Monday, June 01, 2015

மாசு என்கிற மாசிலாமணி -திரை விமர்சனம்

நல்ல பேய்களை நண்பர்களாகச் சேர்த்துக்கொண்டு கெட்ட மனிதர்களை வதம் செய்யும் கதைதான் ‘மாசு என்கிற மாசிலாமணி’ (மாஸ்)
நண்பன் ஜெட்டுவுடன் (பிரேம்ஜி) சேர்ந்து அடிதடி, பிக்பாக்கெட், தவறான வழியில் பணம் சம்பாதித்துச் செலவு செய்வது என்று சுற்றித் திரிகிறான் மாசு என்கிற மாசிலாமணி (சூர்யா). அம்மா, அப்பா, உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாத மாசிலாமணிக்கு மருத்துவமனையில் நர்ஸாக இருக்கும் நயன்தாராவின் அறிமுகம் காதலை விதைக்கிறது.
ஒரு கடத்தல் கும்பலிடம் பணத் தைக் கொள்ளையடித்த சூர்யாவைத் தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறது அந்தக் கும்பல். நண்பன் ஜெட்டுவுடன் காரில் தப்பிக்கும் நேரத்தில் கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் சிக்கிய மாசிலாமணி சிகிச்சைக்குப் பின் குணமாகியதும் இறந்த ஆவிகளின் உருவம் தெரிகிறது. ஆவிகளுடன் பேசும் ஆற்றலும் கிடைக்கிறது. இந்த ஆற்றலை வைத்து கெட்ட வழியில் பணம் சம்பாதிக்கும் முடிவை சூர்யாவும் (ஆவியாகிவிட்ட) பிரேம்ஜியும் தீட்டுகிறார்கள். அந்தக் கூட்டணியில் இன்னுமொரு ஆவி சேர்கிறது. சூர்யா மாதிரியே தோற்றம் கொண்ட அந்த ஆவியின் பெயர் ஷக்தி. இரண்டு சூர்யாவும் சந்தித்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
அடிதடி, கொள்ளை, ஆட்டம் என்று தொடக்கத்தில் படம் வேகமாக நகர்ந்தாலும் அத்தனையும் பழகிய காட்சிகள்தான் என்பதால் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை. திரைக்கதையில் பேய்கள் நுழைந்ததும் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. இரவில் பேய்கள் துரத்துவதும், பிறகு பேய்களோடு சூர்யாவுக்கு ஏற்படும் நட்பும் சுவாரஸ்யமாக உள்ளன. பேய்களின் உணர்வுகளை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்ய முயன்றுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. பேய்களோடு கூட்டுச் சேர்ந்து சூர்யா நடத்தும் மோசடிகளும் படத்தை நகர்த்திச் செல்ல உதவுகின்றன.
ஆனால் பேய்களுக்கும் சூர்யா வுக்கும் இடையே நடக்கும் பங்காளிச் சண்டைகள், பேய்களுக்கு உதவ சூர்யா மெனக்கெடுவது ஆகிய காட்சிகள் படத்தை இழுத்தடிக் கின்றன. இரண்டாவது சூர்யா நுழைந்த பிறகு மீண்டும் சூடுபிடிக் கிறது. கொள்ளை, கொலை என்று மர்ம முடிச்சுகள் கச்சிதமாக விழுகின்றன. ஆனால், இவற்றை அவிழ்ப்பதற்கான ஃப்ளாஷ்பேக் சம்பவத்துக்கு புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம். தமிழ் சினிமா வின் ஆகிவந்த வில்லத்தனம் மீண்டும் அரங்கேறும்போது சலிப்பு ஏற்படுகிறது.
தன் படங்களில் பெரும்பாலும் சென்டிமென்டை நுழைக்க விரும்பாத வெங்கட் பிரபு இந்தப் படத்தில் ஆசைகள் நிறைவேறாத பேய்களின் ஏக்கத்தைச் சித்தரித்துள்ளார். அந்த விருப்பங்களை சூர்யா நிறைவேற்றி வைப்பதும், அந்தச் சூழலில் ஒரு பாடலை வைத்திருப்பதும் வித்தியாச மாக உள்ளன.
பார்த்திபன், சமுத்திரக்கனி, ஜெயப் பிரகாஷ் என்று புதிய கதாபாத்திரங்கள் படத்தில் அவ்வப்போது இணைவதும், அடுத்தடுத்துத் திருப்பங்கள் நிகழ்வதும் சேர்ந்து இரண்டாம் பாதியில் படத்தை சோர்வடையாமல் நகர்த்திச் செல்கின்றன.
கலகலப்பு, சண்டை, ஆக்ரோஷம், சோகம் ஆகியவை சூர்யாவுக்குப் புதிதல்ல. பேய்களைக் கண்டு பயந்து ஓடுவது புதிது. இந்தக் கலவையை நன்றாக உள்வாங்கி வலுவாக வெளிப்படுத்துகிறார். தன்னைப் போலவே உள்ள பேயைக் கண்டு திகைப்பது, கோபப்படுவது, அந்தப் பேய் யார் என்று தெரிந்ததும் உருகுவது ஆகியவற்றில் அழுத்த மான தடம் பதிக்கிறார்.
இலங்கைத் தமிழராக வரும் ‘பேய்’ சூர்யாவுக்குப் படம் முழுவதும் ஒரே விதமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாத் திரம். அதை அழுத்தமாகச் செய்து படத்துக்குக் கூடுதல் பரிமாணம் சேர்க்கிறார்.
பொதுவாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு காதல், டூயட் தவிர அதிக வேலை இருக்காது. இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு அந்த வேலையும் இல்லை.
வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான பிரேம்ஜி படம் முழுவதும் வருகிறார். “பேய்க்கு என்னடா பஞ்ச் டயலாக்”, “மங்காத்தா படத்துக்கு பிறகு இப்போதான் இவ்ளோ பணத்தை பார்க்கிறேன்” என்பது போன்ற வசனங்களால், தன் பாணி காமெடியை ஆங்காங்கே தூவியிருக்கிறார். அவரது உடல் மொழியின் சேட்டைகளைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்.
பார்த்திபன் கொஞ்ச நேரமே வந்தாலும் தன் டிரேட் மார்க் நக்கலை வெளிப்படுத்திக் கலகலப்பூட்டுகிறார். சமுத்திரக்கனிக்கு அசல் வில்லன் வேடம். அதுவும் எம்.ஜி.ஆர். காலத்து வில்லன். அவருக்கு இது பொருந்தவில்லை.
பாடல், சண்டைக் காட்சிகள் தொடங்கி சூர்யா, பிரணிதா காதல் காட்சி என்று பல இடங்களில் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘தெறிக்குது மாஸ்’, ‘பிறவி’ பாடல்கள் ரசிக்க வைக் கின்றன. பேய்க் காட்சிகளின் பின்னணி இசை மிரட்டுகிறது. சூர்யாவைப் பேய்கள் துரத்தும் காட்சிகளில் கிராபிக்ஸில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
தமிழ்த் திரைக்குப் பழக்கமான பழிவாங்கும் கதைதான். அழுத்தமில் லாத கதையில் பேய்களையும் பாத்திரமாக்கி விறுவிறுப்புக் கூட்டி யிருக்கிறார் இயக்குநர்.

thanx - the hindu

0 comments: