Sunday, August 12, 2012

தப்பாட்டம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFtZm1h7aJpHTYN5wuB1_fJmDf4RhIDDXoss5QGO8JdlServtV8kwdCYgeqqdgMtf5c7Jx4X562crKLOX2JiMTIkIF3RiR29zf91kmVH-byOqBDOnGVhyxz_qiKSVD_FkijI6KzWiGFyVo/s1600/12.jpgவெளிச்சத்துக்கு வரும் வித்தியாச வாழ்வுகள்!



உருண்ட மலை ஓரத்துல... உறுமி சத்தம் கேட்டதென்ன...



கட்டுரை, படங்கள்: ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு



நாலு மாசம் ஜோரு! மீதி மாசம் போரு! எங்க கதையக் கேளு; ஏற்றம் எந்த நாளு? சொல்லியடிச்சா தப்பு! சொல்லாம அடிச்சா மப்பு!" தப்பாட்டக்காரர் ஒருவரின் சரியான பாடல் கேட்டது தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தில். இந்த மூணு வரிக்குள்ளே முடங்கிக் கிடக்குது தப்பாட்டக்காரர்கள் வாழ்க்கை. ரெட்டிப்பாளையம் தப்பாட்டக்காரர்கள் நிறைந்த கிராமம் என தமிழக அளவில் அறியப்பட்டுள்ள ஒரு கிராமம். சமீப காலத் திரைப்படப் புகழ் சின்னப் பொண்ணு ‘வாக்கப் பட்டது’ இந்தக் கிராமத்தில்தான்.




ஊருக்குள்ளே எந்தப் பக்கம் திரும்பினாலும் தப்பாட்டக் கலைக்குழு விளம்பர போர்டுகள். நாற்பது ஐம்பது குடும்பங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தப்பாட்டக் கலைஞர்கள். எழவு வீட்லயும், கோயில் திருவிழாவுலயும் தப்பு அடிக்கறதுதான் நாங்க பாரம்பரியமாய் செஞ்சு வந்த வேலை. எங்களுக்கெல்லாம் தப்பாட்டக் கலைஞர்கள்ங்கற கௌரவத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்தது த.மு.எ.ச.தான். அவுங்கதான் தமிழ்நாடு பூரா நடத்தி வந்த கலை இரவு நிகழ்ச்சிகள்ல, துணிச்சலாய் மேடையேத்தி எங்களுக்குப் பெரிய அளவுல அங்கீகாரம் வாங்கித் தந்தவங்க!" என்கிறார் தஞ்சை வீரசோழ தப்பாட்டக் கலைக்குழு தலைவர் ரெங்கராஜ்.





சிங்கப்பூர், இந்தோனேஷியா, பர்மானு வெளிநாடுகளுக்கெல்லாம் போயி தப்பாட்டம் நடத்திட்டு வந்திருக்கோம். இந்த ஊர்ல உள்ள பல கலைஞர்களில் ஏதோ ஒரு சமயத்துல வெளிநாடு போய்ட்டு வந்த ஆளாத்தாங்க இருப்பாங்க!" எனச் சொல்பவரின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொண்டே, தெரு முழுக்க நோட்டமிடுகிறது நம் கண்கள். ஒன்றிரண்டு ஓட்டு வில்லை வீடுகள் தவிர்த்து மத்த எல்லாமே கீத்துக் குடிசைகள். அவ்வளவு ஏன்? மண் சுவர்கள் மீது குத்த வைக்கப்பட்டிருக்கிறது வீரசோழ தப்பாட்டக் குழு தலைவர் ரெங்கராஜுவின் கீற்றுக் குடிசை. அந்த வீட்டுக்குப் பின்புறம்தான் ‘சினிமா புகழ்’ சின்னப்பொண்ணு வீடு. கான்கிரீட்டால் ஆன அந்த வீடு மட்டும் ஏசியால் குளிர்ந்திருக்கிறது. மற்ற வீடுகள் வறுமை வெயிலின் உக்கிரத்தில் பொடிந்து போய் கிடக்கின்றன.


http://koodu.thamizhstudio.com/images/alindu_thappattam_2.jpg

வெளிநாட்டுக்குன்னு ஒரு ட்ரிப் போய்ட்டு வந்தா, ஒரு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் தருவாங்க. அதுல என்ன பண்ணிட முடியும்? வந்ததும் எங்காளுங்க எங்களை ரவுண்டு கட்டிடுவாங்க. மாப்ள மச்சான்களுக்கு பார்ட்டி வெச்சே கரைஞ்சி போயிடும்" என ராஜேந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு குடிசையிலிருந்து அசைவக் குழம்பு மணம் காற்றில் கரைந்து வந்தது.




எங்காளுங்க பெரும்பாலோர் மாட்டுக் கறிதாங்க விரும்பிச் சாப்பிடுவோம். புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் அது இருந்தாதான் சோறு உள்ளே எறங்கும்!" எனக்கூறி சில வினாடிகள் இடைவெளி விட்டவர், என்ன? இதைச் சொல்லவும் எங்களை இப்படிப் பாக்குறீங்க. இன்னைக்கு எல்லா டவுன்லயும் தெருவோரத் தள்ளுவண்டிக் கடைகள்ல ‘பீப்’னு சொல்லி, இதைத்தானே ‘சமத்துவமா’ எல்லா ஆளுங்களும் சாப்ட்டுட்டு இருக்காங்க?"னு சீண்டினார் சரவணன்.




ரெட்டிப்பாளையத்துக்கும் தப்பாட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? நான் பொறந்தது திருக்காட்டுப்பள்ளி பக்கத்துல ஒம்பத்து வேலி கிராமம். எங்க அப்பாதான் ஊரு வெட்டியான். நான் ஸ்கூலுக்கே போகலை. எட்டு - ஒம்பது வயசுலேருந்து எங்க அப்பா கூடவே கூட்டிட்டுப் போவார். அவருக்கு ஓய்வா இருக்கும்போது தப்பை எடுத்து அடிடான்னு சொல்வார். நான் எடுத்து அடிப்பேன். அப்பிடி கத்துகிட்டதுதான்." என்ன கதைவுடுறீங்களா? உங்களுக்கு குருநாதர்னு யாரும் இல்லியா?" எனக் கேட்டால், மீண்டும் கொட்டத் தொடங்குகிறார் ரெங்கராஜ்.



இந்த ஊருக்கே குருநாதர்னு ஒருத்தர் இருக்கார். அவர்தான் காமாட்சிபுரம் முருகேசன். இந்த ஊருக்கு வந்து எல்லாத்துக்கும் தப்படிக்கறது, பாட்டுப் படிக்கறதுனு கத்துக் கொடுத்தவர். ஏதோ தத்தக்கா பித்தக்கானு எல்லாம் தப்பு அடிச்சிட முடியாது; அடிச்சிடவும் கூடாது. இதுலயும் ஒரு வகையான நாதம் இருக்குங்க. அது தப்புக்கட்டை உருவாக்குற விதத்துல இருக்கு!" நம் ஆர்வத்தைத் தூண்டி விட்டார் ரெங்கராஜ்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS10nMEfK90QBxXYUpoiBuI45BE0C8PZ5Vc0j8ca-34keg9OdaWeTY9uwDH2XlN7K-bW8X206E25Cj6hpfa22Ow5R4Liiz8kOV4mTFffFHEw1X3st6SzZ6kTS-7tb1YUDhtB4S58NB7Idl/s1600/100_2366.jpg


புளியங்கொட்டைப் பசையைத் தப்புக்கட்டையிலும் தோலிலும் தடவி ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். இதுக்கு வேம்புக்கட்டையும், எருமைக் கண்ணுக்குட்டி தோலும்தாங்க லாயக்கு. அதுவும் மூணு- நாலுவயசு கண்ணுக்குட்டி தோலா இருக்கணும். அதான் எளந்தோலு. அந்தத் தோலு தப்புல தான் நாதம் நல்லா இருக்கும். சும்மா... எடுத்து அடிச்சா வெண்கலம் மாதிரி கேக்கும்"- நம்மிடம் பேசிக் கொண்டே ‘தப்புக் கட்டை’ தயார் செய்து கொண்டிருந்தார்.



என்ன? வீட்டு உள்ளார நைஸா பார்க்குறீங்க... உங்களுக்கு காப்பித் தண்ணி வெச்சுக் குடுக்கக்கூட பொம்பளையாளு வீட்ல இல்லே. இன்னொரு வீட்ல கறிக் குழம்பு வாடை சூப்பராய் வந்திச்சே அது எப்படிங்கறீங்களா? அந்தாளு சூப்பராய் குழம்பு வைப்பான். எங்காளுக வீட்ல எல்லா பொம்பளைகளும் நூறு நாள் வேலைக்கு மாறி மாறிப் போய் வருவாங்க," என்கிறார் அவர்.




இந்த நாறப் பொழப்பு"னு பேச ஆரம்பித்தார் ஒருவர். இதுலேந்து எங்க புள்ளைங்களாவது விடுபடட்டும்னுதான் ஒவ்வொரு வீட்லயும் புள்ளைங்கள படிக்க வெச்சிட்டு வர்றோம். அதையும் மீறி சில வீடுகள்லேருந்து சில தத்துவாரி பயலுக எங்ககூட தப்படிக்க வந்துடுவாங்க. மாசி, பங்குனி, சித்திரை, வைகாசினு நாலு மாசம் எங்களுக்கு சீசன் காலம். கோயில் திருவிழா அது இதுன்னு எங்களைப் புடிக்க முடியாது. சீஸன் முடிஞ்சி வீட்ல வந்து படுத்தா எங்களை எழுப்ப யாராலும் முடியாது.




அப்புறம் என்ன? எந்த ஊர்ல எப்ப எழவு விழும்னு காத்துக் கிடப்போம். எழவு காரியம், கட்சிப் பேரணி, வி.ஐ.பி. வரவேற்பு எப்ப சேதி வரும்னு பார்த்துக்கிட்டே இருப்போம். அதான் எங்களுக்கு சைடு வருமானம். வெளியூரு எழவு காரியம்னு, பஸ்சுல ஏறப் போனா கண்டக்டரும் எங்களை ஏத்த மாட்டாருங்க. அதுக்குனு லோடு ஆட்டோவுல எங்க குழுவுல பத்து பேரு ஏறிப் போனா, நடு வழியில போலீஸ் தொல்லை. சில ஊர்கள்ல வம்புச் சண்டை, பெரிய கலவரமே ஆவுறதும் உண்டு" என்கிறார் ரெங்கராஜ்.



விழுப்புரம் - பாண்டி - இடையிலே ஒரு கிராமம். கோயில் திருவிழா. தலித் சமூகத்தவர் ஏற்பாடு. அதுல எங்க தப்பாட்டக் கச்சேரி. நைட்டு பத்து மணிக்கு ஆரம்பிச்சோம். மொதல் ஒரு மணி நேரமாய் அம்மன் மற்றும் சாமி பாடல்களாப் பாடிட்டிருந்தோம். பிரச்னை ஏதுமில்லை. ‘எங்க தலைவரைப் (திருமாவளவன்) பத்திப் பாட்டுக் கட்டுங்க’னு கூட்டத்துலேர்ந்து குரல்கள் வந்துச்சு. நாங்களும் உடனே, ‘ஏ... பஞ்ச பரம்பரை பாமர மக்களாய்... பட்ட கதை கேளுங்க... நாம பட்ட பாட்டைக் கேளுங்க... செருப்புப் போட்டா அடிச்சான்... சேரியில முள்ளைப் பதிச்சான்’னு நாலு வரிதான் பாடினோம். அவ்வளவுதான். எங்கேர்ந்து கல்லுக வந்திச்சனே தெரியலை. மேடையை நோக்கி அவ்வளவு கல்லுக. அடிதடி. அப்புறம் போலீஸ் வந்து, எங்க நிகழ்ச்சியை ரத்து பண்ணி அதுக்கப்புறம்தான் அமைதியாச்சு. நிகழ்ச்சியைக் கட் பண்ணிட்டு உயிர் பிழைச்சாப் போதும்னு நாங்க கிளம்பிட்டோம். இந்த மாதிரி சமயத்துல நாங்க பேசுன தொகை எங்களுக்குக் கிடைக்காது." என்கிறார் ரெங்கராஜ்.




ரெட்டிப்பாளையம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தப்பாட்டக்காரர்கள், அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களிலிருந்து தற்போதுதான் ஒருசில பிள்ளைகள் கல்லூரிப் படிப்பைத் தொட்டுள்ளனர். படித்து முடித்து அரசு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றால், தப்பாட்டக்காரர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம், உயர்வு பெறும் என்கிற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/A_Sound_from_thappu-_Tamilnadu.ogv/mid-A_Sound_from_thappu-_Tamilnadu.ogv.jpg


தப்பாட்டக் கச்சேரிகளுக்கு அவர்கள் தங்களை அலங்கரித்துக் கிளம்பும் விதமே அலாதி. காலில் சலங்கை, இடுப்பிலே கச்சை, மார்பிலே பனியன், தலையிலே வண்ண ரிப்பன் என அட்டகாசமாக கிளம்புகிறார்கள். இருள் படர்ந்து வந்த வேளையில் அவர்கள் அன்று கிளம்பினர். பக்கத்து ஊரில் தப்பாட்டக் கச்சேரி. நாமும் உடன் சென்றிருந்தோம். உருண்டை மல ஓரத்துல... உருண்ட மல ஓரத்துல உளுந்து காயப் போட்டிருந்தேன்... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே... நான் பொறந்த சண்டாளச் சீமையிலே... இன்னைக்கி உறுமி சத்தந்தான் கேட்டதென்ன?... கேட்டதென்ன?" காற்றில் மிதக்கிறது அந்தப் பாடல், அவர்களின் வாழ்க்கையைப் போலவே.
a
aa

3 comments:

Unknown said...

பல நூறாண்டுகளாக அடிமைப்பட்ட சமுதாயமும் அதன் கலைகளும் இந்த 21ம் நூற்றாண்டிலும் கொடுமைகள் களையப்படாமல் அவலப்படும் கொடுமை நீங்க அனைவரும் முயலுவோம்!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தகவல்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in

கானா பிரபா said...

மிகவும் தேடலுடன் அமைந்த நல்ல பதிவு