Sunday, June 28, 2015

‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 ? -மாயி’, ‘திவான்’ இயக்குநர் பேட்டி

  • ’அதிபர்’ படத்தில் ஜீவன், சந்தியா
    ’அதிபர்’ படத்தில் ஜீவன், சந்தியா
  • சூர்யபிரகாஷ்
    சூர்யபிரகாஷ்
‘மாணிக்கம்’ படத்தின் மூலம் மண் வாசனை இயக்குநராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ். சரத்குமார் நடிப்பில் ‘மாயி’, ‘திவான்’ படங்களை இயக்கிய இவர், நடிப்பிலிருந்து விலகியிருந்த ஜீவனை ‘அதிபர்’ படத்தின் மூலம் திரும்பவும் அழைத்துவந்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
‘வருஷ நாடு’ படத்தின் இயக்கத்திலிருந்து பாதியில் நீங்கள் விலகிவிட்டதாக செய்தி வெளியானதே?
பாதியில் வெளியேறினேன் என்று வெளியான செய்தி பொய். அந்தப் படத்தை முழுமையாக முடித்துத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பிச் சான்றிதழ் பெற்றுத்தந்த பிறகே அதிலிருந்து வெளியேறினேன். நான் நேசித்து இயக்கிய படம் அது. எனது மாமன் மகனின் காதலை அப்படியே படமாக்கினேன். நிலக்கோட்டை அருகில் உள்ள வாடிப்பட்டியில் நடந்த உண்மைக் கதை அது. ‘தைரியம்’ பட நாயகன் குமரன் நாயகனாக நடித்தார். சிருஷ்டி டாங்கேயை நாயகியாக நடிக்க வைத்தேன். அதன் பிறகே அவர் மேகா படத்தில் நடித்து இன்று முன்னணி நாயகியாக இருக்கிறார்.
‘நான் அவனில்லை’ படத்துக்குப் பிறகு ஜீவன் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவரை எப்படி மீண்டும் இழுத்துவந்தீர்கள்?
நான் முதலில் கதை சொல்லச் சென்றபோது “ரசிகர்களின் மனதை வருடுகிற மாதிரியான அதிக மென்மையும் அளவான வன்மையும் நிறைந்த கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே மறுபடியும் நடிப்பதாக இருக்கிறேன். எனது பழைய இமேஜ் எதுவும் இருக்கக் கூடாது. அதேநேரம், மற்ற கதாபாத்திரங்களுக்கும் சரியான முக்கியத்துவம் இருக்க வேண்டும்” என்றார். அவர் எப்படி எதிர்பார்த்தாரோ அப்படிப்பட்ட கதையாக ‘அதிபர்’ இருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டார். ரசிகர்களின் மனதை வருடும் மறுபிரவேசமாக இந்தப் படம் இருக்கும்.
ஜீவன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்?
இதுவும் ஒரு உண்மைக் கதைதான். கட்டுமான நிறுவனம் ஒன்றைச் சிறு அளவில் தொடங்கி இன்று சென்னையில் முன்னணிக் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக அதை வளர்த்துக் காட்டியிருக்கிறார் நேர்மையான இளைஞர் ஒருவர். அவரை இந்தத் துறையிலிருந்து அப்புறப்படுத்தப் பல போட்டி நிறுவனங்கள் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தினார்கள். அதையெல்லாம் அவர் முறியடித்து எழுந்து நின்றார். அவர் யார் என்பதைச் சொல்வது தனது வாழ்க்கைக் கதையைப் படமாக்க அனுமதி தந்த அவருக்குச் செய்யும் நன்றியாக இருக்காது. அந்தத் தொழிலதிபராகத்தான் ஜீவன் நடிக்கிறார்.
செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று நேர்மையாக வாழும் சிவா கதாபாத்திரத்தில் ஜீவன் வருகிறார். ஆனால், அவரது நேர்மையே பலருக்கும் சவக்குழியாகும்போதுதான் சிக்கல் வருகிறது. நம்புகிறவர்களை எல்லா வகையிலும் ஏமாற்றலாம் என்ற நோக்கத்தோடு ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் வரும் ரஞ்சித் நேருக்கு நேர் சந்தித்து சவால் விடாமல் பின்னும் சதிவலை ரசிகர்களைப் பதைபதைக்க வைக்கும்.
வழக்கம்போல இந்தப் படத்திலும் நட்சத்திரங்களைக் குவித்திருக்கிறீர்களே?
நிஜ வாழ்க்கையில் நாம் நிறைய பேரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி யிருக்கும்போது நாயகன், நாயகி, வில்லன், குணச்சித்திரம் என்று ஏன் சினிமாவில் மட்டும் எண்ணிக்கையைச் சுருக்க வேண்டும்? ரஞ்சித் தவிர சமுத்திரக்கனி, நந்தா, ரிச்சர்ட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் டி. சிவகுமார் சிபிஜ அதிகாரியாக நடித்திருக்கிறார். நாயகியாக சந்தியா நடித்திருக்கிறார். எல்லோருக்குமே சமமான முக்கியத்துவம் கதையில் இருக்கிறது. ஜீவன் நாயகன் என்றாலும் இதையொரு மல்டி ஸ்டாரர் படம் என்று கூறலாம்.
நந்தாவுக்கு என்ன வேடம்?
நந்தா கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் நடிகர் அல்ல. இந்தப் படத்தில் டேவிட் என்ற இளம் ரவுடி. ரவுடியாக நடித்தாலும் நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்பதால் ஒப்புக்கொண்டார்.
நண்பன் கேட்டுக்கொண்டதற்காக நிழலுலகை விட்டு விலகி நல்லவனாக மாறுகிறார். பாதை மாறியவர்கள் திரும்பி வருவதில் இருக்கும் சிக்கலைச் சந்திக்கும் நந்தா அதைக் கடந்துவர முடிந்ததா என்ற அம்சத்துடன் அவரது கதாபாத்திரம் பயணிக்கும். இதை ஒரு சமூக த்ரில்லர் எனலாம். ஆனால், யதார்த்தமான நகைச்சுவையும் படம் முழுவதும் இருக்கும்

நன்றி - த இந்து

0 comments: