Monday, May 30, 2011

கனிமொழியை கல்கியில் காய்ச்சி எடுத்த ஓ பக்கங்கள் ஞாநி -திமுக அதிர்ச்சி

இரண்டு மாயைகள்!

ஞாநி
1. கனிமொழி மாயை

கலைஞர் கருணாநிதி தன் 43வது வயதில் முதன்முறையாக அமைச்சரானார். அதன் பிறகு தான் நிர்வாக முறைகேடுகள், ஊழல், லஞ்ச லாவண்யம், வழக்கு, கைது எல்லாம்... அவர் மகள் கனிமொழி தன் 43வது வயதில் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இன்னும் அமைச்சர் பதவியைக் கூட அடையவில்லை. இதைத்தான் தமிழ் மரபில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது என்கிறார்களோ!

அரசியலுக்கு வந்த கருணாநிதியின் வாரிசுகளிலேயே ஆழமானவர், ஆபத்தானவர் கனிமொழிதான் என்று நான் அவர் பொது வாழ்க்கையில் நுழைந்த நாட்களிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அழகிரியின் அதிரடிகள் பகிரங்கமானவை. எனவே எளிதில் அம்பலமாகிவிடக் கூடியவை. ஸ்டாலினுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற ஆசை அவரை எப்போதும் எதிலும் அடக்கி வாசிக்கவே வைக்கிறது.


கனிமொழிதான் கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு. தன் அரசியல்ரீதியான அவப்பெயர்களையெல்லாம் மறைக்கும் முகமூடிகளாக ஆரம்பத்திலிருந்து கருணாநிதி தமிழையும் பகுத்தறிவையும் திறம்படக் கையாண்டு வந்திருக்கிறார். ஸ்டாலின், அழகிரி இருவரிடமும் அப்படி எந்த முகமூடியும் இல்லை. எதுவும் அவர்களுக்கு வசப்படவும் இல்லை.


கனிமொழியும் அப்பாவின் இலக்கிய முகமூடியையே தானும் அணிந்தவர். அப்பாவுக்கு சங்க காலம். மகளுக்கு சமகால கவிதை. கருணாநிதியின் எழுத்தை எப்படி ஒருபோதும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன் போன்றோரின் தரத்துக்கு நிகராக வைத்துப் பார்க்க முடியாதோ, அதே நிலைதான் கனிமொழியின் கவிதையும் அவரது சம காலக் கவிஞர்கள் பலரின் தரத்துக்குக் கிட்டவே நெருங்காதது. 

அப்பாவின் இலக்கிய வாரிசாகவே தன்னை கனிமொழி முதலில் காட்டிக் கொண்டதால் அழகிரியும் ஸ்டாலினும் அவரைத் தங்களுக்குப் போட்டியாகக் கருதவில்லை. முரசொலி மாறனின் வாரிசாக தயாநிதி மாறன் அரசியலில் கொண்டு வரப்பட்ட பிறகு, மெல்ல மெல்ல கூடாரத்தில் மூக்கை நுழைத்த ஒட்டகமாக கனிமொழியும் நுழைவதை ஸ்டாலினும் அழகிரியும் தடுக்க முடியவில்லை. அவர்களின் ஆசியுடன் அரசியலில் தான் இருப்பதாக ஒரு பிரமையையும் கனிமொழி ஏற்படுத்தினார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இல்லாத ஒரு ஜாதி வளையமும் கனி மொழியின் உள்வட்டத்தில் இருந்தது.

எப்படி கருணாநிதி எப்போதும் மீடியாவுடன், பத்திரிகைகளுடன் (எவ்வளவு எரிந்து விழுந்தாலும் கடிந்துகொண்டாலும்) நட்புறவை விடாமல் வைத்துக் கொண்டே இருக்கிறாரோ அதே அணுகுமுறையை சென்னையிலும் டெல்லியிலும் கனிமொழியும் கையாண்டு வந்திருக்கிறார். அவரைப் பற்றிய சாதகமான செய்திகள், குறிப்பாக ஆங்கில மீடியாவில் வெளிவர, இந்த நட்பு பயன்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்கள் கருணாநிதியின் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் அவரை தேர்தல் வேலைக்காக சிகிச்சையை தள்ளிப் போடச் செய்வதைப் பற்றி ஆங்கில ஏடுகளுக்கு தகவல்கள், செய்திகள் கனிமொழி வட்டாரத்திலிருந்து தான் கசியவிடப்பட்டன. 

ஸ்பெக்ட்ரம், ஆனைக்கும் அடிசறுக்கிய வாழைப்பழத் தோலாகிவிட்டது. அடுத்தடுத்து நடப்பவை கருணாநிதியையும் கனி மொழியையும் மேலும் மேலும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பெண்ணியவாதி பிம்பம், ஜாமீனுக்காக கோர்ட்டில் வைக்கப்படும் மன்றாடலில் நொறுங்கிப்போய் விட்டது. பெண் என்பதால், தாய் என்பதால் கருணை காட்ட வேண்டும் என்று ராம்ஜெத்மலானி மன்றாடினார்.

இன்னும் சில வாதங்கள் படுவிசித்திரமானவை. நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதால், ஜாமீன் தரவேண்டுமாம். எந்தக் குற்றவாளியும் நீதிமன்றத்தில் ரகளை செய்வதில்லை. அமைதியாக இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல கண்ணியமாகத்தான் நடந்து கொள்வார்கள். மூன்று மாதமாக ராசா கூடத்தான் நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.


தன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், கனிமொழி சென்னையில் பள்ளிக்குச் செல்லும் தன் மகனை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது இன்னொரு வாதம். அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக எப்படி அவரால் டெல்லியில் எம்.பி.யாக இருக்க முடிகிறது? சென்னையில் மகனைக் கவனிக்க வேண்டும்; டெல்லிக்கு எம்.பியாகச் செல்ல விரும்பவில்லை என்று அவர் சொன்னதே இல்லையே? 

மூன்று மாதங்களாக சிறையில் இருக்கும் ராசாவைப் பார்க்க டெல்லிக்குப் போகாத கருணாநிதி, கனிமொழிக்காகப் பதறிக் கொண்டு செல்கிறார். குடும்பம்தான் தனக்கு எல்லாம், குடும்பத்துக்காகத்தான் தன் அரசியல் எல்லாம் என்று திரும்பத் திரும்ப அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு கம்பெனியின் பங்குதாரரை அதன் எல்லா நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக்க முடியாது என்று வாதாடுகிறார் கருணாநிதி. இந்த வாதப்படி அவர் அரசு, சசிகலா மீது ஒரு வழக்கு கூடப் போட்டிருக்கக் கூடாதே? குற்றம் சாட்டப்பட்ட கம்பெனிகளில் அவர் பங்குதாரர் என்பதால்தானே தி.மு.க அரசு வழக்கு தொடுத்தது?

ஒரு பாவமும் அறியாதவர் கனிமொழி என்றால் ஏன் அவர் ராசாவுக்கு மந்திரி பதவி வேண்டும், அதுவும் டெலிகாம்தான் வேண்டும் என்று நீரா ராடியாவிடம் மன்றாடினார்? ஏன் அந்த டேப்புகள் பற்றி கருணாநிதியோ, கனிமொழியோ, வக்கீல் ராம்ஜெத்மலானியோ எதுவுமே சொல்வதில்லை?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த டெலிகாம் கம்பெனிகள் ஏன் கனிமொழி இருக்குமிடம் நோக்கியே செல்கின்றன? கனிமொழி பங்குதாரராக இருக்கும் கலைஞர் டி.வி.க்கு கடன் கொடுக்கின்றன. கனிமொழி டிரஸ்டியாக இருந்த தமிழ் மையத்துக்கு நன்கொடைகள் அளிக்கின்றன? 

ஆனால், கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று தீர்ப்பை எழுதத் தயாராகிறார் கருணாநிதி.

ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில் போலீஸ் வன்முறையில் செத்துப் போன கல்லூரி மாணவன் உதயகுமாரின் அப்பாவின் ஞாபகம் கருணாநிதிக்கு வராவிட்டாலும் நமக்கு வரவேண்டும். உதயகுமார் செய்த ஒரே குற்றம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எதிர்த்து அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான். இறந்து கிடக்கும் உதயகுமாரின் உடலைப் பார்த்து, இது என் மகன் இல்லை என்று சொல்லும்படி கருணாநிதியின் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையின் மனநிலையை நாம் மறக்கமுடியுமா? 

தி.மு.க.வை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியது அவரும் அவர் குடும்பமும்தான் என்றே வரலாறு குறிக்கும். இதிலிருந்து மீள வேண்டுமானால் கருணாநிதி உருவாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு மாயையிலிருந்தும் தி.மு.க தொண்டன் விடுபடவேண்டும். ஒவ்வொரு மாயையாகக் கரைந்து கொண்டிருக்கிறது.

2. சமச்சீர் கல்வி மாயை:
சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்று ஜெயலலிதா அரசு அறிவித்ததை வரவேற்றும் எதிர்த்தும் குரல்கள் எழுந்துள்ளன.
தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது அசலான சமச்சீர் கல்வியே அல்ல. சமமான வசதிகள், சமமான கல்வி பயிற்று விக்கும் தரம், சமமான கல்விக் கட்ட ணம், சமமான தேர்வு முறை எல்லாம் இருந்தால்தான் சமச்சீர் கல்வி. 

தி.மு.க. அரசு செய்ய முயற்சித்ததெல்லாம் மெட்ரிக், ஸ்டேட் போர்ட், சி.பி.எஸ்.ஈ, ஆங்கிலோ இந்தியன் போர்ட் எனப்படும் பலவிதமான போர்டுகளுக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது மட்டும்தான். அதில் மெட்ரிக்கில் ஏற்கெனவே இருந்ததைக் குறைத்து நீர்க்கச் செய்துவிட்டார்கள் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. மறுபக்கம் பாடப் புத்தகங்களை சி.பி.எஸ்.ஈ முறையில் உள்ளதுபோல, உணர்ந்து படிக்கும் முறைக்கு மாற்றி எழுதியது சிறப்பானது என்பது ஒரு சாராரின் பாராட்டு.

அசல் பிரச்னை பாடப் புத்தகமோ பாடத் திட்டமோ அல்ல. பயிற்றும் முறையும் தேர்வு முறையும்தான் அசல் பிரச்னைகள். மெட்ரிக், ஸ்டேட் போர்ட் தேர்வு முறைகள் மாணவரின் மனப்பாட சக்தியை மட்டுமே சோதிக்கின்றன. கீவேர்ட்ஸ், கீ டெர்ம்ஸ் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் தரப்படுகின்றன. சி.பி.எஸ்.ஈ. தேர்வு முறை, சிந்தித்து சுயமாக எழுதுவதை சோதிப்பதாக இருக்கிறது. 

கூடவே மாற்றப்பட வேண்டியது பயிற்று முறை. அரசு ஆசிரியரின் சம்பளம் தனியார் ஆசிரியரைவிட பல மடங்கு அதிகமானது எனினும் எந்த தனியார் பள்ளியிலும் குறைந்த பட்சப் பயிற்றுதல் தரம் என்பது அரசுப் பள்ளியின் சராசரித் தரத்தை விட மேலாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு. தனியார் பள்ளிகளில் தரம் குறைந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு. 

சமச்சீர் கல்வியை நோக்கிச் செல்வதற்கு அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. எல்லா அரசு அதிகாரிகளும் ஊழியர்களும், குறிப்பாக கல்வித்துறையில் பணியாற்றுவோர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்யாதவருக்கு அரசு வேலை கிடையாது. இதைச் செய்தாலே அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தில் பெரும் மாறுதல் ஏற்படும்.

2. பாடப் புத்தகங்களும் தேர்வுமுறையும் மனப்பாட அடிப்படையிலிருந்து, சிந்தித்து உணர்ந்து அறியும் அடிப்படைக்கு மாற்றப் படவேண்டும். இது எளிது. இருப்பதிலேயே சிறப்பானது என்று கல்வியாளர்களால் கருதப்படும் சி.பி.எஸ்.ஈ முறையை எல்லாருக்குமாக்கி விடலாம்.

3. ஆண்டுதோறும் ஆசிரியர்களின் பணிப் பங்களிப்பு மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கடுமையாக முறைப்படுத்த வேண்டும். கரெஸ்பாண்டென்ஸ் முறையில் ஆசிரியர் பயிற்சி அளிப்பது என்ற அபத்தம் ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு தனி நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி இப்போதைக்கு ஒரு மாயைதான். கோடிக்கணக்கான ரூபாய் புத்தகங்களை வீணடிக்காமல், கருணாநிதி ஜால்ரா பாடங்களை மட்டும் ஜெயலலிதா நீக்கியிருந்தால் போதுமானது. ஜெயலலிதா பழையபடி ‘கொண்டதை விடாத’ பிடிவாதம் உடையவராக இல்லை. சொன்னபடி வாரா வாரம் நிருபர்களை சந்திக்கிறார். மாறிவிட்டார் என்று சொல்லப்படுவது இன்னொரு மாயை இல்லை என்று நிரூபிக்க அவருக்கு இது ஒரு வாய்ப்பு. இப்போது கூட, ஒவ்வொரு பாடப் புத்தகத்துக்கும் ஓர் அறிஞர் குழுவை நியமித்து ஒரு வாரத்துக்குள் அந்தப் புத்தகம் தகுதியானதா என்று பரிசீலித்து முடிவு தெரிவிக்கச் சொல்லலாம். சரியானவற்றை இந்த ஆண்டே பயன்படுத்தலாம். மாற்றப் படவேண்டிய புத்தகங்களை மட்டும் அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகங்களும், நேரமும் வீணாவதைக் குறைக்கலாம். செய்வாரா? 

இந்த வாரக் கேள்வி?
கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரினார்கள். அவரோ வெளிநாட்டில் தான் சம்பாதித்த விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு பெறுவதற்காக தன்னைத் தொழில் முறை நடிகர் என்று அறிவித்திருக்கிறார். எனவே அவருக்கு நடிப்பிற்கான தாதா சாகிப் பால்கே அல்லது பாரத் விருது தரவேண்டும் என்று இனி கேட்பார்களா?

இந்த வாரத் திட்டு
மேலவையை உருவாக்கி அரசுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைச் சொல்லும் அறிஞர் சபையாக அதை செயல்பட வைக்கும் நல்ல வாய்ப்பைத் தூக்கி எறிந்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இ.வா.தி.

29 comments:

பூங்குழலி said...

ரொம்ப சிறப்பாகவே எழுதியிருந்தார் .ஆனால் இந்த மேல்சபையால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை .அது வராமல் இருப்பதே நல்லது

erodethangadurai said...

மிக சிறப்பான , உண்மையான கருத்துகளை சொல்லி உள்ளார். பதிவுக்கு மிக்க நன்றி..

Unknown said...

மேல்சபை ஆளும் கட்சிக்கு இடைஞ்சல்.தேவையில்லை என்பது சரியான முடிவு.பாடப்புத்தகங்களை ஆராய்ந்து தேவையில்லாத பக்கங்களை நீக்கிவிட்டு அளிக்கலாம்.ஓமநதுரார் மாளிகையை அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்தலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரொம்பவே சூடாகப் பேசுறார்! பல புதிய தகவல்கள்! முதல்வரை வேறு திட்டியிருக்காரே!

Speed Master said...

சரியாக சொன்னீர்கள் நான் பார்த்தவரை எந்த வாத்தியாரும் தன் மகன் மகள்களை அவர்க்ள் வேலைசெய்யும் ப்ள்ளியில் படிக்கவைப்பதில்லை

ம.தி.சுதா said...

சீபி மழை நின்றும் ஓயாத தூறல நனைந்தேன் நனைந்தேன்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

Lali said...

அரசியலில் எத்தனை வகைகள்! பள்ளி கல்லூரி இவைகளில் கூட இத்தனை பாட பிரிவுகள் இருக்க முடியாது.. படிக்க படிக்க ஒரு சாதாரணின் மனநிலை எப்படி இருக்கும்? அவனுடைய அன்றாட கனவுகள் உடுப்புகளிலும், உணவுகளிலும் மற்றும் சிறிய சேமிப்புகளிலும். வேர்த்து வடிய வெயிலில் இங்கே மக்கள் அமர்ந்திருக்க.. வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள், என்று முடிவுக்கு வரும் இந்த அரசியல் நாடகங்கள்?
http://karadipommai.blogspot.com/

ம.தி.சுதா said...

மனுசன் என்னமா புழந்து கட்டுறாரா செம சூடப்பா..

ம.தி.சுதா said...

எங்க மாப்பு தமிழ் மணத்தை ஒழிச்சு வச்சிருக்கே...

கூடல் பாலா said...

உலகே ........மாயம்...........!

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா பயங்கரமான சாடல், சவுக்கடி, சாட்டையடி...!!!!

Unknown said...

சும்மா அதிருதுல்ல

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

நல்ல பிரிச்சு மேன்ச்சுட்டாரே ...ஆனா மேல்சபை தேவையா ///டவுட்டு

Unknown said...

பல மறக்கப்பட்ட உண்மைகள தூசு தட்டி இருக்கும் திரு ஞானி அவர்களுக்கும் அதை பதிவாக்கி போட்ட திரு சிபி அவர்களுக்கும் நன்றி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவாரஸ்யமான தொகுப்புகள்..
சமச்ச்சீர் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு வரவேண்டும்...

virutcham said...

சமச்சீர் கல்வி குறித்து ஞானி கூறியதில் அரசு வேலையில் இருப்பவர் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படிக்க முதலில் அரசு நிறைய அரசுப்பள்ளிகளைத் திறக்க வேண்டும். இப்போது இருக்கும் பள்ளிகளை வைத்துக் கொண்டு அதை நிறைவேற்ற முடியாது

செங்கோவி said...

செம சூடு.

ramalingam said...

கலைஞருக்கு இதுவெல்லாம் ட்ரெய்லர்தான்.

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

என்னது கனிமொழிக்கு 43 வயசா
88 - 43 =45

ஸ்ரீநாராயணன் said...

Gnani himself has a blog site.

If you want you could have given the link rather copy pasting in your site.

பூங்குழலி said...

@????????????

நன்றியுடன் ..ஞானியின் தளத்திற்கான லிங்க்கை இணைப்பது நல்லது

sivagiri senthil said...

மச்சீர் கல்விபற்றிய அலசல் விரிவாக பயனுள்ளதாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

middleclassmadhavi said...

நல்ல அலசல்; பல கேள்விகளை எழுப்பவும் சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும் செய்கிறது!

கடம்பவன குயில் said...

நல்ல அலசல். மேல் சபையால் பயன்ஒன்றும் இருந்திடாது என்பதே என் கருத்து. சமச்சீர் கல்விமுறை பற்றிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. தேவையில்லாத பாடத்தைமட்டும் நீக்கிவிட்டு வெளியிட்டிருக்கலாம். தற்போதைய சமச்சீர் பாடங்கள் அனைத்தும் சிபிஎஸ்சி முறையிலேயே அமைந்திருந்தது. சுயமாய் எழுதும்படியே அமைத்திருந்தார்கள்.

தன்வினை தன்னைச்சுடும். முன்(வருட)வினையே ஸ்பெக்ட்ரமாகவும் தண்டனையாகவும் வடிவெடுத்தது்.

Jagath said...

Who is this man? Is he speak Tamil at Home with his Children or like Vijayakanth speaking in Telugu?

Good Criticism but all ponits are not agreeable.

எஸ் சக்திவேல் said...

உண்மையாகவே ஞாநிக்கு ஓப் போடுகிறேன்.

J.P Josephine Baba said...

அருமை அற்புதம்!நல்ல ஆழமான பதிவு.

Mukundan said...

அண்ணாமலை பல்கலைகழகத்தின் ஒட்டு மொத்த (?!) மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, உதயகுமார் மட்டும் ஏன் இறந்தான் என்ற கேள்வி, கட்டுரையை படிக்கும் யாருக்காவது வருகிறதோ இல்லையோ, அதற்கான பதில் ஞானிக்கு நன்றாக தெரியும்.

அமைச்சு பணிக்கு நடக்கும் லாபியும், தொழில் நிமித்தமாக தொழிலதிபர்கள் அமைச்சரிடம் நடத்தும் லாபியும், அதன் பலனாக கைமாறும் பணமும், சுதந்திர இந்தியாவில் வழமையான ஒன்றானாலும், அதனை ராசாவும், கனிமொழியும் செய்தால் மட்டும் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள். அம்பானிகள், மாறன்கள், கல்மாடிகள் பற்றி வாய் திறக்காத ஞானிகள், கனிமொழி பற்றி மட்டும் பக்கம் பக்கமாக எழுதி தள்ளவது ஏன் என்று புரிகிறது. தந்தையைப் போலவே, மகளும் தங்களுக்கு "ஆபத்தானவ"ளாகத் தோன்றுவதால்.