Wednesday, August 05, 2015

1971- எ சமாளிஃபிகேஷன் ஸ்டோரி -மதுவிலக்கு பிரச்சினையில் ராஜாஜியிடம் பேசியது என்ன?- தானைத்தலைவர் விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி| கோப்புப் படம்.
திமுக தலைவர் கருணாநிதி| கோப்புப் படம்.
தமிழகத்திலே திமுக ஆட்சியில்தான் முதன்முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், உண்மைக்குப் புறம்பானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன்.
இருப்பினும், தமிழகமெங்கும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை எதிரொலித்திடும் வகையில், திமுக சார்பில் 10-8-2015 திங்கள்கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில்,அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடை முறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தேன்.
திமுகவைப் பிடிக்காத ஒரு சில குறிப்பிட்ட கட்சியினரும், ஏன் திமுகவை எதிர்க்காத ஒரு சில கட்சியினரும்கூட, இந்த மதுவிலக்குப் பிரச்சினை பற்றி திமுக ஆட்சியிலே இருந்தபோது தானே, மதுவிலக்கை ரத்து செய்தது, எனவே திமுகவால் தான் எல்லாம் கெட்டுவிட்டது என்ற ரீதியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கான விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
திமுகவுக்கு 1971ஆம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது; அதற்கு முன்பும் பின்பும் என்ன நிலைமை என்பதையும் சற்று விரிவாக எடுத் துக் கூற வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.
திமுக ஆட்சியில் மது விலக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்றாலும், இதனை திமுக முழு மனதோடு கொண்டு வரவில்லை என்றும், அப்போதுள்ள தமிழகத்தின் நிதி நிலைமைதான் அதற்குக் காரணம் என்றும் விளக்கியிருக்கிறேன்.
மதுவிலக்கை திமுக ஒத்தி வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு அப்போதைய நிதி நிலைமை தமிழக அரசிலே இருந்தது. அந்த முடிவை நாங்கள் எடுக்க முன்வந்த போது ராஜாஜியே, என் இல்லத்திற்கு வருகை தந்து, அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அவரிடம் நான் தமிழக அரசின் நிதி நிலைமைகளை எல்லாம் விளக்கிய பிறகு, அவர் உண்மையைப் புரிந்து கொண்டார். ஆனால் ராஜாஜி, ஏதோ கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவரது வீட்டிலிருந்து கோபாலபுரத்திற்கு நடந்தே வந்ததைப் போலவும், என்னிடம் ஏதோ மன்றாடிக்கேட்டுக் கொண்டதைப் போலவும், அதை நான் கேட்கவில்லை என்பதைப் போலவும் சிலர் இப்போது பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதற்குப் பெயர்தான் அரசியல் ஆதாயம் தேடுவதாகும்.
என்னுடைய இந்தக் கருத்து அவ்வளவும் உண்மை என்பதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமேயானால், தமிழக அரசியல் வரலாறு என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆர். முத்துக்குமார் எழுதிய நூல் ஒன்றில், பக்கம் 282-283இல் குறிப்பிடும்போது, "தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த போது, பலத்த நிதி நெருக்கடி இருப்பதால் மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்வது அத்தியாவசிய நடவடிக்கை என்ற பேச்சுக்கள் எழுந்தன.
நிதி நெருக்கடியைச் ச மாளிக்க வேண்டுமென்றால் மதுவிலக்கை ஒத்தி வைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றார் முதலமைச்சர் கருணாநிதி. பலத்த யோசனைக்குப் பிறகு மதுவிலக்கு ஒத்திவைப்பு விஷயத்தில் கருணாநிதிக்கு ஆதரவு கொடுக்கத் தயாரானார் எம்.ஜி.ஆர். அதனைக் கோவையில் நடந்த திமுக பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.
மது விலக்கை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது, நிரந்தரமாக அல்ல என்றார் எம்.ஜி.ஆர். மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையிலும் நிதி நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் கருணாநிதி.
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நஷ்ட ஈடாக நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. நிதி நெருக்கடியில் உழன்று கொண்டிருந்த தமிழக அரசு தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசிடம் நிதி உதவி கோரியது.
ஆனால் மத்திய அரசோ கை விரித்துவிட் டது. புதிதாக மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி உதவி; ஏற்கனவே அமலில் இருக்கும் மாநிலங் களுக்கு அல்ல என்பது மத்திய அரசு சொன்ன காரணம்"" என்று அந்த எழுத்தாளர் தனது நூலில் கூறியிருக்கிறார்.
மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில், திமுக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவிலக்கு ஒத்தி வைக்கப்பட்டதைப் போல சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவும் உண்மையல்ல.
1937ல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாண அரசு அமைந்ததும், அதுவரை சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், அதுவும் 1939இல் முடிவுக்கு வந்தது. அந்த 1937ஆம் ஆண்டிலேகூட, ராஜாஜி முதலமைச்சராக இருந்த போதேகூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களில் மட்டும்தான், அதாவது சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந் தது.
மற்ற மாவட்டங்களில் 1937ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலைமைதான் இருந்து வந்தது. 1948ல் ஓமந்தூரார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத் தினார்.
இது தவிர மற்ற காலங்களில் அதாவது 1937க்கு முன்பும் சரி,1939-க்குப் பின்பு 1948ஆம் ஆண்டு வரையிலும் சரி, தமிழகத்திலே மதுவிலக்கு நடைமுறையிலே இல்லை என்பதை சற்று யோசித்துப் பார்த்தால், தமிழகத்திலே திமுக ஆட்சியில்தான் முதன் முதலாக மதுவைப் புகுத்தி விட்டார்கள் என்ற வாதம், எந்த அளவுக்கு உண்மைக்குப் புறம்பானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

நன்றி - த இந்து

0 comments: