Wednesday, June 10, 2015

பதினாறு வயதினிலே

தமிழில் புது வெள்ளம் பாய மடை திறந்த படம் பதினாறு வயதினிலே. நிஜமான கிராமத்தைக் காட்சிப்படுத்திய முதல் தமிழ் இயக்குநர் பாரதிராஜா என்றால் அது மிகையில்லை. வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் செலவு அதிகம் என்று யோசித்தார்கள். அதனால் கிராமக் காட்சி என்றால் அரங்கு அமைத்து அரிதாரம் பூசிய நடிகர்கள் செயற்கையாக இழுத்து இழுத்துப் பேசுவார்கள்.
சில சமயங்களில் நகர நாயகனின் வண்டி கிராமத்துச் சாலையில் நின்றால் நாயகியின் குடத்திலிருந்து தண்ணீர் வாங்கி வண்டிக்கு ஊற்றுவார். அல்லது சூட் கோட்டு அணிந்து வயல்காட்டில் ஓடி டூயட் பாடுவார். இந்தப் போக்கு எழுபதுகளின் கடைசியில்தான் வழக்கொழிந்தது. வண்ணத்தில் படங்கள் வர ஆரம்பித்தது ஒரு காரணம் என்றால் பதினாறு வயதினிலே படத்தின் வெற்றி மற்றொரு மகத்தான காரணம்.
கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் சினிமா படித்தவர். தாகம் படத்தின் உதவி இயக்குநர். மயில் என்ற கலைப் படத்தைத் தயாரிக்கத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை அணுகியவர். நடிகர்களைவிடக் கதாபாத்திரங்களை நம்பியவர். இப்படி அவரைப் பற்றிய ஆரம்பகாலச் செய்திகள் அவர் தமிழின் மிகப்பெரிய வர்த்தக இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி என்றில்லாமல் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று டைட்டில் போட்டதும், “ஒரு காட்டான் குரல்ல காட்சியின் பின்புலத்தில் ஒலிக்கும் பாடல் வேணும்” என்று இளையராஜாவை “சோளம் விதைக்கையிலேயே...!” பாட வைத்ததும், இளையராஜாவின் நண்பர் எஸ்.பி.பி.யைத் தவிர்த்துவிட்டு மலேசியா வாசுதேவனை அறிமுகப்படுத்தியதும், ஓடும் நதியை, வயல், வரப்பு வெளிகளைக் கதாபாத்திரங்கள் ஆக்கியதும் என எல்லாம் ஒரு திரைக் காவியத்தைச் செதுக்கக் காரணமாக அமைந்த முக்கிய முடிவுகள்.
காதல் இளவரசன் என்று அறியப்பட்டிருந்த கமல் ஹாசன் கோவணத்துடன் நடித்தார். படம் முழுதும் வெற்றிலைச் சாறு ஒழுகும் வாயுடன், சாய்ந்த நடையுடன் ‘சப்பாணி’ என்ற அப்பாவி இளைஞனாக வாழ்ந்தார். பரட்டை ரஜினியின் பக்கவாத்தியம் கூத்து கவுண்டமணி. குருவம்மா காந்திமதியின் உடல் மொழியும் குரல் வீச்சும் தெருச்சண்டையை அச்சு அசலாய்த் திரையில் நிலை நிறுத்தியது. யார்தான் நிஜமில்லை படத்தில்?
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்ற நிவாஸ், இளையராஜா, கங்கை அமரன், கலைமணி, பாலகுரு, பாக்யராஜ் ஆகியோர் அதன்பிறகு அசைக்க முடியாத பங்களிப்பைச் செய்துவந்தார்கள். ஸ்ரீதேவி கனவுக் கன்னியானார். கமலும் ரஜினியும் இரட்டையர்களின் ராஜபாட்டையை எம்.ஜி.ஆர். - சிவாஜிக்குப் பிறகு புதுப்பித்தார்கள்.
மயிலின் கதை எளிமையானது. 16 வயதுப் பருவ மங்கை. கோட் சூட் அணிந்து கிராமத்துக்கு வரும் பட்டணத்து மாப்பிள்ளைக்காகக் காத்திருக்கிறாள். அதனால் வீட்டில் வளைய வந்து அன்பு செலுத்தும் சப்பாணியை வெறுக்கிறாள். வருகிறார் கால்நடை மருத்துவர். அவரது கவனம் அவளின் 16 வயது பருவத்தின் மேல் மையம் கொள்கிறது.
அவருக்காக மேல் படிப்பைத் துறக்கும் மயிலு, நிஜம் அறிகையில் உடைந்து போகிறாள். தாயின் மறைவும், ஊராரின் வசவுகளும் மயிலை சப்பாணி மேல் அன்பு கொள்ள வைக்கின்றன. கடைசியில் அவனிடமே தன்னை ஒப்படைக்க நினைக்கிறாள். துரதிர்ஷ்டவசமாக அன்று மயிலுவை வன்புணர்வு செய்ய முயலும் பரட்டையைக் கொல்லும் சப்பாணி ஜெயிலுக்குச் செல்ல நேர்கிறது. அவன் திரும்பி வருவான் என ரயிலடியில் காத்திருக்கிறாள் மயிலு.
திருவிளையாடலின் திரைக்கதை ஒலிச் சித்திரமாக ஊர்தோறும் ஒலித்ததுபோல இந்தப் படமும் ஒலித்தது. வீட்டிலும் வயலிலும் இதைக் கேட்டப்படி வேலை செய்யும் மக்கள், ஒலிச்சித்திரத்துக்கு ஏற்பப் பார்த்த காட்சிகளை மனத் திரையில் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்து, நெகிழ்ந்து, அதிர்ந்துபோவார்கள்.
காரணம். இந்தக் கதை மண்ணின் மனிதர்களைப் பிரதிபலித்தது. வலிமையான மண்ணின் இயக்குநராகப் பாரதிராஜாவை உருவெடுக்க வைத்தது. மயிலும் சப்பாணியும் ரசிகர்களின் மனத்திரையை விட்டு என்றுமே வெளியேற மறுக்கும் கதாபாத்திரங்கள் ஆகிவிட்டார்கள்.
பாரதிராஜாவின் எல்லாத் தெற்கத்தி கிராமக் கதைகளிலும் அன்பும் வன்முறையும் சமமாகக் கலந்திருக்கும். எல்லாக் கதைகளிலும் ஒரு வெளி ஆள் நுழைவுதான் அந்தக் கிராமத்தின் போக்கை மாற்றி அமைக்கும். மானத்தைக் காக்க உயிரை எடுக்கும் உச்சக் காட்சியில் காதலர்கள் விடுதலை நோக்கிப் போவார்கள். இந்த ஃபார்முலாவின் முதல் பதிப்புதான் 16 வயதினிலே.
தேர்ந்துகொள்ளும் கதையைப் போலவே அதைக் காட்சிப்படுத்தலில் பின்பற்றும் அழகியல் இவரைக் கவனிக்க வைத்தது. கிராமத்துச் சடங்குகளை முதலில் சரியாகக் காட்டிய படம். கனவும் சிலிர்ப்புமான இளம் பிராயத்தின் உணர்வுகளை அவ்வளவு நுணுக்கமாக அதற்கு முன் யாரும் காட்டியிருக்க வில்லை. மரங்களையும் வயல்களையும் ஆற்று நீரையும் துணைக்கு அழைத்து இவர் காட்டிய திரை வித்தைகள் சொல்லி மாளாது.
இசையும் காட்சியும் கொள்ளும் இசைவுத் தன்மையை முதன்முதலில் நான் அனுபவித்தது இந்தப் படத்தில்தான். இசை, காட்சிக்கு ஜீவன் சேர்த்ததா அல்லது காட்சி, இசையை உணரச் செய்ததா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
தமிழ் கிராமங்கள் எப்படி இருந்தன என வருங்காலத்தில் ஆய்வு செய்யப்படுமேயானால் பாரதிராஜாவின் பெரும்பாலான படங்கள்தான் ஆவணப் படங்களாக நின்று உதவும்.

thanx 
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
the hindu

0 comments: