Friday, June 05, 2015

இனிமே இப்படித்தான்’ இன்னொரு சர்வர் சுந்தரம் -சந்தானம் சிறப்புப் பேட்டி@ த இந்து

  • ‘இனிமே இப்படித்தான்’ ஆஷ்னா சவேரி, சந்தானம்

    ‘இனிமே இப்படித்தான்’ ஆஷ்னா சவேரி, சந்தானம்
தமிழின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சந்தானம் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். தான் நாயகனாக நடிக்கும் ‘இனிமே இப்படித்தான்’ படத்தை தயாரித்து வருகிறார். படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.
காமெடி நடிகர்கள் நாயகர்களாக நடிப்பது அதிகரித்துள்ளதே? இந்தப் போக்கு எப்படி உருவானது?
முன்பெல்லாம் படங்களில் காமெடி ட்ராக் தனியாக இருக்கும். கதை பயங்கர சென்டிமென்டாக சென்றுகொண்டிருக்கும்போது ஒரு காமெடியன் வந்து சிரிக்க வைப்பார். சோகமான காட்சிகளில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர காமெடி காட்சிகள் தேவைப்பட்டது. பின்னர் அது கொஞ்சம் மாறியது. நாயகனோடு வரும் நண்பர் படம் முழுக்க காமெடி பண்ணிக்கொண்டே வருவார். காமெடி என்பது படத்தின் கதையோடு இணைந்து வரத் தொடங்கியது. இப்போது அதுவும் போய், ஒரு நாயகனே காமெடி பண்ணக்கூடிய அளவுக்கு சினிமா மாறிவிட்டது.
மக்களும் முன்பு போல் அல்லாமல் ‘என்னு டைய பிரச்சினைகளை மறக்க சினிமாவுக்கு வருகிறேன். நீங்கள் என்னை சந்தோஷப்படுத் துங்கள்’ என்று கேட்கிறார்கள். ஒரு கதையை சீரியஸாக சொன்னால் போர் அடிக்கிறது என்கிறார்கள். இதைத் தொடர்ந்து காமெடியுடன் கதை சொல்லும் ட்ரென்ட் வந்துவிட்டது. என் அப்பா பார்த்த எம்.ஜி.ஆர் படங்கள் வேறு, நான் பார்த்த படங்கள் வேறு, என்னுடைய மகன் பார்க்கும் படங்கள் வேறு. மக்களிடையே ஏற்பட்ட மாற்றத்தால்தான் சினிமாவில் மாற்றம் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.
திடீரென்று நாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டீர்கள். ‘சர்வர் சுந்தரம்’ மாதிரியான படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?
‘இனிமே இப்படித்தான்’ படம் நிச்சயம் அந்த வரிசையில் இருக்கும். இப்படத்தை காமெடியாக பண்ணியிருந்தாலும் இறுதியில் ஒரு நல்ல மெசேஜ் சொல்லியிருக்கோம்.
தொடர்ச்சியாக படங்களைத் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா?
இளைஞர்கள் பெண்களைக் காதலிப்பது போல்தான் இதுவும். முதலில் ஒரு பெண் ஏமாற்றிவிட்டு போய்விட்டால், இனிமேல் காதலிக்கவே கூடாது என்று நினைப்போம். ஆனால் மீண்டும் காதல் வரும். அது போல தான் சினிமா. இப்போதுதான் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமா இப்போது ஹாலிவுட் பாணியில் மாறிவிட்டது. அங்கு ஒரு நிறுவனம் படத்தை தயாரிக்கும், இன்னொரு நிறுவனம் இணைத் தயாரிப்பு செய்யும். மற்றொரு நிறுவனம் படத்தை வெளியிடும்.
‘ஜூராசிக் பார்க்’, ‘டைட்டானிக்’ படங்களையெல்லாம் பார்த்தால் தயாரிப்பாளர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். தமிழ் சினிமாவும் இப்போது அதுபோல் ஆகிவிட்டது. அனைத்து நாயகர்களும் தங்களுடைய படங்களை அவர்களுடைய நிறுவனங்களிலேயே தயாரிக்கிறார்கள். அதுபோல் நானும் தொடர்ந்து படங்களை தயாரிக்க முயற்சிப்பேன்
நாயகர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது போல முன்னணி நகைச்சுவை நடிகர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பீர்களா?
எல்லா காமெடியன்களும் ஒன்றாக மேடையில் இருக்கும்போது இந்த கேள்வியைக் கேட்டால் அதற்கான பதில் கிடைக்கும்.
காமெடியன், நாயகன், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்துவிட்டீர்கள். எப்போது இயக்குநர் ஆவீர்கள்?
கண்டிப்பாக படம் இயக்குவேன். அதற்கான கதையை எப்போதோ எழுதி வைத்துவிட்டேன். உதயநிதி, கார்த்தி, ஆர்யா, விஷால் என என்னுடைய நண்பர்கள் பலரிடமும் படத்தின் கதையைக் கூறியிருக்கிறேன். எனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தும் வகையில் படங்களில் நடித்துவிட்டு பிறகு படம் இயக்குவேன்.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கு தேசிய விருது கொடுப்பதில்லையே?
சினிமா துறையில் மிக உயரிய விருது ஆஸ்கர் விருதுதான். அங்கேயே சிறந்த நகைச்சுவை நடிகருக்கென்று விருதுகள் கிடையாது. அதற்கு நாம் என்ன பண்ண முடியும்? இதுபற்றியெல்லாம் புலம்பிக்கொண்டு இருப்பதைவிட நாம் நம் வேலையை பார்த்து, ரசிகர்களை சிரிக்கவைக்க வேண்டும் என்பதுதான் என் கொள்கை.
இங்குள்ள காமெடி நடிகர்கள் வேறு மொழிகளில் ஜொலிக்க முடிவதில்லையே?
ரசிகர்கள் பல கவலைகளில் படம் பார்க்க வருவார்கள். அவர்களை கவலை மறந்து சிரிக்கவைப்பது நகைச்சுவை நடிகர்களின் பணி. மொழி தெரியாமல், கலாச்சாரம் தெரியாமல் அதை நீங்கள் செய்ய முடியாது. இங்குள்ள பெண்ணை காதலிப்பதற்கும், பக்கத்து மாநில பெண்ணை காதலிப்பதற்கும் வித்தியாசம் இருக்காதா? அதேபோலத்தான் இதுவும். என்னையும் பிற மொழிகளில் நடிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால் மொழி தெரியாமல் நடிக்க முடியாது. ‘உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன், வெளியூரில் போய் ஒட்டகம் பிடித்தானாம்’ என்ற கதையாக ஆகிவிடக் கூடாது என்று நினைக்கிறேன். இங்குள்ள மக்களை முதலில் சிரிக்க வைக்கிறேன்.
உங்கள் காமெடி காட்சிகள் பலதும் சர்ச்சையில் சிக்குகிறதே?
முன்பெல்லாம் எனக்கு வரும் காட்சிகளை அப்படியே நடித்துவந்தேன். சமீப காலமாக மிகவும் பார்த்து பார்த்து செய்கிறேன். நான் பேசிய விஷயத்தை மக்களிடம் வேறு மாதிரி எடுத்துச் சொல்கிறார்கள். காமெடி பண்ணுவது கஷ்டம். அதுவும் நம் ஊரில் காமெடி பண்ணுவது மிகவும் கஷ்டம்.
காமெடியில் எந்த விஷயத்தைத் தொட்டாலும் பிரச்சினை வரும். எந்த பிரச்சினையும் வராமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டமான விஷயம்


நன்றி - த இந்து

0 comments: