Thursday, August 20, 2015

மாநில சிஎம் சீட்டையே மாற்றிய காதல் -கொலை- பட்டுக்கோட்டை பிரபாகர்

ஒரு காதலால் ஒரு மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? ஒரு காதலால் தேர்தலில் ஒரு கட்சி தோல்வியைத் தழுவ முடியுமா? முடியும்!
கொல்கத்தாவில் 2007-ம் வருடம் நடந்த ஒரு காதலும், அதன் தொடர்பான சம்பவங்களும் 2011-ம் வருடம் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 வருட ஆட்சி முடிவடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தன.
‘லக்ஸ்’ நிறுவனம் ஆண்களுக்கான உள்ளாடைகள் தயாரிக்கும் 200 கோடி மதிப்புள்ள நிறுவனம். அதன் அதிபர் அசோக் டோடி. இவர் ஓர் இந்து. அவரின் மகள் பிரியங்கா டோடி. அவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் கற்க ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். அவருக்கு பாடம் எடுத்த இளைஞர் ரிஸ்வனூர் ரஹ்மான். இவர் இஸ்லாமியர்.
ரஹ்மானுக்கும், பிரியங்காவுக்கும் மன்மதன் அம்புவிட்டு காதல் மலர்ந் தது. மதம், அந்தஸ்து, வேற்றுமை காரணமாக குடும்பத்தினர் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள் என்பதால்,ரகசிய மாக சில நண்பர்களை மட்டும் சாட்சி களாக வைத்து, பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், அதை வெளிப்படுத்தாமல் அவரவர் வீட்டில் சாதாரணமாக நடந்துகொண்டார்கள்.
சில மாதங்கள் கழித்து ரஹ்மான் தன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தகவல் சொன்னார். அவர்கள் அதிர்ந்து போனார் கள். பிரியங்காவை வீட்டுக்கு அழைத்து வந்தார். பிரியங்காவை விட்டு தன்னை மன்னித்து, தங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அசோக் டோடிக்கு ஒரு கடிதம் எழுதச் சொன்னார்கள்.
கடிதம் பார்த்ததும் அசோக் டோடிக்கு கோபம் தலைக்கேறியது. அவர் தனக் குத் தெரிந்த காவல்துறை அதிகாரியின் உதவியை நாடினார்.
காவல்துறை ரஹ்மான் வீட்டுக்கு வந்தது. பிரியங்காவை அவர் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிடும்படியும், காதலை மறந்துவிடும்படியும் மிரட்டல் தொணியில் பேசினார்கள். இருவரையும் காவல்துறையின் ஒரு அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். வர மறுத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழுத்துப் போவோம் என்றார்கள்.
ரஹ்மானும், பிரியங்காவும் அவர்கள் சொன்ன அலுவலகத்துக்குச் சென்றார் கள். அங்கு பெரிய அதிகாரிகள் மிரட்டத் தொடங்கினார்கள். ரஹ்மான் தன் மனைவியைப் பிரியாவிட்டால் விளைவு விபரீதமாக இருக்குமென்று எச்சரித்தார்கள். பெரிய தொகை வாங் கித் தருவதாக ஆசை காட்டினார்கள். இதுபோல மூன்றுமுறை தங்கள் அலுவ லகங்களுக்கு அழைத்துப் பேசினார்கள்.
மூன்றாவது முறை பேசியபோது பிரியங்காவின் மாமா வந்திருந்தார். மகளைப் பார்க்காமல் அவளின் பெற் றோர் கவலையில் இருப்பதாகவும், ஒரு வாரத்துக்கு மட்டும் பிரியங்காவை அனுப்பி வைக்கும்படியும், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரியங்காவை மீண்டும் ரஹ்மான் வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுத்துபூர்வமாக அதி காரிகள் முன்னிலையில் உறுதியளித்தார் மாமா. அதை நம்பி பிரியங்காவை அவ ருடன் அனுப்பி வைத்தார் ரஹ்மான்.
ஆனால், பிரியங்கா ஒரு வாரம் கழித்து வரவில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரஹ்மான் துடித்துப் போனார்.
“செல்வாக்குள்ள பெரிய இடம். அவர் களுடன் மோத முடியாது. நீ அவளை மறந்துவிட வேண்டியதுதான்'’ என்று உற வினர்கள் சொல்ல, கோபப்பட்டார் ரஹ்மான். “அதெப்படி? அவள் என் மனைவி, அவளை எதற்காக மறக்க வேண்டும்?’’ என்று வாதிட்டார் ரஹ்மான்.
சில தினங்கள் கழித்து வெளியே சென்ற ரஹ்மானைக் காணவில்லை. அவரை முகம் உருக்குலைந்த நிலையில் ஒரு ரயில்வே தண்டவாளத்தில் பிரேத மாகக் கண்டெடுத்தார்கள். அது தற்கொலையென்று காவல்துறை வழக்கை முடிக்க நினைத்தது. ரஹ்மா னின் குடும்பத்தினரும், நண்பர்களும் அது தற்கொலை அல்ல; கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டார்கள் என்றார்கள். ரஹ்மான் படித்த கல்லூரி யின் மாணவர்களும், தன்னார்வஅமைப் புகளும், சில இஸ்லாமிய அமைப்புகளும் ஒரு பெரிய போராட்டத்தில் இறங்கின.
இது தொடர்பாக வெடித்த கலவரத் தில் போலீஸ்காரர்களும், பொது மக் களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்த பலர் காயமடைந்தார்கள். காவல்துறையின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பொது மக்கள் தினமும் மெழுகுவத்தி ஏந்தி நீதிக்காக ஊர்வலம் சென்றார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக முதல்வர் சில காவல்துறை அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்தார். தனி நபர் விசாரணை கமிஷன் அமைத் தார். கோர்ட்டின் உத்தரவுக்குப் பிறகு வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது எதிர் கட்சித் தலைவியாக இருந்த மம்தா பேனர்ஜி இப் பிரச்சினை யைக் கையிலெடுத்தார். காவல் துறையை தன் பொறுப்பில் வைத்திருக் கும் முதல்வரை கடுமையாக விமரிசித் தார். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற் றால் அந்தக் குடும்பத்துக்கு நியாயம் வாங்கித் தருவோம் என்று முழங்கினார்.
சி.பி.ஐ, விசாரணைக்குப் பிறகு ‘‘ரஹ் மான் தற்கொலைதான் செய்துகொண் டார், ஆனால் அவரை தற்கொலை செய் யத் தூண்டியதாக பிரியங்காவின் தந்தை, மாமா, மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று அறிக்கை தந்தது. அசோக் டோடி சுப்ரீம் கோர்ட்டுக் குச் சென்று சி.பி.ஐ அறிக்கையின் மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்து உத்தரவு வாங்கினார்.
தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்று திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மம்தா பேனர்ஜி முதல்வரானார். “இந்த விவகாரம் எங்கள் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது உண்மை'’ என்று ஒப்புக்கொண்டார் தலைவர் ஜோதி பாசு.
சமீபத்தில் சி.பி.ஐ குற்றம்சாட்டிய ஒரு காவல்துறை அதிகாரிக்கு பணி உயர்வு உத்தரவு கொடுத்ததற்காக மம்தா பேனர்ஜி கடுமையாக விமரிசிக்கப்பட் டார். “ரஹ்மான் மரணத்தை ஒரு தேர்தல் ஆயுதமாக மட்டும் பயன்படுத்தினாரா?'’ என்று மீடியா கேள்வி கேட்டு வருகிறது.
வெகு நாட்கள் இந்த விவகாரம் பற்றி வாயே திறக்காத பிரியங்கா டோடி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, “ரஹ்மான் குடும் பத்தினரின் சில நடவடிக்கைகளால் தான் விவகாரம் பெரிதாக வெடித்தது, இல்லையென்றால் சுமூகமாக சரிசெய் திருக்க முடியும்'’ என்று குற்றம் சாட்டி னார். அது பற்றி ரஹ்மானின் தாயாரிடம் கேட்டபோது, “அவை நியாயமே இல் லாத குற்றச்சாட்டு என்றும், இறந்த தன் கணவனின் உடலைக் காணக்கூட பிரியங்கா வரவில்லை, அதன் பிறகு தன் னையும் சந்திக்கவில்லை. இந்த வீட்டில் இருந்த அவரது உடைமைகளை ஒப் படைக்கச் சொல்லி ஒரு வக்கீல் மூலமாக கடிதம் அனுப்பினார் அவர்’’ என்றார்.
காதலித்தபோது ஒருமுறை ரஹ்மான் பிரியங்காவிடம் சொன்னாராம், “மதம் தான் பிரச்சினை என்றால்.. நான் வேண்டு மானாலும் ஹிந்துவாக மாறிவிடுகிறேன்’' என்று. அதேப் போல பிரியங்கா தன் மாமியார் “வசதியாக வாழ்ந்த உன்னால் எப்படி இந்த வசதியற்ற வீட்டில் வாழ முடியும்?’' என்று கேட்டபோது, “நான் சில மாதங்களாக எங்கள் வீட்டில் ஏ.சி போட்டுக்கொள்ளாமல் தூங்கிப் பழகி வருகிறேன், ரஹ்மானுக்காக எந்த வீட்டிலும் என்னால் வாழ முடியும்’’ என்றாராம்.
தந்தை பெரியாரிடம் ஒருவர் தன் புது மனைவியுடன் வந்து, “அய்யா, நாங்க வெவ்வேறு ஜாதி. இது கலப்புத் திருமணம்’' என்றார். பெரியார் சிரித்தபடி, “நீ ஒரு கழுதையையோ குதிரையையோ திருமணம் செய்திருந்தால்தான் அது கலப்புத் திருமணம். ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்வதில் எங்கே கலப்பு வருகிறது?’’ என்றார். ஆனால் இன்னும் நம் நாட்டில் ஜாதி, மதம் தாண்டி நிகழும் காதல் திருமணங் களைப் பலர் ஏற்பதில்லை.
இதன் வெளிப்பாடாகத்தான் ஆயிரக் கணக்கில் கவுரவக் கொலைகள் நிகழ் கின்றன. (சுப.வீர பாண்டியன் இவற்றை ஆதிக்கக் கொலை என்றோ அல்லது ஆணவக் கொலை என்றோ குறிப்பிட வேண்டும் என்கிறார்.)
இவர்களின் திருமணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்ட ரஹ்மானின் மாணவரான ஹுஸ்ஸேய்ன், “ரஹ்மான் மிரட்டியதால்தான் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டேன் என்று சொல்ல வேண்டும்’’ என்று போலீஸ் மிரட்டியதால் நான்வேறு ஊருக்குப் போய்விட்டேன். இந்த விவகாரத்தில் பல மனிதர்களின் வேறு முகங்கள் வெளிப்படுவதை உணர்ந்தேன். அதை மையமாக வைத்து நான் எழுதிய கவிதைத் தொகுப்புக்கு ‘சாகித்திய அகாடமி’ பரிசு கிடைத்தது. இந்தக் காதலும், தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் சாதாரண எழுத்தாளனாக இருந்த என்னை வீரியமிக்க சிறந்த எழுத்தாளனாக மாற்றியது’’ என்கிறார்.


நன்றி -த இந்து

1 comments:

Rajasubramanian S said...

So this what they call the butterfly effect. Real stories are stranger than fiction.Thanks for sharing.