Saturday, June 13, 2015

Mad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான் தோட்டத்து மல்லிகை)

  • ஈவ் என்ஸ்லர்
    ஈவ் என்ஸ்லர்
உலக நாடக அரங்கின் மிக உயரிய விருதான டோனி விருதை ஈவ் என்ஸ்லர் என்ற பெண் வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட இருநூறு பெண்களைப் பேட்டிகண்டு, பாலியல், உறவுகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை ஆகியவற்றைப் பற்றிய அவர்களது கருத்தை 1996-ல் ஈவ் என்ஸ்லர் பதிவுசெய்தார்.
இந்தக் கருத்துகளை மையமாக வைத்து, வெஜைனா மோனோலாக்ஸ் (Vagina Monologues) என்ற நாடகத்தையும் எழுதினார். பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்து எழுதப்பட்ட இந்த நாடகம் உலகெங்கும் புகழ்பெற்றது. (நீங்கள் எதிர்பார்ப்பது போலவே) தமிழகத்தில் உடனடியாகத் தடையும் செய்யப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேடையேற்றப்பட்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இன்றுவரை அத்தடை நீடிக்கிறது.
இந்நாடகத்தின் மூலமும், அவருடைய பிற பங்களிப்புகளின்மூலமும் குறிப்பிடத்தக்க சமுதாயத் தொண்டு புரிந்ததன் காரணமாகவே இஸபெல் ஸ்டீவன்ஸன் விருது 2011-ல் ஈவ் என்ஸ்லருக்கு வழங்கப்பட்டது. இந்த ஈவ் என்ஸ்லரை அழைத்து, தனது படத்தில் நடிக்கும் நடிகைகளுக்காக ஒரு கருத்துப் பட்டறை நடத்தச் சொல்லி ஜார்ஜ் மில்லர் என்ற இயக்குநர் பரிந்துரைத்தார்.
உலகம் முழுக்கப் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறை, போர்க்களங்களில் சிக்கிக்கொள்ளும் பெண்களுக்கெதிராக எப்படியெல்லாம் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது என்பன போன்ற கருத்துகளை வைத்துக்கொண்டு ஈவ் என்ஸ்லர் ஒரு வாரம் நமீபியாவில் இருந்த படப்பிடிப்புத் தளத்துக்கே வந்து நடத்திய இந்தப் பட்டறை பரவலாகப் பரவியது. இதனால் படப்பிடிப்பில் இருந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலருமே இந்தப் பட்டறையில் இடம்பெற்றனர்.
சுக்குநூறாக உடைத்த இயக்குநர்
இந்தப் பட்டறைக்கான காரணம் என்ன? ஜார்ஜ் மில்லர் இயக்கிய ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’ (Mad Max: Fury Road) என்ற அந்தப் படம் முழுக்கவே பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றியதுதான். ஆனால் பொதுவாக நாம் எதிர்பார்ப்பதுபோல இத்தகைய கருத்துகளை மென்மையாகச் சொல்லும் படம் இல்லை இது. தொடக்கம் முதல் இறுதிவரை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ஹாலிவுட் படம்.
ஆனால் பிற ஹாலிவுட் படங்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், இதில் ஒரு பெண்தான் (சார்லீஸ் தெரான்) கதாநாயகி. அவருடன் நடித்திருக்கும் டாம் ஹார்டி, படம் முழுக்கவே சார்லீஸ் தெரான் ஏற்றிருக்கும் ஃப்யூரியோஸா என்ற கதாபாத்திரத்துக்குத் துணையாகவே வருகிறார்.
சில காட்சிகளில் இவரால் செய்ய முடியாமல் போனவற்றையெல்லாம் ஃப்யூரியோஸா எளிதாகச் செய்து முடிப்பதுபோன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. ஹாலிவுட்டுக்கு இது புதிதுதான். அங்கே எப்போதுமே மிகப் பெரிய ஆக்‌ஷன் படங்களில் ஆண்கள் மட்டுமேதான் நாயகர்கள். பெண்களுக்கு எப்போதும் துணைக் கதாபாத்திரம்தான். மிக அரிதாக ‘ஏலியன்’ போன்ற படங்கள் வந்தாலும், பெரும்பாலான படங்களில் அங்கே பெண்கள் ஊறுகாய்கள் மட்டுமே. அதைத்தான் ஜார்ஜ் மில்லர் சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறார்.
இந்தப் படத்திலும், நாயகி ஃப்யூரியோஸா காப்பாற்றுவது ஐந்து அப்பாவிப் பெண்களை. ஒரு கொடுங்கோலனின் பிடியில் சிக்கிக்கொண்டு, அவனுடைய வாரிசுகளைச் சுமப்பதற்காக அடிமைப்படுத்தப்படும் ஐந்து பெண்களைத்தான் ஃப்யூரியோஸா தப்புவிக்கிறாள். அவளைத் துரத்திக்கொண்டு வரும் இம்மார்ட்டன் ஜோ என்ற அந்தக் கொடியவனின் பிடியிலிருந்து இந்த ஐந்து பெண்கள் எவ்வாறு தப்புவிக்கப்பட்டனர் என்ற கதையை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்வதுதான் ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’.
கற்றுத் தந்த பட்டறை
இப்படிப் படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துமே பெண்கள் சார்ந்து இருந்ததால்தான் இயக்குநர் ஜார்ஜ் மில்லர் நாடகாசியர் மற்றும் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஈவ் என்ஸ்லரை அழைத்தார். படத்தில் நடித்த அனைத்துப் பெண்களுக்கும் ஈவ் என்ஸ்லரின் பட்டறை மிகவும் உதவியது. உலகம் முழுக்க இப்படி அடிமைப்படுத்தப்பட்ட பெண்களைப் பற்றி ஈவ் என்ஸ்லர் விரிவாகப் பேசினார்.
ஜப்பானியர்களால் இப்படி அவர்களது பாலியல் தேவைகளுக்காக அடிமைகளாக்கப்பட்ட Comfort Women என்று அழைக்கப்பட்ட பெண்களைப் பற்றி, போஸ்னியா, காங்கோ, ஆஃப்கானிஸ்தான், ஹைத்தி போன்ற இடங்களில் இன்னமும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்கொடுமைகள், வன்முறைகள் ஆகியவை பற்றி, அமெரிக்காவில் நடந்துவரும் பாலியல் வியாபாரத்துக்காக (Sex Trafficking) பிற நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பெண்களை ஒவ்வொரு வருடமும் ஏராளமாக அமெரிக்காவினுள் சட்டவிரோதமாகக் கொண்டுவருவதைப் பற்றியெல்லாம் ஈவ் என்ஸ்லர் உதாரணங்களோடும் புள்ளி விவரங்களோடும் இந்தப் பட்டறையில் விளக்கினார். இதனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைப் படத்தில் நடித்தவர்கள் உணர்ந்துகொண்டு நடிக்க முடிந்தது. உண்மையில் இந்தப் பயிற்சிப் பட்டறை படத்தில் இடம்பெற்ற பெண் நடிகர்களைப் பட்டை தீட்டியது.படத்தின் இயக்குநர் ஜார்ஜ் மில்லர், இக்கதாபாத்திரங்களை அடிமைகளாகக் காட்ட விரும்பவில்லை. மாறாக, சுதந்திர வேட்கை உள்ள பெண்களாக, அடிமைத்தளையை உடைத்துக்கொண்டு வெளிவரும் வீரமிக்க பெண்களாகவே காட்ட விரும்பினார். படத்தின் தொடக்கத்தில் கிழிந்துபோன ஆடைகளோடு அடிமைகளாகக் கிடந்த பெண்கள், படம் முடியும் தறுவாயில் எப்படி வீரத்தோடு போரிட்டு மரணத்தையும் தழுவத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் ஜார்ஜ் மில்லர் காட்ட விரும்பிய கதை. அது ஈவ் என்ஸ்லரின் பங்களிப்பால் இன்னும் துல்லியமாக எடுக்கப்பட்டது.
நாம் கவனிக்க வேண்டிய படம்
உலகம் முழுவதும் சில வாரங்கள் முன்னர் வெளியான ‘மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்’ படத்துக்கு ஏராளமான வரவேற்பு. படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான சண்டைக் காட்சிகளைவிடவும், படம் முழுவதும் பேசப்பட்ட பெண்ணியக் கருத்துகள்தான் உலகெங்கும் மக்களின் ஆதரவைப் பெற்றுவருகின்றன.
முழுக்க முழுக்கக் வணிகத் திரைப்படமான இதில், இப்போது பரவலாக விவாதிக்கப்பட்டுவரும் பல பெண்ணியக் கருத்துகள் இடம்பெற்றது உண்மையிலேயே அனைவரும் வரவேற்க வேண்டிய அம்சம். குறிப்பாக, இந்தியாவில் இது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய படம்.
மேலோட்டமாகக் கவனித்தால் இவையெல்லாம் இப்படத்தில் தெரியாமலேயே போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, ஈவ் என்ஸ்லரைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதன் பின் இப்படம் பார்த்தால் அவசியம் அது பல கேள்விகளை மனதில் எழுப்பும்.
தொடர்புக்கு [email protected]

நன்றி -த இந்து

0 comments: