமாகும்.
இப்படி சுவர் இடிந்து விழுந்து கிடக்கும் இடங்களில் பந்தல் போட்டு பயிர்க் குழி போடுவார்கள் பீர்க்கன், புடலை, அவரை என்று. காய்ப்பு பீச்சித் தள்ளும். ருசியோ ருசி. அப்படி ஒரு ருசி! உடம்பில் புறப்படுகிற, சிலந்தி பிளவைகளுக்கு அவரை இலையின் சாறு ‘சொன்னாங்க’மான மருந்து.
அவரை இலையைப் பறித்துக் கசக்கிப் பிழிந்து, சொட்டுச் சொட்டாக விழும் சாற்றை பஞ்சில் விழச் செய்து, அந்தப் பஞ்சை சிலந்தி புறப்படும் இடத்தில் ஒட்ட வைத்தால் ஒட்டிக்கொள்ளும், விழாது. காய்ந்து மூணாம் நாள் பஞ்சைப் பிடித்து இழுத்தால் சிலந்தியின் முளையோடு வந்துவிடும்.
முளை வைக்க முன்னதாக என்றால் அப்படியே அழுத்தி சிலந்தி எழாமல் செய்து பஞ்சு மட்டுமே விழுந்துவிடும்.
உணவுக்கு உணவாகவும் மருந்துக்கு மருந்தாகவும் அந்தப் பயிர்க் குழிப் பந்தல் தாவரங்கள் பயன்படும்.
- வருவாங்க…
a



thanx - the hindu

0 comments: