Tuesday, June 09, 2015

சுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்

முதன்மையான நாவலாசிரியராகவே இமையம் அறியப்பட்டிருக்கிறார். அவரது மூன்று நாவல்களும் - ‘கோவேறு கழுதைகள்’ ‘ஆறுமுகம்’, ‘செடல்’ - இந்த முதன்மைக்கு மறுக்க இயலாத வலுவை அளிக்கின்றன. சுயமான படைப்பு முறையாலும் தனித்துவமான கலைப் பார்வையாலும் விரிவான கவனத்துக்கு உரியவை இந்த நாவல்கள். அவற்றுக்குக் கொஞ்சமும் மாற்றுக் குன்றாதவை அதிகம் பேசப்படாத அவரது சிறுகதைகள். நான்கு தொகுப்புகளாக (மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவு சோறு) வெளிவந்திருக்கும் இமையத்தின் கதைகள் அவரது நாவல்களின் படைப்பாக்கத்துக்கு நிகரானவை.
மிகைப்படுத்திச் சொன்னால் நாவலின் பகுதிகளாகத் தோன்றுபவை அவரது சிறுகதைகள். அழுத்திச் சுருக்கப்பட்ட நாவல்கள் என்று சொல்லலாம். அப்படிச் சொல்லிவிட முடியாத சில சிறப்புக் கூறுகள்தாம் அவற்றைக் கதைகளாக வரையறுக்கின்றன. கதை நிகழும் காலத்தை நாவலிலும் சிறுகதைகளிலும் அவர் கையாளும் முறையை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் மையப் பாத்திரமான ஆரோக்கியத்தின் வாழ்க்கைப் பாடுகள் இடம்பெறுகின்றன. ‘சாவு சோறு’ சிறுகதையில் பூங்கோதையின் துயர அலைக்கழிப்பு பேசப்படுகிறது. ஆரோக்கியத்தின் நிலை ஒவ்வொரு நாளாகப் பிரித்துச் சித்தரிக்கப்படும்போது பூங்கோதையின் ஒரே நாள் வாழ்க்கையில் அவளது அத்தனை துன்பங்களும் அடுக்கப்பட்டுவிடுகின்றன. இந்தக் கால விளையாட்டை மிகக் கச்சிதமாகவும் நுட்பமாகவும் கையாளுகிறார் இமையம். அதுவே அவரது நாவல் திறனையும் சிறுகதைக் கலையையும் வேறுபடுத்துகிறது.
கதைகளாகும் சம்பவங்கள்
இமையத்தின் அண்மைக் காலத் தொகுப்பான ‘சாவு சோறு’விலுள்ள கதைகளை வாசிக்கும்போது அவரது கதைகளை மேலும் நெருக்கமாக உணர முடிந்தது. சமகாலச் சிறுகதையாளர்களிடமிருந்து இயல்பாகவோ வலுக்கட்டாயமாகவோ விலகியவையாகவே தனது சிறுகதைகளை உருவாக்குகிறார். இமயத்தின் கதைகளில் கதாசிரியன் கதையைச் சொல்வதில்லை. பாத்திரங்கள் வாயிலாகவே கதைகள் நிகழ்கின்றன. சில பாத்திரங்களின் வாழ்வில் குறிப்பிட்ட கணத்தில் நிகழும் இயல்பான சம்பவங்களையே பார்க்கிறோம். அவை நமது வாசிப்பின்போதுதான் கதைகளாகின்றன.
‘திருட்டுப் போன பொண்ணு’ கதையில் மையப் பாத்திரத்துக்கு அந்த விசித்திரமான பெயர் வந்தது எப்படி என்று ஆய்வு செய்ய வரும் இருவர், அவர்களுடன் திருட்டுப் பொண்ணு பேசுவது மட்டுமே கதை. ‘சாவு சோறு’ கதையில் வீட்டை விட்டு ஓடிப்போன மகளை ஆவலாதியுடன் தேடி அலையும் பூங்கோதை தன்னை விசாரிப்பவர்களிடம் பேசுவதுதான் கதை.
‘ஆகாசத்தின் உத்தரவு’ கதையில் தெப்பத் திருவிழாவில் திருடப் போகும் தொழில்முறைக் கள்ளன் சாமியிடம் உத்தரவு கேட்க வருகிறான். சாமி உத்தரவு கொடுக்கத் தாமதிக்கிறது. அதனிடம் தனது முறையீடுகளையும் உரிமைகளையும் திருடன் எடுத்துச் சொல்வது மட்டுமே கதை வடிவம் கொள்கிறது. காசுக்காகத் தன்னை நச்சரிக்கும் மகன், மருமகளின் அவச் சொற்களில் நொந்து போகும் வாத்தியார் ராமசாமியும் அவர் மகளாக நினைக்கும் அண்ணன் மகள் தவமணியும் உரையாடிக் கொள்கிறார்கள். இந்த உரையாடலே ‘பரிசு’ என்ற கதை.
நிகழும் கதைகள்
சாவு சோறு கதைகள் அனைத்தும் பாத்திரங்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் திருப்பங்களைக் கொண்ட நாடகத் தருணங்கள் அநேகமாக இல்லை. தங்கள் வாழ்வின் துயரத்துடன் அவர்கள் கொள்ளும் குறுக்கீடுகளே நிகழ்ச்சிகளாகின்றன. அவை இயல்பாகவே முடிவடையவும் செய்கின்றன. அந்த முடிவுகளில் அசாதாரணமாக எதுவுமில்லை. ஆனால் அந்தச் சாதாரண முடிவுகள் வாசகனை யோசிக்க வைக்கின்றன; சமயங்களில் திகைப்படைய வைக்கின்றன. சமயங்களில் புன்னகைக்கத் தூண்டுகின்றன. சமயங்களில் இரக்கத்தை ஏற்படுத்துகின்றன.
‘சாவு சோறு’ கதையில் மகளைத் தேடிப் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக அலையும் பூங்கோதை கடைசியாக ஒரு பள்ளிக்கூடத்தில் அமர்ந்து பட்டினி வயிற்றுடனும் பதைக்கும் மனதுடனும் தன் மகள் ஓடிப்போன கதையை அந்தப் பள்ளியின் பணியாளரான கமலாவிடம் முறையிடுகிறாள். கதை கேட்கும் கமலா பள்ளிக்கூடம் முடிவதை அறிவிக்கும் மணியை அடிக்கப் போகிறாள் என்று இயல்பாக முடிகிறது. ‘பரிசு’கதையில் மகனின் தொல்லைக்கு முடிவு கட்டும் எண்ணத்தில் தன் வங்கியிருப்பை முழுவதுமாகச் சுரண்டிக் கொடுத்துவிட்டு மோட்டார் கொட்டகைக்குள் போகும் வாத்தியார் இயல்பாகவே அங்கே கிடக்கும் மாட்டுக் கயிற்றைப் பார்க்கிறார். அவரது வார்த்தைகளின் மூலம் அவரது மன ரணத்தைக் கேட்டுத் தெரிந்திருக்கும் வாசகன் முடிவைத் திகைப்புடன் ஊகித்துவிடுகிறான்.
நுட்பமான கதைசொல்லி
இமையத்தின் பெரும்பான்மையான கதைகள் பாத்திரங்களின் உரையாடல் வாயிலாக அல்லது அவர்களது செய்கை வாயிலாகத் தொடங்கிவிடுகின்றன. அப்புறம் கதைகள் நிகழத் தொடங்கிவிடுகின்றன. அங்கே கதாசிரியருக்கு என்ன வேலை? ஆனால் தமிழ்ச் சிறுகதையில் இமையம் தனித்துவராக இடம் பிடிப்பது இந்தப் புள்ளியில்தான். இந்தக் ‘கதைகள்’ எல்லாம் அவரது படைப்புகள். ஆனால் அவை தன்னுடையவை அல்ல என்று நிறுவும் தற்சார்பற்ற எழுத்து முறையைச் செயல்படுத்துகிறார். கதாசிரியரின் சொற்களாக எதையும் அவர் முன் வைப்பதில்லை. ஆனால் தனது சார்புகளை, கரிசனங்களை, மதிப்பீடுகளைக் கதை மாந்தர்களின் மூலம் வெளிப்படுத்திவிடுகிறார். ஒரு அர்த்தத்தில் தமிழில் மிக நவீனமான பார்வை இது. படைப் பாளிக்கு மிக அதிக அளவு சுதந்திரத்தைக் கொடுக்கும் எழுத்து முறையும்கூட. தான் வாழும் சமூகம் பற்றிய தனது கருத்துகளை மிகச் சாமர்த்தியமாக அல்லது மிக நுட்பமாகக் கதைகளுக்குள் தனது குரல் கேட்காமல் சொல்லி விடுகிறார் இமையம். ‘திருட்டுப் போன பொண்ணு' கதையில் பெண்ணின் உரையாடலிலேயே அவள் பிறந்த இனமான கம்பளத்து நாயக்கர்களின் மரபொழுக்கங்களையும் தலைமையாசிரியர் பேச்சின் மூலமே கல்விமுறையின் மீதான விமர்சனங்களையும் அநாயாசமாக முன்வைத்துவிட்டுப் போகிறார். கதைக்குள்ளிருந்து செயல்படும் துணைப் பிரதிகளாக இல்லாமல் கதையின் இழைகளில் ஒன்றாகவே இதைப் பார்க்க முடிகிறது. ‘பத்தினி இலை’ கதையில் பேய் விரட்டும் பூசாரியிடம் பெண்ணைப் பீடித்திருக்கும் பேய் செல்போனைப் பற்றிப் பேசுகிறது. ‘நான் என்னா இந்திலயா சொன்னேன்’ என்று கேலி செய்கிறது. ரம்யாவைப் பிடித்திருப்பது பேய் அல்ல; பேயைத் தனது கருவியாக ஒரு மனைவியே ஆட்டுவிக்கிறாள் என்ற உளவியல் நாடகத்தைச் சொல்லிவிடுகிறது இந்த எழுத்து முறை.
நிகழ்த்தப்படும் கதைகள், சொல்லப்படும் கதைகள் என்று இமையத்தின் கதைகளை இரு பிரிவுகளாகக் காணலாம். சொல்லப்படும் கதைகளைவிட நிகழ்த்தப்படும் கதைகளில்தான் இமையம் முக்கியமானவராகத் தென்படுகிறார். ஏனெனில் அது அவரது தனிக் களம். அதில் சுதந்திரமாக நடமாடுகிறார். தனது கதைகளிலிருந்து சம்பிரதாயமான கதைகளை வெளியேற்றிவிடுகிறார். அவரது கரிசனம் வாழ்வாலும் சமூகத்தாலும் நசுக்கப்படு பவர்கள் மீது விழுகிறது. அவர்கள் வாழ்வை மதிப்புக்குரிய ஒன்றாக வாழ அனுமதிக்காத காரணிகள் மீது கோபமும் விரக்தியும் கொண்டவர்கள். அவர்கள் மூலமாக மௌனமான பிரகடனத்தை, உயிர்ப்பான இன வரைவியலை, மனிதத்துவப் பரிவை அழுத்தமாகச் சொல்லுகிறார்.
கதாசிரியர் சமூகக் கோபத்துடன் பேசினால் அது பரப்புரை. பாத்திரங்கள் தன் நிலையைச் சொன்னால் அது யதார்த்தம். ஒரு வகையில் கம்பி மேல் நடக்கும் வித்தை இது. ஆரவாரமோ மிகையோ இல்லாமல் அந்த வித்தையைத் தனது கதைகளில் அசலாக நிகழ்த்துகிறார் இமையம்.
சுகுமாரன், கவிஞர், காலச்சுவடு பொறுப்பாசிரியர். தொடர்புக்கு: [email protected]
சாவு சோறு
இமையம் சிறுகதைகள்
க்ரியா வெளியீடு
விலை: ரூ.170

நன்றி - த இந்து

0 comments: