Friday, August 12, 2016

வாகா - சினிமா விமர்சனம்

'ஹரிதாஸ்' படத்துக்குப் பிறகு ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கியுள்ள ஆக்‌ஷன் ரொமான்ஸ் படம் 'வாகா'.
விக்ரம் பிரபு ஆஹா என சொல்ல வைத்தாரா?


கதை: அப்பாவின் மளிகைக் கடை தொழிலில் இருந்து தப்பிக்க, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆகிறார் விக்ரம் பிரபு. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார். ஏன்? எப்படி சிக்குகிறார்? அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா? சிறையில் இருக்கும் மற்ற இந்தியர்கள் என்ன ஆகிறார்கள்? விக்ரம் பிரபுவின் நோக்கம் நிறைவேறியதா? என்பது மீதிக் கதை.


ராணுவ வீரர்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தாமல் எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களின் வாழ்வை பதிவு செய்ய முயற்சித்ததற்காக இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலனைப் பாராட்டலாம். ஆனால், அந்த பதிவு முழுமையாகவும், ஆழமாகவும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.எல்லை பாதுகாப்பு படை வீரர் கதாபாத்திரத்துக்கு விக்ரம் பிரபு சரியாகப் பொருந்துகிறார். தனிமை, வெறுமையில் தவிக்கும் விக்ரம் பிரபு அதற்குப் பிறகு வரும் காதலில் வழக்கமான முக பாவனைகள் மட்டுமே தென்படுகின்றன. எமோஷன் காட்சிகள், நடன அசைவுகளில் விக்ரம் பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.விக்ரம் பிரபுவின் காதலியாக ரன்யா ராவ் (அறிமுகம்) கதாநாயகிக்கான பங்கை நிறைவாக செய்கிறார். துளசி, கருணாஸ், சத்யன், அஜய் ரத்னம், வித்யூ லேகா ஆகியோர் படத்தில் வந்து போகிறார்கள்.
சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு எல்லைக் காட்சிகள், மலைகள், காடுகள், வேலிகள் ஆகியவற்றை கண் முன் கடத்துகிறது. மோகன் ராஜின் பாடல் வரிகளில் ஏதோ மாயம் செய்கிறாய் பாடல் ரசிக்க வைக்கிறது. இமானின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.''நான் பாகிஸ்தானியை காதலிக்கலை. காதலிச்ச பொண்ணு பாகிஸ்தானி.'', ''பயத்தை சாகடிக்கிறதுக்கு தேவைதான்* நம்பிக்கை'' என சில இடங்களில் மட்டும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
இதெல்லாம் கவன ஈர்ப்பு அம்சங்களாக இருந்தும் திரைக்கதை தான் ரொம்பவே சோதிக்கிறது. காதல் படமா? ஆக்‌ஷன் படமா? எப்படிக் காட்டுவது என்பதில் இருந்த இயக்குநரின் குழப்பம் படத்திலும் பிரதிபலிக்கிறது. காதலை எந்த அழுத்தமும் இல்லாமல் லேசு பாசாக அணுகி இருப்பது படத்தின் ஜீவனையே கேள்விக்குறி ஆக்குகிறது.தீவிரவாத கும்பல் குறித்த எந்த ஐடியாவும் இல்லாமல், கட்டையால் அடித்தே காலி பண்ண நினைக்கும் வித்யூ லேகா காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். ஆனால், அது பலனளிக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
மிகப் பெரிய பிரச்சினையில் இருக்கும் விக்ரம் பிரபு, அதற்கான தீவிரத்தன்மையை உணராமல் இருப்பதும் நெருடல்.
தான் அடிப்பதாக இருந்தால் பறந்து கொண்டே அடிக்கும் விக்ரம் பிரபு, துப்பாக்கி குண்டுகள் தன் மீது படாமல் இருக்கவும் தலைகீழாக, மேலும் கீழுமாகப் பறந்தே சாதிக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தின் தோட்டாக்களுக்கு மரங்கள் மட்டுமே இலக்காவதிலும் நம்பகத்தன்மை இல்லை.இது போதாதென்று அர்ஜூன், விஜயகாந்த் போன்றவர்களே வி.ஆர்.எஸ். வாங்கிய வீர வசனப் படலத்தில் ஹீரோ விவாதப் பரீட்சை செய்து, மாபெரும் வில்லனை வார்த்தைகளாலேயே மனம் திருந்தச் செய்வதையெல்லாம் என்ன சொல்வது? குறியீடாக ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால்... இப்படத்தின் முதல் பாடல்... ஆணியே புடுங்க வேணாம்.
மொத்தத்தில் 'வாகா' எல்லை தாண்டிய பலவீனமான படமாக உள்ளது.நன்றி - த இந்து

0 comments: