Tuesday, June 02, 2015

இசைஞானி’ இளையராஜா

இளையராஜா
இளையராஜா
திரைஇசை உலகில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா (Ilaiayaraaja) பிறந்த தினம் இன்று (ஜூன் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் (1943) பிறந்தவர். இயற்பெயர் ராசய்யா. சிறு வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்கள் 3 பேருடன் சேர்ந்து சுமார் 20 ஆயிரம் கச்சேரிகள், நாடகங்களில் இசை அமைத்தார்.
l திரைப்படத்துக்கு இசை அமைக்கும் ஆர்வத்தில் 26 வயதில் சென்னை வந்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணி பியானோ, கிடார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
l ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976-ல் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்தான் இவருக்கு ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார். இந்த படத்தின் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல், அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
l தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்களில் நாட்டுப்புற மணம் கமழ வலம்வந்த இவரது இசை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. கர்னாடக இசையிலும் பல பாடல்களை அமைத்து புகழ்பெற்றார்.
l முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தவர். பல ராகங்களை உருவாக்கியுள்ளார். ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
l இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 1993-ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசை அமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
l பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றுள்ளார்.
l தாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டு பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் படங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் நடுவே உள்ள தனது அன்னையின் படத்தைக் கும்பிட்டுவிட்டே இவர் தனது நாளைத் தொடங்குவார். தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.
l ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். பல நூல்கள் எழுதியுள்ளார். ஆர்மோனியம் இல்லாமல் சிந்தித்தபடியே டியூன் போடக்கூடியவர். கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, பென்சில் டிராயிங் வரைவது, புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஃப்ரேம் செய்து மாட்டுவது ஆகியவை பொழுதுபோக்குகள். மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டி இவரது இசைத்தோழன்.
l இவரது வாரிசுகளும் இசை அமைப்பாளர்களாகப் புகழ்பெற்று தந்தைக்குப் பெருமை சேர்க்கின்றனர். இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் போற்றப்படும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்றும் வெற்றி நடைபோடுகிறது.


நன்றி - த இந்து

0 comments: