Saturday, June 06, 2015

‘வாடி ராசாத்தி’ -கவிஞர் விவேக் நேர்காணல்

  • மனைவி சாரதாவுடன் விவேக்
    மனைவி சாரதாவுடன் விவேக்
“சமூகத்தின் மீது எழும் கோபத்தை எடுத்து வைக்க நல்ல களமாக இருப்பவை கவிதைகள். அதையே என் தொழிலாகவும் ஆக்கிக்கொண்டேன்” என அழுத்தம், திருத்தமாகப் பேசத் தொடங்குகிறார் பாடலாசிரியர் விவேக்.
‘36 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பால் கோடம்பாக்கத்தின் பரபரப்பான பாடலாசிரியர் ஆகியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
உங்கள் கவிதைப் பின்னணி?
சொந்த ஊர் சிதம்பரம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா வேல்முருகன் வழக்கறிஞர். அம்மா விமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி. மனைவி சாரதாவும் வழக்கறிஞர். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு நானும் சட்டம் பயின்றேன். சிறு வயதில் இருந்தே பேச்சுப் போட்டிகளில் கவனம் செலுத்துவேன். நடனமும், இசையும் எனக்குப் பிடிக்கும். இவற்றுக்கு மேலே கவிதை என் இதயத்துக்கு நெருக்கமான ஊடகமாக இருந்தது. கவிதைகள் மீதான ரசனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது. வைரமுத்துவின் கவிதைகள் என்னை அதிகம் கவர்ந்தவை. அதிலும் அவரது ‘தண்ணீர் தேசம்’ ரொம்பப் பிடித்தமானது. அம்மா ஒரு முறை அவரைச் சந்தித்தபோது, ‘உங்கள் இலக்கிய தாகத்திற்கு என் தண்ணீர் தேசம்’ என்று கையொப்பமிட்டு கவிதை நூலை என்னிடம் கொடுக்குமாறு பரிசளித்திருந்தார். அதுமுதல் அவருடன் அவ்வப்போது கடிதம் வழியே பரிமாற்றம் தொடர்ந்தது. நான் எழுதி அனுப்பும் கவிதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டுவார். அந்தப் பிடித்தம்தான் கவிதைகள் மீதான காதலை அதிகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ‘வா… கடவுள் செய்வோம்!’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். அது மேலும் பாராட்டுகளை அள்ளித் தந்தது. அது தந்த உற்சாகம்தான் சினிமா பாடல்கள் எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
சினிமாவில் முதல் வாய்ப்பு அமைந்தது எப்போது?
பாடலாசிரியராவது என்று தேடலில் இறங்கியபோது சந்தோஷ் நாராயணனிடம் என் முதல் கவிதை நூலைக் கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்த 20வது நாளில் அவரது இசையில் வெளிவந்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ‘பூ அவிழும் பொழுதில்’ என்ற முதல் பாடல் எழுதும் வாய்ப்பை அவர் வழங்கினார்.
படத்தின் மொத்த பாடல்களையும் எழுதும் விதமாக இரண்டாவது வாய்ப்பு அமைந்தது எப்படி?
இரண்டாவது படம் என்று பார்ப்பதைவிட சந்தோஷ் நாராயணன் அதிக கவனம் பெற்றிருக்கும் கட்டத்தில் அவருடன் இணைந்த படம் என்று கூறுவதில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு அவர்தான் காரணம். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் முழுப் பாடல்களை எழுதும் வாய்ப்பும் அமைந்தது. ‘வாடி ராசாத்தி’ பாடல் இவ்வளவு ஹிட் ஆகும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் பாடலை எழுதுவதற்கு முன் ‘போகிறேன்’ பாடல்தான் எழுதினேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. ‘தேவதை என்று பெயரிட வேண்டாம். தேன் துளி வார்த்தையில் சிறையிட வேண்டாம். தேவைகள் நோக்கி தினம் தினம் போகிறேன்’ என்று எழுதினேன். நீளம் கருதி அந்தப் பாடலில் இந்த வரிகளைப் பயன்படுத்த முடியவில்லை அதையே கிராமத்து மொழியில் மாற்றி, ‘தங்கமுனு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்... திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும்’ என்று மாற்றி ‘வாடி ராசாத்தி’ பாடலில் வைத்தோம். இப்படி இந்த இரண்டாவது படத்தில் நல்ல அனுபவங்கள் கிடைத்தன.
தற்போது என்னென்ன படங்களுக்குப் பாடல் எழுதிவருகிறீர்கள்?
‘இறைவி’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘ரங்கூன்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ ‘144’ உட்பட பத்துக்கும் அதிகமான படங்களுக்கு எழுதி வருகிறேன். அதேநேரம் கவிதைகள்தான் என் ஆதாரம். வாசிப்பு, கவிதைகள், பாடல்கள் என்று முழுவதும் எழுத்து சார்ந்தே இயங்கத் தொடங்கிவிட்டேன். மனிதநேயம் மிக்க சிந்தனைகளை எளிய மொழியில் திரைப்பாடலுக்கு இடம்பெயர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பங்களில் ஒன்று.
மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்துகிறீர்களாமே?
மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘மதுர நாரஞ்ஞா’ என்ற படத்தில் மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன். அந்தப் படத்தில் ஒரு தமிழ்ப் பெண்தான் முதன்மைக் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்திற்கு தமிழிலேயே பாடல்கள் தேவைப்பட்டன. அதற்காக எழுதியது புதிய அனுபவமாகவே இருந்தது.
சட்டம் படித்துவிட்டுப் பாடல், கவிதை என்று தடம் மாறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. கவிதையை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பெற்றோர், கவிதையை ரசிக்கத் தெரிந்த மனைவி, இவனால் எழுத முடியும் என்று என்னையும் என் தமிழையும் நம்பி வாய்ப்பளிக்கும் சக கலைஞர்கள் என்று தமிழால் வாழும் உலகில் நான் கண்டுகொள்ளப்பட்டதைக் கவுரவமாகவே கருதுகிறேன்thanx - the hindu

0 comments: