Thursday, June 18, 2015

இங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரியுமா?

ஆங்கில நாளிதழ் கட்டுரை ஒன்றின் தலைப்பில் ‘SANS’ என்ற வார்த்தை காணப்பட்டது. இதன் பொருள் என்ன என்று நண்பர் ஒருவர் கேட்டார். Sans என்றால் without என்று பொருள். Sans limits என்றால் எல்லைகளற்ற என்று அர்த்தம்.
Sans என்பது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. அப்படியே ஆங்கிலத்தில் அது இடம்பெற்றுவிட்டது. இப்படி அவ்வப்போது நாம் சந்திக்க நேரும் சில பிரெஞ்ச் வார்த்தைகளை அறிந்து கொள்வோம்.
பிரெஞ்சிங்கிலீஷ்
A la carte (ஆ ல கார்ட் இதில் ஆ என்பது ‘அ மற்றும் ஆ ஆகிய இரு உச்சரிப்புகளின்’ மையமாக உச்சரிக்கப்பட வேண்டும்) என்பதை நீங்கள் உணவகங்களில் கேள்விப்பட்டிருக்கலாம். “சார் உங்களுக்கு a la carteடா? அல்லது buffetவா?” என்ற கேள்வி உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கலாம்.
Buffet (பஃபே) என்றால் உங்களுக்குத் தெரியும். உணவுகள் வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் கையில் தட்டோடு சென்று வேண்டிய உணவை அதில் நிரப்பிக் கொள்ளலாம். Buffet அல்லாதது a la carte. அதாவது இருந்த இடத்திலிருந்து உங்களுக்கு இஷ்டப்பட்ட உணவு வகையை ஆர்டர் செய்து சாப்பிடுவது.
Banquette வேணுமா என்று கேட்டால் விழிக்க வேண்டாம். சோபா அல்லது குஷன் தைக்கப்பட்ட நீளமான பெஞ்ச் போன்றவற்றைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்கள் வெளியூருக்குக் கிளம்பினால் “உங்கள் பயணம் இனிமையாக இருக்கட்டும்” என்றும் நீங்கள் சொல்லலாம். “Bon voyage” என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரே அர்த்தம்தான்.
Adieu என்ற வார்த்தை, au revoir என்ற வார்த்தை ஆகிய இரண்டும் ஒருவரை வழி அனுப்பும்போது கூறப்படுபவை. என்றாலும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. Adieu என்பது கொஞ்சம் கடினமான அர்த்தம் கொண்டது. அதாவது மீண்டும் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு மிகவும் அரிது எனும்போது adieu-ஐப் பயன்படுத்துகிறார்கள் (சில சமயம் ‘இனியும் உங்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை. தொலைந்து போங்கள்’ என்ற அர்த்தத்திலும் adieu-ஐ சிலர் பயன்படுத்துவதுண்டு).
Au revoir என்பது பிரிவின்போது கூறப்படும் இயல்பான வார்த்தை. (பிரிவோம் சந்திப்போம் என்பதுபோல).
Attache என்றால் அது ஏதோ இணைப்புபோலத் தோன்றும். ஆனால், பொதுவாகத் தூதரகத்தில் பணிபுரியும் நபரை இப்படிக் குறிப்பிடுவார்கள்.
நகரத்துக்கு இடையே குறுக்காகச் செல்லும் நீளமான சாலையை boule vard என்பார்கள். இதில் பெரும்பாலும் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கும்.
சில ஆங்கில நாவல்களில் chauffeur என்ற வார்த்தையை சகஜமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். அதற்குப் பொருள் ஓட்டுநர் என்பதுதான்.
Chic என்ற வார்த்தைக்குப் பொருளாக நீங்கள் என்ன நினைத்துக் கொ ண்டிருக்கிறீர்களோ! ‘ஸ்டைலான’ என்பது மட்டுமேதான் இதற்குப் பொருள்.
அரைத்த மாவையே..
க்ளிஷே என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எந்த ஒரு புதுமையும் இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பது இதுதான். அதாவது மிக சுலபமாக எதிர்பார்க்கக் கூடியவை.
கீழே உள்ள கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.
(1) ஒரு திரைப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் மோதலில் ஈடுபட்டால் அடுத்தடுத்த காட்சிகளில் அவர்களுக்கிடையே என்ன தோன்றும்?
(2) சினிமாவில் ஒருவரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக க்ளோஸ் அப்பில் வந்து அவர் முகத்துக்கு முன் கொசுவர்த்திச் சுருள் சுற்றினால் என்ன அர்த்தம்?
(3) திரைப்படத்தில் ஒரு கல்யாணத்தின்போது வேகமாக ஓடி வந்து ஒருவர் “நிறுத்துங்க’’ என்கிறார். அது சரியாக எந்தச் சந்தர்ப்பமாக இருக்கும்? மாலை மாற்றும்போது? தீயை வலம் வரும்போது? மிகச் சரியாக தாலியைக் கட்ட முயலும் நொடியில்?
(4) தொலைக்காட்சி நெடுந்தொடரில் மருமகள் மாமியாருக்குப் பால் தருகிறாள். மருமகளின் முகம், மாமியாரின் முகம், பால் டம்ளர் ஆகியவை மாறி மாறி இரண்டு டஜன் முறை காட்டப்பட்டு, ‘தொடரும்’ போடப்படுகிறது. பாலில் கலக்கப்பட்டிருப்பது சர்க்கரையா? விஷமா?
(5) தேர்தலில் வென்ற கட்சி ‘ஜனநாயகம் வென்றது’ என்று கூறும். தோற்ற கட்சி எது வென்றதாகக் கூறும்?
சரியாக ஊகித்திருப்பீர்கள். இவையெல்லாம்தான் cliche.
புதிதாக ஓர் இடத்துக்குச் செல்கிறீர்கள். ஒருவர் “deja vu” என்ற கத்துகிறார். அதாவது, அந்த இடத்துக்கு ஏற்கனவே வந்ததுபோன்ற ஓர் உணர்வு. நிஜமாக வந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஏதோ உள்ளுணர்வு, கனவு, பூர்வஜன்மம், இவைபோன்ற தாக்குதல்களின் காரணமாகவும் deja vu வாய்ப்பு உண்டு.
பிரான்ஸ் நாட்டின் இயக்குநர்கள் இயக்கும் ஆங்கிலப் படங்களில் ‘dossier’ என்ற வார்த்தையைக் கேட்டிருக்கலாம். அதற்குப் பொருள் கோப்பு. என்றாலும் இதன் உண்மையான அர்த்தம் ‘ரகசிய ஃபைல்’. அதாவது, சம்பந்தப்பட்டவரைப் பற்றிய அந்தரங்கமான விஷயத்தைத் தெரிந்துகொண்டு எதற்காவது மிரட்டும்போது இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பல்கலைக்கழகங்களில் மற்றும் விடுதிகளில் Dean என்ற பதவியில் உள்ளவரை அறிந்திருப்பீர்கள். Dean என்பது Doyen என்ற பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து வந்தது. ஒரு குழுவில் உள்ள சீனியர் உறுப்பினரைக் குறிக்க இதைப் பயன்படுத்துவார்கள்.
“வாங்க. En route தானே? உங்களை drop செய்துட்டே போறேன்” என்று யாரையாவது உங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டால், நீங்கள் போகிற வழியில் அவரை இறக்கிவிடப் போகிறீர்கள் என்று அர்த்தம். அதாவது, அவரால் உங்கள் பயணம் எந்த விதத்திலும் மாற்றி அமைக்கப்படவில்லை. En route என்றால் ‘போகிற வழியில்’ என்று அர்த்தம்.
இப்போதெல்லாம் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் chemistry என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் அளவுக்கு அலுவலகங்களில் rapport என்ற வார்த்தை மிக இயல்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு நல்லுறவு என்று அர்த்தம் கொள்ளலாம். எனவே, friends, develop a rapport with your co-workers.
EMIGRATION IMMIGRATION
Immigration என்ற வார்த்தைக்கு இரண்டு ‘m’ இருப்பதை முதலில் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
Migration என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது. பெரும்பாலும் பறவைகளின் பயணங் களை இப்படிக் குறிப்பிடுவார்கள்.
Emigration என்றால் ஒரு நாட்டைவிட்டு வெளியேறும் செயல். Immigration என்றால் வேறொரு நாட்டுக்கு வந்து சேரும் செயல்.
PASS
Pass என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. பள்ளிச் சிறுவர்களுக்கு pass ஆவது என்றால் குஷிதான். ஆனால், வினாடி - வினாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு pass, pass என்று சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் நிச்சயம் failதான். (Pass என்றால் உங்களுக்கு வருவதை வேறொருவருக்கு அளித்து விடுகிறீர்கள் என்று அர்த்தம். I am passing this work to you).
He felt sick and then passed out என்றால் என்ன அர்த்தம்?
Pass up என்றால் எதையோ பயன்படுத்திக்கொள்ளாமல் விடுவது என்ற அர்த்தம். We cannot pass at an opportunity like this.
கொஞ்சம் முன்பு உங்களைக் கேட்ட கேள்விக்கு “உடல் நலம் இல்லாமல் போன அவர் இறந்து விட்டார்” என்பதுபோல் பதிலளித்திருந்தால் அது தப்பு. Pass out என்றால் இங்கே நினைவிழப்பது என்றுதான் அர்த்தம். Passed away என்றால் இறந்துவிட்டதாக அர்த்தம். (எனவே, இப்போதுதான் ஒருவர் இந்த வழியைக் கடந்து சென்றார் என்பதை உணர்த்த ‘He just passed away’ என்றபடி கையைக் காட்டாதீர்கள். நீங்கள் ஏதோ ஒரு வழியைக் காட்டினாலும் அவர் உங்களைக் கையை மேலே காட்டியதாகத்தான் நினைத்துக் கொள்வார்).
தொடர்புக்கு - [email protected]


நன்றி -த இந்து

0 comments: